2026-ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல தமிழ்நாடுதான் இதன் ஆபத்துகளையும் முதலில் உணர்ந்து அதுகுறித்த ஓர் எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறது. குறிப்பாகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்னிந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஏற்படப் போகும் இழப்புகள் என்ன என்பதை சுட்டிக்காட்டி, மிகுந்த விழிப்புணர்வோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது தமிழ்நாடு அரசு. ஆனால் தொகுதி மறுவரையறை தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லையே! திமுக அரசு வேண்டுமென்றே அரசியல் நோக்கங்களுக்கு இவ்விவகாரத்தை கையிலெடுத்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டுகிறது.
ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறையும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு பிறகு, அதற்கேற்பத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதற்காக 1952-ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட ஆணையங்கள் 1971 வரை 3 முறை மக்களவைத் தொகுதிகளை சீரமைத்துள்ளன. தற்போதிருக்கும் 543 மக்களவைத் தொகுதிகள் என்பது அப்போது இறுதி செய்யப்பட்டதுதான். ஆனால் அதன்பிறகு நெருக்கடி நிலை காலத்தில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திவிட்டு, பிறகு மறுவரையறை செய்யலாம் என அன்றைய பிரதமர் இந்திராகாந்தி முடிவெடுத்து, 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை திட்டத்தை தள்ளிப் போட்டார்.
மீண்டும் 2001-இல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இப்பிரச்னை எழுந்தபோதும், மக்கள்தொகை உயர்வு சீரற்று இருப்பதைக் கருத்தில்கொண்டு, 2026 வரை இம்முடிவை ஒத்திவைத்தனர். தற்போது 2021-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்திருந்தால், அடுத்து 2031-இல் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்ட பிறகே தொகுதி மறுவரையறை செய்ய முடியும். அதனால்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே நடத்தாமல் தாமதித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. புதிய நாடாளுமன்றம் கட்டும்போதே மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் 384 இருக்கைகளும் என மிக அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டது.
தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பரப்புரையிலும், நாடாளுமன்றத் திறப்பு விழாவிலும் தொகுதி மறுவரையறை பற்றி நரேந்திர மோடி பேசினார். விகிதாச்சார அடிப்படையில் மறுவரையறை செய்யப்படும் என்று அமித்ஷாவும் கூறிவிட்டார். மக்கள்தொகையை அதிகரிக்காமல் தொகுதிகளின் எல்லையை மட்டும் மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை 39-இல் இருந்து 31-ஆகக் குறையும். ஒட்டுமொத்த தென்மாநிலங்களில் தற்போது உள்ள 129 தொகுதிகளின் எண்ணிக்கை 103-ஆகக் குறையும். ஆனால் உ.பி.யில் 80-இல் இருந்து 87-ஆகவும், பிகாரில் 40-இல் இருந்து 43 ஆகவும், ராஜஸ்தானில் 25-இல் இருந்து 29-ஆகவும் அதிகரிக்கும்.
மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு 10 தொகுதிகளும், ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் 35 தொகுதிகளும் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால் பீகார், உ.பி., ம.பி., ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களுக்கு மட்டும் 150 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும். ஆகையினால் இந்த 2 வழிகளிலும் எப்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும். தென்னிந்தியாவின் தயவே இல்லாமல், பாஜக தனது சித்தாந்தத்தைத் திணிக்கிற சட்டங்களை துணிந்து இயற்றும். எதிர்ப்புக் குரலைக் கூட பதிவு செய்ய முடியாமல் பலவீனாமக்காப்படுவோம்.
எனவே தமிழ்நாட்டின் தற்போதைய பிரநிதித்துவமான 7.2% என்பது குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வோடு தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியது பாராட்டத்தக்கது. இது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் பிரச்னை அல்ல, தமிழர்களின் நாடாளுமன்ற பிரநிதித்துவத்தை தக்க வைப்பதற்கான ஒரு சவால். இதில் கூட தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. அந்த கூட்டணியில் இருக்கும் தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. தமிழர்களின் நலனுக்கு ஒரே அத்தாரிட்டி நாங்கள்தான் என்பதுபோல மூச்சடைக்க பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் நாம் தமிழர் கட்சி, தமிழ்நாட்டுக்கு வர இருக்கும் இந்த பேராபத்து குறித்துப் பேச விடுக்கப்பட்ட அழைப்பைப் புறக்கணித்து விட்டது.
சங்கிகளின் நண்பர்கள்தான் இந்த ‘நாம் தமிழர்’ என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் இவர்கள் என்பதை இதன்மூலம் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே கூட்டம்தான் பெரியாரை தமிழ், தமிழர் நலனுக்கு எதிரானவர் என சித்தரிக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தை வடநாட்டார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள், அப்போது நமது உரிமைகள் பறிபோய்விடும் என்று, தான் வாழ்ந்த காலத்திலேயே எச்சரித்தவர் பெரியார். அதைத்தான் இப்போது பாஜக அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதை முறியடித்து, தமிழ்நாட்டின் பிரநிதித்துவத்தை காக்க திராவிட மாடல் அரசும், நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் துணைநிற்போம்!
- விடுதலை இராசேந்திரன்
இந்தியாவின் சிறந்த மாடல் திராவிட மாடல்
கல்வியாக இருக்கட்டும் தனிநபர் வருமானமாக இருக்கட்டும் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கட்டும் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கையாக இருக்கட்டும் எந்த ஒரு அளவுகோலிலும் தெற்கிற்கும் வடக்கிற்கும் பாரதூர வேறுபாடு இருக்கிறது. கல்வியின் மூலம் சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் சிறப்பான மாணவர்களை தமிழ்நாடு உருவாக்கி இருக்கிறது இந்தியாவுக்கு என்று ஒரு மாடல் இருக்க முடியும் என்றால் அது தமிழ்நாடு மாடலாக மட்டுமே இருக்க முடியும்.
- தி வயர் இணையதள நேர்காணலில் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் சமூகவியல் பற்றி வகுப்பெடுக்கும் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெபர்லோ கருத்து.