நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ‘ராமாயணம்’ யூடியூபால் நிரம்பி வழிந்தது முகநூல்.

தொ.பரமசிவம் ஐயா ‘அறியப்படாத தமிழகம்’ நூலில் சொல்லுவார், “என்னதான் கம்பராமாயணத்தைக் கொண்டாடுகிற மண் என்றாலும் தமிழர்கள் கிருஷ்ண வழிபாடு அளவுக்கு இராமனைக் கொண்டாடுவதில்லை”. ‘சாப்பாட்டு இராமன்’ போன்ற கேலிச் சொற்களை மேற்கோள் காட்டும் அவர், தமிழர்களின் கிருஷ்ண வழிபாட்டில் உள்ள நுட்பத்தைச் சொல்கிறார்.

கிருஷ்ணன் எளிய பின்புலம் கொண்ட, ஆசாபாசங்கள் நிறைந்த நம்முள் ஒருவராகத் தெரிகிற அதே நேரம், இராமன் அரச வாரிசு என்றும், இருவரது கதைகள் முன் வைக்கும் வாழ்வனுபவங்களையும் சுட்டிக்காட்டுகிறார். இராமாயணத்தில் கூட கம்பர், வால்மீகியை அப்படியே மொழிபெயர்க்காமல் பல இடங்களில் நம் அறம் சார்ந்து மாற்றி இருப்பதாக முன் வைக்கிறார். கம்பரே முயன்றாலும் அவர் தமிழ் தான் மனங்களை ஆள்கிறதேயன்றி இராமனால் தமிழ் நெஞ்சங்களை வெல்ல முடியவில்லை. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி முதல் பாரதி வரை கொண்டாடுவது கண்ணனைத்தான். அந்தப் படை எடுப்பின் நீட்சியாகவே இப்பொழுது வெளிவர இருக்கும் ராமாயணத்தையும் கருத வேண்டி இருக்கிறது.

தமிழ்ப் பழங்குடி இன அழகு, நடிப்பால், நடனத்தால் உள்ளம் கொள்ளை கொண்டவர் என்பதை பான்- இந்தியப் படமான ‘அமரன்’ மூலமாகவும் ‘சியாம் சிங்க ராய்’ மூலமாகவும் ஏற்கனவே நிறுவி காட்டியவர் சாய் பல்லவி. அதிக ஒப்பனைகள் தேவையின்றி ஒளிரும் அவரது இயல்பான அழகு வனவாச சீதைக்குத் தோரணை என்பதைத் தாண்டியும் இராமாயணத்தின் முக்கியப் பெண் பாத்திரமான, இரக்கத்துக்குரிய கதாபாத்திரத்துக்கு அவரைத் தேர்வு செய்வதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே சீதையைக் கடத்திவிட முடியும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். வட இந்திய இணைய வெளியெங்கும் சீதைக்கு சாய் பல்லவி சரியான தேர்வல்ல என்கிற பொருமல்களும் தென்பகுதியின் உற்சாக வரவேற்பும் அதிக அவதானிப்பு இன்றியே தெள்ளத்தெளிவாக விளங்குகின்றன.

மகுடம் வைத்தது போல இராவணனாக யஷ். கச்சிதமான தேர்வு! கருப்பு உடையில் கம்பீரமான இராவணனைக் கண்ட நொடி ஆர்ப்பரிக்கத் தொடங்கியது இராவணக்கூட்டம். கம்பீரமான மீசையும் தமிழ் அடையாளமுமாகத் திரையில் யஷ் தடம் பதிக்கும்போதெல்லாம் அதிரும் இணையவெளி. சீதையை இராவணன் சிறையெடுக்கும்போது தென்னிந்திய சனங்கள் விசிலடிப்பார்கள் எனப் பகடி செய்யும் வட இந்தியக் கேள்விப்பதிவுகளை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

ஏதேதோ வடிவில் இராமனை நுழைக்க முயன்றுவிட்டு, கொல்லைப்புறமாகத் தென்னிந்தியாவில் இராம வழிபாட்டை உள்நுழைக்கும் முயற்சியாகவே இதைக் காண வேண்டியிருக்கிறது. இனிப்பு தடவிய மாத்திரை போல என்பதை விட வைக்கோல் கன்றுக்குட்டியைக் காட்டிப் பால் கறப்பதைப் போல என்றால் சரியாக இருக்கும்.

கம்பீரமான திராவிட முகத்தை இராவணனாக முன்நிறுத்துவதன் மூலம் இராமாயணத்தை வெகுவாகக் கொண்டாடாத மண்ணில் ஏதேனும் ஒரு பாத்திரத்தை, அது அவர்களைப் பொருத்தவரை வில்லனாகவே இருந்தாலும் அவனாவது நாம் கொண்டாடுவதன் மூலம் நம்மை அந்தக் கதைக்குள் இழுக்க முயல்கிறார்கள். அந்தக் கதையையே கவனிக்க மறுக்கும் கூட்டத்தை, அவர்கள் முன்நிறுத்தும் இராமனைப் புறந்தள்ளி, இராவணனைக் கொண்டாடுவோம் என்கிற முடிவிலாவது அந்தக் கதைக்குள் ஒரு பாத்திரமாக நம்மை உணரச் செய்யும் அவர்களுடைய உத்தி கொஞ்சம் வேலை செய்வதாகவே தெரிகிறது. இது ஒரே தேசம், ஒரே வழிபாடு எனும் இடத்திற்கு நாளை அழைத்துச் செல்லும் அபாயம் இருக்கிறது?!

இராவணனைக் கொண்டாட நமக்கு எத்தனையோ வழிகள் இருக்கிறபோது அவர்கள் படத்தில் முன்வைக்கும் இராவணனை நாம் புறக்கணிக்க வேண்டியது அவசியமாகிறது.

- மைதிலி கஸ்தூரிரங்கன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.