உலகம் போற்றும் வானியல் விஞ்ஞானி மேக்நாட்சாகா இந்தியாவில் வாழ்ந்து மறைந்தார். என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
‘அயனியாக்கக் கோட்பாடு சமன்பாடு’ எனற அவரது கண்டுபிடிப்புதான் பேரண்டம் தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது.
1893இல் வங்கதேசத்தில் உள்ள டாக்கா எனும் கிராமத்தில் பிறந்து 60 ஆண்டு காலம் வாழ்ந்தவர். ‘சாகா’ எனும் தீண்டப்படாத சமூகத்தில் பிறந்த குற்றத்துக்காக இருட்டடிக்கப்பட்டவர்.
பிரதமர் நேரு - இவரின் அறிவியல் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். வங்காள மொழியில் இந்துக் கடவுளைக் குறிக்கும் மேக்நாத் என்ற பெயரைத்தான் அவரது தாயார் சூட்டினார்.
அதை விரும்பாமல் இராமர்-இலட்சுமணர்களை எதிர்த்து தீரமுடன் போரிட்ட இந்திரஜித் (மேகநாதன்) என்பதன் குறியீடாக தனது பெயரை மேக்நாட் என்று மாற்றிக் கொண்டார்.
மேக்நாட் சாகா-பார்ப்பன-இந்துமத எதிர்ப்பாளர்; பகுத்தறிவாளர்; 1951ம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் - புரட்சிகர சோசலிச கட்சியின் சார்பில் சுயேச்சை வேட்பாளராக கல்கத்தாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்து காலண்டரான பஞ்சாங்கம் - நாட் கணிப்புகள் அறிவியலுக்கு எதிரானது என்பதால் நேருவின் ஆலோசனைப்படி-மேக்நாட்சாகா தலைமையில் நாட்காட்டி சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது.
பஞ்சாங்கக் கணக்கீடுகள் அறிவியலுக்கு எதிரானவை என்பதை குழு விரிவாக விளக்கியது அறிவியல் அடிப்படையில் புதிய நாட் காட்டியையும் உருவாக்கி அறிக்கையை -1955ம் ஆண்டு நேரு அரசிடம் குழு சமர்ப்பித்தது.
தேவிகாபுரம் சிவா எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மேக்நாட் சாகா: ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, சாகாவின் விரிவான வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது. அந்நூலில் சாகா குழு நாட்காட்டி குறித்துத் தந்த பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அதிலிருந்து சில பகுதிகள்:
நாள்காட்டி சீர்திருத்தம்
‘நவீன நாகரிக வாழ்வின் இன்றியமையாத ஒரு தேவை நாள்காட்டி’என்பது சாகாவின் முடிவு. சாகா நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றிய காலத்தின் குறிப்பிடத்தக்க சாதனை அவர் செய்த நாள்காட்டி சீர்திருத்தம் ஆகும். பண்டைய இந்திய வரலாற்றில் சாகாவுக்கு இருந்த பேரார்வம், வானியல் மீதான அவரது காதல் ஆகியவற்றின் ஒத்திசைவான இசைவை இந்திய நாள்காட்டி சீர்திருத்தத்தில் காணமுடியும்.
‘நாள்காட்டிகள், அவற்றின் வரலாறு. பயன்பாடு மற்றும் சமூகத்துடனான அவற்றின் பிணைப்புகள் ஆகியவற்றைக் குறித்த ஆய்வுகள், ஒரு நாட்டின் முக்கியப் பண்புக்கூறுகளையும் கலாச்சாரத்தையும் பற்றிய பயனுள்ள புரிதல்களை வழங்கக் கூடியவை. எனவே சாகாவின் அறிவுஜீவி ஆளுமைக்கு வேலை கொடுத்த பணிகளில் நாள் காட்டி சீர்திருத்தம் முக்கியமான ஒன்று. சாகா 1939 முதலே இந்திய அளவிலும் உலக அளவிலும் நாள்காட்டி முறை குறித்த ஆய்வு செய்து சயின்ஸ் அண்ட் கல்ச்சர் இதழில் கட்டுரைகள் எழுதிவந்தார். ‘சக சகாப்தத்தின் தோற்றம்’ (The origin of the Saka Era) என்ற தலைப்பில் கல்கத்தா ஆசிய சங்கத்தில் சாகா ஆற்றிய உரை அற்புதமான ஒன்று. அந்தவகையில¢ 1952ஆம் ஆண்டு சி.எஸ்.ஐ.ஆர் அமைத்த நாள்காட்டி சீர்திருத்தக் குழுவிற்கு சாகா தலைவராக நியமிக்கப்பட்டது தற்செயல் நிகழ்வு அல்ல.
இக்குழுவில் ஏ.சி.பானர்ஜி, கே.கே. தப்தாரி, ஜே.எஸ். கரந்திகார், கோரக் பிரசாத், ஆர்.வி.வைத்யா, என்.சி.லஹிரி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை நாள்காட்டியை விட பஞ்சாங்கம் மக்களின் சமயம் சார்ந்த வாழ்வில் முக்கியத்துவம்வகிப்பதைநாம்அறிவோம்.சமயம் சார்பான பண்டிகைகள், நிகழ்வுகள், பிறப்பு, இறப்பு, திருமணம், பத்திரப்பதிவுகள் போன்ற பலவற்றில்பஞ்சாங்கம் மட்டும் இன்றும் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. நாள்காட்டிகள் எல்லாக் காலத்திலும் இந்தியாவில் பஞ் சாங்கக் குறிப்புகளோடுதான் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
நாள்காட்டி என்பது அறிவியல் பூர்வமாகவே இருக்க வேண்டும். சாகா காலத்தில் பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட பகுதிகளில் நடைமுறையில் இருந்த நாள்காட்டிகளும் பல்வேறாகவே இருந்தன. இந்நாள்காட்டிகள் எதிலுமே அறிவியல்பூர்வ அணுகுமுறை இருக்க வில்லை. குறிப்பாக கி.பி.500இல் இருந்தே ஓர் ஆண்டுக்கான நாள்கணக்கு பெரும்பிழையோடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்திய வானியல் மற்றும் ஜோதிடக் கணக்கீடுகளில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்த பண்டைய நூல்ஆரிய சித்தாந்தம் என்பதாகும். இதன்படி ஓர் ஆண்டு என்பது 365.25756 நாள்கள் கொண்டதாகும். இது உண்மையான ஆண்டுக்கணக்கை விட 0.01656 நாள்கள் நீண்டதாகும். இந்தியாவில்பஞ்சாங்கம் தயார் செய்வோர் கி.பி. 500 முதல் கொண்டே இந்தப் பிழையோடே தயார் செய்து வந்தனர்.
திதிக்கான நாள் நாடு முழுவதும் ஒன்றாக இருக்காது.
தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட திதி கடைப்பிடிக்கப்பட்டால், உத்திரப்பிரதேசத்தில் அதே நாளில் அதே திதி இருக்காது.
இந்த வகையில் கி.பி.500இல் இருந்து ஆண்டுக்கு 0.01656 நாள்கள் அதிகரித்துக் கொண்டே வந்து 1952இல் 23.2 நாள்கள் அதிகரித்துவிட்டது. அதாவது 23.2 நாள்கள் முன்கூட்டி இருந்தது. சூரிய நகர்வின் அடிப்படையிலான சூரிய ஆண்டின் தொடக்க நாள் அதாவது, வேனில் காலத்தில் (கோடையில்) சூரியனின் கதிர்கள் நிலநடுக்கோட்டின் மீது மிகச்சரியாக விழும் நாள் உத்தராயனம் எனப்படும் இது உண்மையில் மார்ச் 22இல் அமைய வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக ஏப்ரல் 13 அல்லது 14தேதிகளில் அமைந்திருந்தது.
மேற்கண்ட சூழ்நிலை ஐரோப்பாவிலும் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவில் ஜூலியஸ் சீசர் காலத்தில் இருந்து ஓர் ஆண்டு என்பது 365.25 நாள்கள் எனக் கணக்கிடப்பட்டு வந்தது. இது ஒரு பிழையான கணக்கு. இதனால் கி.பி. 1582 இல் ஆண்டு கணக்கில் 10 நாள்கள் குறைவு காட்டியது. இதை அறிந்த போப் 13 ஆம் கிரிகோரி அக்டோபர் 5ஆம் தேதியை அக்டோபர் 15ஆகக் கடைப்பிடிக்கும்படி அறிவித்ததோடு லீப் ஆண்டையும் அறிமுகப் படுத்தினார்.
ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் பெரும்பான்மை நாடுகளில் செல்வாக்கு செலுத்திவந்ததால்கத்தோலிக்கபோப்கூறியதை அனைவரும் மதித்துக் கடைபிடித்தனர். வட்டார வேறுபாடுகளும் கலாச்சார வேறுபாடுகளும் அதிகம் உள்ள இந்தியாவில் பஞ்சாங்கம் பலவிதமாக இருந்தன. பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் அவை எதுவும் கட்டுப்படவுமில்லை.
இந்தியாவில் சமயவிழாக்கள் நிலவின் நகர்வை அடிப்படையாகக் கொண்ட நாள்காட்டி மூலமே இன்னும் கணக்கிடப்படுகின்றன. திதி, நட்சத்திரம் போன்றவை சந்திர நாள்காட்டியின் அடிப்படையிலானதே. இந்தத் திதிக்கான நாள் நாடு முழுவதும் ஒன்றாக இருக்காது. தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட திதி கடைப்பிடிக்கப்பட்டால், உத்திரப்பிரதேசத்தில் அதே நாளில் அதே திதி இருக்காது. தகவல் தொடர்பு சாதனங்களில் வளர்ச்சியில் உலகம¢ சுருங்கிவிட்ட நிலையில் இத்தகு வேறுபாடுகள் அறிவியல்பூர்வமாகச் சரி செய்யப்பட வேண்டியவை என்று சாகா குழு பல்வேறு பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட வெவ்வேறு வகையான 30 நாள்காட்டிகளைச் சேகரித்து பரிசீலனைக்கு உட்படுத்தியது.
இந்தியா முழுமைக்கும் கடைப்பிடிக்கத்தக்க ஒரு பிழையற்ற நாள்காட்டியை உருவாக்குவது இந்தக் குழுவுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலை. இதில் உள்ளூர் மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளை நடைமுறையில் உதாசீனப்படுத்திவிட முடியாத சூழலையும் நாள்காட்டி சீரமைப்புக்குழு எதிர்கொண்டது. இறுதியில் இறுதி அறிக்கை அறிவியல்பூர்வமாக சாகாவால் தொகுக்கப்பட்டது.
‘நமது குடிமை வாழ்வு சார்ந்த நோக்கங்கள், சமூக நோக்கங்கள், இன்னபிற நோக்கங் களுக்கான நாள்காட்டி முறையில் ஓர் ஓர்மை இருக்கவேண்டும்’ என்பதை வலியுறுத்தி இருந்தார். அவர் அந்தப் பிரச்சினையை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். நமது அறிவியலாளர்கள் தங்கள் அறிவார்ந்த தலைமையை இப்பணிக்கு நல்குவார்கள் என்று நேரு நம்பிக்கையும் தெரிவித்திருந்தார். இறுதியாக 1955ஆம் ஆண்டு நாள்காட்டி சீரமைப்புக் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் குடிமையியல் நோக்கத்திற்கான நாள்காடடிக்குக் கீழ்கண்ட சீர்திருத்தங்கள் பரிந்துரை செய்யப் பட்டிருந்தன.
1. ஒருங்கிணைந்த தேசிய நாள்காட்டிக்கு சக சகாப்தம் பயன்படுத்தப்பட வேண்டும். (சக சகாப்தத்தின் தொடக்கம் கி.பி.78-79 ஆகும். இந்த வகையில் 2014 ஆம் ஆண்டில் இருந்து இதைக் கழிக்க 2015 ஆம் ஆண்டுக்கான சக ஆண்டு 1936-37 ஆகும்.)
2. நிலநடுக்கோட்டின் மீது வேனில்காலத்தில் (கோடையில்) சூரியக் கதிர்கள் விழும் உத்தரயான நாளில் (சித்திரை விசு) இருந்து ஆண்டு தொடங்க வேண்டும்.
3. சாதாரண ஆண்டு 365 நாள்கள் கொண்டிருக்கும். லீப் ஆண்டு 366 நாள்களைக் கொண்டிருக்கும். சக ஆண்டோடு 78யைக் கூட்டி வரும் எண் 4ல் வகுபட்டால் அது லீப் ஆண்டு. கூட்டுத்தொகை 100இன் மடங்காக அமையும் பட்சத்தில் 400 இல் வகுபட்டால் அது லீப் ஆண்டு. வகுபடாவிட்டால் அது சாதாரண ஆண்டு.
4. ஆண்டின் முதல் மாதம் சைத்ரா ஆகும். சைத்ரா, வைசாகா, ஜ்யேஷ்டா, ஆஷாதா, சிராவணா பத்ரபாதா ஆகிய 6 மாதங்கள் 31 நாள்கள் கொண்டவை. மற்ற அஸ்வினா, கார்த்திகா, அக்ரஹாயானா, பௌஷா, மாகா, பல்குனா ஆகிய 6 மாதங்களும் 30 நாள்கள் கொண்டவை.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் வெப்பக் கதிரும் வெப்பம் குறைந்த கதிரும் புவியின் ஈர்ப்பு விசையில் பாதிக்கப்பட்டு முன்கூட்டியே சூரியக் கதிர் நிலநடுக்கோட்டின் மீது விழுவதைப் பூர்வாயனம் அல்லதுஅயணமைய முந்துநிகழ்வு என்பர்.
இந்த முந்து நிகழ்வை 1400 ஆண்டுகளாகப் பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் கணக்கில் கொள்ளாததால் இந்து பண்டிகை நாள்கள் உரிய பருவங்களை விட்டு ஏற்கனவே 23 நாள்கள் தள்ளி அமைந்துள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. ஆனால் பலநூறு ஆண்டு களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தத் தவறை ஒரே அடியாக மாற்றுவது குறித்து இந்த அறிக்கை தயக்கம் காட்டியது. எனவே இந்த 23 நாள் வேறுபாட நிலையான வேறுபாடாக வைத்துக் கொண்டு கணக்கீடுகளைச் செய்து கொள்ளவும்.
மேலும் எதிர்காலத்தில் வேறு பாடுகள் உருவாகாமல் சீர்திருத்தப்பட்ட நாள் காட்டி முறையைக் கைக்கொள்ளவும் இந்த அறிக்கை பரிந் துரை செய்தது. அதாவது சமயம் சார்பான பண்டிகைநாள்களைஉள்ளதுஉள்ளபடியேயும் குடிமையியல் நாள்களைச் சீர்திருத்த நாள் காட்டி முறையிலும் வைத்துக் கொள்ள இது பரிந்துரைத்தது.
அரசு கோப்புகள், ஆவணங்கள், நடவடிக் கைகள்,சட்ட செயல்பாடுகள் போன்ற வற்றைப் பஞ்சாங்கங்களில் இருந்து விடுவிக்க இந்தப் பரிந்துரைகள் வழிவகுத்த வகையில் முற்போக்கான நடவடிக்கையே என்பதில் சந்தேகமில்லை. எனினும் பழம் பஞ்சாங்கங் களைத் திருத்தமுடியாமல் போனது வருத்தமான ஒன்றே.