மிரட்டுகிறார் ஒன்றிய அமைச்சர், தமிழ்நாட்டை! புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் அவரின் வாரணாசிப் பேச்சு நம்மை மிரட்டும் தொனியில் இருக்கிறது.
அதற்கு உடனடியாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது?...எங்கள் உரிமையைக் கேட்கிறோம். உங்கள் சொத்தைக் கேட்பதுபோல திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக் குணத்தை டில்லி பார்க்க வேண்டியிருக்கும்" என்று சூடாகப் பதில் சொல்லியிருக்கிறார்.புதிய கல்விக் கொள்கை என்பதே மும்மொழிக் கொள்கையாக இந்தியைத் திணிக்கும் பா.ஜ.கவின் திட்டம்தான். இதுகுறித்து ப. சிதம்பரம், தர்மேந்திர பிரதானுக்குத் தமிழ்நாட்டின் வரலாறு தெரியாது என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் வரலாறு இருக்கட்டும், முதலில் இந்தியின் வரலாறாவது தர்மேந்திர பிரதானுக்குத் தெரியுமா?
இந்தி என்பது ஒரு தனித்தன்மை கொண்ட மொழியன்று. இது 'மேல்நாட்டு இந்தி' 'கீழ்நாட்டு இந்தி' 'பிகாரி இந்தி' என்று மூன்று பிரிவுகளாலானது.
கங்கையாற்றுக்கு மேற்கே பஞ்சாப், அதன் தெற்குப்புற நிலப்பகுதிகளில் பேசப்படும் 'பங்காரு' , வடமதுரா பகுதிகளில் 'பிரஜ் பாஷா', கங்கை- யமுனைக்கு இடைப்பட்ட பகுதிகளில் பேசப்படும் 'கனோஜ்', 'பந்தலி' 'உருது' ஆகியவைகள் 'மேல்நாட்டு இந்தி'யாகும்.
அயோத்திப் பகுதிகளில் பேசப்படும் 'அவதி' 'பகேலி' 'சத்தீஸ்கரி' ஆகியவை 'கீழ்நாட்டு இந்தி'.
'மைதிலி - போஜ்புரி - மகதி' ஆகியவை 'பிகாரி இந்தி' என்று ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி மறைமலை அடிகளார் 'இந்தி பொதுமொழியா?'என்ற அவரின் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார். மாநிலத்திற்கு மாநிலம் இந்தியில் வேறுபாடு இருப்பதாகவும் அடிகளார் தெளிவாகச் சொல்கிறார். இப்படித் தனித்தன்மையற்ற, மொழி வேறுபாடுகளை உடைய இந்தி எப்படி ஒரு ஒன்றியத்தின் ஆட்சிமொழி ஆகமுடியும்? இதையெல்லாம் தர்மேந்திர பிரதான் புரிந்து கொண்டு பேச வேண்டும்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசின் 'கேந்திர வித்தியாலயா' பள்ளிகளில் இந்திக்கு மட்டுமல்ல, சமஸ்கிருதத்திற்கும் கூட ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு என்று ஒரு ஆசிரியர் கூட நியக்கப்படவில்லை. ஏன்?... மும்மொழிக் கொள்கை வழியாக முதலில் இந்தியையும், பின்னர் சமஸ்கிருதத்தையும் நுழைத்து ஆட்சிமொழியாக ஆக்க ஆர்.எஸ்.எஸ். போடும் திட்டம் என்பதற்கு மேற்சொன்ன கேந்திர வித்தியாலயம் சான்றாக அமைகிறது.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் 7-8-1959 அன்று நாடாளுமன்றத்தில் "....அரசு காரியங்களுக்காகப் பயன்படுத்துவதற்குத் துணை, இணைமொழியாக ஆங்கிலம் இருக்கும். மக்கள் எவ்வளவு காலம் விரும்புகிறார்களோ, அதுவரை ஆங்கிலம் மாற்று மொழியாக நீடிக்கும். அதனைப் பற்றி முடிவெடுக்க இந்தி பேசும் மக்களிடம் நான் விடமாட்டேன். இந்தி பேசாத மக்களே அந்த இறுதி முடிவை எடுப்பார்கள்" என்ற ஓர் உறுதிமொழியைக் கொடுத்துள்ளார்.
இதன்மூலம் இந்தி பேசாத மக்களின் அனுமதி இல்லாமல் ஆங்கிலத்தை நீக்கவும், இந்தியை ஒரே ஆட்சிமொழியாக ஆக்கவும் மாட்டோம் என்ற நேருவின் உறுதிமொழியை இன்றைய காவிகள் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, இந்தி-மும்மொழி என்று கூச்சல் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் 'இருமொழிக் கொள்கையே நம்முடைய - தமிழ்நாட்டின் கொள்கை' என்பதைத் தெளிவாகச் சொல்லி அது தீர்மானமாகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இன்று வரை தொடர்கிறது, இனியும் தொடரும்.
இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுபவர்களை விட அம்மொழியைப் பேசாதவர்களே அதிகம் இருக்கிறார்கள். எனவே இந்திய அரசியலமைப்பின் 8ஆம் அட்டவணைப்படி 22 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்கவேண்டும். ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக வைக்கவேண்டும். இதுவே கூட்டாட்சிக்குப் பெருமை சேர்க்கும்.
அதைவிட்டுவிட்டு மும்மொழியை ஏற்க வேண்டும், இந்தி வழியாக சமஸ்கிருதம்தான் ஆட்சியில் இருக்க வேண்டும், ஏற்காவிட்டால் 40 லட்சம் மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம், கல்வி நிதியைத் தரமாட்டோம் என்று அடாவடித்தனம் பண்ணிக் கொண்டிருந்தால் எங்கள் முதல்வர் சொன்னதுபோல, "தமிழர்களின் தனிக் குணத்தை டில்லி பார்க்க வேண்டி இருக்கும்".
மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டின் கடந்தகால வரலாறு, அப்படித்தான் இருந்திருக்கிறது.
- எழில்.இளங்கோவன்