மோடியின் நெருங்கிய நண்பர் , உலகின் மிகப்பெரிய பன்னாட்டு முதலாளியான அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்தால், மீண்டும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மலைத்தொடரில் உள்ள ஏழு மலைகள் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள அரிய வகை டங்ஸ்டன் கனிமத்தைக் குறிவைத்து களம் இறங்கியுள்ளது வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க். நவம்பர் 7, 2024 அன்று மோடி அரசின் கனிமவளத்துறை நடத்திய ஏலத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள எட்டு கனிமவள தொகுப்புகள் ஏலம் விடப்பட்டு அதில் நான்கு தொகுப்புகள் வேதாந்தா மற்றும் அதன் துணை நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன வேதாந்தா நிறுவனம், தேர்தல் பத்திர முறைகேட்டில் பாஜகவுக்கு 227 கோடி வழங்கியதும், சுற்றுச்சூழல் சட்டத்தையே வேதாந்தாவுக்காக மோடி திருத்தியதும் நாம் அறிந்ததே. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் காரணமாமும் வேதாந்தாதான். தென்னாப்பிரிக்கா உட்பட உலகம் முழுவதும் ரத்தக் கறைகளைக் கொண்ட வேதாந்தாவால்தான் தற்போது மதுரையிலும் பிரச்சனை.arittapatti agitationமதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் 21 க்கு மேலான கிராமங்களைப் பாதிக்கும் வகையில் 2015.51 ஹெக்டர் - சுமார் 5000 ஏக்கர் நிலம் நவம்பர் 7, 2024 - ல் வேதாந்தாவுக்கு மோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தனது சுரங்கப் பணியைத் தொடங்கினால் என்னவாகும்?

 மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மலைத்தொடர், தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்லுயிர் மற்றும் பண்பாட்டு மண்டலமாகும். கருங்குருவி, மழைக்குருவி, இரட்டைவால் குருவி, சில்வர் பில் கொக்கு மஞ்சள்வாலாட்டி, பனங்காடை, சிவப்பு ஆட் காட்டி, மஞ்சள் ஆட் காட்டி, கருந்தேள், வல்லூறு, செம்பருந்து, ராசாலி, குட்டை கால் கழுகு, லகுடு என்ற அரியவகை வல்லூறு உள்ளிட்ட 250 வகையான பறவை இனங்கள், அரிய வகைத் தேவாங்குகள் எறும்பு தின்னி மலைப்பாம்பு, 700 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் இம்மலைத் தொடரில் உள்ளன. முல்லைப் பெரியாறு பாசனத்தால் 25,000 ஹெக்டேரில் சிறப்பாக விவசாயமும் இங்கு நடைபெற்று வருகிறது.

மிக முக்கியமாக 2200 ஆண்டுகளுக்கு முன்பான தமிழி எழுத்துக்களால் ஆன மாங்குளம் கல்வெட்டு, சமணர் படுகைகள், பாண்டியர் கால குடைவரைகள், நாட்டார் - இஸ்லாமியர் வழிபாட்டுத்தலங்கள், சங்க கால கற்படுக்கைகள் என பல்வேறு பண்பாட்டுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இப்பகுதி தமிழ் பண்பாட்டின் வரலாற்று அடையாளம்.

எப்போதும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வேதாந்தாவும், தமிழர் பண்பாட்டை அழிக்க முயலும் பாஜகவும், கூட்டுச் சேர்ந்து அரிட்டாபட்டி பகுதியை அழிக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகம் இப்பகுதி மக்களுக்கு எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாவே ஆய்வு என்ற பெயரில் வந்த அதிகாரிகளை இப்பகுதி மக்கள் மடக்கி விளக்கம் கேட்ட போது, உரிய பதில் சொல்லாததால் விரட்டி அடிக்கப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக யாருக்கும் தெரியாமல் ஒன்றிய அரசு ஏலம் நடத்தி அரிட்டாபட்டியைத் தாரை வார்த்துள்ளது. குறிப்பாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் ஆகஸ்ட் 2023 -ல் மோடி அரசு கொண்டுவந்த ஒரு சட்டத்திருத்தம்தான், தமிழ்நாடு அரசின் ஆட்சிப் பரப்பில் உள்ள 5000 ஏக்கர் நிலத்தை, மாநில அரசுக்குத் தெரியாமல், ஒன்றிய அரசே ஏலம் விடும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இச்சட்ட திருத்தம் கொண்டு வந்த போது இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. ஆனால் அதிமுக வரவேற்றது.

மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்திய நாடு, கூட்டாட்சி என்பது இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறு என்று வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், சுரங்க சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் மாநில மக்களின் உரிமையை முழுமையாகப் பறிக்கிறது. இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள எந்த நிலத்தையும், மாநில அரசைக் கேட்காமல், எந்த நிறுவனத்துக்கும் வழங்கும் உரிமையை ஒன்றிய அரசுக்கு இச்சட்டத் திருத்தம் அளிக்கிறது. மாநில அரசுகளின் ஒட்டுமொத்த உரிமையும் பறிக்கப்பட்டது குறித்து விவாதம் கூட நம் நாட்டில் நடக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. சுரங்க ஏலம் குறித்து, மதுரையில் உள்ள மக்கள் இயக்கங்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வெளிக் கொண்டு வந்த நிலையில், 25 கிராம சபைகளில் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக அமைச்சர் மூர்த்தி அரிட்டாப்பட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் அவர்கள் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசின் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரிட்டாபட்டி பிரச்சனையில் இரட்டை நிலைப்பாடு எடுக்கும் ஒரே கட்சியாக பாஜக உள்ளது. ஸ்டெர்லைட்டை மூடியது தவறு: டங்ஸ்டன் எடுக்க வேண்டும், இதனால் சில கிராமங்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை என்று பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மக்களின் எதிர்ப்பால், தன் நிலையை மாற்றிக் கொண்டதாகத் தற்போது நாடகம் ஆடுகிறார். மதுரையின் இதே மேலூர் பகுதியை நாசம் செய்த கிரானைட் குவாரி முதலாளிகளுக்காக ஆதரவாகச் செயல்பட்ட ஒரே கட்சி பாஜகதான்.

தமிழ்நாட்டின் விவசாயம், பொருளாதாரம் பல்லுயிர் சூழல், பண்பாட்டு சுவடுகள் உள்ளிட்ட அனைத்தையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அழிப்பதற்கு துடிக்கிறது பாஜக. தனியார் மய, தாராள மய, உலக மயக் கொள்கையின்கீழ் வளர்ச்சி என்ற பெயரில், பன்னாட்டு முதலாளிகள் நலனுக்காக வாழ்விடங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக இடம் பெயர்வதும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காலநிலை மாற்றத்தால் இயற்கைப் பேரழிவுகள் மக்களை தாக்குவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான பகுதியில் ஒன்றாக மதுரை மேலூர் பகுதி உள்ளது. ஏற்கனவே கிரானைட் முதலாளிகள் மக்களுக்கு வழங்கிய பரிசு இது. அடுத்த அபாயமாய் வருகிறது டங்ஸ்டன் சுரங்கம். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களுக்குத் தெரியுமா இப்புவி லாப வெறி கொண்ட மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல: பல கோடி நுண்ணுயிர்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் எதிர்கால தலைமுறைக்கானது என்பது?

- வாஞ்சிநாதன்