கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத் தீர்ப்பு அரசியல் பார்வையில் விமர்சிக்கப்படுகிறது, அதுவும் தேவைதான் அதைவிட சமூகப் பார்வையில் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவமானது‌‍.

ஒரு பெண்ணுக்கு உயிரை விட கற்பு பெரிது என்ற ஆணாதிக்க சமூகப் பார்வைக்கு மரண அடி தந்திருக்கிறது இந்த தீர்ப்பு. கற்பு பெண்களுக்கு மட்டுமே புனிதமாக்கப்பட்டது, உடல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் துணிவுடன் வெளியே வருகிறார்கள்.

ஆனால் பாலியல் வன்முறை வழியாக பாதிக்கப்படும் பெண்கள் துணிவோடு வெளியே வருவது இல்லை; சமூகம் தன்னை இழிவாகப் பேசும் என்று அஞ்சுகிறார்கள். கட்டாய பாலியல் வன்முறை கூட ஒரு வன்முறைதான் என்ற புரிதலுக்கு சமூகம் வராததும் இதற்கு ஒரு காரணம். இதன் காரணமாகவே பல பெண்கள் பாலியல் வன்முறையை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள்.

இந்த அச்சத்தை பொள்ளாச்சி கும்பல் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீடியோக்களைக் காட்டி மிரட்டி அவர்களைப் பணிய வைத்து இருக்கிறது. ஆனாலும் கூட பெண்கள் தாங்கள் பெற்ற கல்வி வலிமையினால் இந்த தடைகளை உடைத்தெறிய தயாராகி விட்டார்கள் என்பதால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள் இந்த துணிச்சலை பாராட்ட வேண்டும்; கற்பிழந்த பெண் உயிர் வாழவே கூடாது; அதற்குப் பிறகு அவளுக்கு வாழ்க்கையே இல்லை என்று நமது மதமும் பண்பாடும் மூளையில் திணித்து வைத்துள்ளன.

கணவர்களின் கற்புக்கு தமிழில் ஏன் வார்த்தை இல்லை என்று கேட்ட பெரியார் அடிமைக் கற்பும் நிர்ப்பந்தக் கற்பும் கொடுமையானது‌ வெறுக்கத்தக்கது என்று தனது "பெண் ஏன் அடிமையானாள்" நூலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்:

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ஆண்களின் மனைவிமார்கள் தங்கள் நெற்றிக் குங்குமத்தை இழந்து விட்டார்கள் என்று இந்த தாக்குதலுக்கு குங்குமத்தை குறியீடாக்கி சிந்தூர் என்று பெயர் சூட்டினார் மோடி.

தாக்குதலுக்கு மத வடிவம் தரும் முயற்சி குங்குமம், தாலி, மெட்டி இவைகளெல்லாம் பெண்களுக்கான குறியீடுகளாக புனிதமாக்கப்பட்டுள்ளன, ஆண்களுக்கு இத்தகைய குறியீடுகள் எதுவும் இல்லை.

இதே வழக்குக்கு மனுதர்மம் சட்டமாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் என்ன தீர்ப்பு வந்திருக்கும்? உயிரைக் கொடுத்தாவது கற்பைக் காப்பாற்ற வேண்டிய பெண்கள் அதில் தவறி விட்டார்கள் எனவே பெண்களே குற்றவாளிகள் என்ற தீர்ப்புதான் வந்திருக்கும். இப்போது சட்டங்கள் மாறிவிட்டன ஆனால் ஆணாதிக்க சிந்தனை மட்டும் அப்படியே நீடிக்கிறது இந்த தீர்ப்புக்கு பிறகாவது பெண்கள் கற்பு என்ற புனித கோட்பாட்டை உடைத்து அதுவும் ஒரு வன்முறையே என்று வெளியே வர வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்