சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2026
மாநில உரிமைகளை அடித்து நொறுக்குகிறது! கூட்டாட்சி முறைமையைக் காலில் போட்டு மிதிக்கிறது! எள்முனை அளவு கூட மாநில உரிமையை மதிப்பதில்லை! ஒவ்வொரு தேசிய இனத்தின் உரிமையையும் பறிக்கிறது! மக்களின் கைகளைக் கட்டி, மாநிலங்களின் கைகளைக் கட்டி, கனிம வளங்களைக் கார்ப்பரேட்டுகள் களவாடிச் செல்ல, கதவுகளைத் திறந்து விடுகிறது மோடி அரசு!
கனிமநிலம் மாநிலத்திடம் இருக்கும்! ஆனால் அந்தக் கனிமத்தின் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை! ஒன்றிய அரசு அனுமதித்தால்தான் வரி விதிக்க முடியும்!
ஒரு புதிய சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறது மோடி அரசு! 12.08.2026 அன்று, ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957- ஐ மேலும் திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். மக்களவையில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொண்டிருந்தாலும், விவாதமே இல்லாமல் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய அரசின் பார்வையில், இந்த மசோதாவின் நோக்கம், இந்தியாவின் சுரங்கத் துறையை "மேலும் திறன்மிக்கதாகவும், முதலீட்டுக்கு உகந்ததாகவும் மாற்றுவதுடன், நாட்டில் அதிகரித்து வரும் முக்கியமான கனிமங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சுரங்கத் துறையைத் தயார்படுத்துவதும் ஆகும்."
கெட்ட செயலை நல்ல வார்த்தைகளில் விவரிக்க இந்திய ஒன்றிய அரசுக்குத் தெரியும். கனிமம் இல்லாத நிலம் ஏது? ஒவ்வொரு இடத்திலும் ஏதாவது ஒரு கனிமம் நிலத்தில் புதைந்துதான் இருக்கிறது. இவற்றை எடுத்துக் கொள்ள, தனியார் நிறுவனங்களுக்கும் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கும் இந்திய ஒன்றிய அரசு உரிமை வழங்கியிருக்கிறது.
இதன் பொருள் என்ன?
கனிம நிலங்கள் மீதான உரிமையை மாநிலங்களிடமிருந்து பறித்து, பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகள் எந்தத் தடையும் இல்லாமல் கனிமங்களை அள்ளிக் செல்ல ஏற்ற வகையில் (முதலீட்டாளர்களுக்கு உகந்த வகையில்) விதிமுறைகளைத் திருத்தி விடுவது, கனிம நிலங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து பிடுங்கி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது- என்பதுதான் இந்திய அரசின் நோக்கம்.
2019 ஆம் ஆண்டு அமெரிக்கா முக்கிய கனிமங்கள் (critical minerals) என்று ஒரு பட்டியலை அறிவித்தது. 2021 ஆம் ஆண்டு இந்தக் கனிமங்கள் பற்றி இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் செய்து கொண்டன. 2023- இல் கொண்டுவரப்பட்ட சுரங்க மற்றும் கனிம சட்டத் திருத்தம் மூலம், லித்தியம் போன்ற முக்கிய மற்றும் சிக்கலான கனிமங்களை ஆய்வு செய்ய தனியார் துறைக்கு முழுமையான உரிமைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அணுக்கனிமத்தைக் கண்டறிய தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா அனுமதி அளித்தது. பன்னாட்டுப் பெருமுதலாளிகள் மாநிலங்களுக்குள் புகுந்து, நிலத்தை அகழ்ந்து கனிமங்களை, குறிப்பாக அணுக்கனிமத்தை, கண்டறிந்து அள்ளிக் செல்வதை மாநில அரசுகள் தடுத்து விடாமல் இருப்பதற்காக இப்பொழுது இந்தச் சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது.
சட்டத் திருத்தம்
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) திருத்த மசோதா - 2026- ஐ மக்களவையில் தாக்கல் செய்து, எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறது மோடி அரசு. Mines and Minerals Development and Regulation Act of 1957- என்ற சட்டம் கனிமங்களை ஒழுங்குமுறை செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டத்தில் மூன்று இடங்களில் திருத்தி இருக்கிறது, மேலும் ஒரு புதிய பிரிவைச் சேர்த்திருக்கிறது.
திருத்தங்கள்:
(1) மசோதாவின் பிரிவு_2 - இல் செய்யப்பட்ட திருத்தம், சுரங்கங்கள் மட்டுமின்றி, கனிமங்கள் உள்ள நிலத்தையும் ஒழுங்குபடுத்த கூடுதல் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு அளிக்கிறது. ஒன்றிய அரசின் அதிகார வரம்பு இந்தத் திருத்தத்தால் அதிகரிக்கிறது. சுரங்கங்களின் ஒழுங்குமுறை என்பதுடன், "மற்றும் கனிமங்கள் கொண்ட நிலங்கள்" என்ற சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன. சுரங்கம் மட்டுமல்ல, கனிமங்கள் உள்ள நிலமும் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது என்கிறது. (2) அது போல பிரிவு_3 சட்டத்தின் வரையறைகள் பற்றிப் பேசுகிறது. இதில் புதிய உட்பிரிவாகக், "கனிமங்கள் கொண்ட நிலம்" என்பது சேர்க்கப்பட்டுள்ளது. (3) பிரிவு_13 சுரங்கக் குத்தகைகள் மற்றும் கனிமங்கள் தொடர்பான விதிகளை உருவாக்க மத்திய அரசுக்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, 'நிலம்' என்பது மாநில அரசின் அதிகாரப்பட்டியலில் (கூறு- 18) இருந்தாலும், ஒன்றிய அரசின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுதான் மாநிலங்கள் கனிம நிலங்கள் மீது வரி விதிக்க முடியும்.
புதிய பிரிவு 9_d:
அது மட்டுமின்றி, புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 9- d என்ற புதிய பிரிவு, மாநில அரசுகள் தன் சுய முடிவின்படி, தன்னிச்சையாகக் கனிம நிலங்கள் மீது கட்டணங்களை விதிக்கத் தடை விதிக்கிறது. மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இனி மாநிலங்கள் வரிகளை விதிக்க முடியும். பிரிவு 13- இன் கீழ் மத்திய அரசு வகுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டே மாநிலங்கள் செயல்பட வேண்டும். மேலும் இது போன்ற வரிகளை மாநிலங்கள் இதற்கு முன்பு விதித்து, சுரங்க ஒப்பந்ததாரர்கள் அந்த நிலுவைத் தொகையை இதுவரை செலுத்தாமல் இருந்தால், இனி அந்நிலுவைத் தொகையை மாநிலத்திற்குச் செலுத்த வேண்டியது இல்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது!
2024 சூலை 25 அன்று, 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு கனிமவளங்கள் மீதும், சுரங்கங்கள் மீதும், வரி மற்றும் செஸ் விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. நீதிபதி எஸ்.எச். கபாடியா (S.H. Kapadia) தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, கனிம வளங்கள் மற்றும் நிலத்தின் மீது வரி விதிக்கும் உரிமை தொடர்பான முந்தைய தீர்ப்புகளுக்கும் பிற தீர்ப்புகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகக் கூறி, இந்த வழக்கினை மார்ச் 30, 2011 அன்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு (Constitution Bench) பரிந்துரை செய்தது. பல ஆண்டுகள் கழித்து, 2024 - இல் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, (8:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில்) மாநில அரசுகளுக்கு ஆதரவாக வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. "கனிம வளங்கள் மற்றும் சுரங்க நிலங்கள் மீது வரி விதிக்கும் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது" என்பதை உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்தது.
2024 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு தனது தீர்ப்பில், "மத்தியப் பட்டியலின் பிரிவு- 54 (Union List- Entry 54) என்பது "கனிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் மட்டுமே அதிகாரம் அளிக்கிறதே தவிர, மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தை (Taxing Power) பறிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இப்பிரிவு மத்திய அரசுக்கு வழிவகை செய்யாது" என்று தெளிவாகக் குறிப்பிட்டது. இந்நிலையில், மோடி அரசு Mines and Minerals Development and Regulation Act of 1957- என்ற சட்டத்தை, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட 'நிலம்' என்ற கூறு மீது தன் அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையில், பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில், மாநில உரிமைகளைச் சிதைக்கும் வகையில், கூட்டாட்சி முறைக்கு எதிரான வகையில், நாடாளுமன்ற சனநாயக முறையையே (Parliamentary Democracy) கேள்விக்குள்ளாக்கும் வகையில், ஒரு திருத்த மசோதாவை எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் மக்களவையில், பாரதிய சனதாக் கட்சியின் கூட்டணிக்கு 319 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி, மோடி அரசு தனக்கு விருப்பமானதை எல்லாம் சட்டமாக்கிக் கொண்டிருக்கிறது!
தன் விருப்பப்படி சட்டங்களை எல்லாம் திருத்துகிறது!
இந்தியாவில் ஒரே அரசுதான் இருக்கிறது! அது மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு மட்டுமே! மோடி அரசு மாநில அரசுகளை ஊராட்சி மன்றங்களாக ஆக்குகிறது! இழப்பு மக்களுக்குத்தான்! இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய இன மக்களும் தங்கள் நிலப்பரப்பில் உள்ள கனிம வளத்தின் மீதான அதிகாரத்தை இழக்கிறார்கள்! மக்களுக்கும் அதிகாரம் இல்லை! மாநில அரசுக்கும் அதிகாரம் இல்லை! வளங்கள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்கே! வாரி வழங்குகிறது மோடி அரசு!
ஒரு கேள்வி!
நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி தன் விருப்பம் போல மோடி அரசு ஒரு சட்டத்தை இயற்றிக் கொள்ளலாம், இருக்கிற சட்டங்களைத் திருத்திக் கொள்ளலாம்! - என்றால் எதற்காக நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்கள் செல்ல வேண்டும்? ஒன்றிய அரசு செய்யும் அநீதிகளுக்கு இவர்கள் அமர்ந்திருப்பது ஒரு நியாயப்பாடா என்று வாதம் வலம் வந்து கொண்டிருக்கிறது! நாடாளுமன்றத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு எதைச் சாதித்துக் கொடுத்திருக்கிறது?
தெரிந்தே தடுமாறி விழுந்த விஜய் அரசு!
கன்னியாகுமரி மாவட்டம் கீழ்midalam தாலுகாவில் உள்ள 8 கடற்கரை கிராமங்களில் சுமார் 1,144.06 ஹெக்டேர் பரப்பளவிலான கடற்கரை மணல் பகுதியில் இந்திய அரசுக்குச் சொந்தமான ஐ.ஆர்.இ.எல் (IREL - India Limited) நிறுவனம் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தைச் செயல்படுத்த முயன்று வருகிறது. நில ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் காலம் (Land Reservation Validity) முடிவுக்கு வருகிற நாளன்று, சோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு மேலும் ஓர் ஆண்டு காலத்திற்கு (10 சூன் 2027 வரை) நீட்டித்து அரசாணை வெளியிட்டது. முந்தைய திமுக அரசு காலநீட்டிப்பு வழங்க மறுத்து வந்த நிலையில், விஜய் அரசு அனுமதிக்கப்பட்ட காலம் முடிகிற நாளன்று கால நீட்டிப்பு வழங்கி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இத்திட்டத்திற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அதே திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது நேர்மையற்ற இரட்டை நிலைப்பாடு. தமிழ்நாடு மாநில அரசின் செயல்பாடு அச்சத்தைத் தருகிறது. இதுபோன்று செய்யக்கூடாதவற்றை இனிமேலாவது செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்!
மூன்று தரப்பினருக்கும் கடமை இருக்கிறது!
(1) தமிழ்நாட்டிலிருந்து செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது குறித்த புரிதலை உருவாக்கி நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்!
(2) தமிழ்நாடு சட்டமன்றம் இதுகுறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டின் நிலப்பரப்பைப் பறித்துக் கொள்வதற்கும், கனிம நிலங்கள் மீது தனக்கே அதிகாரம் என்று ஒன்றிய அரசு அறிவித்துக் கொள்வதற்கும் வேறுபாடு இல்லை. அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமையைக் கூட விட்டு வைக்க ஒன்றிய அரசு தயார் இல்லை. தமிழ்நாடு சட்டமன்றமும் தமிழ்நாடு அரசும் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மாநில உரிமையைக் காக்க வேண்டும்! மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் செல்லாததாக்கப்பட வேண்டும்!
(3) தங்களுடைய மண்ணையும் அதில் உள்ள கனிம வளங்களையும் காத்துக் கொள்ள முன்வராத எந்த இனமும் அழிந்து போகும். ஒன்றிய அரசின் இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டின் மக்கள் களம் இறங்கிப் போராட வேண்டும்!
- பேராசிரியர் த.செயராமன்