மும்மொழிக் கொள்கை என்பது ஒரு சட்டம் அல்ல. இது ஒன்றிய அரசுக்குத் தெரியாதா? பின் ஏன் தமிழ்நாட்டை அது மிரட்டுகிறது? மும் மொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்தாவிட்டால், "சமக்ரா சிக்ஷா அபியான்" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியைத் தர முடியாது" என்று தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மிரட்டுகிறது! "மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தமிழ்நாட்டின் கடமை, ஏனெனில் மும் மொழிக் கொள்கை என்பது புதிய கல்விக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதி" என்றும் "நடைமுறைப் படுத்தாவிட்டால், எந்த ஒரு நிதியும் ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்காது" என்றும் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் கூறுகிறார்.
மேலோட்டமாக பார்க்கும் பொழுது "மாநில அரசு, ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம்" என்று சொல்கிற போது, எப்படி ஒன்றிய அரசிடமிருந்து நிதியை எதிர்பார்க்க முடியும்? என்று தோன்றும் மற்றும் இது ஒன்றிய அரசின் பணம் தானே என்றும் எண்ணத் தோன்றும். அதே சமயத்தில், தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசின் பங்குத் தொகையான வரியை ஒன்றிய அரசின் கருவூலத்திற்கு அனுப்புவதை நாங்களும் நிறுத்தினால் என்னவாகும்? என்று வினா எழுப்புகிறது.
"நாங்கள் வரியாக ஒன்றிய அரசுக்கு செலுத்தும் வரித் தொகையில் ஒரு சிறு தொகையை மட்டும் எங்களுக்கு ஒன்றிய அரசு திருப்பித் தருகிறது" என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது. உத்தர பிரதேசமும் பீகாரும் மகிழ்ச்சியாக இல்லை என்றால் தமிழ்நாடு எப்படி மகிழ்ச்சியாக இருக்க இயலும்? எனும் வாதம் கேட்பதற்கு நன்றாக இருக்கும்! தமிழ்நாடு கூறுவது சரி என்றாலும், இப்போதைக்கு நாம் இவ் விவாதத்துக்குள் நுழைய வேண்டாம்.
தென் மாநிலங்கள் மீதான ஒன்றிய பாஜக அரசின் பகை உணர்வு
உபி, பீகார் மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு குறைந்த அளவு வரியை செலுத்தி விட்டு ஒன்றிய அரசிடம் இருந்து பெருமளவு நிதியைப் பெறுகின்றன. அதே வேளை தமிழ்நாடு அரசு குறைந்த அளவு நிதியையே திரும்பப் பெறுகிறது. "நாம் எல்லோரும் இந்தியர் எனும் போது, உபி அல்லது பீகார் பின்தங்கிய நிலையில் இருந்தால், சக மாநிலமான தமிழ்நாடு எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? என்ற வாதமும் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது! தமிழ்நாடு, பீகாரையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்லும் போது, பீகாரோ அல்லது உத்தரப்பிரதேசமோ தமிழ்நாடு அல்லது கேரளாவின் நலனை நினைத்துப் பார்க்கிறதா? என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்! இம்மாநிலங்களின் சமூக மனசாட்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள் எந்த அளவுக்கு இடம் பெற்றிருக்கின்றன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தென் மாநிலங்கள் பாஜகவை ஆளுங்கட்சியாக தேர்ந்தெடுக்காத காரணத்தால், ஒன்றிய பாஜக அரசு இம் மாநிலங்களை பகைமை கண்ணோட்டத்தில் பார்க்கிறது.
புயல் - வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் இம் மாநிலங்களுக்கு தரவேண்டிய தேசிய பேரிடர் நிதியை போதுமான அளவுக்கு தர ஒன்றிய அரசு மறுக்கிறது. நிவாரணம் மற்றும் மறு வாழ்வுக்கான நிதியை ஒன்றிய அரசை கட்டாயப்படுத்திப் பெறுவதற்கு, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி இருந்தது!
பேரிடர் காலத்தில் உதவி கரம் நீட்டாத ஒன்றிய அரசின் மீது நாம் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? "மொழி கொள்கை என்பது இந்தி திணிப்பு அல்ல என்று ஒன்றிய அரசு கூறுவதை நாங்கள் நம்ப மாட்டோம்! என்று தமிழ்நாட்டு மக்கள் சொல்வதை தவறு என்று எப்படி கூற முடியும்? இது புறக்கொல்லை வழியாக இந்தியை திணிக்கும் செயல் என்று தமிழ்நாட்டு மக்கள் சொல்வது தவறா? இந்தியை முன்னிலைப் படுத்துவதற்கு ஒன்றிய பாஜக அரசு பல்வேறு வழிகளில் முயல்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்! *வெளிநாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தூதரகங்களில்* இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளிஉறவுத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திக்கு என்று தனி பிரிவு அமைக்கப்பட்டது. முதல்முறையாக வெளிநாடுகளில் இந்தியை மேம்படுத்துவதற்காக இணைச் செயலாளருக்கு நிகரான அலுவலர் நியமிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகள் பேசுவோர் ஏன் இந்திக்கு மட்டும் ஒன்றிய அரசு ஆதரவு அளிக்கிறது என்று கேட்கலாம் அல்லவா? புலம்பெயர்ந்த இந்தியர்களில் இந்தி பேசுவோர் மட்டும்தான் இருக்கின்றார்களா? இந்திக்கு ஆதரவாக பாஜக செயல்படுவதற்கு பல எடுத்துக் காட்டுகளைச் சொல்லலாம்: மூன்று ஆண்டுகளுக்கு முன் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அங்குள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார் இந்தி இந்தியாவின் தொடர்பு மொழி என்றும் அது வடகிழக்கு மாநிலங்களுக்கான தொடர்பு மொழியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இப்பகுதிக்கு 22,000 இந்தி ஆசிரியர்களை நியமிக்கும் திட்டத்தையும் அறிவித்தார். இவை அனைத்துக்கும் வடகிழக்கு மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. 2022 ஆம் ஆண்டு அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு நடுவண் பல்கலை கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில் நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தி மற்றும் மாநில மொழிகள் (உள்ளூர்) இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதைக் கவனத்தில் கொண்டு அனைத்து வழிகளிலும் ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதற்கு முயற்சி எடுக்கிறது என்று சொல்லி அதற்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு மடல் தீட்டி இருந்தார்.
இலியட் இதிகாசத்தின் ட்ரோஜன் சதிக் குதிரையாக மும்மொழி கொள்கை
உத்தர பிரதேச முதல்வர், மாநிலத்தில் நன்கு வேரூன்றிய உருது மொழிக்கு எதிராக நஞ்சைக் கக்குவதை பார்க்கும் போது, பாஜக அரசுகள் தமிழ் அல்லது துளு மொழிகளை எப்படி அணுகும் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். 2017 ஆம் ஆண்டு பாஜக அரசு, தில்லியை தலைமை இடமாகக் கொண்ட ஒன்றிய அரசின் ஒலி பரப்பு சேவையான ஆகாஷ் வாணியிலிருந்து தமிழ் மலையாளம் பெங்காலி போன்ற மொழிகளின் ஒலிபரப்பை தில்லியில் இருந்து நீக்கி அவற்றை தொடர்புடைய மாநிலங்களுக்கு மாற்றியது. தில்லியை தளமாகக் கொண்டுள்ள மாநில மொழிகளின் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் மொழி பெயர்ப்பாளர்களின் வேலைகள் இதனால் பறிபோயின. இதையும் தவிர, இதற்கு ஒரு குறியீட்டுப் பொருளும் இருக்கிறது. அதாவது தேசிய தலைநகரிலிருந்து மாநில மொழிகளை அந்தந்த மாநிலங்களுக்கு மாற்றுவதன் வாயிலாக அவை தேசிய மொழிகள் அல்ல வெறும் மாநில மொழிகள் என்று நீங்கள் சொல்லாமல் சொல்ல வருகின்றீர்கள்! ஏன் தமிழ் அல்லது மலையாள மொழிகள் மாநில மொழிகள் என்றும் இந்தி மட்டும் ஏன் தேசிய மொழி என்றும் அழைக்கப் படுகின்றன என்று நாம் எப்போதாவது வினா எழுப்பி இருக்கிறோமா?
மும் மொழிக் கொள்கை இறுதியில் தங்கள் மீது இந்தியை கள்ளத்தனமாக திணிக்க பயன்படுத்தப்படும் என்று தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நினைக்கும் போது, அவர்களின் கவலை நியாயமானது என்பதை புரிந்து கொள்ள மேற்சொன்ன எடுத்துக்காட்டுகளே போதுமானவையாக இருக்க வேண்டும். ஒன்றியக் கல்வி அமைச்சர் மும்மொழி கொள்கை என்பது அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவின் பாற்பட்டது என்கிறார். ஆனால் அது உண்மை அல்ல! அரசியல் அமைப்புச் சட்டத்தில் மொழி குறித்து அப்படி எந்த ஒரு பிரிவும் இல்லை. எனவே மும்மொழி கொள்கை என்பது ஒரு சட்டமல்ல. இந்த உண்மை அவருக்குத் தெரியாதா? பிறகு ஏன் அவர் தமிழ்நாட்டை மிரட்டுகிறார்?
மொழி கற்பித்தல் என்பது 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகும். புதிய கல்விக் கொள்கை நாடாளுமன்றத்தில் ஒருபோதும் விவாதிக்கப் படவில்லை. இது ஒன்றிய அரசின் சிந்தனையில் உருவானது மற்றும் ஒன்றிய அமைச்சரவை முடிவால் இது செயல்படுத்தப்பட்டது இதை வடிவமைத்ததில் மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கு எந்த ஒரு பங்கும் இல்லை. நடுவண் கல்வி ஆலோசனை வாரியத்தின் (CABE) கூட்டம் இது தொடர்பாக கூட்டப்படவே இல்லை. எனவே ஒன்றிய அரசு திட்டமிட்டு இந்த வாரியத்தை பயனற்றதாக மாற்றி உள்ளது. கல்வி தொடர்பான விடயங்களை விவாதிப்பதற்கான மன்றமாக இதை மாநிலங்களின் பிரதிநிதிகள் முன்பு பயன்படுத்தினர். அரசியல் அமைப்பின் கூட்டாட்சி உணர்வையும் மீறி உருவாக்கப்பட்ட இந்த புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
இப்படி உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கு எந்த ஒரு மாநிலத்தையும் கட்டுப்படுத்தும் திறன் கிடையாது என்பதை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்! ஒன்றிய அரசால் உருவாக்கப்படும் எந்த ஒரு பள்ளி பாடத்திட்டத்தையும் நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு கட்டாயப்படுத்த முடியாது. NCERT புத்தகங்களையும் கட்டாயம் ஆக்க முடியாது!
கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பது
கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு மட்டுமே முடிவு எடுக்க முடியாது. எனவே ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை மாநிலங்களை கட்டுப்படுத்தாது. எம் மாதிரியான கல்வி தேவை என்பதும் அதை எவ்வாறு திட்டமிடுவது என்பதும் அந்தந்த மாநிலங்களுக்கு தான் நன்கு தெரியும். ஆனால் இந்திய அரசு நீட் போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிபிஎஸ்இ (CBSE) பாடத் திட்டத்தையே அடிப்படையாக வைத்துள்ளமை ஒரு கள்ளத்தனமே! இவ்வாறாக மாநிலங்களில் உள்ள பள்ளிகளும் NCERT புத்தகங்களை பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துகிறீர்கள்!
மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாட்டில் கொள்கை அடிப்படையில் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு என்பது கொள்கை அடிப்படையிலானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வுக்கான எதிர்ப்பும் அத்தகையதே. "நான் ஒரு கொள்கையை எதிர்க்கும் பொழுது அந்த எதிர்க்கப்பட்ட கொள்கையின் ஒரு பகுதியை நானே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் எனக்குச் சொல்ல முடியாது"
மும்மொழிக் கொள்கையை உணர்வுபூர்வமாக வரவேற்பது சரி என்று சொல்லும் நல்லெண்ணக்காரர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்! ஆனால் வரலாறு நமக்குச் சொல்லும் பாடமோ வேறாக இருக்கிறது! விடுதலை பெற்ற இந்தியாவின் தொடக்கத்தில் மும்மொழி கல்விக்கு வித்திடப்பட்டது. அதன் பின்னர் மும்மொழிக் கொள்கை என்பது கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக 1968-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழியை (முன்னுரிமையாக தென்னிந்திய மொழிகளுள் ஒன்றை) கற்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழி ஆகியவற்றை கற்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பது கட்டாயம் என்பது இந்தி பேசாத மாநில மக்கள், இந்தி பேசும் மாநில மக்களோடு தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும் எனும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதன் பொருள் யாதெனில், இந்தி மட்டுமே இந்தியாவின் தொடர்பு மொழி என்பதை ஏற்றுக் கொள்வதாகும்.
தொடர்புக்கு ஆங்கிலம் போதும்
தேசியத் திட்டத்தில் இந்தி முதன்மையாக இருப்பதை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலம் போதுமானது என்று அது கூறுகிறது. மேலும் அவர்கள் மாநிலத்தில் இந்தி கற்பித்தல் மற்றும் கற்பதை நிறுத்தச் சொல்லவில்லை. தட்சிண பாரத ஹிந்தி பிரச்சார சபா போன்ற பல்வேறு அமைப்புகள் நடத்தும் இந்தி தேர்வில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். எனவே தமிழ்நாடு இந்தி மொழியை எதிர்க்கவில்லை அதன் திணிப்பையே எதிர்க்கிறது. கல்வியை பொறுத்த 75 ஆண்டு கால வரலாற்றில், ஏனைய இந்தி பேசும் மாநிலங்களை விட தமிழ்நாடு நேர்மையாக இருந்து வெகுவாக முன்னேறி உள்ளது. தமிழ்நாடு இரு மொழி கொள்கையை தான் அறிமுகப்படுத்தியது. அதே சமயத்தில் அது வேறு ஒரு எளிய வழியையும் தேர்ந்தெடுத்தது. அதாவது தமிழ்நாடு சமசுகிருதத்தை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்தியது. இதை எடுத்தால் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற லஞ்சத்தனமான உறுதிமொழியால் நிறைய மாணவர்கள் அதை படிப்பதற்கு தேர்வு செய்தனர் அப்படி சமஸ்கிருதத்தை தேர்வு செய்து வெளிவந்த பல தலைமுறை மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தில் அடிப்படை அறிவு கூட கிடையாது. மேலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்ற உணர்வே இருந்ததில்லை!
இந்தப் பின்னணியில், இந்தி பேசும் மாநில மக்கள் தென்னிந்திய மொழிகளுள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது ஏனென்றால் அவர்கள் தென் மாநிலங்களுக்கு கணிசமான அளவில் உயர் தொழில் கல்வி கற்பதற்காகவும் பல் வித வேலைகளுக்காகவும் வருகின்றனர். நிலைமை இதற்கு நேர் எதிர் என்று சொல்வது உண்மையல்ல.
இந்தி ஆதரவாளர்கள் தமிழ்நாட்டுக்கு அறிவுரை சொல்வதற்கு உரிமையில்லை
தென் மாநிலத்தவர் பீகார் அல்லது உத்தரப்பிரதேசத்தில் வேலை தேடுவதை காண முடியாது. கன்னடமோ அல்லது தமிழோ கற்றுக் கொள்வது தங்கள் வேலை இல்லை என்று நினைக்கும் திமிர் போக்கு இந்தி மாநிலத்தவரிடம் உள்ளது. தென் மாநிலத்தவர் இந்தி கற்றுக் கொண்டால், இந்தி பேசும் மாநிலத்தவர்க்கு தென்னிந்திய மொழிகள் கற்க வேண்டிய சுமை குறைந்து , அவர்கள் வாழ்க்கை எளிதாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். தென் மாநிலங்களைச் சார்ந்தவர்கள் உத்திரபிரதேசம் அல்லது பீகாரைச் சார்ந்தவர்களை விட பன்மொழி பேச தெரிந்தவர்கள் என்பது உண்மை. இந்தி பேசும் மாநிலத்தவரின் இந்திப் புலமையும் கேள்விக்குரியது? இந்தி பேசும் மாநிலங்களில் இந்தித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது!
எனவே இந்தி ஆதரவாளர்கள் தமிழ்நாட்டுக்கு அறிவுரை சொல்ல எந்த உரிமையும் இல்லை. அதிலும் குறிப்பாக பாஜகவினருக்கு உறுதியாக அந்த உரிமை இல்லை.
இந்தி தேசிய அரசியல் குறித்து தமிழ்நாடு அச்சப்படுவது சரிதான்! மொழியை திருத்துவதை விட முதலில் திருத்தப்பட வேண்டியது அரசியலே!
இறுதியாக துமிலின் கவிதையை குறிப்பிட விரும்புகிறேன்:
"மொழி என்பது நாடாளுமன்றத்தில் வேறாக இருக்கும்! தெருக்களில் அது மிகவும் வேறுபட்டு இருக்கும்! நாடாளுமன்ற இருளில் இருந்து வெளியேறி, தெருக்களுக்கு
வாருங்கள்!
மொழியை திருத்துவதற்கு முன் உறுதி செய்து கொள்ளுங்கள், முதலில் திருத்தப்பட வேண்டியது அரசியலே!
- அபூர்வானந்த் (தில்லி பல்கலைக்கழகத்தில் இந்தி கற்பிக்கிறார்.)
தி வயர் இணைய இதழில் 01-03-2025 அன்று ஆங்கிலத்தில் வந்த கட்டுரை இது.
தமிழில் தந்தவர்: வழக்குரைஞர் து.சேகர் அண்ணாதுரை