2026 மே 12 அன்று, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்து தெரிவித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
“அரசும் எதிர்க்கட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறி, நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து உரிய முன்னுரிமை பெற வேண்டும் என்றும்,
"விரைவில் இங்கு ஆளுநர் உரை நிகழ்த்த இருக்கிறார். பதவியேற்பு விழாவில் நடந்த தவறு பேரவையில் நடப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது, நாங்களும் அனுமதிக்க மாட்டோம்!" என்றும் கூறிவிட்டு, தனது உரையின் இறுதியில்,
”மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும், வெல்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!” எனக் கூறி முடித்தார்.
சட்டப்பேரவையில் சனாதனம் குறித்துப் பேசியது சர்ச்சையான நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் பேசும்போது, 'மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டேன். இதற்காக என்னைச் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. எதிர்ப்பிலேயே வளர்ந்ததுதான் திராவிட இயக்கம். அந்த வகையில், ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புகிறேன். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னால் யாரும் கோயிலுக்குப் போகக் கூடாது என அர்த்தம் இல்லை. கோயிலில் மட்டுமல்ல, சமூகத்திலும் அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று அர்த்தம். மேல் சாதி - கீழ்ச்சாதி என மக்களைப் பிரிப்பதைத்தான் நான் ஒழிக்க வேண்டும் எனச் சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசிய கொள்கையைத்தான் நானும் பேசினேன். நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைகளுக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால், சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் கடுமையாக எதிர்ப்போம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவர் சொன்னதுதான் எங்கள் வழி” என்று தெரிவித்துள்ளார்.
சனாதனத்தின் மீது உதயநிதி ஸ்டாலின் முதல் சாடல் - 2023
2023 செப்டம்பர் 2 அன்று, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டில் பங்கேற்றுப் பேசும்போது, சனாதனத்தை நோய்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். "டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க மாட்டோம்; அதனை எதிர்க்கக் கூடாது; ஒழிக்கவே முயற்சி செய்வோம். அதுபோல சனாதன தர்மமும், அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சிறந்தது" என்று பேசினார். இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
2023 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நாடு முழுவதும் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி விலை வைத்தார். ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், "உதயநிதி ஸ்டாலினின் நாக்கை வெட்ட வேண்டும், கண்ணை நோண்ட வேண்டும்" என்றார்.
2024 சனவரி மாதம் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், அனைத்தையும் ஒன்றாக இணைக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. 2025 செப்டம்பர் 1 அன்று, உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மனு விசாரணை செய்யப்பட்டது.
நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, "இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி இருக்கிறது" என்பதால், 2026 பிப்ரவரி மாதம் மூன்றாம் வாரத்தில் வழக்குப் பட்டியலிட்டு விசாரிக்க உத்தரவிட்டது. மேலும், வழக்குகளில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
2026 மார்ச் 19 அன்று போபாலில் உதயநிதிக்கு எதிராகப் புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஆகவே வழக்குகளை ஒன்றாக இணைக்கும் ஆணையில் உரிய திருத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த காலங்களில் பல்வேறு புகார்தாரர்கள் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.
சனாதனத்தை எதிர்ப்பது இனப்படுகொலை: அமித் மாளவியாவின் குருட்டுத்தனம்!
‘சனாதன ஒழிப்பு’ பற்றித் தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சங்க மாநாட்டில் சனாதனம் குறித்துப் பேசியது ஒரு இனப்படுகொலைக்குச் (Genocide) சமமானது என்று பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா கடுமையாக விமர்சித்தார்.
சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய அமித் மாளவியா, ‘80 சதவிகிதமான மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா?’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிராகவே முதல் தகவல் அறிக்கை திருச்சி நகரக் காவல் துறையால் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.
உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது இந்து மதத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சு என்றும், அதற்கு எதிராகவே தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் அமித் மாளவியா தெரிவித்தார்.
திருச்சிராப்பள்ளி திமுக பிரமுகர் கே.ஏ. விதினகரன், திருச்சிராப்பள்ளி நகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளரிடம் அமித் மாளவியா மீது ஒரு புகார் மனுவை அளித்தார். இதை ரத்து செய்யக் கோரி அமித் மாளவியா சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ். ஸ்ரீமதி அமர்வில் விசாரணை செய்யப்பட்டது. 2026 சனவரி 20 அன்று ஸ்ரீமதி, தமிழ்நாடு அரசு காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
சார்புத் தன்மையுள்ள தீர்ப்பு!
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் நீதியரசர் எஸ். ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியது.
உதயநிதி ஸ்டாலினின் அமித் மாளவியா மீதான முதல் தகவல் அறிக்கையைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கில்லை நீதியரசர் எஸ். ஸ்ரீமதி ரத்து செய்தார். தம்முடைய தீர்ப்பில் அமித் மாளவியாவின் வழக்கறிஞர் தன் கட்சிக்காரர் சார்பாக எப்படி வாதங்களை வைப்பாரோ, அதே வகையில் நீதிபதி தன் தீர்ப்பை எழுதியிருந்தார்.
வெறுப்புப் பேச்சைத் தொடங்குபவர்கள் தண்டனையின்றி விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த வெறுப்புப் பேச்சுக்கு எதிர்வினையாற்றியவர்கள் சட்டத்தின் கோபத்தை எதிர்கொள்கிறார்கள் என்ற தற்போதைய நிலையை இந்த நீதிமன்றம் வேதனையுடன் பதிவு செய்கிறது. உதயநிதியின் கருத்துக்கள் வெறுப்புப் பேச்சுக்குச் சமம் என்றும், அதைக் கேள்வி எழுப்புவது ஒரு எதிர்வினை என்றும், நீதிபதி கூறினார். மேலும் வெறுப்புப் பேச்சைத் தொடங்கிய உதயநிதிக்கு எதிராக சட்டம் செயல்படவில்லை.
அமித் மாளவியாவின் கருத்துகள் திரிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்ந்தால் மனுதாரர் (அமித் மாளவியா) ஈடு செய்ய முடியாத இழப்பையும் பாதிப்பையும் சந்திப்பார் என்றும், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மனுதாரர் கோர உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் கருதுகிறது.
"இந்த வழக்கைத் தொடர்வது சட்டச் செயல்பாட்டைத் தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம்" என்று நீதியரசர் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதை 'ஒழிக்க வேண்டும்' என்று பேசிய கருத்து, சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80% மக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பது போன்றது என்று நீதியரசர் எஸ். ஸ்ரீமதி கருத்து தெரிவித்தார்.
இந்த வழக்கில் துணை முதலமைச்சரின் வெறுப்புப் பேச்சுக்காக அவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை?
"அரசு அதிகாரிகள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது" என்று கருத்து தெரிவித்தார்.
இதன் பொருள், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதைக் கேட்டுச் சாமியார்கள்தாம் கொதிப்படைகிறார்கள் என்பதில்லை; நீதியரசரும்கூட கொதிப்படைகிறார்.
நீதியரசர் ஸ்ரீமதி கூறுகிறார்: "ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமைச்சரின் பேச்சு 80% இந்துக்களுக்கு முற்றிலும் எதிரானது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது வெறுப்புப் பேச்சு என்ற வரம்பிற்குள் வருகிறது.
ஒரு சனாதனியான மனுதாரர் (அமித் மாளவியா), துணை முதலமைச்சரின் வெறுப்புப் பேச்சால் பாதிக்கப்பட்டவர். மனுதாரரின் பதில் பதிவு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் எந்தப் பிரிவுகளையும் ஈர்க்காது என்பது தெளிவாகிறது. மாறாகத் துணை முதலமைச்சரின் பேச்சு சில குற்றப்பிரிவுகளை ஈர்க்கிறது."
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி ஸ்ரீமதி, 2023ஆம் ஆண்டு சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் "வெறுப்புப் பேச்சு" என்றும், அது குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எதிரான இனப்படுகொலையைத் (Genocide) தூண்டுவதற்குச் சமம் என்றும் தனது தீர்ப்பில் கூறினார்.
அமித் மாளவியா மீதான எஃப்.ஐ.ஆர் (FIR) வழக்கை ரத்து செய்து அவர் வழங்கிய தீர்ப்பின்படி, உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் பின்வரும் முக்கிய குற்றப்பிரிவுகளுக்குள் அடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது:
- பிரிவு 153A (Section 153A): மதம், இனம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை உருவாக்குதல் மற்றும் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்.
- பிரிவு 153B (Section 153B): தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகள் அல்லது கருத்துகளைப் பரப்புதல்.
- பிரிவு 295A (Section 295A): வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்தோடு ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துதல்.
- பிரிவு 506 (Section 506): குற்றவியல் அச்சுறுத்தல் (Criminal Intimidation) விடுத்தல்.
நீதிபதி தனது உத்தரவில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்களின்படி, இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகள் தொடர்பான பிரச்சினைகளில் காவல்துறையினர் தானாக முன்வந்து (Suo Moto) மேற்கண்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், ஆனால் தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் மீது எந்தவொரு தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வெளிப்படையாக அதிருப்தி வெளியிட்டார்.
நீதிபதி ஸ்ரீமதி அளித்த தீர்ப்பு நியாயத்துக்குப் புறம்பானது! சனாதனிகளுக்குச் சார்பானது!
முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ள மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் தனி நீதிபதி, அந்தத் தீர்ப்பில் கூறியுள்ள கருத்துகள் நீதியை மறுக்கின்றன. அரசியல் சட்டம் வலியுறுத்தும் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதாயும் இல்லை. அவர் அளித்துள்ள விளக்கம் இந்து மத உணர்வு படைத்த சாமியார்களின் வெறிப் பேச்சை ஒத்ததாக அமைந்திருக்கிறது.
சட்டம் குறித்து சாதாரண அறிவு படைத்தவர்களுக்குக் கூட அவருடைய விளக்கம் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பானது என்ற உணர்வை ஏற்படுத்தும்.
“முழு வழக்கும் ‘ஒழிப்பு’ என்ற சொல்லைச் சுற்றியே அமைகிறது; அந்தச் சொல் மிகவும் முக்கியமானது. ‘அழித்தல்’ என்ற சொல், ஏற்கெனவே உள்ள ஏதோ ஒன்று இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. இதைத் தற்போதைய வழக்குக்குப் பொருத்தினால், 'சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது' என்பதைக் குறிக்கும்.
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள் குழு இருக்கக் கூடாது என்றால், அதற்கான சரியான சொல் ‘இனப்படுகொலை’ (genocide) ஆகும். சனாதன தர்மம் ஒரு மதமாக இருந்தால், அது ‘மதப்படுகொலை’ (religicide) ஆகும். மேலும், சூழல் அழிப்பு (ecocide), உண்மையழிப்பு (factocide), பண்பாட்டு அழிப்பு, பண்பாட்டு இனப்படு கொலை (culturicide) ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு முறைகள் மற்றும் தாக்குதல்களின் மூலம் மக்களை ஒழிப்பதையும் இது குறிக்கிறது. எனவே, ‘சனாதன ஒழிப்பு’ என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாகவே ‘இனப்படுகொலை’ அல்லது ‘பண்பாட்டு அழிப்பு’ என்பதையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரின் பேச்சை கேள்விக்குள்ளாக்கிய மனுதாரரின் பதிவை வெறுப்புப் பேச்சாகக் கருத முடியாது”
'80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்யச் சொல்கிறீர்களா?' என்று அமித் மாளவியா கேட்டது குற்றமல்ல. அவர் எழுப்பியது கேள்விதான்; அவர் போராட்டம் எதையும் தூண்டவில்லை" என்று கூறுகிறார்.
ஒரு பாஜக தலைவர் கூட இந்த அளவிற்கு அமித் மாளவியாவை ஆதரித்து அறிக்கை தந்திருக்க முடியாது. எந்த ஒரு வழக்கறிஞரும் அமித் மாளவியாவுக்கு இந்த அளவுக்குச் சார்பாக வழக்காட முடியாது. சனாதன ஒழிப்பு என்ற சொல் 'ஏன் ஒரு வருணப் பிரிவு பிராமணர் என்று மேல் நிலையிலும், பல கோடி மக்கள் சூத்திரர் என்ற நாலாம் வருணப் பிரிவாகக் கீழ் நிலையிலும் இருக்க வேண்டும்?' என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால் நீதிபதி ஸ்ரீமதிக்கு அது பல்வேறு படுகொலைகளின் பரிமாணமாகத் தெரிகிறது. இந்தத் தீர்ப்பு நீதிபதியின் சுய வருணச் சார்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
அமித் மாளவியாவின் இனப்படுகொலைச் சித்தரிப்புப் பேச்சுக்கு எதிராகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பாஜகவினரைப் பரவசப்படுத்தியது; ஆர்எஸ்எஸ் காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது; சாமானிய மக்களையும் சமூக உணர்வாளர்களையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது.
2023இல் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு பற்றிப் பேசிய பேச்சு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். அனைத்தும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதுவரை உதயநிதி ஸ்டாலின் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை.
2024 மார்ச் 4 அன்று, உச்ச நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்தபோது அவரைக் கடுமையாக விமர்சித்தது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு: "you have abused your right. You are a minister, not a layman. You should know the consequences" என்று கண்டித்தது. மேலும், அரசியல் சட்டத்தின் கருத்துரிமை சரத்து 19 மற்றும் மதச்சார்பற்ற சுதந்திரம் சரத்து 25 ஆகிய உரிமைகள் பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டியது. வெறுப்புப் பேச்சு அரசியல் சட்டத்தின் சகோதரத்துவம் மற்றும் பன்மைத்துவ மதிப்புகளுக்கு எதிரானது, பொதுப் பொறுப்பில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டுகிற சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது உச்ச நீதிமன்றத்துக்குத் தவறானதாகத் தோன்றுகிறது.
அதேநேரம், 'சனாதனம்' என்ற அந்த வாழ்வியல் முறையே சகோதரத்துவத்திற்கும், சமூகத் தன்மானத்திற்கும் எதிராக இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் உணரவே இல்லை. உதயநிதி ஸ்டாலின் பேசியது அரசியல் சட்டத்தின் விழுமியத்தைத்தான் எதிரொலிக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் உணரவில்லை.
2026 சட்டமன்ற பேச்சுக்குச் சனாதனிகள் எதிர்ப்பு:
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, சனாதன் சன்ஸ்தா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கொதித்தார்கள்; நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஓடி இருக்கிறார்கள். 2026 மே 12 அன்று சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு (நீதிமன்ற அவமதிப்பு) தொடரப்பட்டுள்ளது. "சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்" என்ற பேச்சுக்கு எதிராக வழக்கறிஞர் அமிதா சக்தேவா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்புக் கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
"ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி ஸ்டாலின் திருந்தவில்லை என்றும், அவரை மக்கள் திருத்தும் காலம் விரைவில் வரும்" என்றும் பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வசைபாடினார்.
உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து சென்னை, மதுரை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 4 இடங்களில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உதயநிதியின் பேச்சு வட மாநிலங்களிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சனாதன எதிர்ப்புக்குச் சில ஆதரவுக் குரல்கள்:
2026 மே 12 அன்று, மதுரை மத்திய தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எம்.எஸ். முஸ்தபா, "சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் களத்தில் இறங்கியிருக்கிறோம்" என்று தெரிவித்தார். "நாங்களும் பெரியாரையும், அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டுள்ளோம்; சனாதனத்தை ஒழிக்கவே நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம்" என்றும் பேசியுள்ளார்.
சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளைத் த.வெ.க.வின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதில் உள்ள சாதி முறை மற்றும் பெண்களை அடிமைப்படுத்தும் முறை ஆகியவற்றைத்தான் எதிர்க்கிறார். நாங்களும் அதையேதான் எதிர்க்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
"தமிழக வெற்றிக் கழகமும், எங்கள் தலைவரும் அனைவரையும் சமமாக நடத்தும் கொள்கையையே கொண்டுள்ளோம். இதில் எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய கொள்கை வேறுபாடு கிடையாது. தமிழகம் எப்போதும் சமத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது.
வட இந்தியாவில் சனாதனம் என்றால் அது இந்து மதத்தைக் குறிப்பதாக ஒரு புரிதல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் சனாதனம் என்பது சமத்துவமின்மையைக் குறிக்கிறது. இந்தப் புரிதல் வேறுபாட்டால்தான் சர்ச்சைகள் எழுகின்றன. நாங்கள் எப்போதும் சமத்துவமின்மைக்கு எதிரானவர்கள்; எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல" என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில், "சட்டமன்றத்தில் தனது முதல் உரையிலேயே கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியிருப்பது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. தொடர்ந்து இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டு இருந்தார்.
இதற்கிடையில், கோவை ராம்நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "சனாதனத்தை ஒழிப்போம் என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே ஜாமீனில் இருக்கும் அவர், இதுபோன்ற கருத்துகளால் இந்துக்களின் வாக்குகளை இழந்து வருகிறார். எனவே, அவரின் இந்தப்பேச்சைக் கண்டித்து வருகின்ற மே 17ஆம் நாள் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 4 இடங்களில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவியின் தொடர் சனாதன ஆதரவுப் பிரச்சாரம்!
சனாதனத்தை ஆதரித்துத் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
வடலூரில் திருவருட்பிரகாச வள்ளலாரின் 200ஆவது பிறந்தநாள் தொடர்பான விழா ஜூன் 21ஆம் நாள் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சனாதன தர்மத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு, அதை வள்ளலார் பின்பற்றியதாகப் பேசினார். "பத்தாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் பெருமான்" என்று ஆர்.என். ரவி பேசினார்.
ஆனால் வள்ளலார் சந்தேகத்திற்கு இடமின்றி சனாதனத்தை மறுத்தவர்.
"சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி"
"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச்சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே"
"சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட் டலைகின்ற சமய மதப்பேய்பிடியாது"
"மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்"
"இச்சாதி இக்குலம் என்றே இருபாடி உலகத்தார் எச்சாதி ஆயினும் என்றே எண்ணுகிலார் - பொச்சாப்புக் கொண்டுலகில் வீணே மடிகின்றார் கொள்நெறிதான் கண்டுமகிழ் வெய்துகிலார் காண்."
என்று சாதியையும், மதத்தையும், நால்வருணத்தையும், ஆசிரமங்களையும், ஆசாரங்களையும் கடுமையாகத் தாக்கியவர் வள்ளலார். ஆனால் வள்ளலாரையே இவர்கள் சீரணிக்க முயற்சிக்கிறார்கள்.
சனாதன தர்மம் என்பதன் உள்ளீடு...
சனாதன தர்மம் என்பது என்ன என்பது பற்றிய புரிதலை இப்போதாவது பெறுதல் அவசியம். தாங்கள் விரும்பியபடி எல்லாம் அந்தச் சொல்லுக்குப் பலர் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆளுநர் ரவி 'பாரதம் சனாதனத்தால் ஆனது' என்றார். யோகி ஆதித்யநாத் 'சனாதனம் பாரதத்தின் தேசிய மதம்' என்றார். இங்குப் பலர் சாமி கும்பிடுவது, சடங்குகளை அனுசரிப்பது, பெண்கள் கையில் வளையல் அணிந்து கொள்வது, நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது, மஞ்சள் பூசிக் கொள்வது என இப்படி எல்லாம் சனாதனத்தை விளக்க முயற்சிக்கிறார்கள்.
சனாதனம் என்பது பிறப்பில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்தையும் நால்வருணத்திற்குள் அடக்குகிறது. ஒரு வருணத்தை மேல் நிலையிலும், பிற வருணங்களைக் கீழாகவும், நான்காவது நிலையில் சூத்திரர்களையும் வைக்கிறது. சூத்திரர்களுக்கும் கீழாகப் பஞ்சமர்கள் இருக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டம் சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், சமூக நீதியையும் கற்பிக்கக்கூடியது என்றால், சனாதனம் என்பதை அது முதலில் தடை செய்ய வேண்டும். ஏனெனில் அரசியல் சட்டம் பேசும் விழுமியங்களுக்குச் சனாதனம் நேர் எதிரானது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி: சனாதனமும் வருணாசிரமமும் ஒன்றுதான்!
காஞ்சி காமகோடி மடத்தில் 68ஆவது ஆச்சாரியராக நியமிக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி, "வர்ண தர்மமே சனாதன தர்மம்" எனப் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். இவரது பேச்சுகளின் தொகுப்பான 'தெய்வத்தின் குரல்' முதல் பகுதியில், "வர்ண தர்மம்" என்ற கட்டுரையில் சனாதன தர்மத்தின் முக்கிய அம்சமே வர்ண தர்மம்தான் என்கிறார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி:
"ஸநாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. அதனால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப்போட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்.
மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே சாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வசனங்களுக்கும் விதித்திருக்கிறது.
மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி; மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இது மட்டும் பதினாயிரம் ஆண்டுகளாகப் போகாமல் இருக்கிறது என்றால், அவற்றில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்!
அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரிகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது..
நவீன யுகத்தில் 'சமத்துவம்' (Equality) என்று சொல்லப்படுவதை விடச் சிலாக்கியமாக, சமூகத்துக்கு ரொம்பவும் க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய வர்ண தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்றுதானே ஏற்படுகிறது?
அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது."
மக்களை நான்காகப் பிரித்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தர்மம் என்று இருப்பதே வர்ண தர்மம் என்றும், அந்த வர்ண தர்மமே சனாதன தர்மம் என்றும் சங்கராச்சாரியார் விளக்குகிறார்.
சனாதன தர்மம் கூறுவது என்ன?
பிறப்பின் அடிப்படையில் மேல் கீழாக நான்கு வருணங்களைக் கொண்ட சமூகக் கட்டமைப்பும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மீற முடியாத கடமைகளுமே சனாதனம் ஆகும். ஆரியனின் வாழ்வியல் அனைத்துப் பரிமாணங்களும் சனாதனத்தில் பேசப்படுகின்றன. சனாதனம் என்ற சொல்லுக்கு "நிலையானது, மாறாதது, முடிவற்றது" என்று பொருள்.
எது மாறாதது? சமூகத்தின் தலைமை பிராமணர்கள்! பார்ப்பன தலைமை என்பது ஒருபோதும் மாறாது! நான்காவது வருணமாகிய சூத்திரன் அடிமை. அவன் நிரந்தர அடிமை! அவன் ஒருபோதும் மேல்நிலைக்கு வர முடியாது. இது மாறாதது.
தர்ம சூத்திரங்களும், தர்ம சாஸ்திரங்களும் நால்வர்ண பகுப்புமுறையும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையும் மாறாது என்று கூறுகின்றன. இதுதான் சனாதனம், அதாவது நிலையானது.
மனுஸ்மிருதியின் முதன்மைத் தொகுப்பு கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையிலான காலகட்டத்தில் உருவானது. அந்த மனுஸ்மிருதி சமூகக் கட்டமைப்பையும், பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும் வகுத்துத் தந்தது. ஒரு சூத்திரன் எவ்வளவு வீரமுள்ளவனாக இருந்தாலும் அவன் ஒரு மேல்வருணமாகிய க்ஷத்திரியனுடைய வேலையைச் செய்யக் கூடாது. அது போன்று ஒரு க்ஷத்திரியன் எவ்வளவு படித்திருந்தாலும் அவனுக்கு மேலாக இருக்கக்கூடிய பிராமணனை விட உயர்ந்தவன் இல்லை; அவன் தொழிலை மேற்கொள்ளக் கூடாது. பிராமணன் வேதம் ஓதுவதும் பயிற்றுவிப்பதும், க்ஷத்திரியன் நாட்டை நிர்வகிப்பதும் படையாளுகை செய்வதும், வைசியன் வணிகம் செய்வதும் வளம் பெருக்குவதும், சூத்திரன் ஏனைய மூன்று உயர்சாதிகளுக்கும் தொண்டு செய்வதும் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் வாழ்வதும் நிரந்தர அடிமையாக இருப்பதுமே இவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகள்.
சநாதந தர்மம் - 1905
1905இல் "சநாதந தர்மம்" என்ற நூல் காசியில் வெளியிடப்பட்டது. அந்நூல் பிராமண மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகவே பாடநூலாக உருவாக்கம் செய்யப்பட்டது. நூலின் முன்பக்கம் இவ்வாறு பதிவு செய்கிறது:
ஐக்கோர்ட் வக்கீலும் மதுரை பிரஹ்ம ஞானசபை பிரசிடெண்ட்டுமாகிய நாராயண ஐயரால் மொழிபெயர்க்கப்பட்டது.
மொழிபெயர்ப்பாளரின் முகவுரை இப்படிப் பதிவு செய்கிறது:
"மகாசேத்திரமாகிய காசியில் ஸ்தாபிக்கப்பட்டு நடந்து வருகிற பிரதான ஹிந்து வித்யாசாலை சபையார்கள் நம் மாணாக்கரின் உபயோகத்துக்காக சர்வ ஹிந்துக்களுக்கும் பொதுவான ஆரிய மதக் கொள்கைகள், தருமங்கள் இவைகளின் சாராம்சங்களை நம் வேத சாஸ்திர புராணாதிகளிலிருந்து எடுத்துத் தொகுத்து, 'சநாதந தருமம்' எனப் பெயரும் இட்டு ஆங்கில பாஷையில் ஓர் அருமையான நூல் வெளியிட்டார்கள். அது மூன்று பிரிவு உள்ளது. இவ்வரிய நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி எனக்கு அனுமதி கொடுத்த காசிப் பிரதான ஹிந்து வித்யாசாலை சபையார்க்கும்..."
என்று தொடர்ந்து பேசி நன்றி தெரிவிக்கிறார். இறுதியில்:
ப. நாராயணன், 15.11.1905
என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருளடக்கம் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- முதல் பாகம்: வஸ்து ஒன்று-பல, யக்ஞம், கர்மம், முன் ஜென்மச் செயல்.
- இரண்டாம் பாகம்: சம்ஸ்காரங்கள், சௌசம் (சுத்தம்), ஆச்சிரமங்கள் (பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம்), நான்கு வருணங்கள் (பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர).
- மூன்றாம் பாகம்: தர்மமுறைகள், புண்ணிய கருமங்கள், பெரியோர்களிடம், சாமானியர்களிடம், கீழோரிடம் ஒழுகும் ஒழுக்கமுறை உள்ளிட்டவை.
சனாதன தர்மத்தின் மிக முக்கியமான கூறு வருணாசிரம தர்மம் ஆகும். இந்த வர்ணாசிரம தர்மம் பல ஸ்ருதிகளால் வலியுறுத்தப்படுகிறது. மனுஸ்மிருதி "பெண்கள் அனைவரும் சூத்திரர்கள்; சூத்திரர்களுக்குக் கல்வியைத் தரக் கூடாது; கணவனை இழந்த பெண்கள் உயிர் வாழவே கூடாது" போன்றவற்றை வலியுறுத்துகிறது.
சூத்திரன் குற்றமில்லாதவன் என்று நிரூபிக்கப் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையால் பிடிக்க வேண்டும், தண்ணீரில் மூழ்க வைத்து அதில் இறக்காமல் இருந்தால் அவன் குற்றமற்றவன் என்று முடிவு செய்ய வேண்டும். ஆனால் பிராமணன் 'சத்தியமாக' என்று கூறினாலே போதுமானது. சூத்திரன் திட்டினால் நாக்கை அறுக்க வேண்டும்; பிராமணரைச் சாதியைக் கூறித் திட்டினால் பத்து அங்குலக் காய்ச்சிய இரும்புத் தடியை அவன் வாயில் செருக வேண்டும்; மேல் வர்ணத்தாரோடு ஒரே ஆசனத்தில் அமர்ந்தால் அவன் ஆசனத்தை அறுக்க வேண்டும்; கூலி கொடுக்காமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; பிராமணனுக்குத் தொண்டு செய்யவே அவன் பிறந்தவன் என்று மனுஸ்மிருதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு தவளையைக் கொன்றால் என்ன பிராயச்சித்தமோ அதுதான் ஒரு சூத்திரனைக் கொன்றாலும் செய்தால் போதுமானது; பிராமணன் அல்லாதவன் உயர் குலத் தொழிலைச் செய்தால் அவன் பொருளைப் பிடுங்கிக் கொண்டு விரட்டிவிடலாம்; பிராமணன் உண்ட எச்சில் உணவு, உடுத்திய துணி ஆகியவற்றையே சூத்திரன் உடுத்த வேண்டும்; பெண்கள் சலன புத்தி உள்ளவர்கள், துரோகம் செய்யக்கூடியவர்கள், அவர்கள் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று மனுஸ்மிருதி குறிப்பிடுகிறது. பெண்கள் தந்தை, கணவன், மகன் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும்; ஒருபோதும் அவர்கள் சுதந்திரமாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது.
கடந்த காலத்தில் சம்பூகன் மேல் வருணத்தான் செய்யும் தவத்தைத் தானே செய்ததால் கழுத்து அறுக்கப்பட்டான்; ஏகலைவன் க்ஷத்திரியனைப் போல வில்லைப் பயன்படுத்தியதால் கட்டை விரல் வெட்டப்பட்டான்.
கடந்த காலப் பேரரசுகளின் ஆட்சிக் காலத்தில் மனுஸ்மிருதி கடுமையாகப் பின்பற்றப்பட்டது. சமூக ஒடுக்குமுறை நிறைவேற்றப்பட்டது. சோழர்கள் காலத்தில் சுந்தர சோழன் இறந்த பின் அவன் மனைவி வானவன் மாதேவி உடன்கட்டை ஏறினாள். இவள் முதலாம் ராஜராஜனின் தாய் ஆவாள். முதலாம் ராஜேந்திர சோழன் மறைவுக்குப் பிறகு அவன் மனைவி வீரமாதேவி உடன்கட்டை ஏறினாள். உடன்கட்டை ஏறுதல் சனாதனத்தின் ஒரு கூறு.
1759இல் மராட்டியர் ஆண்ட தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த கோகிலா எனப்படும் 13 வயதுப் பெண் (பின்னர் குளோரிந்தா), ஹென்றி லிட்டில்டன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் உடன்கட்டையில் எரிக்கப்பட இருந்த சமயத்தில் காப்பாற்றப்பட்டாள். இராமநாதபுரம் சேதுபதி இறந்தபோது அவருடைய 47 மனைவிமார்கள் உடன்கட்டை ஏறினர். திருமலை நாயக்கர் இறந்தபோது 200 மனைவிமார் உடன்கட்டை ஏறினர். 1829இல் வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் ராஜா ராம்மோகன் ராய் முயற்சியால் 'சதி' எனப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கம் தடை செய்யப்பட்டது. உடன்கட்டையில் ஏற்றி எரிக்கப்படும் பெண்ணுக்கு அது வெப்பமாக இருக்காது என்றும், குளிர்ச்சியாகத்தான் இருக்கும் என்றும், அது "சீதாக்கினி" என்றும் காஞ்சி சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார். உடன்கட்டை ஏறுதல் சனாதன வாழ்வுமுறையின் மிக முக்கியமான கூறாக இருந்து வந்திருக்கிறது.
தேவதாசி முறை பிராமணனுக்கும், நிலவுடைமையாளர்களுக்கும் எல்லை மீறிய பெண் நுகர்வை அளித்தது. 4 வயது முதல் 12 வயது வரை பெண் குழந்தைகள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இது சனாதனத்தின் ஒரு கூறு.
எட்டு வயதில் குழந்தைத் திருமணத்தைச் சனாதனிகள் வலியுறுத்தி வந்தனர். 1929இல் சாரதா சட்டம் பெண் திருமண வயதை 14 ஆக நிர்ணயித்தது. இதுவும் சனாதனவாதிகளின் எதிர்ப்பை மீறியே நடந்தது.
பல பகுதிகளில் பெண்களுக்குத் திருமணம் ஆனதும் பார்ப்பனர்களும் உள்ளூர் நிலப்பிரபுக்களும் பாலியல் சுரண்டலுக்கு உரிமை பெற்றிருந்தனர்.
பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்களுக்கான உரிமைகள், உரிமை மறுப்பு, மேல்-கீழ் சாதிகள், அவர்களுக்குத் தனி வாழ்விடம், வரையறுக்கப்பட்ட உரிமைகள், வரையறுக்கப்பட்ட தொழில்கள், வரையறுக்கப்பட்ட வாழ்வுமுறை, இவற்றை மீறினால் கடும் தண்டனை ஆகியவை அனுசரிக்கப்பட்டன. இவற்றை மீறியதால்தான் மக்களுக்குத் தன்மான வாழ்வு என்ற ஒன்று கிடைத்தது. கட்டாயமாகச் செய்ய வேண்டிய குலத்தொழில், நாவிதன், வண்ணார், வெட்டியார், பறையடித்தல் போன்றவை சனாதனத்தின் கூறுகள்தாம்.
சனாதனத்தை மறுக்கும் போதுதான் சமத்துவமும் உரிமையும் பிறக்கிறது!
சனாதனம் திரும்பத் திரும்ப மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது நாம் காணும் உலகம் சனாதனத்தை மறுத்ததால் நமக்குக் கிடைத்தது.
பார்ப்பனர்கள் 'உஞ்சவிருத்தி'தான் செய்ய வேண்டும்; பிச்சை எடுத்துச் சாப்பிடுவதுதான் பிராமணர்களுக்குச் சனாதனம் அனுமதித்த வாழ்வுமுறை. ஆனால் பார்ப்பனர்கள் இன்று இறைச்சி ஏற்றுமதி வரை செய்கிறார்கள். இது சனாதன மறுப்பு இல்லையா? நீர்நிலைகளைக் கடந்து சென்றால் சாதிப் பிரஷ்டம் ஆகிவிடுவர் என்பது சனாதனம்; பார்ப்பனர்கள் இன்று கடல் கடந்து செல்லவில்லையா? தங்களுக்கு உரிய கல்வியைத் தாண்டித் தொழிற்கல்வியையும் மருத்துவக் கல்வியையும் பார்ப்பனர்கள் பெறுவது சனாதன மறுப்பு இல்லையா?
அவர்களுக்கு மனுஸ்மிருதி, நமக்குத் திருக்குறள்! அவர்களுக்குச் சனாதனம், நமக்குப் பொதுமை அறம்!
தமிழர்களின் வாழ்வியல் நெறியை வகுத்தளித்தது திருக்குறள். திருக்குறள் நமக்குச் சமத்துவத்தைக் கற்பிக்கிறது. ஆரியர்களின் வாழ்வியல் நெறியை வகுத்தளித்தது மனுஸ்மிருதி. அது கற்பிப்பது சனாதனம். திருக்குறளுக்கும் மனுஸ்மிருதிக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும். ஆரியர்களின் சமூகக் கட்டமைப்பை வரையறுத்து, நான்கு வருணங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளையும் சனாதன தர்மம் விதிக்கிறது. அது நமக்குரியது அல்ல. ஆரியப் பார்ப்பனர்களின் சனாதன தர்மத்தை இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் நடைமுறைப்படுத்த முயற்சிப்பது ஒரு வேற்றின சர்வாதிகாரம். அதை ஏற்கக் கூடாது.
உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தை எதிர்க்கவில்லை; ஆன்மீகத்தை மறுக்கவில்லை. அவருடைய குடும்பத்தார் இறை வழிபாடு செய்வதையும் அவர் மறுக்கவில்லை. ஆனால் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை நிரந்தரமாகக் கடைப்பிடிப்பதைத்தான் எதிர்ப்பதாகக் கூறுகிறார். அவர் கூறுவதில் நியாயம் இருக்கிறது!
மேல் வருணமாகிய பார்ப்பன வருணத்தில் பிறந்தவர்கள் 'சனாதனத்தை வீழ்த்த வேண்டும்' என்று பிறர் கூறினால் கொதிக்கிறார்கள்! பல நூறு ஆண்டுகள் பிற மூன்று வர்ணத்தாரின் தோளில் ஏறி உல்லாசமாக உலவி வந்தவர்கள் பார்ப்பனர்கள்.
சனாதன எதிர்ப்பைக் கண்டு அவர்கள் கொதிப்படைவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் சூத்திரன் என்று பிறவி இழிவைச் சுமப்பவன் ஏன் குமுறுகிறான்? பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கம் தகர்ந்துவிடக் கூடாது என்று கவலைப்படுகிறார்கள். அவர்களுடைய மேலாதிக்கத்தைத் தகர்க்க வேண்டிய சூத்திர வருண மக்கள் ஏன் சனாதன எதிர்ப்பை எதிர்க்கிறார்கள்? அது குறித்த அறியாமை என்பது ஒன்றே காரணம். சனாதன எதிர்ப்பு என்பது ஆன்மீக எதிர்ப்பு அல்ல; சூத்திர-பஞ்சம இழிவு ஒழிப்பு என்பதே அதன் பொருள். இவ்வளவு காலம் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக இருந்தவர்கள் இதற்கு மேலாவது இந்த பிறவி இழிவுப் பட்டங்களைத் தூக்கி எறிந்து, அனைத்து வருணங்களும் சமம் என்ற நிலையை அடைய வேண்டாமா? அல்லது சனாதனத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி, வருணப் பிரிவுகளே இனி இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டாமா?
சனாதன தர்மத்திற்கும் நால்வர்ண முறைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? இருக்கிறது என்பதுதான் பதில். நால்வருண முறை ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கிறதா இல்லையா? கற்பிக்கிறது என்பதுதான் பதில். அவ்வாறென்றால் நால்வர்ண முறையை, அதாவது சனாதன தர்மத்தை ஏற்பது சரியானதா என்றால், அது சரியானது அல்ல. அது மறுக்கப்பட வேண்டும் என்பதே சரியானது.
நால்வர்ண முறை தங்களை இழிவு செய்கிறது என்று கருதுபவர்கள் அத்தகைய முறை இருக்கக் கூடாது என்று எதிர்ப்பது தவறானதா? எதிர்த்துப் போராடுவதுதான் சரியானது. தீண்டாமை ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. அது இந்திய துணைக்கண்டத்தில் சனாதனத்தின் வாழ்வுமுறையின் ஒரு கூறு. தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்திலும் தீண்டாச்சேரி இருந்தது; பெண் அடிமை முறை இருந்தது; தேவரடியார் முறை இருந்தது. அவ்வாறெனில், இப்போது 'தீண்டாச்சேரி கூடாது' என்று பேசுவது சனாதன மறுப்பு அல்லவா? 'தீண்டாமை கூடாது' என்று இந்திய அரசியல் சட்டம் கூறுவது சனாதன மறுப்பு அல்லவா? 'இனி பெண்கள் அடிமை இல்லை' என்று அடிமைத்தனத்தை ஒழிப்பது சனாதன மறுப்பு இல்லையா? எட்டு வயதுக்குள் பெண்களுக்குத் திருமணம் நடந்த முறையைச் சட்டவிரோதம் என்று அறிவித்துக் குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிப்பது சனாதன மறுப்பு அல்லவா? கொத்தடிமைத்தனமும், குழந்தை தொழிலாளர்கள் முறையும், குழந்தைத் திருமணமும் முன்பு இருந்தது. அது இந்தச் சமூக வாழ்வியலின் ஒரு கூறாகவே இருந்தது. இப்போது அவை சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டு இருக்கிறது; இது சனாதன மறுப்பு அல்லவா?
நாம் சனாதனத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் பெண் கல்வி சாத்தியமாகி இருக்குமா? இன்று கண்ணெதிரே பெண்கள் பல்வேறு வேலைகளுக்குச் செல்ல முடியுமா? ஒரு பெண் காவல்துறையில் பணியாற்ற முடியுமா? சாதாரண ஆசிரியராகக்கூட வந்திருக்க முடியுமா?
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சோசலிசம், சமஉரிமை, பேச்சுரிமை என்றெல்லாம் இந்திய அரசியல் சட்டம் பேசுகிறது. இவை அனைத்தும் சனாதனத்துக்கு எதிரானவை அல்லவா? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் தராதே என்று கற்பிக்கப்பட்டு வந்த இந்த நாட்டில், ஆங்கிலேயர்கள் பொதுக்கல்வி முறையை 1835இல் தொடங்கினார்களே, அது சனாதன எதிர்ப்பு அல்லவா? அவனவன் சாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருந்த நாட்டில், 'எல்லாச் சாதிக்காரனும் எல்லாத் தொழில்களையும் செய்யலாம்' என்று நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறதே, இது சனாதன மறுப்பு அல்லவா?
மருத்துவம் படிக்கச் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்ததை, நீதிக்கட்சி காலத்தில் மாற்றி அமைத்து அனைத்துச் சாதியினரும் மருத்துவம் படிக்கலாம், இனி சமஸ்கிருத அறிவு தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இது சனாதன மறுப்பு இல்லையா? சாதிக்கு ஒரு தொழில் என்பதை அடித்து நொறுக்கி, சாதி வரம்பு கடந்து பல்வேறு தொழில்களையும் பல்வேறு சாதியினரும் செய்ய உரிமை பெற்றதும், ஒடுக்கப்பட்ட சமூகத்தவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரும் இன்று அரசு அதிகாரிகளாக வீற்றிருப்பதும் சனாதன மறுப்பு இல்லையா?
சனாதன மறுப்பில்தான் நம் சமூக விடுதலை அடங்கி இருக்கிறது!
தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் சனாதனத்தை எதிர்த்துத்தான் போராடினார். சனாதனம் சுமத்திய சூத்திர-பஞ்சமர் பட்டத்தை ஒழித்துவிட வேண்டும் என்றுதான் போராடினார். அண்ணல் அம்பேத்கர் வாழ்வும் பணியும் சனாதனத்தை அம்பலப்படுத்துவதாகவும், எதிர்த்துப் போராடுவதாகவும் இருந்தது. சனாதனம் மறுத்த உரிமைகளை அண்ணல் அம்பேத்கர் அரசியல் சட்டம் மூலம் உறுதிப்படுத்தினார். அவர்கள் விட்டுச் சென்ற பணி தொடரப்பட வேண்டும். சனாதனம் சுமத்தியிருக்கும் வர்ண பாகுபாடு தகர்க்கப்பட வேண்டும். சட்டப்படியும், சாஸ்திரப்படியும் நாம் இன்னமும் சூத்திரர்களே. உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் வர்ணாசிரம அடிப்படையில் சூத்திரர்களுக்குக் குறிப்பிட்ட உரிமைகள் கிடையாது என்று பலமுறை தீர்ப்பளித்திருக்கின்றன.
சனாதனம் என்றால் மாறாதது, நித்தியமானது, அழிவற்றது என்று கூறுவதே அறிவியலுக்கும், அறவியலுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடை.
நாம் இன்று வாழும் இந்த வாழ்வு சனாதன மறுப்பினால்தான் கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது. சனாதனத்திடமிருந்து பறித்தெடுக்க வேண்டிய, சனாதனத்தை அழித்து நாம் பெற வேண்டிய, நிலைநிறுத்த வேண்டிய உரிமைகள் இன்னும் பல இருக்கின்றன. தங்களுடைய ஏகபோகமாக இருந்த வேலைவாய்ப்புகளையும், பதவிகளையும், பொருளாதார நலன்களையும் இன்று கீழ்நிலைச் சாதிகள் எல்லாம் பறித்துப் பங்கு வைக்கிறார்களே என்ற ஆத்திரம் பார்ப்பனர்களை ஆட்டுகிறது.
சனாதனத்தை எதிர்த்துப் பேசினால், அவர்கள் இந்து மதத்திற்கு எதிராகப் பேசுவதாகக் கூறுகிறார்கள்; ஆன்மீகத்துக்கு எதிராகப் பேசுவதாகக் கூறுகிறார்கள்; மக்கள் வணங்கும் கடவுளர்களுக்கு எதிராகப் பேசுவதாக கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல! சனாதனத்தை எதிர்ப்பது என்பது பார்ப்பன ஏகபோகத்தை மறுப்பது என்று பொருள்; உயர்சாதி சர்வாதிகாரத்தை மறுப்பது என்று பொருள்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடி பிரிவினரைச் சேர்ந்த அத்தனை மக்களும் ஓரணியில் அணிதிரண்டு சனாதனத்தை எதிர்த்துப் போர் புரிய வேண்டும். இது காலத்தின் கட்டாயம்!
- பேராசிரியர் த.செயராமன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்