சுயமரியாதைக்காரன்: - ஐயா இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பண நெருக்கடியான காலத்தில் கடன் வாங்கிக் கொண்டு இத்தனை அவசரமாய் காசிக்குப் போகின்றீர்களே என்ன காரியம்?
புராண மரியாதைக்காரன்:- ஒரு காரணமும் இல்லை. இந்தப் பாழாய்ப்போன சுயமரியாதை இயக்கம் வந்து பிள்ளைகளையெல்லாம் கெடுத்துவிட்டது. அதனால் தான் இவ்வளவு கஷ்டத்துடன் காசிக்குப் போக வேண்டி இருக்கிறது.
சு.ம:- சுயமரியாதை இயக்கத்திற்கும் தாங்கள் காசிக்குப் போவதற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லையே?
பு.ம:- என்ன சம்மந்தம் என்றா கேட்கின்றீர்கள். நானோ வயது முதிர்ந்த கிழவன். ஒரு வேளை திடீர் என்று செத்துபோய்விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னுடைய பிள்ளைகள் எனக்கு கர்மம் செய்வார்களா? திதி செய்வார்களா? எள்ளுந் தண்ணீர் இறைப்பார்களா? பிண்டம் போடுவார்களா? நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். இந்த நாசமாய்ப் போன சுயமரியாதைக்காரர்களால் எவ்வளவு தொல்லை?
சு.ம:- சரி. அதைப் பற்றி பிறகு பேசுவோம். அதற்காக நீங்கள் காசிக்கேனையா போகின்றீர்கள்? என்றால் அதற்கு ஒன்றும் பதில் இல்லாமல் சும்மா சுயமரியாதைக்காரரையே வைகின்றீர்களே?
பு.ம:- சொல்லுகிறேன் கேளுங்கள். முதலாவது காசியில் செத்தால், திதி பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் பிண்டம் போட்டாலும் போடா விட்டாலும் மோக்ஷம் கிடைக்கும். இரண்டாவது அதில் ஏதாவது கொஞ்ச நஞ்சம் சந்தேகமிருந்தாலும் கயாவுக்குப் போய் நமக்கு நாமே பிண்டம் போட்டுக் கொண்டு விட்டால் பிறகு எவனுடைய தயவும் நமக்கு வேண்டியதில்லை. ஆதலால் இப்போது நேரே கயாவுக்குப் போய் எனக்கே நான் பிண்டம் போட்டு விட்டுப் பிறகு காசிக்குப் போய் சாகப் போகின்றேன். அப்போது இந்த சுயமரியாதைகள் என்ன பண்ணுமோ பார்ப்போம்.
சு.ம:- சரி. அப்படியானால் நீங்கள் மறுபடியும் இங்கு திரும்பி வருவதில்லை போல் தோன்றுகிறதே.
பு.ம:- ஆம். இனி இங்கு எனக்கென்ன வேலை? பாடு பட்டு சம்பாதித்தேன். கடவுள் செயலால் ஒன்றும் குறைவில்லை. பிள்ளைகளை யும் நன்றாய் செலவு செய்து படிக்க வைத்தேன். அதிர்ஷ்டக் குறைவால் அதுகள் படிக்கவில்லை. கடைசியாக சுயமரியாதைக்காரர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அதுகள் திரியறதைப் பார்த்தால் எனக்கு எள்ளுந் தண் ணீர் கூட இறைக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஆதலால் நான் வந்த காரியத்திற்கு நான் போக வேண்டாமா?
சு.ம:- என்ன காரியமாய் வந்தீர்கள். அதற்காக எங்கு போகின்றீர்கள்.
பு.ம:- மனிதன் எதற்காகப் பிறந்தான்? அந்த ஸ்ரீமந் நாராயணனை வணங்கி அவன் பாதார விந்தம் போய்ச் சேருவதற்குத்தானே.
சு.ம:- ஸ்ரீமந் நாராயணன் பாதார விந்தம் தாங்கள் சேருவதற்கும் உங்கள் பிள்ளைகள் எள்ளும் தண்ணீர் இறைப்பதற்கும் நீங்கள் கயாவுக்கும் காசிக்கும் போவதற்கும் என்னையா சம்பந்தம்? எனக்கு சற்று விளங்கும் படியாய் சொல்லுங்களே! நானும் தங்கள் கூடவே வந்து விடுகின்றேன்.
பு.ம:- இதெல்லாம் உங்களுக்கு சுலபத்தில் சொன்னால் புரியாது.
சு.ம:- பின்னை எப்படிப் புரியும்?
பு.ம:- நல்ல குரு கடாக்ஷம் வேண்டும், பெரியோர்கள் சாவகாசம் வேண்டும், முன்னோர்கள் நூல்களில் பரிக்ஷை இருக்க வேண்டும், புராணங் களை மரியாதை செய்ய வேண்டும், பக்தி சிரத்தையுடன் அவைகளைப் படிக்க வேண்டும், எதற்கும் பிராரப்த கர்மமும் இதற்கு அனுகூலமாய் இருக்க வேண்டும். பகவான் கிருபையும் வேண்டும்.
சு.ம:- அப்படியானால் அவைகளில் எனக்கும் ஆசையாய் தான் இருக்கின்றது. இனிமேல் நான் சுயமரியாதைக்காரர்களுடன் சேருவதில்லை. தாங்கள் சொன்னபடியே நடந்து நானும் ஸ்ரீமந் நாராயணனுடைய பாதத்தை அடைய முயற்சிக்கிறேன். தாங்களே எனக்கு நல்ல குருவாயிருந்து கடாக்ஷம் செய்து மற்ற விஷயங்களை சற்று உபதேசம் செய்யுங்கள். அதாவது பெரியோர்கள் என்று சொன்னீர்களே அவர்களில் ஏதாவது ஒரு நாலைந்து பேர்களுடைய பெயர்களைச் சொல்லுங்கள். ஒருவரிடமாவது சாவகாசம் வைத்துக் கொள்ளப் பார்க்கிறேன்.
பிறகு முன்னோர்கள் நூல்கள் என்றீர்களே அதிலும் முன்னோர்கள் யார்? அவர்களுடைய நூல்கள் எவை? என்பனவற்றைச் சொன்னால் அதையும் அடைய முயற்சிக்கிறேன். பிறகு புராணங்களை மரியாதை செய்ய வேண்டுமென்கிறீர்களே எந்தப் புராணங்கள்?
அவைகளின் பெயர்கள் என்ன? எப்படி மரியாதை செய்வது? என்ப தையும் பக்தி சிரத்தையுடன் படிக்க வேண்டுமென்றால் பக்தி காட்ட வேண் டிய விதம் என்ன? சிரத்தை என்றால் பணம் கொடுத்து வாங்கிப் படித்தால் போதுமா? அல்லது யாருக்காவது பணம் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்க வேண்டுமா? என்கின்ற விஷயத்தையும் தயவு செய்து சொல்லுங்கள்.
அன்றியும் பிராரப்தகர்மம் இதற்கு அனுகூலமாய் இருக்கா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? இவ்வளவுக்கும் மீறி பகவான் கிருபை வேண்டுமென்று வேறு சொல்லுகிறீர்கள். அது எப்படி சம்பாதிப்பது ஆகிய காரியங்களைச் சற்று விளக்கித் தாருங்கள். இதோ நானும் கூடவே புறப்படுகிறேன்.
பு.ம:- சரி, சரி. உம்மைப் பார்த்தால் சரியான சுயமரியாதைக்காரராய்த் தெரிகிறதே! அவர்கள்தான் இப்படி எல்லாம் கேட்கின்றார்கள். அவர்களுக்குத் தான் இந்தக் குயுக்தி எல்லாம் தோன்றும்.
சு.ம:- என்ன அய்யா இவ்வளவு சந்தேகப்பட்டுவிட்டீர்கள். தெரியாத தினால்தானே நான் தங்களைக் கேட்டேன். தாங்கள் பெரியவர்கள் மோக்ஷத் திற்குப் போகிறவர்கள் என்று கருதித்தானே தங்களையே குருவாய்க் கேட்கின்றேன். தாங்கள் இப்படிச் சொல்லலாமா?
பு.ம:- வேண்டாமய்யா உம்ம சவகாசமே நமக்கு வேண்டாம். நீர் சரியான சுயமரியாதைக்காரர் என்பது தெரிந்துவிட்டது. உம்ம சங்கார்த்தமே நமக்கு வேண்டாம். நான் உமக்கு குருவாகவும் இல்லை. நம்ம கூட நீர் வரவும் வேண்டாம். போம் போம் இங்கே நில்லாதேயும்.
சு.ம:- சரி. உங்களுக்கு கோபம் வருவதானால் நான் பேசவில்லை போகிறேன். எனக்கு பிராரப்தகர்மம் உதவி செய்ய வில்லையோ? அல்லது பகவான் கிருபை இல்லையோ தெரியவில்லை. தங்களைப் போன்ற பெரியாரை குருவாக அடைந்தும் பிரயோஜனமில்லை. ஆனாலும், ஒரே ஒரு சந்தேகம் அதை மாத்திரம் நிவர்த்தி செய்து விடுங்கள்.
பு.ம:- என்ன சங்கதி?
சு.ம:- இவ்வளவு தீர்மானத்துடனும் பிடிவாதத்துடனும் இந்த முதிர்ந்த வயதில் போகின்றீர்களே ஒரு சமயம் தாங்கள் வழியில் செத்துப் போய் விட்டால் என்ன செய்வீர்கள்? அப்புறம் கயாவும், காசியும் எப்படி தங்க ளுக்கு உதவும்?
பு.ம:- செத்துப் போய்விட்டால் நல்ல காரியமாச்சுது. உம்மைக் கேட்க வரவில்லை. போ வெளியே புறப்படும் போது சகுனத்தடை மாதிரி வாயில் வருகின்ற வார்த்தைகளைப் பாருங்கள்!
சு.ம:- சரி. நான் போய் வருகிறேன். நீங்களும் உங்கள் புராணங்களும், அதற்கு நீங்கள் செய்யும் மரியாதைகளும் நன்றாயிருக்கின்றன. இனி உங்களைப் போன்ற புராண மரியாதைக்காரர்களே உலகத்தில் இருக்கட்டும்; நான் போகின்றேன்.
(குடி அரசு - உரையாடல் - 07.09.1930)