தீவிரமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட ஒருவருடன் சமீபத்தில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நம்மை சுற்றியிருக்கும் நபர்களில் பெரும்பாலானவர்கள் ஆன்மீகத்தைக் கடைபிடிப்பவர்கள் தான் என்றாலும், அவர்களுக்கு ஆன்மீகக் கண்ணோட்டம் சார்ந்து உலகப் பிரச்சினைகளை விளக்கத் தெரியாது. ஆனால் நான் உரையாடிய அந்த நபர், தன்னை ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவராகவும், நாட்டில் உள்ள பல புண்ணிய தலங்களுக்குச் சென்று கடவுள்களை தரிசித்துள்ளதாகவும், இந்து ஞான மரபைப்போல வேறு ஒரு சிறந்த ஞான மரபு எதுவும் உலகில் கிடையாது எனவும் என்னிடம் கூறினார். அத்தோடு இஸ்லாம், கிருஸ்தவம் போன்ற மதங்களை விட இந்து மதமே கடைபிடிப்பதற்கு மிக எளிமையானது, அதனால் தான் அது இன்றும் அழியாமல் இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கடைபிடிக்கப்படுகின்றது என்றார்.
நான் அவரிடம், ‘இந்துஞான மரபை எந்த வகையில் உலகில் சிறந்த ஒன்றாக கருதுகின்றீர்கள்? ஞான மரபு என்று சொல்லும் அளவிற்கு இந்துமதப் புனித நூல்களில் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கின்றது, கொஞ்சம் சொல்லுங்கள்... நானும் தெரிந்துகொள்கின்றேன்’ என்றேன்.
அந்த நபர் ‘எல்லாமே அதில் சொல்லப்பட்டிருக்கின்றது. அதில் சொல்லாதது எதுவும் மற்ற புனித நூல்களில் கிடையாது’ என்றார்.
நான் திரும்பவும் ‘அப்படி பொதுப்படையாக சொன்னால் எப்படி? ஏதாவது ஒன்று, இரண்டாவது குறிப்பிட்டுச் சொல்லுங்கள்’ என்றேன்.
அந்த நபர் சற்று யோசித்துவிட்டு தலையை சொறிந்துகொண்டு ‘இப்படி கேட்டா எப்படிங்க சொல்றது, நம்ம முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் கிடையாது, அவங்க நல்லது சொல்லி வைச்சிருக்கிறதாலதான் அதை இத்தனை கோடிபேர் இன்றும் கடைபிடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்’ என்றார்.
நான் அனைவரிடமும் வழக்கமாகக் கேட்பது போலவே அந்த நபரிடமும் கேட்டேன் ‘சார் இந்த முன்னோர், முன்னோர் என்று சொல்றீங்களே.. எதாவது ரெண்டு முன்னோரோட பேர சொல்லூங்களேன்’ என்றேன்.
அந்த நபர் சுதாரித்துக்கொண்டார், “என்னைப் பார்த்து நீங்க நாத்திகரா?” என்றார்.
நான், ‘அப்படி எல்லாம் இல்ல சார், எனக்கு உண்மையைத் தெரிஞ்சிக்கினும்னு ஆசை... அதுதான் கேட்டேன். உங்கள மாதிரி இருக்கிற பல பேர் இப்படித்தான் முன்னோர் சொன்னாங்க, முன்னோர் சொன்னாங்க என்று சொல்வார்கள். ஆனால் அந்த முன்னோர்களின் பெயர்களைக் கேட்டால் தெரியாது என்பார்கள். சரி நீங்க சொன்னது எந்த புத்தகத்தில் இருக்கிறது என்றாவது சொல்லுங்க... நாங்க படிச்சு தெரிஞ்சுக்கிறோம் என்றால் அதுவும் தெரியாது என்கின்றார்கள். பின்னால் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி உங்களைப்போல உள்ளவர்கள் கூச்சமே இல்லாமல் இப்படி அடுத்தவன் கிட்ட போய் ஆதாரமே இல்லாத ஒன்ன உண்மை மாதிரியே பேசுறீங்க’ என்றேன்.
அந்த நபருக்கு சுளீர் என்று கோபம் வந்துவிட்டது. ‘உங்களைப்போல உள்ளவர்கள் எல்லாம் இப்படித்தான் பேசுவீங்க, நாட்டுல நடக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும் நீங்கத்தான் காரணம்… உங்களை மாதிரி இருக்கிற ஆளுங்கத்தான் அவங்களையும் குழப்பிகிட்டு அடுத்தவனையும் குழப்பிவிடுகின்றார்கள்’ என்றார்.
அவரது கோபத்தை உணர்ந்த நான் ‘சார், இப்ப என்ன கேட்டுவிட்டேன் என்று கோபப்படுகின்றீர்கள். முன்னோர்கள் பெயரைக் கேட்டது தப்புதான் விடுங்க, சரி நீங்க இந்த மாதிரி ஆன்மீகத்தில் தீவிரமா ஈடுபடறத்துக்கு யார் சார் காரணம்?’ என்றேன்.
அவர் ‘சார் நான் சின்ன வயசில் இருந்தே நிறைய பாலகுமாரன், இந்திர செளந்திரராஜன் போன்றவர்களின் நாவல்களைப் படிப்பேன். அத எல்லாம் படிக்க படிக்க எனக்குள்ள இந்த மாதிரி தீவிரமான ஆன்மீக சிந்தனைகள் எல்லாம் வந்தது’ என பெருமையாக சொன்னார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய நண்பர்கள் பலபேரை தான் இதுபோல மாற்றியுள்ளதாக பெருமைபட்டுக் கொண்டார்.
இவன் உருப்படாமல் போனது மட்டுமின்றி எத்தனைப் பேரை இந்தப் பாவி கெடுத்துக் குட்டிசுவர் ஆக்கியிருக்கின்றான் என மனதுக்குள் நினைத்துக்கொண்டே ‘சார், இப்படி தீவிர ஆன்மீகவாதியா இருக்கின்றீர்கள், நிறைய கோவில்களுக்கு எல்லாம் போகின்றீர்கள். இதனால் எதாவது நேரடியான பயன் உங்களுக்குக் கிடைச்சிருக்கா’ என்றேன்.
‘அப்படி எல்லாம் கேட்கக்கூடாது சார், கோவிலுக்குப் போனா எதாவது கிடைக்கும் அப்படீனு யாரும் போறது கிடையாது, எல்லாம் ஒரு நம்பிக்கைதான் சார். உங்கள மாதிரி இருக்கிறவுங்களுக்கு அது எல்லாம் புரியாது’ என்றார்.
‘சரி எங்கள மாதிரி ஆளுங்களுக்குப் புரியலேனே விடுங்க, உங்களுக்குத்தான் நல்லா புரியுமில்ல... கோவிலுக்குப் போனா நல்லா இருப்பேன் என்று நினைப்பது நம்பிக்கை என்று சொல்றீங்க, ஆனா பல வருசமா கோவிலுக்கு போற பல பேரு இன்னமும் மோசமான வறுமையில இருக்காங்களே அதுக்கு என்னா சொல்றீங்க, அதுமட்டும் இல்லாம நீங்க பெருமையா சொன்ன இந்துஞான மரபில் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன் மட்டும்தான் கோவிலுக்கு உள்ள அதாவது கருவறைக்குள்ள போகனும்னு எழுதிவைச்சி இருக்காங்க, மத்த சாதிக்காரன எல்லாம் தேவடியாப்பயன்னு எழுதிவைச்சி இருக்காங்களே... அதுக்கு என்ன சொல்றீங்க’ என்றேன்.
அவ்வளவுதான் அந்த நபர் உடனே கத்த ஆரம்பித்துவிட்டார், ‘நான் அப்பவே நினைச்சேன்... நீ ரொம்ப மோசமான ஆளுன்னு, உங்கிட்ட வாய் குடுத்ததே தப்பா போச்சு, இந்து மதத்த தப்பா பேசுறதே உங்களுக்கு வேலையா போச்சு... இந்த மாதிரி மத்த மதத்த சேர்ந்தவங்கிட்ட போய் கேப்பீங்களா’ என்றார்.
‘நான் ஏன் கேட்க வேண்டும்? மத்த மதத்துல யாரையும் நீதான் கோவிலுக்கு உள்ள வரனும், நீ கோவிலுக்கு வெளியே தான் நிக்கனும்னு சொல்லலையே’ என்றேன்.
அதற்கு அவர் நீங்க ‘இந்த மாதிரி பேசிக்கிட்ட இருந்த உங்கள சுத்தி இருக்கின்ற எல்லாரும் உங்கள விட்டுட்டுப் போய்யிடுவாங்க, நீங்க கடைசிலா அநாதையா தான் இருக்கனும்’ என்றார்.
‘நா அநாதையா இருக்கறது இருக்கட்டும், இந்துஞான மரபு அது இதுன்னு பேசிட்டு எதைப்பத்தியும் ஒன்னும் தெரியமா பைத்தியத்காரத்தனமா உளறிக்கிட்டு திரியிறியே உனக்கு வெட்கமா இல்லையா? உங்களோட ஆன்மீக அறிவ வைச்சிக்கிட்டு நாட்டுல நடக்கிற எதாவது பிரச்சினைக்குத் தீர்வு சொல்ல முடியுமா, எப்ப பார்த்தாலும் உங்கள மாதிரி இருக்கிற ஆட்கள் சுயநலத்தோட தான இருக்கிறீங்க’ என்றேன்.
கோபத்தின் உச்சிக்கே போன அந்த நபர், ‘நாட்டுல நடக்கிற பிரச்சினைக்கு நான் எதுக்குத் தீர்வு சொல்லனும்? அது எல்லாம் உங்கள மாதிரி வெட்டியா சுத்திகிட்டு இருக்கிறவங்க செய்யற வேலை. உங்களுக்கு ஒன்னு தெரியுமா ஒழுங்கா ஆன்மீகத்தை கடைபிடிச்சாலே நாட்டுல பிரச்சினையே வராது. அதை செய்யாததால் தான் இவ்வளவு பிரச்சினையும் வருது’ என்றார்.
‘அப்படி என்றால் ஒழுங்காக ஆன்மீகத்தைக் கடைபிடித்து இருந்தால் நாட்டில் இருந்து சாதியையோ, பாலியல் வன்முறைகளையோ, விலைவாசி ஏற்றத்தையோ தடுத்துவிடலாம் என்று சொல்கின்றீர்களா?’ என்றேன்.
‘ஆம்’ என்றார்
‘சரி, அப்படி என்றால் ஒழுங்காக ஆன்மீகத்தை எப்படி கடைபிடிப்பது என்று சொல்லுங்கள்’ என்றேன்.
‘ஒழுங்காக என்றால் தினம் கோவிலுக்குப் போவது, ஆஸ்டார அனுஸ்டானங்களை எல்லாம் தீவிரமாக கடைபிடிப்பது. முன்னோர்கள் சொன்னதை எல்லாம் தவறாமல் செய்வது’ என்றார்.
‘ஓ அப்படி என்றால் இதை எல்லாம் செய்தால் நாட்டில் பிரச்சினைகளே வராது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?’ என்றேன்.
‘அப்படி சொல்ல முடியாது, இதை எல்லாம் செய்தாலும் விதி என்ற ஒன்று இருக்கின்றது அல்லவா... அதுபடிதான் எல்லாமே நடக்கும்’ என்றார்.
நமக்கு இவனிடம் ஏன்டா வாயைக் கொடுத்தோம் என்று ஆகிவிட்டது. இருந்தாலும் இவனை சும்மா விடக்கூடது என முடிவு செய்து அடுத்த கேள்வியைக் கேட்டேன்.
‘என்னா சார், முதல்ல கோவிலுக்குப் போனா பிரச்சினை தீர்ந்தது என்று சொன்னீர்கள். இப்போது எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்கின்றீர்கள். உங்க பேச்சிலேயே நிறைய முரண்பாடுகள் உள்ளதே. ஒரு அஞ்சி நிமிசம் கூட முரண்பாடு இல்லாமால் உங்களால தொடர்ச்சிய பேச முடியவில்லையே’ என்றேன்.
அந்த நபர் ‘நான் சரியாகத்தான் பேசுகின்றேன்... உங்களுக்குதான் நான் சொல்வது புரியவில்லை’ என்று ஒரே போடாகப் போட்டார்.
சரி தொலையட்டும் என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன். ‘சரி சார், அது என்ன விதின்னு சொல்றீங்களே அப்படின்னா என்ன’ என்றேன்.
‘அதுவந்து சார் ஆண்டவன் இது இது தான் நடக்கும் என்று ஏற்கெனவே மண்டையில எழுதி வைச்சிட்டார், அதுபடிதான் எல்லாமே நடக்கும், இத யாரும் மாத்த முடியாது’ என்றார்.
‘அப்படி என்றால் எல்லாமே திட்டமிட்ட படிதான் நடக்கின்றது என்கிறீர்கள். நாட்டில் நடக்கும் கொலை, பாலியல் வன்முறை, அராஜகம் எல்லாமே கடவுள் எழுதிவைத்த படிதான் நடக்கின்றது. ஒரு காமக் கொடூரனால் நீ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்படுவாய் என கொல்லப்படும் பெண்களின் தலையில் ஏற்கெனவே எழுதி வைத்திருக்கும், அதே போல இந்துமத வெறியர்களால் மிகக் கொடூரமான முறையில் எரித்தும், கைகால்கள் துண்டிக்கப்பட்டும் கொல்லப்படுவார்கள் என்று குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் தலையில் கடவுள் எழுதிவைத்திருப்பார் என்றும் சொல்கின்றீர்களா?’ என்றேன்.
அந்த நபர் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ‘அது எல்லாம் அவர்கள் செய்த பாவம் சார், அதனால் தான் அவர்களை கடவுள் குஜராத்தில் பிறக்க வைத்து இருக்கின்றார். அவர்கள் அப்படி சாக வேண்டும் என்பது கடவுளின் விதி. அதுமட்டும் அல்ல இலங்கையில் நடந்த படுகொலைகூட அப்படித்தான். அந்த மக்கள் எல்லாம் போன ஜென்மத்தில் யாருக்கோ பாவம் செய்து இருக்கின்றார்கள். அதனால் தான் அங்கு பிறந்து இப்படி சாகின்றார்கள்’ என்றார்.
‘சார் இப்படி கீழ்த்தரமா பேசுறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லையா? உங்களோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க யாராச்சும் இப்படி பாதிக்கப்பட்டிருந்தா... இப்படித்தான் பேசுவீங்களா ‘என்றேன்.
‘ஆம் அப்படித்தான் சொல்வேன். அதுதான் உண்மை. எதுவும் கடவுளை மீறி நடப்பதில்லை. எல்லாமே அவன் செயல்’ என்றார்.
கடைசியாக வாக்குவாதம் முற்றிப்போய் அந்த நபரை போடா,வாடா, புறம்போக்கு, முட்டாள் பயலே, செருப்பிலேயே அடிப்பன்டா என்று ஏகத்துக்கும் போட்டு தீட்டிவிட்டேன். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் கண்டிப்பாக நான் சொன்னதை செய்து விடுவேன் என உணர்ந்த அந்த நபர் ‘உங்கள மாதிரி ஆளுங்ககிட்ட எல்லாம் பேசுறதே தப்பு, நீங்க எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டீங்க’ என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.
இவன் ஒருவன் மட்டும் அல்ல.. தோழர்களே! இவனைப்போல கோடிக்கணக்கான ஆன்மீகவாதிகள் இப்படித்தான் பேசிக்கொண்டு திரிகின்றார்கள். ஒவ்வொரு ஆன்மீகவாதியையும் கீறிப் பார்த்தீர்கள் என்றால் அவனுக்குள் இருந்து பல கொடிய மிருகங்கள் எல்லாம் வெளிவருவதை நாம் பார்க்கலாம். நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் அருகில் இருக்கும் எவனாவது ஒரு ஆன்மீகவாதியை நீங்களும் கீறிப் பாருங்கள்.
- செ.கார்கி