kuthoosi gurusamy 300அவன் பொல்லாதவன்! அவள் பொல்லாதவள்!-என்பது போல, ஒரு நாளையும் பொல்லாத நாள் என்று கூறலாம்!

எல்லோரும் கூறத்தேவையில்லை. விஷயம் தெரிந்த விஞ்ஞான மூளைகள் மட்டும் கூறலாம்!

கடுமையான வெயில் நாள்! பொறுக்க முடியாத குளிர்நாள்! வெளியில் வரமுடியாத மழைநாள்!

இவைகளில்! எதுவுமேயில்லாமல் ஒரு நாளை முன் கூட்டியே நல்ல நாள் அல்லது கெட்ட நாள் என்று கூறக் கூடிய சக்தி உலகில் நம்மைத் தவிர வேறு யாருக்குமே கிடையாது!

ஒரு நாள் நல்ல நாள் என்று 4-5 மாதத்துக்கு முந்தியே (பஞ்சாங்கத்தைப் பார்த்து) சொல்லும் சக்தி எங்களுக்குத் தானுண்டு!

அந்த நல்ல நாளில் பெருவெள்ளம் வந்தாலுஞ்சரி; பூகம்பமே வந்தாலுஞ்சரி! நல்ல நாள் நல்ல நாள் தான்!

அதுபோல் ஒரு நாளைக் கெட்ட நாள் என்று கூறிவிட்டால் அந்த நாள் அணுக்குண்டு ஒழிக்கப்பட்ட நாளாயிருந்தாலும் அது

கெட்ட நாள் தான்!

நல்ல நாள்! கெட்ட நாள்!

யாருக்கு நல்ல நாள்? யாருக்குக் கெட்ட நாள்?

திருடனுக்கு நல்ல நாளாயிருப்பது திருடக்கொடுத்தவனுக்குக் கெட்ட நாள்.

முதலாளிக்கு நல்லநாளாயிருந்தால் தொழிலாளிக்குக் கெட்டநாள்!

புலிக்கு நல்ல நாளாயிருப்பது, ஆட்டுக்குக் கெட்ட நாள்தானே?

போலீஸ்காரருக்கு நல்ல நாளாயிருந்தால் பொதுமக்களுக்கு அது கெட்ட நாள் தானே?

சரி! தினசரி ஏடுகளும் வாராந்திர ஏடுகளும் இப்போது இந்தப் பிரச்னையில் முனைந்து நிற்கின்றன அல்லவா?

ஒரு தினசரி ஏட்டில் இன்று வெள்ளிக்கிழமையின் பலனைப் பற்றிக் கொட்டை எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு மேற்கு வார சூலையாம். அதாவது, மேற்குப் பக்கமாகப் போகின்ற காரியம் வெற்றியடையாது! வீட்டிற்குள்ளே கூட மேற்குப் புறமாகச் செல்லக்கூடாது! அதுதான் இன்றைய தினம் சென்னையில் எல்லோரும் கிழக்கு நோக்கியே மைல் கணக்காகச் சென்று கொண்டிருந்த தைக் கண்டேன்! என்ன ஆனாலுஞ் சரி! அப்படித்தான் செய்யவேண்டும்!

இன்றைக்கு இன்னொரு முக்கிய விஷயங்கூட! “இன்று விமான யாத்திரை கண்டிப்பாக விலக்கவும்”- என்கிறது. இந்தச் சோதிடக் குறிப்பு!

அவசியம் கவனிக்கத் தக்கதுதான்! இதைமீறி யாராவது விமானத்தில் புறப்பட்டால் நிச்சயம் ‘க்ளோஸ்!’

நான் (சோதிடத்தை ஆதாரமாக வைத்து) இப்படிக் கூறுவதில் சந்தேகமிருந்தால் நாளைப் பத்திரிகைகளைப் படித்துப் பாருங்கள்! உலக மெங்கும் ஒரே விமான விபத்தாகத்தானிருக்கும்!

சரி! இவ்வளவு ஆபத்தான ஒரு நாளை இப்படி நம்மிடையே புகுத்தித் தொல்லை தருவது யார்?

நிச்சயம் கடவுளாயிருக்க முடியாது! அவர் தயாபரர்! அன்பே உருவானவர் அவருடைய சிருஷ்டிகளாகிய நம் மீது இவ்வளவு கெட்ட எண்ணமிருக்க முடியாது!

அப்படியானால் யாரோ “சகித்தான்” என்கிறார்களே! அந்த ஆசாமியாயிருக்குமோ?

சரி! அவன் எங்கேயிருப்பான்? நான் கண்டதேயில்லையே! கண்ட குப்பைகளை யெல்லாம் கற்பனைசெய்து விட்டு, அவன் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறானே! அவனைத் தேடிப் பிடியுங்கள்! கடவுளிடத்தில் கொண்டுபோய்விட்டு, “இவனை

ஏனய்யா உண்டாக்கினீர்?”- என்று ஒரு வார்த்தை கேட்டுப் பார்க்கலாம்! அக்கிரகாரத்துப் பக்கத்தில் தேடிப்பாருங்கள்! அங்கேதான் ஒளிந்து கொண்டிருப்பான் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்!

- குத்தூசி குருசாமி (8-12-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It