எப்போதுமே அரசியலிலோ அல்லது மற்றவற்றிலோ படிப்படியாக முன்னேறி செல்வதுதான் அனைவருக்கும் வழக்கம். ஆனால் மணியரசன் அவர்கள் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்து, தமிழ் தேசியம் பேசி, இப்போது ஜாதியவாதிகள் பக்கம் வந்து நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நாட்களில் முழுமையாக வெளிப்பட்டு விடுவார். 1956 நவம்பரில் மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது, யாரெல்லாம் தமிழ்நாட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று முதலில் ஒரு வரையறை வைத்திருந்தார்.
எந்த அறிவியல் அடிப்படையில் இந்த வரையறையை வைத்தார் என்பது தெரியாது. சீமானுக்கு ஆசானாக சேர்ந்து விட வேண்டும் என்ற ஆசையாக கூட இருக்கலாம்.
அண்ணா நினைவு நாளையொட்டி இந்த நிமிர்வோம் வாசகர் வட்டம் நடைபெறுகிறது. 1934-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற மாநாட்டில்தான் பெரியாரை முதன்முதலில் சந்தித்தார் அண்ணா. அங்கு “சமதர்மம்” என்ற தலைப்பிலே பெரியார் ஆற்றிய உரையைக் கேட்டுத்தான் அண்ணா இயக்கத்திற்கு வந்தாரா என்றால் இல்லை. அதற்கு முன்பே அண்ணாவுக்கு பொதுவுடமை தத்துவத்தைப் பற்றிய புரிதலும் அதன் மீது ஈர்ப்பும் இருந்தது. 1932-ஆம் ஆண்டு அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கட்டுரை போட்டி நடந்தது. அதற்கான கட்டுரைக்கு அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு “மாஸ்கோ மாப் பெரேட்” என்பதாகும். அதில் மாஸ்கோவில் நடந்த பெரும் அணிவகுப்பைப் பற்றிய ஓர் கட்டுரையை அண்ணா எழுதினார். சோவியத்தில் பொதுவுடைமை மலர்ந்தும் நடந்த பேரணி அது. அதில் எழுந்த உணர்ச்சி வெள்ளம் குறித்து எழுதிவிட்டு கடைசியாக ‘முதலாளித்துவம் வீழட்டும் பாட்டாளி வர்க்கம் உயரட்டும்’ என்ற சொல்லோடு மாணவராக இருந்தபோதே அண்ணா எழுதினார்.
பெரியாரும் இலக்கியமும்!
பார்ப்பன ஆதிக்கத்தை எப்படி எல்லாம் விளக்க வேண்டும் என்பதற்கு பெரியார் சொற்பொழிவாக கருத்துக்களைச் சொன்னார். இன்னொரு பக்கம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றவர்கள் அதை கவிதைகளாக கொடுத்தனர்.குத்தூசி குருசாமி போன்றவர்கள் அதை எழுத்துக்களாகக் கொடுத்தார்கள். இந்த ஆண்டு கூட நாங்கள் திராவிட இயக்கக் கவிஞர்கள் என்றுதான் கழக நாள்காட்டி வெளியிட்டோம். ஏராளமான கவிஞர்கள் பெரியாரியலை முன்னெடுத்துச் சென்று இருக்கிறார்கள். தங்கள் தங்கள் வழியில் அதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்போது தமிழ்த்தொண்டு என்று வருகிறபோது பெரியாருக்கும் இலக்கியத்தை பற்றி என்ன தெரியும் என்று கேட்கிறார்கள். பெரியார்தான் அதிகமாக தமிழ் இலக்கியங்களைப் படித்திருக்கிறார். அதற்கு 2,3 எடுத்துக்காட்டுகளை சொல்ல வேண்டும். “உயர்திணை என்பது மக்கள் சுட்டே” என்று தொல்காப்பியத்தில் இருக்கிறது. நன்னூலில் “மக்கள் தேவர் நரகர் உயர்திணையே” என்று இருக்கிறது. மக்கள் மட்டும்தான் தொல்காப்பியத்தில் இருந்தனர், தேவன் எங்கிருந்து வந்தான்? அவன்தோற்றம் என்ன?, அவன் எப்படி நம் இலக்கணத்திற்குள் வந்தான்? என்று யாராவது கேட்டிருக்கிறோமா சிந்தித்து இருக்கிறோமா?” என்ற கேள்வியைப் பெரியார் எழுப்புகிறார். தொல்காப்பியத்தையும், நன்னூலையும் படித்து ஆராய்ந்து இக்கேள்வியை பெரியார் எழுப்பியிருக்கிறார்.
“என்னை நம்பி இப்பழியேற்றேன்” என்று கம்பராமாயணத்தில் இராவணன் சொல்லுகிறான், நான் சொல்லுகிறேன் என்னை நம்பி இப்பணியேற்றேன் என்று சொல்லுகிறேன்” என்று கூறுயிருக்கிறார் பெரியார். அதாவது கம்ப ராமாயணத்தையும் படித்திருக்கிறார் பெரியார். “குடியரசை நானே எழுதி, நானே அச்சு கோர்த்து, நானே அச்சடித்து, நானே அதை படித்தாலும் குடியரசு வந்து கொண்டே இருக்கும்” என்றும் சொன்னார்.
“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே”
என்று கம்ப இராமாயணத்தில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கும் பெரியார், “ஒரு கடவுள் உற்பத்தி செய்வாராம். இன்னொரு கடவுள் காப்பாற்றுவாராம். ஒருத்தர் சாவுகிறாராம். மண் பச்சை பானை வாங்கி எடுத்து வைப்பாராம், மற்றொருவர் சூலையில் வைத்து சுட்டு காப்பாற்றுவாராம். மற்றொருவர் உடைப்பாராம்? என்ன இது? ஆக்கலும் நிலைப்பெறுத்தலும் அழகிலா விளையாட்டு” என்று விமர்சனங்களை வைத்தவர் பெரியார்.
தமிழ் இலக்கியங்களை ஏதோ தமிழறிவு இல்லாதவர் போலவும், இவர்களெல்லாம் தமிழை முழுமையாகக் கற்றவர்கள் போலவும் பேசிக் கொள்கிறார்கள்.
திருக்குறளை பரப்பினார்!
அதேபோல பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்போது நினைத்துப்பார்த்தால் கூட வியப்பாக இருக்கிறது. “தமிழக வாழ்வியல் பண்பாட்டு மாநாடு” என்று அதற்கு கூட அடைப்புக்குள் தலைப்பு கொடுத்தார் பெரியார்.
பல்லாயிரக்கணக்கில் திருக்குறள் நூல்களை அச்சடித்து பரப்பினார் பெரியார். 6 அணா விலைக்கு திருக்குறளை போட்டு அனுப்பி விட்டார். ஆனால் அடக்க விலை 5 அணா மட்டுமே ஆனது. இதை கணக்கு போட்டு அடுத்த நாள் அறிக்கை விடுத்தார். “ஆறணா விலை போட்டு முகவர்களுக்கு திருக்குறள் நூல்களை அனுப்பி இருக்கிறோம். அடக்க விலை பார்த்தபோது 5 அணாவாகத்தான் இருக்கிறது. எனவே முகவர்கள் தயவு செய்து ஐந்து அணாவுக்கே விற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். வாங்குபவர்களும் ஐந்து அணா என்று கேட்டு வாங்குமாறும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார் அந்த அறிக்கையில்.
ஒரு அணா அதிகமாக இருந்தால் ஒருவேளை திருக்குறளை மக்கள் வாங்காமல் விட்டுவிடுவார்கள். இது எல்லா மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் விலை குறைக்கப்படுவதாக அறிவித்தார்.
இலக்கியங்களாக கம்பராமாயணத்தையும், பாரதத்தையும் படித்துக் கொண்டிருந்த நமக்கு திருக்குறளைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தந்தவர் பெரியார். ஆனால் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில் பா.வே.மாணிக்க நாயக்கர் பேசினார். நாயக்கர் என்று பெயரில் வருவதால் ஒருவேளை இவர் பெரியாரின் ஜாதி, அதனால் உரையாற்ற வைத்தார் என்று கூட சொல்லுவார்கள். அது அவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம். மாணிக்க நாயக்கர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பொறியாளர். மேட்டூர் அணையை கட்டுகிறபோது கோட்டப் பொறியாளராக இருந்தவர் (டிவிஷனல் இன்ஜினியர்). அப்போது இங்கிலாந்து அனுப்பப்பட்டு பயிற்சியும் எடுத்து வந்தவர். தமிழறிஞரும் கூட.
அவர் எந்த மாதிரி தமிழ் அறிஞர் என்றால், கம்பனைப் பற்றியும் விமர்சனம் செய்வார். அவரைப்பற்றி பெரியார் கூறியபோது, “எழுத்துச் சிர்த்திருத்தைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறபோது பா.வே.மாணிக்கம் வந்தார். ஓம் என்ற ஒலியிலிருந்துதான் எல்லா எழுத்துக்களும் வந்ததன என்று சொன்னார். அன்றே எழுத்துச் சீர்த்திருத்தத்தை மறந்துவிட்டேன்” என்று கிண்டலாகச் சொன்னார்.
ப.வே மாணிக்கர் ”வால்மிகியின் வாய்மையும் கம்பனின் புளுகும்” என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.வால்மிகி எழுதிய உண்மையானச் செய்திகளைக் கம்பன் தன்னுடைய பொய்க் கதைகளை கட்டவிழ்த்து எழுதி இருக்கிறார் என்று அந்த நூலில் விளக்கமாக எழுதி இருக்கிறார். கம்பன் எவ்வளவு துரோகம் செய்து இருக்கிறார் தமிழ் இனத்திற்கு என்று எழுதிய தமிழ் அறிஞர். எதை சொன்னாலும் திருக்குறளை சொல்லி தான் விளக்கம் சொல்லுவார்.
திருக்குறளை மலம் என்று பெரியார் சொன்னார் என்று சில மலங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்போது. பெரியார் சொன்னது கம்பராமாயணத்தை.
"கம்பராமாயணம் தங்க தட்டில் வைத்த அமேத்தியம்" என்று சொன்னார். அமேத்தியம் என்ற சொல்லுக்கு பொருள் மலம். அமேத்தியம் தங்கத்தட்டில் தான் வைத்து கொடுக்குறான், அதுக்காக அதை சாப்பிட முடியுமா? அப்படித்தான் ராமாயணமும் அதில் உள்ள செய்திகள் நமக்கு உவப்பானதில்லை.
திருக்குறளுக்கு உரையாசிரியர்கள் எழுதிய உரையைப் படித்த போது இவ்வளவு மோசமான நூல் திருக்குறள் என்று நினைத்து கொண்டிருந்தார் பெரியார். நம்மவர்களுக்குப் பரிமேலழகர் எழுதிய உரைப் தான் சிறந்ததது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் எவரும் சரியாக படித்து இருக்க மாட்டார்கள். பரிமேலழகர் எழுதிய திருக்குறள் உரையில் அறத்துப்பால் அதிகாரத்தில் எழுதிய அறம் என்றால் என்ன?
“மனு முதலிய நூலோர் விதித்தன செய்தலும் விலங்கியன ஒழிதலும் அறம் ஆகும்”. அறம் என்றால் மனுநீதி சொல்வதைச் செய்வதும், வேண்டாம் என்பதை செயயாமல் இருப்பதும் என்று எழுதி இருக்கிறார். இதைப் படித்தால் பெரியார் திருக்குறளை ஏற்றுக்கொள்ளுவாரா?. ஒழுக்கம் என்றால் என்ன “அந்தந்த வர்ணத்தார் தமக்குரியத் தொழிலை தவறாமல் செய்வது ஒழுக்கமாகும்.” இதை பெரியார் ஒப்புக் கொள்ளுவாரா... இந்த உரைகளைத் தான் பரிமேலழகர் எழுதினார். இதை பார்த்த பெரியார் திருக்குறள் மாநாட்டில் பல தீர்மானங்களை நிறைவேற்றினார். அதில் எளிய குறளை தொடக்கப் பள்ளியிலும், கடினமான குறளை உயர்நிலைப் பள்ளியிலும், சிக்கலான குறளை கல்லூரியிலும் பாடமாக வைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்.
குறளுக்கு அறிவுக்குப் பொருத்தமான உரையை எழுத வேண்டும் என்று ஒரு ஐவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவில் புலவர் குழந்தை , புரட்சி கவிஞர் பாரதிதாசன் போன்ற திராவிட இயக்க கவிஞர்கள் அதில் இருக்கிறார்கள். மற்ற மூவரும் தமிழ்ப் புலவர்கள்.
அதில் திருக்குறள் உரையை எழுதியவர்கள் பாரதிதாசன், புலவர் குழந்தை மட்டுமே திருக்குறளுக்கு உரையை எழுதினார்கள். வேறு எந்த தமிழறிஞரும் அன்றைய காலத்தில் எழுதவில்லை; திராவிடர் கவிஞர்கள் தான் திருக்குறளுக்கு சரியான உரையை எழுதினார்கள்.
(தொடரும்)
(பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட 28-வது சந்திப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை)