வல்லரசிய மற்றும் இந்திய முற்றாளுமை முதலாளி களின் சூறையாடல்களுக்கு இடையிலும்...

                இந்திய அரசின் பாசிச வெறித்தனங்களுக்கு ஆட்பட்டும்...

                பார்ப்பனியக் கொடு வெறியால் நசுக்கப்பட்டும்...

                சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும்...

                தமிழ்நாடு முழுமையாக அடிமைப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

periyar and kamarajar 600இவற்றிலிருந்தெல்லாம் தமிழ்நாட்டை, தமிழக மக்களை விடுவிக்க வேண்டுமானால், அரசியல் - பொருளியலால் உரிமை பெற்ற தமிழக அரசை நிறுவாமல் இயலாது.

அவ்வகையில் தமிழ்நாட்டை அரசியலால், பொருளியலால் உரிமை பெற்றதாக்க வேண்டு மானால் தமிழ்நாடு,

                ¦             மாநில சுயாட்சிக்காகப் போராடுவதா?

                ¦             தமிழக அளவில் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதா?

                ¦             தனிநாட்டு உரிமைக்காகப் போராடுவதா?

என்பதே நாம் அறிந்துகொள்ள வேண்டிய கொள்கை முடிவாக இருக்கிறது.

இவற்றில் எதை இலக்காகத் தேர்வு செய்வது? - என்கிற கருத்தில் தெளிவடைய வேண்டுமானால்,

¦             மாநில சுயாட்சி - என்றால் என்ன? எப்படி?

¦             சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? எப்படி?

¦             தனிநாட்டு உரிமை என்றால் என்ன? எப்படி?

என்பன குறித்தெல்லாம் நாம் தெளிவடைதல் வேண்டும். எனவே அவை குறித்தெல்லாம் சுருக்கமாக வாவது நாம் தெரிந்துகொள்வோம்.

மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி என்பது மாநிலத் தன்னாட்சி என்கிற பொருளில், ஒரு கூட்டாட்சி நாட்டு அமைப்புக்குள் தனக்கென அளிக்கப்பட்ட அதிகார வட்டத்திற்குள் மாநிலங்கள் இந்திய நடுவண் அரசின் தலையீடு இன்றி சுதந்தரமாக - சுயமாக - தானாக நடத்தக்கூடிய ஆட்சியையே கூட்டாட்சி அரசமைப்பு (federal constitution) என்று குறிக்கிறது - என்றும்,

‘மாநில சுயாட்சி’ என்ற சொற்றொடர் உண்மைக் கூட்டாட்சி நாட்டிலுள்ள மாநிலத்தின் தன்னாட்சி யையே அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறது -என்றும் அறிஞர் கு.ச.ஆனந்தன் தன் நூலுள் விளக்கியிருக்கிறார்.

“மாகாண சுயாட்சி (provincial autonomy) என்பதன் மூலம் காங்கிரசுக் கட்சி என்னென்ன கோரிக்கைகளை எழுப்பியதோ அதையேதான் இப்போது மாநில சுயாட்சி (state autonomy) எனும் பெயரில் குறிக்கிறோம்” - என்று தன் னுடைய ‘மாநில சுயாட்சி’ நூலில் கூறுகிறார் முரசொலி மாறன்.

இங்கு மாகாண அரசு என்பது அந்த மாகாண மக்களுக்கு முற்றிலும் கட்டுப் பட்டதாக இருக்க வேண்டும் என்று Evolution of defence academy in India எனும் நூலில் மசால்டன் என்பவர் குறிப்பிட் டிருப்பதை முரசொலி மாறன் எடுத்துக்காட்டுகிறார். மேலும், மாகாண சுயாட்சி - என்பது வெளியார் கட்டுப்பாடும் குறுக்கீடும் இல்லாத சுதந்திரம் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றத்திற்குப் பொறுப்பான ஓர் அரசு என்றும், சிந்தாமணி, மாசானி ஆகியோர் குறிப்பிட்ட விளக்கங்களை முரசொலி மாறன் தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

வெளியார் கட்டுப்பாடு என்பதில் உள்ள வெளியார் என்பவர் ஆளுநரும், அன்றைய குடி யரசுத் தலைவரான வைசுராயும்தாம் என்று விளங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் முரசொலி மாறன்.

ஆக, மாநில சுயாட்சி என்பதற்கு வெளியார் என்கிற ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உள் ளிட்ட இந்திய அதிகாரங்கள் எவற்றின் குறுக்கீடும் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அளவிலான தமிழக சட்டமன்றத்திற்குரிய அரசு என்பதாகப் பொருள் கொள்ள முடியும்.

அத்தகைய மாநில அரசமைப்பு அமெரிக்கா வில், சுவிட்சர்லாந்தில், இரசியாவில், கனடாவில், ஆசுத்திரேலியாவில் எல்லாம் இருந்ததாகவும் இப்போதும் அமெரிக்காவில், கனடாவில், ஆசுத் திரேலியாவில் எல்லாம் அத்தகைய நடைமுறை இருந்துவருவதாகவும் முரசொலி மாறன் மேலும் பதிவிடுகிறார்

இரசியாவிலிருந்த மாநிலங்கள் தனிப்படைத் துறையையே கொண்டிருந்ததாக முரசொலி மாறன் விளக்குவார்.

அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு - என்று தொடங்கிய தி.மு.க, 1962 வரை முழக்க மிட்டது.

1963-இல் பிரிவினைத் தடைச் சட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்தபின் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டு, விடுதலைக்கான காரணங்கள் அப்படியே இருக் கின்றன; நாங்கள்தாம் கைவிட்டு விட்டோம் - என்றார் அண்ணா.

ஆக, மாநில சுயாட்சி என்கிற மாநிலத் தன் னாட்சி என்பது முழுக்க முழுக்க இந்திய நடுவண் அரசின் தலையீடு இல்லாத அதிகாரம் பெற்ற ஓர் அரசை பெற்றதாக இருக்கவேண்டும் என்கிற வகையிலேயே குறிப்பிடப்படுகிறது

தமிழ்நாடு தலை மாநிலமாக (மாகாணமாக - பிரசிடென்சியாக) இருந்தபோது அன்றைய காங் கிரசுக் கட்சியினர் தலை மாநில (மாகாண)த் தன் னாட்சி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு முன்னர் 1911-ஆம் ஆண்டிலேயே வைசிராயாக இருந்த லார்டு ஆர்டிங்சு என்பவர் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் தருவதே நல்லது என்று பிரித்தானிய ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அவ்வகையில் இந்தியாவை Union of Autonomous Provinces -ஆக ஆக்கவேண்டும், ‘யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' - என்ற நிலையைகூட உருவாக்கலாம் என்றும் பரிந் துரைத்தார்.

1915-இல் ‘அரசியல் கட்டளைகள்’ எனும் பெயரில் கோபாலகிருட்டிண கோக்கலே, “மாகாண அரசுகளை முழு அதிகாரம் படைத்த நிலையில் ஒரு விடுதலை அரசாகச் செய்யவேண்டும்” என் பதாக வலியுறுத்தினார்.

1916-இல் காங்கிரசுக் கட்சியும் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ‘லக்னோ ஒப்பந்தத்தி'ன்படி மாகாணங்களில் முழுமையான தன்னாட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின...

1919-இல் அமைக்கப்பட்ட ‘மாண்டேகு செம்சு போர்ட்' பொறுப்பில் உருவாக்கப்பட்ட இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களுக்கு உரிய உரிமை களைத் தர மறுத்தது. இதை முஸ்லிம் லீக் கடுமை யாக எதிர்த்தது.

1924-இல் நடத்தப்பட்ட ஜின்னா தலைமையி லான முஸ்லிம் லீக்கின் மாநாட்டில் முழுமையான சுயாட்சி பெற்ற நிலங்களைக் கொண்ட ஒரு கூட் டாட்சி அமைப்பு முறையையே ஏற்படுத்தியாக வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

முஸ்லிம் லீக்கின் தலைவர்களுள் ஒருவரான பாவலர் இக்பால், “இந்து - முஸ்லிம் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றால் மாகாணங்கள் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில்தான் இருந்தாக வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

1931-இல் கூட்டப்பட்ட ‘சைமன் குழு', ‘சுதேச' மன்னர்கள், மாகாணப் படிநிகராளியர் (பிரதிநிதி) கள் கொண்ட குழுவைக் கூட்டியது. அதில் காசுமீர் இளவரசர், பாட்டியாலா இளவரசர் உள்ளிட்ட சில ‘சுதேச' மன்னர்கள் கூட்டாட்சி அமைப்பு முறையை முழுமையாக வலியுறுத்தினர்.

1930, 1931, 1932 ஆகிய ஆண்டுகளில் நடத்தப் பட்ட மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் மொழி வழி மாநில உரிமைகள் பற்றியும், மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டன.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான மேற்கண்ட நிகழ்வுகளில் கொடுக்கப்பட்ட கோரிக்கை அழுத் தத்தைப் பெயரளவிற்குக்கூட 1947-க்குப் பிறகு இந்திய அரசு செயல்படுத்திடவில்லை என்பதே முகாமையான செய்தி...

வல்லபாய் பட்டேல், மேனன் உள்ளிட்டோர் ‘சுதேசி' நாடுகளின் அமைச்சகம் என்கிற பெயரில் ஏறத்தாழ 560-க்கும் மேலான மன்னர்களை அழைத்து ஒருங்கிணைத்து இந்தியாவைக் கட்டி உருவாக்கியபோதும், அந்த ‘சுதேசி' மன்னர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ‘சுயாட்சி' தருவதாக முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் ஏமாற்றி ஒரு விழா எடுத்து, விருந்து படைத்த தோடு முடித்துக்கொண்டது இந்திய அரசாங்கம்...

இந்நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவு, மொழிவழி அடையாளங்கள் எழுச்சி கொண்ட காலங்களிலேயே 1921 - அளவில் மொழிவழி மாநில அளவில் தங்களின் கட்சி அமைப்புகளைக் கட்டத் தொடங்கி விட்டதைக் கவனிக்க வேண்டும்.

சென்னை, தலைமாநிலமாக இருந்த காலத்தி லேயே ‘தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி’ என்றே காங்கிரசார் கட்சி கட்டத் தொடங்கினர்.

அதன்பிறகு தலைமாநில (மாகாண) ஆட்சியை அமர்த்தி அதில் ஆளுநரின் அதிகாரங்களைப் பிரிட்டிசு ஆட்சியர் அதிகப்படுத்திக் கொண்ட போது காங்கிரசுக் கட்சிதான் முதன்முதலில் ஆளுநரின் அதிகாரங்களைக் கடுமையாக எதிர்த் தது என்பதையும் கவனிக்க வேண்டும்

1937-இல் தில்லியில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சிச் செயற்குழுவில் கட்டமைக்கப்பட்ட பதி னொரு தலைமாநில (மாகாண) அரசு வடிவங் களைக் கொண்ட இந்திய அரசியல் சட்டத்தைக் காங்கிரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தேர்ந் தெடுக்கப் பட்டு உருவாக்கப்பட்ட தலை மாநில (மாகாண) அமைச்சரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தமது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி எந்தக் குறுக்கீடும் செய்யக்கூடாது என்றும் காங்கிரசு வலியுறுத்தியது.

அதன்படி ஆளுநரின் தற்போக்கு முடிவுகளைக் காங்கிரசுக் கட்சியினர் கடுமையாக மறுத்தேதான் தங்களின் தேவைகளைப் பெற்றனர்.

1939-இல் பீகார், ஒன்றியத் தலை மாநிலம் (மாகாணம்) ஆகிய இரண்டு அரசுகளின் காங்கிரசு முதலமைச்சர்களும் ஆளுநர்களின் தலையீட்டை எதிர்த்துப் பதவியைத்துறந்தனர். அதனால் நெருக் கடிக்குள்ளான ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் பதவியில் அமர்ந்தனர் என்பது தெரிந்து கொள்ள வேண்டியது.

இந்த வகையில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான தலை மாநில( மாகாண)த் தன்னாட்சி என்கிற முன்வைப்பு நடைமுறைகள்தாம் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கு மூலமாக அமைந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

1937-இல் தமிழ்நாட்டில் இராசகோபா(லாச்சாரி) யின் அரசு இருந்தபோது குலக்கல்வித் திட்ட நோக்கில் இந்தித் திணிப்பு போன்ற பார்ப்பனிய இந்திய அதிகார வெறித்தனங்கள் எல்லாம் நடத்தப் பட்ட போதுதான் 1938-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சத்தில் `தமிழ்நாடு தமிழருக்கே’ என்கிற முழக்கம் தமிழ் அமைப்புகளாலும், பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கையர்களாலும் குறிப்பாக மறைமலையடிகள், சோமசுந்தர பாரதி யார், பெரியார், கி.ஆ.பெ போன்றவர்களால் முன்வைக்கப்பட்டதை அறியமுடியும்.

அதன்பிறகு 1939 தொடங்கி 1945 வரை இரண்டாம் உலகப்போர் நடந்த காலச்சூழலில் இந்திய அரசின் ஆளுமையர்களாக இருந்த பிரித் தானியர்கள், இங்கு தேர்தல்முறைப்படியான ஆட்சி அமைப்புகளைத் தவிர்த்துவிட்டு ஆளுநர்களைக் கொண்டே அரசமைப்பை உறுதிப்படுத்தியிருந்தனர்.

அந் நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் பொறுப்பு என்கிற நிலையில் எவரும் இல்லாமல் ஆளுநர் மட்டுமே பொறுப்பேற்றிருந்த காலமாக அது இருந்தது.

அந்த இடைக்காலத்தில் 1940, 42-ஆம் ஆண்டு களில் பெரியாரைச் சென்னைத் தலைமாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்கும்படி அன்றைய ஆளுநர் ஆர்த்தர் ஹோப் என்பவர் வலியுறுத்தி அழைத்தார். ஆனால், பெரியார் அதை மறுத்து விட்டார்.

அக்காலச் சூழ்நிலையில் 1940-இல் தென்னிந்திய நலஉரிமைக் கழகத்தால் முன்னெடுத்து நடத்தப் பட்ட மாநாட்டில், தனிநாட்டு உரிமைத் தீர் மானத்தை முன்மொழிந்ததோடு அதற்கான ஒரு திட்டக்குழுவையும் மாநாடு அறிவித்தது. பின்னர் 1944-இல் தென்னிந்திய நல உரிமைக் கழகம் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றப்பட்ட பிறகு நடந்த மாநாட்டில் திராவிட நாடு பிரிவினை எனத் தீர்மானம் இயற்றப்பட்டது. 1945-இல் நடந்த மாநாடுகளிலும் திராவிட நாடு விடுதலைக்கென ஒரு படை அமைக்கவேண்டும் என்பதாகத் தீர் மானம் இயற்றப்பட்டது.

இச்சூழலில், திராவிடநாடு குறித்த கருத்துகள் வலுப்பட்டு வருவதைக் கண்ட இராசகோபா (லாச்சாரி), காங்கிரசுக் கட்சிக்குள் தனக்குச் சார் பாக இருந்தவர்களைத் தூண்டிவிட்டு எதிர்வினை யாற்றிக் கொண்டிருந்தார்.

அவ்வகையில் காங்கிரசுக்குள்ளிருந்தபடியே 1946-இல் தமிழரசுக் கழகத்தை ம.பொ.சி உரு வாக்கினார். தமிழரசுக் கழகத்திற்குக் கொள்கை யாக இந்திய ஒற்றுமை, மாநில சுயாட்சி என்று அறி வித்தார் ம.பொ.சி.

தமிழக அளவில் தன்னுரிமை, தன்னாட்சி இவை யெல்லாம் போராடிப் பெறப்பட வேண்டும் என் பதை விட, இந்திய ஒற்றுமையை முழுமையாக பேணுவதையே ம.பொ.சி முனைப்பாக முன் னிறுத்திச் செயல்பட்டார்.

எனவேதான், குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்தார் ம.பொ.சி; இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி என்ப தாக வலியுறுத்தினார்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இந்தி எழுத்துகள் ‘தார்' பூசி அழிக்கப்பட்டதையெல்லாம் மண்ணெண்ணெய் விட்டு அந்தத் ‘தாரை' அழித்தார்; நாம் தமிழர்களாக மட்டுமல்லாமல் இந்துக்களாகவும், இந்தியர்களாகவும் இருத்தல்வேண்டும் என்று வலியுறுத் தினார்; சமசுக்கிருதத்தைப் பெருமளவில் புகழ்ந்து ஏற்றுக்கொண்டார்; இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சமசுக்கிருதமே என்று சொல்லப்படுவதை, தமிழ் மீது பற்றுடையவர்கள் மறுக்கத் தேவையில்லை என்ப தாக அறிவித்தார்; சமசுக்கிருத மொழியைப் பிழையற பயின்று புரோகிதத்தொழில் செய்வோர் இருப்பார்களாயின் அந்தப் புரோகிதர்களைக் கொண்டு தமிழர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களைச் செய்தல் வேண்டும் என்று வலியுறுத்தினார்; தெய்வப்பற்று, பாரதத் தேசப்பற்று, ஒருமைப்பாட்டில் நம்பிக்கை, தேசிய ஒருமைப்பாட்டில் ஆர்வம், ஒழுக்கம், கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்ட ஓர் அரசியல் கட்சியே தமிழரசுக் கழகம் - என்பதாக அறிவித்தார்; தமிழ்நாட்டின் பிரிவினைக் கொள்கை களை அழுத்தந்திருத்தமாகக் கண்டித்து இயக்கம் நடத்திய ஒரே கட்சி, தமிழரசுக் கழகம்தான் என்பதாகப் பெரு மைப் பட்டுக் கொண்டார்; பெரியார் - இந்திய தேசியக்கொடி எரிப்பு, அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம், தேசப்பட எரிப்புப் போராட்டம், இந்திய விடுதலை நாளைத் ‘துக்க' நாளாக அறிவித்தபோதெல்லாம், அவற்றை யெல்லாம் முழுமூச்சாக எதிர்த்தது தமிழ்நாடு காங்கிரசு அல்ல, அதற்கு வெளியே என் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகம்தான் என்று பெருமை பீற்றிக் கொண்டார்; தனக்கான வழிகாட்டிகளாக இராச கோபா(லாச்சாரி)யையும் சத்தியமூர்த்தியையும் ஏற்றுக் கொண்டிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார்; இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ் நாட்டுத் தலைவர்கள் உதவி வழங்குவது காலித் தனம் என்று தொடக்கத்திலேயே பேசினார்; இலங்கைக்கு இந்திய வெறிப்படை சென்றபோது, அதைப் பாராட்டி ஓயாமல் பொய்ப் பரப்புரை செய்தார். தெய்வத்தின்பேரால் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த அமாவாசை, கிருத்திகை, சஷ்டி விரதங்களை இன்றும் நாம் அனைவரும் சரியாகக் கடைப்பிடித்தால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்து விடும் என்பதாக மூடநம்பிக்கைக் கருத்தைப் பரப்பினார்...

ஆக, இந்த வகையில் எல்லாம் முழுமையாகப் பார்ப்பனிய அடிமையாகச் செயல்பட்ட ம.பொ.சி, மாநில சுயாட்சியை, தமிழ்நாட்டு விடுதலை அல்லது திராவிட நாட்டு விடுதலைக் கருத்தை தி.மு.கவினர் கைவிடுவதற்காகவே முன்னெடுத்துப் பேசினார் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, பெரிய அளவில் மாநில சுயாட்சி குறித் தெல்லாம் அவர் முன்மொழியவுமில்லை... அதற் காக இந்தியாவை எதிர்த்துப் போராடவுமில்லை...

வழக்கமாக, மூன்று அதிகாரங்கள் எனப் படைத் துறை, பொருளியல் அதிகாரம், வெளிநாட்டு தொடர்புகள் இவையெல்லாம் மட்டும் இந்திய அரசிடம் இருக்கவேண்டும் என்பதாக ஒரு சில இடங்களில் பதிவு செய்தாரே அல்லாமல் மாநில சுயாட்சி குறித்து வேறு எவ்வகையிலும் அவர் வலுப்பட முன்மொழியவுமில்லை, போராடவுமில்லை.

இந்நிலையில், தமிழக வரலாற்றில் மாநில சுயாட்சி என்கிற தன்னாட்சி உரிமையை இடைக் காலத்தில் வலுப்பட எழுதவும் பேசவும் செய்தது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.

1949-இல் தி.மு.க தொடங்கப்பட்டாலும் அது தொடங்கப்பட்ட காலத்தில் அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்கிற முழக்கத்தோடு தான் அக்கட்சி செயல்படத் தொடங்கியது.

1952-ஆம் ஆண்டுத் தேர்தலில், திராவிட நாடு விடுதலை கோரிக்கையை யார் ஏற்றுக் கொள் கிறார்களோ அவர்களுக்கே ஆதரவு தெரிவிப்ப தாக அறிவித்தது, தி.மு.க.

1957-ஆம் ஆண்டுத் தேர்தலை நேரடியாகத் திராவிடநாடு விடுதலையை முன்னிறுத்தி சந்தித்தது, தி.மு.க. இதற்கு முன்னால் இன்னொரு செய்தி யையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

1957-இல், தேர்தலில் தி.மு.க பங்கெடுக்கத் தொடங்கியது. அதே காலத்தில்தான் ஆர்.எசு.எசு -இன் பின்புலத்தில், தூண்டலில் `ஜன சங்கம்’ என் றொரு கட்சி உருவாக்கப்பட்டு தில்லியில் முதன் முதலில் தேர்தலில் பங்கேற்றது.

அப்போது ஜன சங்கத்திடம் ஒரு திட்டம் இருந்தது. அதாவது, காங்கிரசை எதிர்த்திடும் கட்சி, எந்தக் கொள்கையின் அடிப்படையில் இருந் தாலும் அதனோடு கூட்டுச் சேர்வது என்று ஒரு திட்டத்தை வகுத்துக்கொண்டது. அப்படியான வகையில் திராவிட நாடு விடுதலை அரசியலைக் கொண்டிருந்த தி.மு.க-வையும் சார்புப்படுத்திக் கொள்வதற்குத் திட்டமிட்டது. ஆர்.எசு.எசு, ஜன சங்கப் பின்னணியில் செயல்படத் தமிழகத்தில் அவர்களுக்கு ராசகோபா(லாச்சாரி) கிடைத்தார்.

1957-ஆம் ஆண்டுத் தேர்தலிலும், 1962-ஆம் ஆண்டுத் தேர்தலிலும் காங்கிரசு வெற்றி பெற்று காமராசர் முதலமைச்சராக அமர்ந்தார். ஆனால் 1952-ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்று இராசகோபா(லாச்சாரி) முதலமைச்சராக அமர்ந்தபோது அவரின் குலக் கல்வித் திட்டம் உள்ளிட்ட பார்ப்பனிய நடைமுறைகளைக் காம ராசர் காங்கிரசில் இருந்தபடியே எதிர்த்ததால் இராசகோபா(லாச்சாரி)-க்குக் காமராசர் மீது மறுப்பு இருந்தது.

இந் நிலையில் காங்கிரசில் 1957, 1962-ஆம் ஆண்டுத் தேர்தல்கள்வழிக் காமராசர் முதலமைச்ச ரானாலும் சத்தியமூர்த்தி, சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட தன் பற்றாளர்களைக்கொண்டு காமராச ருக்கு எதிர் வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் இராசகோபா(லாச்சாரி).

1962-இல் காமராசர் மீண்டும் முதலமைச்ச ரான பின் அவரை எப்படியாவது அப் பொறுப்பில் இருந்து நீக்கிவிடும்படியான வேலையைச் செய்கிற வகையிலே அனைத்திந்தியத் தலைவராக அவரைக் கொண்டு செல்லும்படியாகத் தில்லிக்கு அனுப்பி விட்டுத், தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி, சி.சுப்பிர மணியம் ஆகியோர் ஆதரவில் பக்தவச்சலத்தை முதலமைச்சராக ஆக்கியதில் இராசகோபா (லாச்சாரி)-யின் பங்கு உண்டு.

அதோடு நில்லாமல், தமிழ்நாட்டு விடுதலை, திராவிட நாட்டு விடுதலை, பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளிட்ட முனைப்புகளை எல்லாம் எதிர்ப்பதற் காக ம.பொ.சியைப் பின்னிருந்து இயக்கினார் இராசகோபா(லாச்சாரி).

1946-இல் ம.பொ.சியால் தொடங்கப்பட்ட தமிழரசுக் கழகத்தைத் திராவிடர் கழகத்திற்கு எதிராகவும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு எதிராகவும் இயக்கியதில் இராசகோபா (லாச்சாரி)-யின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி சூழ்ச்சியாகத் தன்னுடைய சுதந்திராக் கட்சி, தமிழரசு கழகம் ஆகியவற்றைத் தி.மு.கவுடன் 1967-ஆம் ஆண்டுத் தேர்தலில் கூட்டுச் சேர்த்து தி.மு.கவின் பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்து களை முனைமழுக்கியதில் இராசகோபா(லாச்சாரி) -யின் பங்கு அதிகமானது.

தேர்தல் களத்தில் தி.மு.கழகம் பங்கெடுத்துக் கொண்டதும், பிரிவினைத் தடைச் சட்டத்திற்கு அஞ்சிக்கொண்டு திராவிட நாடு கொள்கையைக் கைவிட்டதும், இந்திய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்புகளில் நெகிழ்வுத் தன்மை காட்டியதும் இராசகோபா(லாச்சாரி) உள்ளிட்ட ஆரியப் பார்ப்பனர்க்கு வாய்ப்பாகப் போய்விட்டது.

இந்நிலையில்தான், மாநிலத் தன்னாட்சி -சுயாட்சி என்பதை ஓர் அரசியல் மாற்றாக, தொடக் கத்தில் காங்கிரசு முன்மொழிந்த முழக்கத்தை, பின்னர் ம.பொ.சி முன்வைத்த அதே முழக்கத்தைத் தி.மு.க முன்னெடுக்கத் தொடங்கியது.

இந்திய அளவில் படைத்துறை, நாணய அச்சடிப்பு, வெளியுறவு, உள்நாட்டுத் தொடர்புகள் என நான்கு அதிகாரங்களை நடுவண் அரசுக்குத் தந்துவிட்டு, மற்றெல்லா அதிகாரங்களையும் மாநில அரசுகளே வைத்திருப்பது என்பதான விளக்கத்தை மாநில சுயாட்சிக்கு முரசொலி மாறன் தன் நூலில் பதிவு செய்திருந்தார்.

அன்றைய அளவில், இந்திய அரசின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டு 97 அதிகாரங்களும், மாநில அரசுகளுக்கு உட்பட்டு 66 அதிகாரங்களும், இரண்டு அரசுகளுக்கும் உட்பட்டதான பொதுப் பட்டியலின்கீழ் 47 அதிகாரங்களும் இருந்தன வாகச் சுட்டப்பட்டிருந்தது.

மாநில அரசுகளுக்கு உட்பட்ட 66 அதிகாரங் களுள் 31 அதிகாரங்கள் மட்டுமே மொழிவழி மாநில அரசுகளுக்கு முற்றும் முழுமையாக உரிமை யுடையனவாக இருந்தன. எஞ்சிய 35 அதிகாரங் களும் நடுவண் அரசு அதிகாரப் பட்டியலின் மூல மான கட்டுப்பாட்டிலும், பொதுப் பட்டியலின் கட்டுப்பாட்டிலும் உள்ளடங்கியவை.

ஆக, மாநில அரசுக்கு - தமிழக அரசுக்கு உரிமை உடையதாகச் சொல்லப்படுகிற 31 அதிகாரங்களும் மிகமிகப் பெரிய அதிகாரமற்ற துறைகள் என்பதை மிக விளக்கமாக அறிந்துகொள்ள வேண்டும்.

மாநிலத் தன்னாட்சியிலும், சுயநிர்ணய உரிமை யிலும், தனிநாட்டு உரிமையிலும் அக்கறையுள்ள அனைவரும் ஆழ்ந்து அறிந்து அக்கறை செலுத்த வேண்டியவை இவை.

அன்றைய காலத்திலிருந்து இன்றளவில் மேலும் பல மொழி மாநில உரிமைகளை இந்திய அரசு பறித்துக் கொண்டே வந்துள்ளது என்பதையும் அறியவேண்டும்.

மாநிலத் தன்னாட்சியை வலியுறுத்தும் வகை யில் இராசமன்னார் குழு என்று ஒரு குழுவை 1969-க்குப் பின்னர் தி.மு.க தலைவர் கலைஞர் உருவாக்கினார். அதன்வழி மாநிலத் தன்னாட்சி (சுயாட்சி) குறித்தெல்லாம் விரிவான ஆய்வை முன்னெடுத்து விளக்கி அந்த அறிக்கையை இந்திய அரசிடம் கொடுத்தார். ஆனால், அதை இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

1974-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநிலத் தன்னாட்சி (சுயாட்சி) குறித்துத் தீர்மானம் இயற்றித் தில்லிக்கு அனுப்பினார்... தில்லியினர் அதுபற்றி வாய்திறக்காமல் வாய்மூடிக் கிடந்தனர்... தாங்கள் நடத்திய மாநாடுகளிலெல்லாம் மாநில சுயாட்சி குறித்து விளக்கமாகத் தீர்மானங்களை இயற்றிப் பேசினர்...

ஆனால் ஒரு விளைவும் இல்லை...

இந்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை...

இது குறித்தெல்லாம் இந்திய அரசு கண்டு கொள்ளாது - என 1950-களிலேயே பெரியார் விளக்கியிருந்தார் - சட்டசபை நுழைவும் நாட்டுப் பிரிவினையும் - என்கிற கருத்தின் கீழ்...

“தேர்தலில் நின்று சட்டசபைக்குப் போக வேண்டும் என்று சொல்கிறார்கள் - அதாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி `பவர் பாலிடிக்சு’ மூலம் போராட வேண்டும் என்கிறார்கள்...

நான் கூறுகிறேன் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. நாம் ஒன்றும் செய்யமுடியாதபடியான சட்டதிட்டங்களை அங்கு அமைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் போய், திராவிடநாடு தனி நாடாகப் பிரிய வேண்டும் என்று என்னதான் ஏக மனதாகத் தீர்மானித்தாலும் சட்டசபைத் தலைவராக இருப்பவர் இந்த மாதிரியான தீர்மானம் செய் வதற்குச் சட்டத்தில் இடமில்லை - என்று கூறித் தள்ளிவிடுவார்கள். இதைச் செய்ய முடியாமல் அங்கு போய் நாம் இருக்கவேண்டும் என்கின்ற அவசியமும் நமக்கு இல்லை. எனவேதான், அத் தகைய சட்டங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்று நாம் வெளியில் இருந்து போராடி வரு கிறோம்.

ஒரு வீட்டை இடிக்கவேண்டும் என்றால் அந்த வீட்டுக்கு வெளியில் இருந்துகொண்டுதான் இடிக்க வேண்டுமே தவிர, வீட்டுக்குள் இருந்துகொண்டே இடித்தால் நம் மீதே விழுந்து நாமே அழிய வேண்டி யதுதான். எனவேதான் நாம் வெளியிலிருந்து மக்களுக்குப் பகுத்தறிவு உண்டாக்கும் பணியில் வேலை செய்கிறோம்...” என்று பெரியார் 1951-இல் பேசவும் எழுதவும் செய்திருக்கிறார்...

1963-இல் பிரிவினைத் தடைச்சட்டம் கொண்டு வந்தபோது அதைக் கடுமையாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எதிர்த்தார்...

“சீரும் புயலை மீன்வலை கொண்டு அழிக்கும் மடமைச் செயல்” என்பதாகத் தென்மொழியில் எழுதினார்...

1972-இல் இந்திய அரசு கொடுத்த நெருக்கடி களுக்கு, “நாங்கள் மாநில சுயாட்சிதான் கேட் கிறோம்; இந்திய அரசு அமைப்புக்குள் இருந்து அதன் ஒற்றுமையைப் பேணவே விரும்புகிறோம், மற்றபடி யாரோ சிலர் பிரிவினை கேட்பதற்கு நாங்கள் காரணமல்ல” என்பதாகத் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி இந்திய அரசுக்கு விடை கூறியிருந்தார்...

அதற்குப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் “வேறு யாரும் இல்லை நாங்கள் தாம் (தமிழ்நாடு விடு தலை கேட்கிறோம்)” என்று 1972-இல் ஆசிரிய உரை எழுதினார். தமிழகம் பிரிவதற்குப் பத்துக் காரணங்கள் என்பதாக வரிசைப்படுத்தினார்.

  1. தமிழ் உயர்வடைய வழியே இல்லை.
  2. இந்தியை விலக்கவே முடியாது.
  3. குல, சமயப் புரட்டுகள் அகலா.
  4. ஆரியப் பார்ப்பனிய நச்சுத் தன்மை இருந்து கொண்டே இருக்கும்.
  5. தமிழ்ப் பண்பு கெடும்.
  6. தமிழ்மொழி இலக்கண இலக்கியங்கள் அழியும்.
  7. சமசுக்கிருதம் தலையெடுக்கும்.
  8. தமிழினம் சிதறுண்டு போகும்.
  9. பொதுவுடைமை அமைப்புக்கு வழியே இல்லை.
  10. அரசியல் அதிகாரங்கள் தன்னிறைவு பெறா.

மிசா, தடா என அடக்குமுறைச் சட்டங்கள் பலவற்றுக்கும் ஆளாக்கப்பட்டிருந்தாலும் பாவல ரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தன் வாழ்நாள் இறுதிவரை தனித் தமிழ்நாடு விடுதலைக்கான போராட்டத்தை ஓர் இம்மியளவும் கை நெகிழ்க் காமல் முன்னெடுத்துச் சென்றார் என்பது அறியப் பட வேண்டியது...

இந்தியா யார் அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லை; இங்குள்ள தேசிய இனங்களின் சொத்து - என்றும்,

தனித்தமிழ்நாட்டு விடுதலை முயற்சிகளை எவராலும் தடுத்து நிறுத்திவிடமுடியாது - என்றும் அறைகூவல் விடுத்தார்..., பாவலரேறு.

இத்தகைய பின்னணியிலிருந்து, நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால், மாநில சுயாட்சி எனும் கருத்து இந்தியத்திற்கு எதிரானதோ, வல்லரசியத்திற்கு எதிரானதோ, பார்ப்பனியத்திற்கு எதிரானதோ அல்ல என்பதுதான்.

அதாவது இந்தியாவை, இந்திய அரசியல் சட் டத்தை, இந்தியப் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் நெளிவு சுழிவாக அணுகிக்கொள்ளலாம் என்பது தான். படைத்துறை வலுவும், பண அச்சடிப்பும் அதன் வழியான பொருளியல் ஆளுமையும் எங்கு குவிந்திருக்கிறதோ அங்குதான் அரசியல் அதிகாரம் குவிந்திருக்க முடியும்.

“அரசியல் அதிகாரத்தையும், பொருளியல் அதிகாரத்தையும் பெறாமல் குமுக மாற்றத்தைச் செய்ய முடியாது” என்ற அம்பேத்கரின் கருத்து இங்கு எண்ணத் தகுந்தது.

மாநிலத் தன்னாட்சி என்பது, பன்னாட்டு மூல முதலீடுகளை மறுக்கவில்லை, பார்ப்பனிய அதி கார இந்திய அரசமைப்பை மறுக்கவில்லை, சாதிய அமைப்பை மறுப்பதற்கான திட்டங்களை வகுத் துக் கொள்ளவில்லை என்றாகிறபோது, அஃது எப்படி முழு அதிகாரம் படைத்ததாக இருக்க முடியும்? வல்லரசியத்தை, பார்ப்பனியத்தை, சாதி யத்தை வீழ்த்துவதாக ஆகமுடியும்? ஏதோ ஓர் இணக்கப்போக்கில் இந்திய அரசிடையே அடி பணிந்து போகிற நடைமுறையைத்தான் அது கொண்டிருக்க முடியும்.

அதேபோல், மாநிலத் தன்னாட்சி முழக்கத்தை முன்வைப்பவர்கள் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழி ஆக்குவோம் என்று கருத்து கொண் டிருக்கின்றனர்.

முதலில் அனைத்து மொழிகள் என்பன எவை எவை என்பதையே அவர்கள் தீர்மானித்திட வில்லை. இந்திய அரசு வாய்ப்பியத் தன்மையி லேயே தொடக்கத்தில் 14 மொழிகள் என்றும், பின்னர் 15 மொழிகள் என்றும், படிப்படியாகக் கூட்டி இப்போது 22 மொழிகளைத் தேசிய மொழிகள் என்பதும், அவற்றுள் சமசுக்கிருதத்தை யும் தேசியமொழி என்று இணைத்து வைத்திருப் பதும், முழுக்க முழுக்க வாய்ப்பிய (சந்தர்ப்ப) மானதே. எனவே அனைத்து மொழிகளும் என்பதில் முறையான தீர்மானிப்பு வேண்டும்.

அடுத்து அவற்றை ஆட்சி மொழியாக்குவது என்பது பச்சை ஏமாற்று.

படைத்துறை ஆணை அல்லது கட்டளைகளை எப்படி அனைத்து மொழிகளிலும் செய்யமுடியும்? பணத் தாளில், காசுகளில் எப்படி அனைத்து மொழிகளையும் பயன்படுத்த முடியும்? வழக்கு மன்றங்கள் அனைத்து மொழிகளிலும் எப்படி நடத்தப்பட முடியும்? ஆக, மாநிலத் தன்னாட்சியில் மொழிக் கொள்கையேகூடத் தெளிவற்ற நடை முறை ஆகிவிடுவதைக் கவனிக்க வேண்டும்.

மேலும், இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்தி லிருந்தும் அதாவது மொழித் தேசங்களிலிருந்தும் மாநிலத் தன்னாட்சி (சுயாட்சி) கோரிக்கை எழாத போது, தமிழ்நாட்டிலிருந்து மட்டும் மாநிலத் தன்னாட்சி (சுயாட்சி) பெற்றுவிட முடியாது...

இந்திய அளவில் கூட்டாட்சி அமைக்கிறபடியான திட்டம் உருவாக்கப்படுகிறபோதே, மொழித்தேச மாநிலங்கள் எல்லாம் மாநில உரிமைகளுக்கான, சுயாட்சிக்கான முழக்கத்தை எழுப்பிடவும் முடியும் மாநில சுயாட்சியைப் பெறவும் முடியும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்...

தன்னைத் தமிழ்த்தேசிய இனத்தினன் என்று கூடப் பதிந்துகொள்ள முடியாத நடைமுறையை வைத்துக்கொண்டு, தன் தேசிய இனத்தின்வழி தான் இந்தியன் என்பதாகக் கட்டாயத்தின் பெய ரால் பதிந்துகொள்ளுகிற அடிமைப் போக்கை வைத்துக்கொண்டு, மாநில சுயாட்சிக்குப் போராடு வதாகச் சொல்வது வேடிக்கையானது...

ஆக, `மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட் டாட்சி’ என்பது முழுக்கமுழுக்க இந்திய அரசுக்கு அடிமைப்பட்ட முழக்கமே அல்லாமல் வேறல்ல. அதனால்தான், அந்த முழக்கத்தை முன்னிறுத்திய தி.மு.க தங்களை மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என அடையாளப் படுத்திக்கொண்டது. அவ்வகையில் அந்த முழக்கத் தைக் கொண்டு இந்திய அரசமைப்பை, பார்ப்பனி யத்தை, வல்லரசியத்தை அதனால் வீழ்த்திவிட முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆக, மாநில சுயாட்சி என்பது, இந்த வகையில் தமிழக அளவில் குமுக, அரசியல், பொருளியல் வழிப்பட்ட மாற்றத்தைத் தருவதற்கான முழக்க மில்லை என்று உணர்வோம்.

தன்தீர்வு (சுயநிர்ணய) உரிமை

அடுத்து, சுயநிர்ணய உரிமை குறித்துப் பார்ப் போம். அதற்குமுன்பாக, மார்க்சியப் பொதுவுடை மைக் கட்சியிலிருந்து வெளியேறித் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சியைக் கட்டமைத்த தோழர் பெ.மணியரசன் உள்ளிட்டவர்கள் தொடக்கத்தில் முன்வைத்த முழக்கம், ‘தன்னுரிமைப் போருக்கு முன்னுரிமை கொடுப்போம்! தமிழ்த்தேச வரலாற்றில் புதுயுகம் படைப்போம்!' - என்பது.

அந்த வகையில் தன்னுரிமை என்கிற சொல் லாடலுக்கு ஓர் அரசியல் விளக்கத்தை அவர்கள் அறிமுகப்படுத்தி அறிவித்தனர்.

நான்கு அதிகாரங்களை நடுவ ஆட்சி வைத் திருக்க வேண்டும் என்பதாகவும், அனைத்து மொழி களையும் ஆட்சிமொழியாக்குவது என்பதாகவுமே தன்னுரிமைக்கு விளக்கம் சொல்லப்பட்டது.

தன்னுரிமை என்பது தன்னாட்சி என்கிற சுயாட்சி உரிமைக்கு அதிகப்படியானது என்பதாக அவர்கள் விளக்கம் அளித்தனர்.

ஆனால், அது அத்தகையது அல்ல. சுயாட்சிக்கு என்னென்ன அதிகாரங்கள் இருப்பதாகத் தி.மு.க குறிப்பிட்டதோ, அதே அதிகாரங்களைத்தான் தன் னுரிமை என்கிற பெயரில் இவர்கள் குறித்தனர். எனவே, அது தொடர்பான நீண்ட தருக்கத்தை அவர்கள் அதன்மூலம் எதிர்கொண்டனர்...

அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து, தன்னுரிமை என்கிற சொல்லாடலைத் தவிர்த்து, தமிழ்த்தேசக் குடியரசை அமைப்போம்! - என்கிற வகையில் புதிய நிலைப்பாட்டிற்குரிய முழக்கத்திற்கு வந்தனர்.

தன்னுரிமை என்கிற சொல்லாடல் சுயநிர்ணய உரிமை என்கிற சொல்லாடலோடு பொருத்திப் பார்க்கிற செய்தி கொண்டதல்ல என்பதையும், தன் தீர்வுரிமை என்பதே சுயநிர்ணய உரிமை என்பதற்கான பொருளை விளக்கப்படுத்துகிற தமிழ்ச் சொல்லாக இருக்க இயலும் என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தன்தீர்வு உரிமை என்பது நான்கு அதிகாரங் களாகச் சொல்லப்படும் அதிகாரங்களையும் நடுவ அரசுக்கானது என்றல்லாமல் தனக்கேயான உரிமைகளாகப் பெற்றிருப்பது...

அதாவது, படைத்துறை, நாணய அச்சடிப்பு, உள்நாட்டுத் தொடர்புகள், அயலுறவுத் தொடர்புகள் - ஆகிய நான்கு அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் மொழித் தேச அரசுகளே, அதாவது மாநில அரசுகளே அவ்வவற்றிற்குத் தனித் தனியாகக் கொண்டிருக்குமானால் அதைத் தன் தீர்வு உரிமை என்று அழைக்கமுடியும். அதாவது, ஒற்றை நடுவக் கூட்டரசுக்குள், தாங்கள் விரும்புகிற போது, அல்லது தங்களுக்குத் தேவைப் படுகிற பொழுது, தாங்கள் அவ்வாறான தன்தீர்வு (சுய நிர்ணய) அதிகாரம் படைத்த அரசை அமைத்துக் கொள்ள முடியும் என்பதே தன்தீர்வு உரிமை அரசு என்று பொருள்படும் ... அத்தகைய அரசை ஒரு மொழி மாநிலம் அமைத்துக் கொள்ளுகிற உரிமையைப் பெற்றிருக்க வேண்டும் என்றால், அதற்கு இசைகிறபடியான ஒரு நடுவ அரசை அது பெற்றிருக்க வேண்டும்... அப்படியான ஒரு நடுவ அரசை இந்திய அளவில் உருவாக்க வேண்டு மென்றால், மொழித் தேச மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து மிகப்பெரும் புரட்சியின் வழியாகத்தான் அத்தகைய நடுவ அரசை அமைக்க முடியும்...

இங்கு, இந்தியாவில் உள்ள சிக்கலே, இந்திய அளவில் ஒரு புரட்சி மாற்றத்தை செய்துவிட முடியாது என்பதே ஆகும்.

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மொழித்தேசமும் ஒவ்வொரு வகைக் குமுக, அரசியல், பொருளியல், பண்பாட்டியல், வரலாற்றியல் தன்மைகளைக் கொண்டது. அப்படியான நிலையில் ஒவ்வொரு மொழித்தேசத்தின் அரசியல், பொருளியல், குமுக வியல் உரிமைத் தேவைகளும் ஒவ்வொரு வகைப் பட்டனவாக உள்ளன. ஒரு மொழித்தேசத்தின் தேவைக்காக இன்னொரு மொழித் தேசம் துணை நின்றோ, இணைந்தோ போராட முடியாது...

அப்படி இருக்கிறபொழுது இந்திய அளவில் இருக்கிற ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட மொழித்தேசங்களெல்லாம் ஒரே காரணத்திற்காக ஒருங்கிணைந்து போராடுகிற வாய்ப்பிழந்து இருக் கின்றன. இத்தகைய நிலைதான் இன்றைக்கு இருக்கக் கூடிய அதிகார வகுப்புகளான பன்னாட்டு நிறு வனங்களுக்கும், இந்தியப் பார்ப்பனியங்களுக்கும், இந்திய முற்றாளுமை முதலாளியத்திற்கும் பெருத்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்...

அகில இந்திய அளவில் ஒரே திட்டத்தின்கீழ், ஒரே கட்சியின்கீழ்ப் புரட்சிக்கோ, குமுக மாற்றத் திற்கோ வழியில்லாத சூழலில் அனைத்து மொழித் தேசங்களுக்கும் தன்தீர்வு (சுயநிர்ணய) உரிமையை அளிக்கிற வகையான ஒரு புரட்சி வழிபட்ட நடுவ அரசை இந்திய அளவில் அமைப்பது என்பது கற்பனையானதே.

அப்படியான நடுவ அரசை அமைப்பதற்கான சூழல் இல்லாத நிலையில், சுயநிர்ணய உரிமை என்கிற தன்தீர்வு உரிமையைக்கொண்ட மொழித் தேசிய இன அரசுகளை உருவாக்க இயலாது என் பதில் நாம் தெளிவடைந்தாக வேண்டியிருக்கிறது...

இந்நிலையில், மாநிலத் தன்னாட்சி (சுயாட்சி) என்பதையும், தன்தீர்வு (சுயநிர்ணய) உரிமை என் பதையும் நோக்கித் தமிழகம் தன் அரசியல் வழித் தடத்தை மேற்கொள்ள இயலாது என்றும், அவ் வாறு மேற்கொண்டால் அதை அந்த இலக்கு நோக்கி, அதாவது தமிழக மக்கள் உரிமைகளை விடுதலையை நோக்கிச் செயல்படுத்திட முடியாது என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆக, தனிநாட்டு உரிமை என்பதே தமிழ்த் தேசியத் திற்கான முழுத் தீர்வு உரிமையாக இருக்க முடியும்...

தனிநாட்டு உரிமை என்பது இந்திய அளவில் நடுவாக ஓர் அரசை அமைத்து, அதிலிருந்து உரிமை களைப் பெற்றுக்கொள்வது என்ற நடைமுறையைக் கொண்டதன்று. முழுக்க முழுக்கத் தனக்கான ஒரு குடியரசு அமைப்பை நிறுவுவதற்கான முழு அதிகாரத்தைப் பெற்றிருப்பது. அந்த வகையில் தமிழக அளவில் தனித்த ஒரு குடியரசு அமைப்பை நிறுவுவதற்கான முழு அதிகாரத்தையும் படைத் திருப்பது. அப்படியாகத் தமிழக அளவில் ஒரு குடியரசை அமைத்திடவேண்டும் என்றால் தமிழக அளவில் குமுக, அரசியல், பொருளியல் மாற்றத் திற்கான புரட்சி வழிப் போராட்டத்தை முன் னெடுத்து முழு விடுதலை பெற்ற ஓர் அரசை நிறுவுவது என்பதே அடிப்படையானது.

அப்படிச் சொல்வதிலிருந்து, நம்முடைய ஒவ் வொரு சிறு கோரிக்கைகளுக்கும் தனி நாட்டு உரிமையே தீர்வென்றும், அந்தந்த சிறு கோரிக்கை களுக்கும் போராட மறுத்திடுவதுதான் வழியென்றும் பொருளில்லை.

தெருவிளக்குகள் ஏன் எரியவில்லை, ஏரிகளில் ஏன் தண்ணீர் இருப்பு வைத்திருக்கவில்லை என் றால் அதற்குத் தனிநாடு கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது விடையன்று... ஆனால் அச் சிக்கலை - தெருவிளக்குகள் எரியாததுபோன்றும் ஏரிகளில் தண்ணீர் நிறையாதது போன்றதுமான தனிச் சிக்கலாகப் புரிந்துகொள்ளக் கூடாது...

தமிழ்த்தேசம் நசுக்கப்படுகிறது, உழவும், உழவு சார்ந்த சிற்றூர்களும் புறக்கணிக்கப்படுகின்றன, சிறுவணிகம் புறக்கணிக்கப்படுகிறது, தமிழ்த்தேச முதலாளியம் நசுக்கப்படுகிறது. எனவே அந்த வகை யில் இவற்றுக்கான காரணங்களுக்காக, அவற்றி லிருந்து விடிவுபெறுவதற்காகப் பன்னாட்டு மூல முதலீடுகளிலிருந்து, இந்திய வல்லாட்சியிலிருந்து விடுதலையடைந்தாக வேண்டும் என்கிற அரசிய லோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்...

இந்த வகையில், தமிழக மக்களின் உரிமைக்குத் தனிநாட்டு உரிமை அரசியலே சரியான தீர்வு என்பதை உணர்தல் வேண்டும்.