அன்றந்தச் சிற்றூரின் திருவி ழாவை

அமர்க்களமாய் மக்களெலாம் நடத்தி னார்கள்!

தன்மனைவி, தன் மகளை நேர்த்திக் காகத்

தவறாமல் அழைத்து வந்தார்! ஊர்ப்பூசாரி

தன்கையின் சாட்டையினால் ஓயு மட்டும்

தளிர்போன்ற மகளிரினை அடித்தார்; அன்னோர்

பொன்னான திருமேனி புண்ணாய் ஆகி,

பூங்குருதி வடித்ததெலாம் மறைத்தார்; போனார்.

இன்னோர் ஊர் திருவிழா நடந்தபோது,

எண்ணரிய கோழிகளை ஆட்டையெல்லாம்

புன்மனத்தார் கொண்டுவந்து பலியாய் இட்டார்!

பூவையரே வரிசைகட்டி அமர்ந்தி ருந்தார்;

கன்னெஞ்சப் பூசாரி அவர்கொ ணர்ந்த

கடினமுள்ள தேங்காயை அந்தப் பெண்டிர்

மென்தலையில் மிகஓங்கி உடைத்தார்; பாவம்.

வேதனையை வெளிப்படுத்தல் ‘தோஷம்’ என்றார்!

மற்றும்ஓர் ஊர்மக்கள் தம்மூர் சார்பில்

மகத்தான திருவிழா நடத்தி னார்கள்;

சுற்றமுடன் பிராமணர்கள் உண்டு சென்ற

தூய்மையிலா எச்சிலைமேல் புரண்டு, பக்திப்

பற்றினையே வெளிப்படுத்த முனைந்தார் என்றால்,

பாழான காட்சியெலாம் சரியா? ஈங்கே

முற்போக்குப் பெரியாரும் அண்ணா போன்றோர்

மொழிந்ததெலாம் விழலுக்கே இறைத்த நீரா?

Pin It