ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்த நிதியை விடுவிப்போம் என்று அடாவடியாக பேசியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளபோது, ஒன்றிய அரசு தன்னிச்சையாக ஒன்றை உருவாக்கி, அதனை ஏற்றுக் கொண்டால்தான், மற்ற திட்டங்களுக்கு நிதி கொடுப்போம் என்று பேசுவதென்பது அரசியலமைப்புக்கு விரோதமானது.

 தமிழ்நாட்டின் கொள்கையே இருமொழிதான் என்பதை இன்றைய திமுக அரசு மட்டுமல்ல, பாஜகவின் அடிமை அரசாக இதற்கு முன்பிருந்த அதிமுகவே தெளிவுபடுத்தியிருக்கிறது. உள்ளூர் தொடர்புக்குத் தாய்மொழி, உலகத் தொடர்புக்கு ஆங்கிலம், இதைத் தவிர இன்னொரு மொழி எந்த வகையிலும் தமிழ்நாட்டுக்கு தேவைப்படவில்லை. அப்படியே பணி நிமித்தமாக எந்தவொரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பட்டால் அது தனிநபரின் விருப்பத்துக்கு உட்பட்டது, தேவைக்குட்பட்டது. யாரும் கற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தப் போவதில்லை.

 ஆனால் கட்டாயமாக மூன்றாவதாக ஒரு மொழியை படித்தே தீர வேண்டுமென்று வலியுறுத்துவதன் பின்னால் உள்ள சதிதான் ‘இந்தித் திணிப்பு’. தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் மும்மொழி கற்றுத்தர வேண்டுமென்று கூச்சலிடும் சங் பரிவார்கள், அவர்கள் ஆளும் வட இந்திய மாநிலங்களில் அவரவர் தாய்மொழியைக் கூட ஒழுங்காகக் கற்றுத் தருவதில்லை. இந்தி மட்டுமே முதன்மை மொழியாக கற்றுத் தரப்படுகிறது. ஆங்கிலம் அரைகுறையாக கற்றுத் தரப்படுகிறது, அடுத்து சமஸ்கிருதம் எட்டிப் பார்க்கிறது.

 தென் மாநிலங்களில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதைப் போல, வட இந்திய மாநிலங்களிலும் ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டால் மூன்றாவதாக ஒரு மொழியே தேவைப்படாது என்று தமிழ்நாடு எழுப்பும் நியாயமான குரலை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. ஏனென்றால் அவர்களின் நோக்கம் மொழி தெரியாத இருவர் சந்தித்துக் கொண்டால் எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்ற கவலையல்ல. மாறாக, இந்தித் திணிப்பின் ஊடாக இந்து தேசிய கலாச்சாரத்தை திணிப்பதும், பன்முகத் தன்மை நிறைந்த பிராந்திய அடையாளங்களை அழிப்பதுமே. அத்தகைய பன்முகத் தன்மை வட இந்தியாவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு இந்து-இந்தி- இந்திய கலாச்சாரம் முழுமையாகத் திணிக்கப்பட்டு விட்டது. அதன் மூலம் கிடைக்கும் இனவெறுப்பு சிந்தனைவாதம் பாஜக - ஆர்எஸ்எஸ் நடத்திக் கொண்டிருக்கும் அருவருப்பு அரசியலுக்கு ஆயுதமாகப் பயன்படுகின்றன.

 ஆனால் தமிழ்நாடு அதில் இருந்து விலகி தனித்துவமாக நிற்கிறது என்பதை சங் பரிவார் கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு தமிழ் மொழியைக் காப்பாற்றி வைத்திருப்பதையும், இந்தி ஆதிக்கத்தை ஏற்க மறுப்பதுமே இதற்குக் காரணம், எனினும் நேரடியாக இந்தியைத் திணித்தால் ஒவ்வொரு முறையும் தமிழர்கள் விழித்துக் கொள்கிறார்கள், அதனால் இம்முறை ‘இந்தி’ என்று சொல்லாமல், மூன்றாவது மொழி எனச் சொல்லிப் பார்க்கலாம் என்று முயற்சித்துப் பார்க்கிறார்கள். பின்வாசல் வழியாக இந்தியைத் திணிக்க முயலும் மலிவான நடவடிக்கை இது என்பதை தமிழ்நாடு நன்கு அறியும்.

 மூன்றாவது மொழியாக இந்தி, சமஸ்கிருதத்தைத் தவிர்த்துவிட்டு வேறொரு மொழியை கற்றுத்தர பாஜக ஆளும் எந்த மாநிலமும் இதுவரை முன்வரவில்லை. எந்தமொழியையும் கற்றுத் தரலாம் என்பதை பெயருக்கு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டார்களே தவிர, இந்தி - சமஸ்கிருதம் தவிர்த்து வேறு மொழிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கவோ, அதற்காக நிதி ஒதுக்கவோ முன்வரவில்லை. ஆனால் 2019-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது ஒன்றிய அரசு. இதுபோல வேறு எதாவது ஒரே ஒரு மாநில மொழிக்காவது ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளதா என்றால் நிச்சயம் இல்லை.

 தமிழ்நாட்டில் செயல்படும் ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூட தமிழ் முறையாகக் கற்றுத் தரப்படுவதில்லை. ஆனால் மும்மொழித் திட்டத்தில் ஏதோ ஒரு மாநிலத்தில் இவர்கள் மூன்றாவது மொழியாக தமிழைக் கற்றுத் தருவார்கள் என்று பெருமை பேசுகிறது இங்குள்ள பாஜக. ஏதோ ஒரு மாநிலத்தில் வாழும் மக்களுக்குத் தமிழ் ஏன் அவசியப்படப் போகிறது என்பதே நமது கேள்வி. நமக்கு எப்படி மலையாளமோ, கன்னடமோ, தெலுங்கோ, போஜ்புரியோ, குஜராத்தியோ தேவைப்படுவதில்லையோ அதுபோலத்தான் அவர்களுக்குத் தமிழும் தேவைப்படாது. ஆனால் தமிழ்நாட்டிலேயே தமிழை அழித்துவிட்டு இந்தியைப் புகுத்த முயற்சிக்கும் இந்த சதிகாரர்கள், மற்றொரு மாநிலத்தில் மூன்றாவது மொழியாக தமிழ் கற்றுத் தருவார்கள் என்று பேசுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமே அன்றி வேறில்லை.

 தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க நடக்கும் முயற்சிகள் இந்திய ஒன்றியத்தின் கட்டமைப்புக்குத்தான் பலவீனத்தை ஏற்படுத்துமே தவிர, ஒருபோதும் தமிழர்களை பலவீனப்படுத்தாது. மாறாக தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, பாஜக கட்டமைக்க முயற்சிக்கும் ஆரிய இந்து - இந்தி - இந்தியாவின் மீது வெறுப்பையே கூட்டும். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு மொழிப்போரைத் தொடங்க தமிழ்நாடு தயாராகவே இருக்கிறது. அந்த சூழ்நிலைக்கு தமிழர்களை தள்ளிவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒன்றிய அரசுக்கே இருக்கிறது. ஒன்றிய அரசுதான் நிதானித்துக்கொள்ள வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்