மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் பாட்டாளிகளின் புரட்சி அரசியலை முன்னெடுப்பவர்கள் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசவோ போராடவோ கூடாதா?
புதுக்கோட்டை மாநாடு அறிவிக்கப்பட்ட பிறகு, அதைப் பார்த்துப் பலரும் இவ்வாறு சில கேள்விகளை எழுப்புகின்றனர்.
மாநில உரிமைப் பறிக்கப்படுவதை எதிர்த்துவிட்டால் எல்லாம் கிடைத்துவிடும் என்று நம்மில் எவரும் சொல்லவும் இல்லை; நம்பவும் இல்லை
"அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என்று முழங்கிய தி.மு.க., 1963 இல் பிரிவினைத் தடைச் சட்டம் இந்திய அரசு அறிவித்தவுடன், பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன, நாங்கள்தான் கைவிட்டுவிட்டோம் என்றதுடன், "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற அளவில் மட்டுமே தி.மு.க. முழங்கியதை அரசியல் தொடர்புள்ளோர் அறிந்திருப்பர்
மாநிலங்களில் சுயாட்சி என்கிற தன்னாட்சி என்பதற்கும், மத்தியில் கூட்டாட்சி என்பதற்கும் தி.மு.க. கொடுத்த விளக்கம்: இந்திய அரசு அளவில்...
- படை வைத்திருக்கும் அதிகாரம்,
- பணம் அச்சிடுவது உள்ளிட்ட அதிகாரம்,
- அயல் உறவுத்துறை அதிகாரம்,
- மாநிலங்களுக்கு இடைப்பட்ட தொடர்பு அதிகாரம்
- – இவை நான்கு அதிகாரங்களை இந்திய அரசு வைத்திருக்க, மற்ற அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே
இதற்காக 1969-ல் தி.மு.க. அரசு இராசமன்னார் குழு என்கிற ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு 1971 மே மாதத்தில் அறிக்கையை நிறைவு செய்து தமிழ்நாடு அரசிடம் கொடுத்தது. அந்த அறிக்கை சில திருத்தங்களுடன் 1974 ஏப்ரல் 16 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்வைக்கப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது
அதன்பிறகு மாநில உரிமைகள் குறித்துப் பலமுறை தி.மு.க. கட்சியால், அது ஆட்சிப் பொறுப்பேற்ற பொழுது பேசப்பட்டதே அல்லாமல் பெரும் போராட்டமாகத் தி.மு.க. முன்னெடுத்து நடத்தியது இல்லை
1972, 73, 75 ஆகிய ஆண்டுகளில் தென்மொழி இயக்கத்தின் வழியாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்நாடு விடுதலைக்கான மாநாட்டை நடத்திய பொழுது அவர்களைச் சிறைப்படுத்திய தி.மு.க. அரசு, மாநில சுயாட்சி கேட்பதாக இருந்தால் உங்களை விடுதலை செய்துவிடுகிறோம் என்று கேட்டுக்கொண்டது. அதற்கு அன்றைக்குப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், "நாங்கள் மாநில சுயாட்சி கேட்கவில்லை; தமிழ்நாடு விடுதலைதான் கேட்கிறோம்" என்று வலியுறுத்திச் சொல்லவே, தென்மொழி இயக்கத்தினரைச் சிறையில் அடைத்தது தி.மு.க. அரசு
1990 இல் "தன்னுரிமைப் போருக்கு முன்னுரிமை கொடுப்போம்! தமிழ்த் தேச வரலாற்றில் புதுயுகம் படைப்போம்!" என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தொடக்கத்தில் இதே போன்று, நான்கு அதிகாரங்களையும் நடுவண் அரசுக்கு அளிப்பதாகவும் மற்ற அதிகாரங்களை மாநிலத் தேசிய அரசுகள் வைத்திருக்கும் என்றும் அறிவித்தனர். . . . இவர்கள் இந்த நிலையில் இருக்க, பொதுவுடைமைக் கட்சியினரோ அதைப் பேசக்கூடத் தயங்கினர்
இந்திய மார்க்சிய இலெனினியக் கட்சிகள், இயக்கங்கள் எவையும் இது போன்றதான நிலையில் இரண்டு அரசுகளின் அதிகாரங்களின் பொறுப்புகள் குறித்தான விளக்கங்களில் எல்லாம் கவனம் செலுத்தவில்லை
அதே நேரத்தில், 1942 இல் செப்டம்பர் மாதம் நடுவண்குழுத் தீர்மானம் கூறுவதாக (1994 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளிவந்த) 'மார்ச்சியப் பொதுவுடைமைக் கட்சியின் பெருமை மிக வரலாறு' நூலில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அர்கிசன் சிங் சுர்ஜித் கீழ்வருமாறு எழுதியிருப்பார்
"தனது தாயகமாகத் தொடர்ச்சியான பகுதி, பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம், பொதுவான மொழி, கலாச்சாரம், மனவியல் அமைப்பு மற்றும் பொதுவான பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட இந்திய மக்களின் ஒவ்வொரு பிரிவினரும் அவர்கள் விரும்பினால் பிரிந்து செல்லக்கூடிய உரிமையுடன், சுதந்திர இந்திய ஒன்றியத்திலோ அல்லது கூட்டமைப்பிலோ ஒரு சுயாட்சி மாநிலமாக இருக்கும் உரிமை உடைய தனியான தேசிய இனமாக அங்கீகரிக்கப்படும்."
இதற்கான மேலதிகமான விளக்கங்கள் ஏதும் அந்த நூலிலும் இல்லை, அதன் பிறகான கட்சி வெளியீடுகளிலும் இல்லை
பிரிந்துபோகும் உரிமை பற்றியான கோரிக்கையை யார் கேட்பது? யாரிடம் கேட்பது? அதற்கான அங்கீகாரத்தை யார் தருவது? ஒன்றியம் என்றால் என்ன? அவர்கள் சொல்லியிருக்கிற கூட்டமைப்பு என்றால் என்ன? சுயாட்சி மாநிலம் என்றால் எப்படி? அப்படியான எந்த அரசியல் விளக்கமும் இல்லை; கட்சித் தோழர்களுக்கேகூட அது பற்றியான கேள்விகளும் இல்லை, விளக்கங்களும் இல்லை
இன்றைய இந்திய அரசு அமைப்பு ஒன்றிய அரசு அமைப்பா? கூட்டமைப்பா? அல்லது மார்ச்சியப் பொதுவுடைமைக் கட்சி புரட்சிக்குப் பின்னர் அமைக்கக்கூடிய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறார்களா? என்று எந்த விளக்கமும் இல்லை
அதனால் ஒரு மாநில அரசின் உரிமைகள் எவை எவை? அவற்றை எப்படிப் போராடிப் பெறுவது? ஒன்றிய அரசின் அதிகாரங்கள் எவை? அவற்றை யார் உறுதி செய்வது? என்றபடியான கேள்விகள் அந்தக் கட்சியிடம் இல்லை; அதற்கான விளக்கமும் அதனிடம் இல்லை
ஏறத்தாழ இந்திய மார்க்சிய இலெனினியக் கட்சிகளும் அதே தெளிவற்ற நிலையிலேயே பதிவு செய்திருக்கின்றன
"மகத்தான நம் தாய்நாடு துண்டாடப்படுவதைச் சரிசெய்கின்ற விதத்தில், இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு அமையவேண்டுமென்றுகூடத் தொலைநோக்குப் பார்வை கொண்டுள்ளோம். நாம் காலிஸ்தான் கோரிக்கையையோ, ஒரு சுதந்திர அஸ்ஸாம் எனும் கோரிக்கையோ ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. தேச ஒற்றுமை என்பது காங்கிரஸ், பி.ஜே.பி.யாக இருந்தாலும் சரி, சந்தர்ப்பவாத இடதுசாரி அல்லது புரட்சிகர கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, அனைத்து முக்கிய அரசியல் நீரோட்டங்களும் நிச்சயமாகக் கவலை கொள்கிறதோர் முக்கிய விசயமாகும். முக்கிய விசயமென்பது, பல்வேறு நிலைப்பாடுகளுக்கிடையில் கறாரான எல்லைக் கோட்டை வரைந்து கொள்வதாகும்."
என்று எழுதியிருப்பது ஏதோ காங்கிரசுக் கட்சியோ, பாரதீய சனதா கட்சியோ அல்ல; இ.பொ.க. (மா.இலெ.) கட்சிதான் இப்படித் தன் கட்சி ஆவணத்தில் (5-ஆம் காங்கிரசில், திசம்பர் 1992 - கல்கத்தா) குறிப்பிட்டிருக்கிறது
அப்படி அக்கட்சி குறிப்பிட்டு எழுதியிருப்பதிலிருந்து அது தன் தாய்நாடு என இந்தியாவை எந்த அடிப்படைத் திட்டத்தில் சொல்லுகிறது என்றோ, எந்த அடிப்படையில் அது 'மகத்தான' என்று குறிப்பிட்டுக்கொள்கிறது என்றோ தெளிவு பெற்றிருக்கவில்லை என்பதே தெரிகிறது
முதலாளிய வகுப்புகளும், வல்லரசியமும் மகத்தானதாகக் கருதிக்கொண்டிருக்கிற இந்திய தேச ஒற்றுமை எனும் கருதுகோள்கள் எப்படி ஒரு பாட்டாளி வகுப்புக்கான கட்சிக்கும் மகத்தானதாக இருக்கமுடியும் என்பதில்கூட அது விளக்கப்படுத்தவில்லை
இறுதியாக...
"தேச ஒற்றுமையை மேலிருந்து கட்டுகிற இந்த பிஸ்மார்க்கிய வழியை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம். நாம், அனைத்துத் தேசிய இனக் குழுக்கள் மற்றும் தேசிய சிறுபான்மையினருக்குச் சாத்தியமான அதிகபட்ச சுயாட்சியை உத்திரவாதப்படுத்தி, கீழிருந்து கட்டப்படும் தேச ஒற்றுமைக்காக நிற்கின்றோம். ஒரு சனநாயக அடிப்படையில் இந்தியத் தேசத்தை ஒன்றுபடுத்துவது என்பது இந்திய சனநாயகப் புரட்சியின் முக்கியமானதோர் கடமையாகத் திகழ்கிறது."
என்று மேலும் விரிவாக இ.பொ.க. (மா.இலெ.) கட்சி ஆவணங்கள் 5-ஆம் அகில இந்தியக் காங்கிரசில் (திசம்பர் 1992 - கல்கத்தா) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (பக். 20-26) சொல்லுகிறது
இதன்படி தனக்குத்தானே இ.பொ.க. (மா.இலெ.) வினர் முரண்பட்டுக் கொள்வதையும் நாம் எளிதே பார்க்க முடிகிறது
ஒருபுறம் இந்தியாவை ஒரு நீண்ட பாரம்பரியமுள்ள ஒரு மகத்தான நாடெனெப் பெருமைப்பட்டுக் கொள்ளுகிற இவர்களே, அவ்இந்தியாவிற்குச் சில பத்தாண்டுகளே இந்திய நாடு என்கிற முகம் ஏற்பட்டிருப்பதாக ஏற்றுக்கொள்கின்றனர். . ஆங்கில வல்லரசு எதிர்ப்புப் போராட்டங்கள் ஆங்காங்கு இருந்த நிலவுடைமை அரசுகளின் நிலவுடைமை வணிக முதலாளிய வழிப்பட்ட தேச எழுச்சிகளாகவே நடைபெற்றதும், அவை பிரிட்டிசு நிழலில் தொடங்கப்பட்ட காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பார்ப்பனியக் கருத்தாளர்களின் ஆதிக்க நலனுக்காக இந்திய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டதுமான வரலாற்றை அவர்கள் மீண்டும் படித்தாக வேண்டும்
தெலுங்கானா எழுச்சிகளும், வங்காள எழுச்சிகளும், மராட்டிய எழுச்சிகளும், தமிழக, கேரள எழுச்சிகளும் இந்திய நாட்டு உருவாக்கத்தை நோக்கியா திரண்டன? ஆனால், அவற்றையெல்லாம் காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்தியப் பார்ப்பனிய இயக்கங்கள் ஒருங்கிணைத்து இந்திய உருவாக்கத்திற்கு வலுவூட்டிக் கொண்டன
அதனால்தான் மகாத்மா பூலே, அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர், பெரியார், அய்யன்காளி, நாராயணகுரு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள், ஆங்கிலேய வல்லரசை அன்றைக்கு எதிர்த்ததைவிட இந்தியப் பார்ப்பனியத்தை எதிர்த்தனர். . ஆதரவளிப்பது என்பது வேறு; தாங்களே முன்னெடுத்துப் போராடுவது என்பது வேறு. . . இந்தியாவை ஒரே நாடாக ஆக்கியது ஆங்கிலேயக் காலனியவாதிகள் என்றால், அதற்கு முன் இந்தியா என்பது ஒரே நாடாக இல்லை எனத் தெளிவாகிவிடுகிறது . . இந்தியப் புரட்சி என்கிற நிலையில் காத்திருப்பவர்கள், அந்த இந்தியப் புரட்சியை ஆற்றுவதற்குச் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களை ஒருங்கிணைத்திட என்ன அரசியல் திட்டம் கொண்டிருக்கிறார்கள் என விளக்கியதும் இல்லை; நடைமுறைப்படுத்துகிற முயற்சியையும் கொண்டிருக்க முடியவில்லை
மக்கள் அதிகாரம் என்கிற பெயரில் அவர்கள் வெளியிட்ட 2015 ஆம் ஆண்டு அறிக்கையில்
"நெருக்கடி முற்றி உளுத்துப்போய் நொறுங்கி வீழும் நிலையில் உள்ள இந்தக் கட்டமைப்புக்குள் தனி ஒரு பிரச்சனைக்கும் சிக்கல்களுக்கும்கூடத் தீர்வு இல்லை... இந்தக் கட்டமைப்பைத் தாக்கித் தகர்த்துவிட்டுப் புதியதொரு கட்டமைப்பைக் கட்டுவதுதான் ஒரே வழி, விடிவுக்கான வழி என்று யாரெல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்களை ஓர் ஐக்கிய முன்னணிக்குள் திரட்டிப் போராடுவது உடனடிக் கடமையாகிறது. அவர்கள் தனிநபர்களாக இருக்கலாம்; அமைப்பாகவும் இணையலாம்; சாதி, மதவாத அமைப்புகள், ஏகாதிபத்தியத் தொண்டூழியக் குழுக்களைக் கட்டாயம் இதில் சேர்க்க முடியாது. உறுப்பினர்களாக இணையும் தனிநபர்கள் ஓர் ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களும் சரி, உறுப்பினர்களாகச் சேரும் அமைப்புகளும் சரி, உள்ளாராட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் ஓட்டுப் போடுபவர்களாக, தேர்தல் வேலை செய்பவர்களாக இருக்கக்கூடாது... நமது அமைப்புகளைச் சேராத ஆனால் இவ்வாறு விசுவாசமாக இருந்து முன்னோடியாக அவர்கள் தலைமையின் கீழ் நாம் வேலைசெய்யவும் வேண்டும். நமது அமைப்புகள்தாம் தலைமைதாங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பது குறுங்குழுவாதமாகும்."
என்றெல்லாம் அவர்களின் (2015 இல் வெளியிடப்பட்ட 'கட்டமைப்பு நெருக்கடியும் புதிய செயல் தந்திரமும்' எனும் அறிக்கை) நூல் விரிவாகச் சொல்லுகிறது
இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த காலங்களில் எந்த அளவு கோட்பாட்டளவிலும் அமைப்பியல் அளவிலும் இறுக்கம் காட்டினார்களோ, அந்த அளவு தளர்வுபடுத்திக்கொண்டு முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதே. ஆனாலும், அவ்வதிகாரத்தை நிறுவப்போகும் இடம் எது என்பதுபற்றித் தங்கள் ஆவணங்களில் அவர்கள் குறிப்பிடவில்லை
புதிய கட்டமைப்பை இந்திய அளவில் கட்டப்போகின்றனரா அல்லது தமிழக அளவிலா என்பது குறித்த எந்த விளக்கமும் அவர்களின் அறிக்கைக்குள் விளக்கப்படுத்தப்படவில்லை. . : . : . . . . அதுதான் முழுமையான ஒரே தீர்வுக்குரிய முழக்கம் என்று நாம் எங்கும் சொல்லவில்லை
மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பை முன்னிறுத்திப் பரப்புவதன் வழி மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்க்க வேண்டும் என்கிற கருத்தை வெகுமக்களிடையே ஊன்றிட முடியும். மாநிலங்களின் முற்றதிகாரத் தேவை என்பது, தமிழ்த்தேசிய விடுதலை அரசியலுக்கு வழித்தடமாகவும் அமைகிறது
மாறாகத் தமிழ்த் தேசிய விடுதலை உரிமை அரசியலை மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்போடு நிறுத்துவது என்கிற வகையில் புரிந்து கொள்வதும் கருத்தறிவிப்பதும், கொள்கை இலக்கு அரசியலை வெகுமக்கள் அரசியலாக மாற்றுகிற முழக்கங்கள் பற்றித் தெரியாத தன்மையையே காட்டும்
நாம் அடைய வேண்டிய இலக்கு நோக்கிப் பல முழக்கங்களைப் பல கோணங்களில் முன்னிறுத்துகிறோம். அதேபோது, ஒவ்வொரு முழக்கமும் இலக்கிற்கு எதிரானதும் அன்று. ஒரே ஒரு முழக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு, 'இவ்வளவுதானா உங்களின் இலக்கு' என்பது அரைகுறை பார்வையுடையதே
இந்நிலையில், தமிழக மக்கள் முன்னணி முன்வைத்திருக்கிற மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு என்பது என்ன வகையில் எல்லாம் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பதை விளக்கப்படுத்துகிறது. . முற்றதிகாரத் தமிழ்நாடு என்பது தன்மை அடிப்படையில் கீழ்க்காணும் நிலையில் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்
எனவே அவற்றையெல்லாம் முழக்கங்களாக ஒவ்வொரு நிலையிலும் முன்னெடுத்து விளக்கப்படுத்துவோம்
- தமிழ்த்தின் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி மொழியியல் தொடர்புடைய இயக்கங்கள், தொல்லியல் தொடர்புடைய துறைகள் என அனைத்து அதிகாரங்களும், அந்தந்தத் துறைகளுக்கான பணியாளர்கள் அமர்த்த அதிகாரங்களும் தமிழக அரசிடமே இருத்தல் வேண்டும்
- தங்களின் தேசிய இனத்தைத் 'தமிழர்' என்றே பதிவு செய்வதுடன் தமிழ்நாட்டின் செய்தித்தாள் உள்ளிட்ட இதழியல் துறை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகத்துறை, திரைப்படங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அதிகார அலுவலர்களின் அதிகார வரம்பும் தமிழக அரசிடமே இருத்தல் வேண்டும்
- தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கல்வித்துறை அனைத்துத்துக்கும் ஒரே வகைக் கல்வி முறையாக ஆக்கப்பட்டு அதன் பாடத்திட்டங்கள் வகைப்படுத்தும் முழு அதிகாரத்தையும், ஆளுமை அதிகாரத்தையும் கொண்ட அளவிலேயே தமிழ்நாடு அரசின் முழு பொறுப்பின்கீழ் அனைத்தும் தாய்மொழி தமிழிலேயே வரவேண்டும்
- நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருள்களுக்குமான (பால் உள்ளிட்ட பொருள்களுக்கு) விலை உறுதிப்பாட்டை (நிர்ணயத்தையும்) தமிழக உழவர்களின் முழு ஒப்புதலோடு தமிழ்நாடு அரசே செய்தல் வேண்டும்
- நெய்வேலி நிலக்கரி, நரிமணம் கச்சா எண்ணெய் (பெட்ரோல்), சேலம் இரும்பு உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கனிமவளங்களின் எடுத்தல், உடைமை, பகிர்வு அனைத்து அதிகாரங்களும் தமிழ்நாடு அரசிடமே இருத்தல் வேண்டும்
- தமிழ்நாட்டிற்குள் செயல்படுகின்ற தொடர்வண்டித்துறை, வானூர்தி, கப்பல் போக்குவரத்து அனைத்தும் தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே இயங்குதலும், ஆளுகைக்குள்ளாகவே இருத்தலும் வேண்டும்
- தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறை, விற்பனை வரிகள், வருமான வரிகள், தொழில் வரிகள் உள்ளிட்ட எந்த வரிகளானாலும் அவற்றை நீக்குவதும், அளவிடுவதும், பெறுவதுமான உரிமைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கே இருத்தல் வேண்டும்
- நில உரிமை, நீர் உரிமை, கான் (வன) உரிமை என அனைத்தும் தமிழ்நாட்டின் பொறுப்பினதாகவே இருத்தல் வேண்டும்
- தமிழ்நாட்டில் கங்காணியாகச் செயல்படும் ஆளுநர் என்கிற அதிகார முறை ஒழிக்கப்பட்டு, அதன்மூலம் ஆளுநர் மாளிகைகள் என்கிற பெயரில் தமிழகக் கிண்டி மாளிகையிலும் உதகை ஆளுநர் மாளிகையிலும் பாழாய்ச் செலவு செய்யப்பட்டு வருகிற பல ஆயிரம் கோடி ரூபாய் தொகையையும் தமிழ்நாட்டு நலனுக்காகத் தமிழக அரசு பயன்படுத்திடல் வேண்டும்
- சுற்றுச் சூழல்களைப் பாழடிக்கும், இயற்கையை அழிக்கும், நீர்நிலைகளைப் பாழாக்கும் அனைத்துச் செயல்களையும் தமிழ்நாட்டு அரசு தடைசெய்யும்; அவ்வகையில் பாழ் செய்யும் பெரு முதலீட்டு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களை முழுமையாக வெளியேற்றும், அந்நிறுவனங்களைத் தடைசெய்யும்
- தண்ணீரையும் காற்றையும் மாசுபடுத்துகிற அனைத்து நிறுவனங்களும் தடை செய்யப்படுவதுடன், தண்ணீரையும் காற்றையும் முழுமையாகப் பாதுகாப்பதுடன் அவை முழுக்க முழுக்க இலவச இயற்கைப் பொருள்களாகவே கருதப்படும்; அவற்றை விற்பனை செய்கிற நிறுவனங்கள் முழுமையாகத் தடை செய்யப்படும்.
- வேளாண்மை புதிய வடிவில் பெரும் கூட்டுறவுப் பண்ணைத் தொழில்களாக மாற்றப்படுவதோடு, விளைச்சல் பொருள்கள் முழுமையையும் பாதுகாக்கிறபடி மொழி மாநில அரசுகளின் பொறுப்பிலேயே கவனிக்கப்பட வேண்டும்
- தமிழ்நாட்டிற்குரிய நீதித்துறையில் தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றமே உச்சநீதிமன்றமாக இறுதிச் செய்யப்படும்; அதேபோல் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரங்கள் உச்சநிலை அதிகார இடங்களாகவும் இறுதி செய்யப்படும்
- தமிழ்நாட்டிற்கு என்று தனி இலச்சினையும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இருப்பதுபோல் தனிக்கொடியும், தனித் தேசப் பாடலும் இருப்பதுடன், தமிழே கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, நீதி மொழியாக, வழிபாட்டு மொழியாக இருந்திடல் வேண்டும்
- இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை என்பது தேவையற்றது என்கிற நிலையில் மாநிலங்களின் அவை மட்டுமே போதுமானது; அதனால் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் மொழித்தேச மாநிலங்களுக்குள் நேரடியாக நடத்தப்படாமல், மொழிவழித் தேசச் சட்டமன்றங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாக இருக்கும்படியான முறையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; அவ்வகை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அளவில் இருக்கக்கூடிய எல்லா மொழித் தேசங்களுக்கும் ஒரே எண்ணிக்கையில் இருந்திடல் வேண்டும்
- ஒவ்வொரு மொழிவழித் தேசங்களும் தங்களுக்கெனக் காவல்துறை வைத்திருப்பதுபோல், படைத்துறையையும் அதனதன் அதிகாரங்களுக்கு உட்பட்ட நிலையில் வைத்துக் கொள்வதே தேவையாகும்; அவ்வகையில் தமிழ்நாட்டிற்கும் படைத்துறை தேவையானதாகிறது; தேவைப்படும் காலத்தில் மட்டுமே அவை ஒன்றிய அளவில் ஒருங்கிணைந்து செயல்படும் சூழல் உருவாக்கப்படும்
- அத்தகைய ஒன்றிய அரசுகளின் செயல்பாடுகளுக்கான பொருளியல் செலவுகள் பட்டியலிடப்பட்டு மொழி மாநிலத் தேச அரசுகளிடமிருந்தே ஒன்றிய அரசுக்குக் கேட்டுக் கொடுக்கப்படும்
- மாநிலங்களுக்கு இடைப்பட்ட சிக்கல்கள் அந்தந்த மொழிவழித் தேச மாநில அரசுகளால் அமைக்கப்படும் குழுக்களுக்கு இடையேயான பேச்சுரையின் மூலமே தீர்க்கப்பட வேண்டும்; இடையில் குரங்கு அப்பம் பிரித்த கதையாய் இதுவரையில் நடந்துவரும் இந்திய ஒன்றிய அரசின் தலையீடுகள் முற்றும் முழுமையாய் நீக்கப்படும்
- வெளிநாடுகளுக்கு இடைப்பட்ட ஏற்றுமதி, இறக்குமதி வணிகங்களை மொழி மாநில அரசுகளே முடிவுசெய்தல் வேண்டும்; அதில் ஒன்றிய அரசின் தலையீடு கூடாது
- மொழிவழித் தேச மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் பிற தேச, பிற நாட்டுத் தொழிலாளர்களையும் தொழில்களையும் அந்தந்த மொழித் தேச மாநிலங்களுக்குள் கொண்டுவருதல் கூடாது
- அந்தந்த மொழிவழித் தேசங்களுக்கான தேர்தல்களை அந்தந்த மொழித் தேச மாநிலத் தேர்தல் ஆணையங்களே நடத்திடல் வேண்டும்; அதில் ஒன்றிய அரசு தலையிடுதல் கூடாது
- என்ன வகைக் காரணங்களுக்காகவும், யாரும் அந்தந்த மொழிவழித் தேச அரசுகளின் இசைவு பெற்று உலகம் முழுக்கச் சென்று வரலாம்; அதற்கான அனைத்து வகைத் துணைகளையும் மொழிவழித் தேச அரசுகளே செய்யும்
- மக்கள் மற்றும் உலக நலன்களில் அக்கறை செலுத்தும் அனைத்து அறிவியல் ஆய்வுகளையும் மொழிவழித் தேசிய மாநில அரசுகளே ஊக்கப்படுத்தி வளர்க்கும்; மக்கள் மற்றும் உலக வளத்தைப் பாழாக்குகிற அணுகுண்டு வெடிப்பு உள்ளிட்ட எந்த அறிவியல் ஆய்வுகளையும் மொழிவழித் தேச மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளாது
- சாதிவெறியை அடிப்படையாகக் கொண்ட சாதித் சங்கங்களின் செயற்பாடுகள் அனைத்தையும் மொழித் தேச மாநில அரசுகள் தடை செய்யும்; ஆணவப் படுகொலைகள், சாதியின் பெயரால் கலவரங்கள், உடைமைகளைப் பாழாக்குவது உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் மிகக் கடுமையாக மொழி மாநில அரசுகள் ஒடுக்கிடவே செய்யும்
- மூடநம்பிக்கையை முழுமையாய் நீக்குவதற்கான அறிவு வளர்ச்சிக்கு வழி அமைத்துத் தருவதுடன், கடவுள், மத வழிப்பட்ட கருத்துகளில் ஒருவரின் தனிப்பட்ட முடிவுகளில் மொழிவழித் தேச மாநில அரசுகள் தலையிடாது; அனைத்துச் சமயங்களின் வழிபாட்டு இடங்களையும் தூய்மையாகவும் ஒழுங்காகவும் அரசே பாதுகாக்கும்; வழிபாடுகள் அவரவர் வீடுகளிலும் வழிபாட்டு இடங்களிலும் நடத்த முழுமையாய் அரசு இசைந்திடும்; சாலைகளிலும் பொது இடங்களிலும் வழிபாடுகளையும் சமயப் பரப்பல்களையும் செய்ய அரசு இசையாது, தடை செய்யும்
ஆனால், இன்றைய நிலையில் மாநிலங்கள் என்றால் என்ன? அதன் அரசின் அதிகாரங்கள் எவை?, இந்திய அரசு என்றால் என்ன? அதற்கு என்னென்ன அதிகாரங்கள் எல்லாம் உள்ளன? என்பது பற்றியான எந்த நிலைகளும் தெரியாத சூழலில் குமுகம் உள்ளாக்கப்பட்டு இருக்கிறது
ஒவ்வொரு மாநில மக்களின் மொழி உரிமை, இன அடையாள உரிமை, அரசியல் உரிமை, பொருளியல் உரிமை, கனிம உரிமை, கடல் உரிமை என அனைத்தையும் பறித்துச் சூறையாடுகிறது இந்திய அரசு
வெள்ளையனை விரட்டிவிட்டு அம்பானி, அதானி உள்ளிட்ட மார்வாரி பெருமுதலாளியர்களும், பார்ப்பனிய அதிகார வெறியர்களும் சேர்ந்து கொண்டு அதிகார வெறியாட்டம் போடுகின்றனர்
பல்லாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தமிழ் இனத்தையும் பிற மொழியினங்களையும் அடையாளம் தெரியாமல் நசுக்கி ஆரியப் பார்ப்பனிய அதிகாரத்தை நிலைநாட்டும் திமிரோடு இந்திய அரசு செயல்படுகிறது
எனவே, ஒவ்வொரு மாநிலமும் முதலில் தங்களின் மாநில உரிமைகளுக்காகப் போராட வேண்டியிருக்கிறது. நம் உரிமைகள் வாழ்வியல் எவ்வாறெல்லாம் பறிக்கப்பட்டுள்ளன எனத் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையாகப் பரப்பல் செய்ய வேண்டியிருக்கிறது
அத்தகைய பரப்பல் முயற்சியே இந்த மாநாடு. எனவே பறிபோன மாநில உரிமைகளை மீட்க வேண்டுமான கருத்தைத் தமிழ்நாடு எங்கும் பரப்புவோம். அதன் வழி மாநில உரிமைகளை மீட்டு முற்றதிகாரத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
- பொழிலன், தமிழக மக்கள் முன்னணி