உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலித் சமூகத்தைச் சார்ந்த கவாய் பதவி ஏற்ற அடுத்த நாளிலே உச்சநீதிமன்றம் ஆகம தீண்டாமையை நியாயப்படுத்தி இருக்கிறது.

ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்தத் தீர்ப்பை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வரவேற்று இருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைக்கு எதிரான இந்தத் தீர்ப்பை எப்படி வரவேற்கிறார்?

இந்த கோரிக்கையின் நோக்கம் அர்ச்சகர் பதவிகளுக்கானது அல்ல, மாறாக ஆகமக் கோயில்களில் சூத்திரர்கள் அர்ச்சர்களாகக் கூடாது என்ற இழிவுக்கு எதிரான போராட்டம்.

ஒருமுறை கலைஞர் சட்ட மன்றத்தில் "கர்ப்பகிரகத்துக்கு பாதுகாப்பு தேவை தான், ஆனால் அது வர்ணாசிரம பாதுகாப்பாக இருக்கக் கூடாது" என்று காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்தார் கலைஞர் கருத்துக்கு எதிராகவே அமைச்சர் பேசுகிறார்.

அரசியல் சட்டம் தலைமை நீதிபதியாக ஒரு தலித் வர முடியும் என்று கூறுகிறது. ஆனால் ஆகமங்களோ பிராமணர்களைத் தவிர பிற ஜாதியினர் கோவி லுக்குள் அர்ச்சகராக முடியாது என்று கூறுகிறது.

அரசியல் சட்டத்தையே ஆகமங்கள் கட்டுப்படுத்துகின்றனவா? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஆகமங்களுக்கு உட்பட்ட கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது என்று அறிவித்த உச்சநீதிமன்றம் ஆகமங்கள் அல்லாத கோயில்களில் வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

தீண்டாமை சமூகத்தில் குற்றம் என்று கூறுகிற அரசியல் சட்டம் சமயங்களில் மட்டும் தீண்டாமை ஆகமங்கள் வழியில் நீடிக்கலாம் என்று கூறுவது நியாயம் தானா?

பெரியார் நெஞ்சில் தைத்த முள் மேலும் ஆழமாகப் புரையோடி விட்டது. 1971-ஆம் ஆண்டின் தொடங்கிய இந்தப் போராட்டம் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டது.

தமிழ்நாடு அரசு பிறப்பித்த அனைத்து ஜாதிகளும் அர்ச்சகர் ஆகும் ஆணை இப்போது சாகடிக்கப்பட்டு விட்டது. பார்ப்பனியத்தின் உயிர்நாடி எதில் தங்கி இருக்கிறது என்று பெரியார் கணித்தாரோ அது மிகச் சரியானது என்பதை இப்போது உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

 "ஆகமங்கள் மாற்ற முடியாதா?"‌

இப்போது கோயில்களின் கட்டமைப்பும் கோயில் வழிபாடுகளும் ஆகமங்களுக்கு முரண்களாகவே இருக்கின்றன என்று மகராசன் குழு அறிக்கை உட்பட பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தி விட்டன.

ஆகம கோவில்களில் கண்காணிப்பு கேமரா, ஆன்லைன் பதிவு, குளிர்சாதன வசதி என்ற நவீன வசதிகள் ஆகம விதிகளுக்கு மாறாக பயன்பாட்டுக்கு வந்து விட்டன. ஆனால் அர்ச்சகர்கள் மட்டும் அவா்களாக மட்டுமே இருக்க வேண்டும் அதை மாற்ற முடியாது என்று கூறுகிறார்கள்.

தீண்டப்படாத மக்கள் கோயில் நுழைவுக்கு கூட ஆகமங்கள் அனுமதிக்கவில்லை அதையும் மீறித்தான் கோயில் நுழைவு சட்டம் வந்தது.'பாஞ்சராத்திரங்கள்' என்ற வைணவ ஆகமம் வழிபாடுகளில் ஜாதிய பாகுபாடுகளை தடுக்கிறது.

ஆனால்‌ "பிராமணியத் தீண்டாமையை'' வலியுறுத்தும் ஆகமங்களை மட்டுமே சரியானவை என்கிறார்கள் அக்ரஹாரங்களை தவிர பிற பகுதிகளில் அனைத்து ஜாதிகளும் குடி இருக்கலாம் என்பது போலவே இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியின் அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டத்தை உயிர்ப்பிக்க உரிய சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்