வேதாளம் திரும்பத் திரும்ப முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது. மனம் தளராத  விக்கிரமாதித்தனும் அதைப் பிடித்து வந்து கொண்டே இருக்கிறார்.  1938 தொடங்கி ராஜகோபாலாச்சாரியார் காலம் தொட்டு ஆதிக்க இந்தி தமிழ்நாட்டில் அடி எடுத்து வைப்பதும், மானமுள்ள தமிழர்களின் பேரெதிர்ப்பால் ஆதிக்க இந்தி அடித்து விரட்டப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்துகளை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த முற்படுகிறது.  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள அறிக்கையில் ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், மற்றும்  ஒன்றிய பல்கலைக் கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இந்தி பேசாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு எதிரானது.

amit shah on hindiஇந்த அறிவிப்பு வெளியானதும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 1938 இல் ராஜகோபால ஆச்சாரியார், 1950 களில் ஜவகர்லால் நேரு , 1965 இல் லால் பகதூர் சாஸ்திரி, 1977 இல் மொரார்ஜி தேசாய்,  1986 இல் ராஜீவ் காந்தி என்று இந்திய ஒன்றியத்தின் பிரதமர்கள் இந்தியை அலுவல் மொழியாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டின் எதிர்ப்பின் மூலம்  தவிடுபொடி ஆக்கப்பட்டுள்ளன.

 மொழிப்போரில் பாய்ந்து வந்த துப்பாக்கித் தோட்டாக்களுக்கு மார்பு காட்டியும்,  தங்கள் தேக்குமரத் தேகங்களைத் தீயின் கொடிய நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்தும்,  நஞ்சருந்தியும்,  ஆதிக்க இந்தியைத் தடுக்கத் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் பல நூறு பேர்.  ஆதிக்க இந்தியைத் தடுக்கவும் அன்னைத் தமிழைக் காக்கவும் இத்தனை பேர் இன்னுயிர் ஈந்த வரலாறு தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தானது.

பழமொழி ஒன்று சொல்வார்கள் ; “ஆசை இருக்கிறது தாசில் பண்ண!  அமைப்பு இருக்கிறது கழுதை மேய்க்க!” என்று.  வடவர்களுக்குக் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்,பாஜக தலைவர்களுக்கு சமஸ்கிருதத்தை இந்தியாவின் தலைமை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்றப் பேராசை உண்டு.  ஆனால் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் சில ஆயிரம் பேர்கள் கூடத் தொடவில்லை.

 இந்தி மொழிக்குத் தொன்மைச் சிறப்போ,  இலக்கண இலக்கிய வளமோ,  அறிவியல் தொடர்போ எதுவும் கிடையாது. இந்தி மொழி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய மொழி.

 துளசிதாசர் ராமாயணம் தவிர சொல்லிக் கொள்ளும் படியாக வளம் எதுவும் இந்தி மொழிக்கு இல்லை.

 இந்தி மொழியின் மூலம் நவீன அறிவியல் பாடங்களையும், பொறியியல் மருத்துவத் தகவல் தொழில்நுட்பத் துறை பாடங்களையும் படிக்க முடியுமா? என்றால் முடியவே முடியாது.

 இந்தி படித்தால் நாடு ஒற்றுமையாக இருக்கும். நாட்டின் ஒற்றுமை கருதி எல்லோரும் இந்தி படிக்க வேண்டும்  என்கிறார்கள். எந்த ஒரு தனி மொழியும் ஒருமைப்பாட்டை வளர்க்காது.

 இந்திய அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுக்கும் அவற்றிற்குரிய மதிப்பையும்,  மாண்பையும் கொடுத்துப் போற்றிப் பாதுகாத்தால் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமை பாதுகாக்கப்படும்.  எந்த ஒரு மொழியும் அடக்கி ஆள நினைத்தால் அது நிச்சயம் ஒற்றுமைக்குக் கேடாகத்தான் முடியும்.

 இந்தி இந்தியாவில் பெரும்பான்மையினர் பேசுகின்ற மொழி என்று சொன்னால் அதுவும் பிழையானது.  அது வட மாநிலங்களில் உள்ள போஜ்பூரி,  மைதிலி,  அவதி,  ராஜஸ்தானி,  பீகாரி போன்ற பல மொழி பேசும் மக்களை எல்லாம் இந்தி பேசுபவர்களாகக் கணக்கில் காட்டிதான் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழி என்று புளுகி வருகின்றனர்.  சரியாகக் கணக்கெடுத்தால்,  இந்தி பேசும் மக்களை விட இந்தி பேசாத மக்களே பெரும்பான்மையானவர்கள். 

இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்று கடந்த காலங்களில் கருதப்பட்டது.  ஆனால் தற்போது கேரளா, கர்நாடகம், மேற்கு வங்கம் என நாடு முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வுகள் பெருகி வருகின்றன.  நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி பேசாத மாநிலங்களின்  நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகி, இந்தி ஆதிக்கத்தின் பேராபத்துகளை விளக்கிச் சொல்லி, இந்தி எதிர்ப்பு எந்த அளவிற்குத் தேவையானது என்பதை விளக்கிச் சொல்லி இந்தித் திணிப்புக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

இது காலத்தின் கட்டாயம்!!

- பொள்ளாச்சி மா.உமாபதி