உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை கும்ப மேளா நடைபெற்றது. உலகின் மிகப் பெரிய ஆன்மிகத் திருவிழா என பாஜக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலகில் எங்குமே நடக்காத பேரவலங்கள் அங்கே நடந்தன. கோடிக்கணக்கான பேர் கூடியதாக செய்திகள் வந்தன. ஆனால் சில லட்சம் பேரை கையாளும் திறன் கூட உத்தரப் பிரதேச பாஜக அரசுக்கு இல்லை. போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை, ரயில்கள் இல்லை, போக்குவரத்து வசதியே இல்லை.
ரயில்களில் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக் கொண்டே உள்ளே ஏறிய காணொளிகளைஇப் பார்த்தோம். ஜனவரி மாதம் இறுதியில் கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்தோர் பற்றிய தெளிவான விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இவற்றுக்கெல்லாம் மேலாக, “கங்கை நதியின் தரம் குளிப்பதற்கான முதன்மை நீரின் தரத்துடன் ஒத்துப் போகவில்லை. கங்கை நீர் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும், மல பாக்டீரியாக்கள் எனப்படும் ஃபெக்கல் கோலிஃபார்ம் அதிகரித்துள்ளது. தற்போது மகா கும்பமேளாவில் மக்கள் கங்கை நீரில் குளிப்பதாலும், காணிக்கைகளை அங்கேயே விடுவதாலும் நீரின் தரம் மேலும் மோசமடையும். இந்தப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுவாக செயல்பட்டு வந்தாலும், மத சடங்குகளின்போது மாசுபாடு அளவு அதிகரித்துள்ளது” என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த கங்கை நதியில்தான் பிரதமர் மோடி நீராடினார், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நீராடினார், கோடிக்கணக்கான மக்கள் நீராடினர்.
இந்தக் கொடுமைகளே பரவாயில்லை என்று சொல்லத்தக்க வகையில், கும்பமேளா கூட்டத்தில் திருட்டுத் தொழில் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. ஜனவரி 13-ஆம் தேதி முதல் கும்பமேளாவின் இறுதி நாட்கள் வரை 300-க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்கள் கும்பமேளாவில் பதிவாகியுள்ளன. குறிப்பாக தாரகஞ்ச் மற்றும் கும்பமேளா கோட்வாலி காவல் நிலையங்களில் மட்டும் 315 முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலும் திருட்டு மற்றும் செயின் பறிப்பு தொடர்பான வழக்குகளே அதிகம். நகை, பணம், மொபைல் போன், கைப்பைகள், இரண்டு சக்கர வாகனங்கள் என கும்பமேளா கூட்டத்தில் கிடைத்ததையெல்லாம் வாரி சுருட்டிக் கொண்டனர் கொள்ளையர்கள்.
இதுபோதாதென்று கங்கை நதியில் பெண்கள் நீராடியபோது வீடியோக்கள் எடுக்கப்பட்டு, அதை ஆன்லைனில் விற்றிருக்கிறது ஒரு கும்பல். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, கடும் எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு அம்மாநில அரசால் முடக்கப்பட்டிருக்கிறது. பக்தியின் பெயரால் இத்தனை சீரழிவுகள் துணிச்சலோடு நடக்கிறது. ஆனால் இதுதான் உலகின் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழாவாம்! இந்துத்துவ கும்பலின் இத்தகைய பக்தி வியாபாரங்கள் பரிதாபம் தருகிறது!
- விடுதலை இராசேந்திரன்