ஆளுநர் பதவி என்பது , “ஆட்டுக்குத் தாடி போன்று தேவையற்றது, பயனற்றது.” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிடுவார்.

 தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புகின்ற தீர்மானங்களுக்கு எல்லாம் ஒப்புதல் தராமல், அவற்றுக்கு விளக்கமும் கேட்காமல் காலம் கடத்திக் கொண்டிருப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் காத்திருக்கின்றனர். அவர்கள் அரசுப் போட்டித் தேர்வுகளை எழுதி அதன் வாயிலாக அரசுப் பணியாளர்களாகக் காத்திருப்பவர்கள். அவர்களைத் தேர்ந்தெடுக்கின்ற அமைப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். அதற்கான தலைவரையும், உறுப்பினர்களையும் பரிந்துரைத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தால் அதைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றார் ஆளுநர் ரவி.rn ravi 358இவர் தமிழக அரசின் கொள்கைக் கோட்பாடு, சித்தாந்தங்கள் ஒவ்வொன்றிலும் முரண்பட்டுப் பொதுவெளியில் ஓர் அரசியல்வாதியைப் போன்று கருத்து தெரிவித்து வருகிறார். அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை ஆளுநர் ரவி தன்தலைமேல் போட்டுக்கொண்டு செயல்படுகிறார். தி.மு.கழகத்தின் கிளைக் கழகச் செயலாளர் ஆகின்ற தகுதி கூட இல்லாத இவர், ஒன்றிய ஆட்சியாளர்களின் ஊதுகுழலாகவே செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்களுக்கு எதிராக வழக்குகளை, அடுத்த கட்ட விசாரணைக்கு எடுத்துச் செல்வதற்குத் தடையாக ஆளுநர் இடைமறித்து நிற்கின்றார். ஊழல் அதிமுக அமைச்சர்களைப் பாதுகாப்பதில் ஆளுநருக்கு அவ்வளவு அக்கறை ஏன் வந்தது?

பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் ரவி மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து, அதற்காக உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் ஆறரை கோடி மக்களின் பிரதிநிதிகளான 234 சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்து எடுக்கும் முடிவுகளை, ஒன்றிய அரசால் நியமனம் பெற்ற ஒற்றை நபர், ஆளுநர் என்ற பெயரில் தடுத்து நிறுத்துவது என்பது மக்களுக்கு எதிரான சர்வாதிகாரம் ஆகும்.

 இப்பொழுது தமிழ்நாடு அரசு ஆளுநரின் செயலுக்கு எதிராகத் தவிர்க்க முடியாத சூழலில் வழக்குத் தொடுத்திருக்கிறது.

ஆளுநர் பதவியே தேவையற்றது என்கின்ற கருத்து நிலவுகின்ற இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டின் முதல்வர் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் “குறைந்தபட்சம் நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரைக்கும் இந்த ஆளுநரை மாற்றி விடாதீர்கள்” என்று “பூடகமாக” ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஏற்கனவே பஞ்சாப் அரசு Vs ஆளுநர் வழக்கிலும், தமிழ்நாடு அரசு Vs ஆளுநர் (பேரறிவாளன்) வழக்கிலும் யாருக்குக் கூடுதல் அதிகாரம்! சட்டமன்றத்திற்கா? ஆளுநருக்கா? என்கிற கேள்வியில், பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று அமைகின்ற சட்டமன்றத்திற்குத்தான் கூடுதல் அதிகாரம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது உச்ச நீதிமன்றம்.

 சட்டமன்றத் தீர்மானங்களை ஒரு ஆளுநர் எவ்வளவு காலம் ஒப்புதல் தராமல் ஒத்தி வைக்கலாம்? என்று கேட்டால் As soon as possible என்றுதான் குறிப்பிடப்படுகிறது. ஆனால் As late as possible என்பதே ஆளுநர் ஆர் என்.ரவியின் நடைமுறையாக இருக்கிறது. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்க வேண்டும் என்பது எதேச்சதிகாரம். அது மக்களாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 இந்தக் கேடுகளுக்கு எல்லாம் மூலாதாரமாக இருப்பது பிரதமர் நரேந்திர தாஸ் மோடியின் மனப்பாங்கு . அவர் நினைத்ததைத்தான் இவர் செய்து கொண்டிருக்கின்றார். அவரைப் பொறுத்தவரையில் நாட்டில் ஒரு பாராளுமன்றம், பல்வேறு சட்டமன்றங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள், பல்வேறு உணவுப் பழக்க வழக்கங்கள் என்றெல்லாம் இருக்கக் கூடாது. ஒரே நாடு ! ஒரே மொழி! ஒரே பண்பாடு! ஒரே உணவுப் பழக்கம்! ஒரே ரேஷன் கார்டு! ஒரே பாராளுமன்றம்! ஒரே கட்சி! ஒரே ஆட்சி! என்று இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

 பல்வேறு மாநிலங்கள், பல்வேறு சட்டமன்றங்கள் என்று இருப்பதை எல்லாம் சிதைத்து சின்னாபின்னம் ஆக்கி எல்லாவற்றையும் சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து “மாநிலம்” என்கின்ற உணர்வு இல்லாமலும், “மாநில சுயாட்சி”என்கின்ற பேச்சுக்கு இடமில்லாமலும் அதிபர் ஆட்சி, சர்வாதிகாரம் என்ற திசை நோக்கி பயணிக்க நினைக்கின்றார். இது முற்றிலும் மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது, முரணானது.

ஆரிய மேலாதிக்கத்தை நிலைநாட்டி அனைவரையும் அடிமைகளாக நடத்துவது என்கின்ற கெடுநினைப்பைக் கொண்டிருக்கும் பாசிச பா.ஜ.க அரசை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முறியடித்து, வீட்டுக்கு அனுப்புவது தான் நாட்டின் நலனுக்கு உகந்தது.

நாடு காக்க, மொழி காக்க, மாநில உரிமைக்காக தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச, மதவாத, ஆதிக்க உணர்வு கொண்ட பாஜக அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் இ.ந்.தி.யா. கூட்டணி வெற்றி பெற்று நாட்டை ஆள வேண்டும்.

- பொள்ளாச்சி மா.உமாபதி

Pin It