அண்மைக்காலத்தில் சில ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்கள் விருப்பப்படி வரலாற்றைத் திரித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வர்ணாசிரமமும், சாதிப் படிநிலை அடுக்கும் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு தமிழ்நாட்டின் மீது நிறுவப்பட்ட பிறகுதான் ஏற்பட்டது என்றும், சோழர்கள் காலத்தில் அனைத்து மக்களும் சமநிலையில் வாழ்ந்தார்கள் என்றும், சோழர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் வர்ணாசிரமம் நிறுவப்படவில்லை என்றும், சோழர்கள் தமிழையே உயர்த்திப் பிடித்தார்கள் என்றும் எழுதுவதைக் காண முடிகிறது. அவர்கள் சான்றுகளின் அடிப்படையில் தான் இந்தக் கருத்துகளை முன்வைக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. தமிழ் மன்னர்களை உயர்த்திப் பிடிப்பதன் மூலம், தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்துவதாகக் கருதிக் கொள்கிறார்கள். சோழர்கள் காலத்திய சமூகக் கட்டமைப்பின் சாதிப் படிநிலைகளை, வர்ணாசிரமத்தின் அடிப்படையிலான வாழ்வியல் நெறிமுறைகளை மறுத்து, மறைத்து, சோழர்கள் காலத்தைப் புனிதப்படுத்துவதன் நோக்கம்தான் என்ன?

chozha periodவரலாற்றை வரலாறாகத்தான் பார்க்க வேண்டும். அதைத் தங்கள் விருப்பத்திற்கு, தங்கள் சாதிய அரசியலுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது.

சங்கக்காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் காலத்தில் தொடங்கிய பெருங்கோயில் பண்பாடு மற்றும் பெருநில உடைமைப் பொருளியல், அதற்குரியதான சுரண்டலுக்கான சமூகக் கட்டமைப்பை நிறுவிக் கொண்டது. இச்சுரண்டலை நிரந்தரப்படுத்தும் வகையில், கடவுளின் பெயராலும், சாஸ்திரங்களின் பெயராலும், சடங்குகளின் பெயராலும், பக்தியின் பெயராலும், விதியின் பெயராலும், உழைப்புச் சுரண்டலை மக்களை ஏற்கச் செய்கிற வேலையைப் பார்ப்பனர்களே செய்தார்கள்; அதற்கான வெகுமதியையும் அவர்கள் நிலவுடைமை வகுப்பிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பார்ப்பனர்களின் நலனை நிலவுடைமை வகுப்பும், நிலவுடைமை வகுப்பாரின் சுரண்டலை நிரந்தரப்படுத்தித் தரும் வேலையைப் பார்ப்பன வகுப்பும் பார்த்துக் கொண்டன. இடைக்கால வரலாற்றில், கோயில்கள் சமூகப் பொருளியல் பண்பாட்டு மையங்களாக உருப்பெற்றன. உடைமைப் பிரிவினருக்கும், உழைக்கும் பிரிவினருக்கும் கோயிலோடு தொடர்பு இருந்தது. நிலவுடைமையுமற்ற, வழிபாட்டுரிமையுமற்ற, உற்பத்தியோடு மட்டும் தொடர்புடைய உழைக்கும் மக்கள் முழுமையான சுரண்டலுக்கு, "விதி" என்ற பெயரிலும், "கடமை" என்ற பெயரிலும் உட்படுத்தப்பட்டனர். சோழர்கள் காலத்திய வரலாற்றுச் சான்றுகள் இதைத்தான் வெளிப்படுத்துகின்றன.

சோழ மன்னர்களைப் போற்றுவது தங்கள் அரசியல் கடமையா?

சோழ மன்னர்களையும், சோழர் காலத்துச் சமூகத்தைப் போற்றுவதும் புகழ்வதும் தமிழர்களின் கடமை என்று கருதுவது அறியாமை. அப்படிச் சிலர் கற்பித்து வருகிறார்கள். சோழர் காலமாக இருந்தால் என்ன? விஜயநகரப் பேரரசு காலமாக இருந்தால் என்ன? ஆண்டவன் பெயராலும், அரசதிகாரத்தின் பெயராலும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை நிறைந்த சமூகக் கட்டமைப்பை அப்பட்டமாக ஆய்வு செய்வதும், பேசுவதும் வரலாற்றாளர்களின் கடமை. சோழர் காலத்துச் சமூகக் கட்டமைப்பு எப்படிச் சாமானிய மக்களை வருத்தியதோ, அதுபோன்றே விஜயநகரப் பேரரசு காலத்தில் கெட்டிப்பட்டுப்போன படிநிலை சாதியச் சமூகம் அனைத்துச் சமூகப் பிரிவுகளுக்கும் உழைப்புச் சுரண்டலையும், துயரத்தையும் கூடுதலாக உத்தரவாதப்படுத்தியது. இதில் ஒரு காலகட்டத்தைப் போற்றுவது, இன்னோர் காலகட்டத்தைத் தூற்றுவது என்ற போக்குக்கே இடமில்லை. ஒவ்வொரு வரலாற்றுக் கட்டமும் எப்படி இருந்ததோ அதை அப்படியே, துல்லியமாக, மறைக்காமல், சார்புத் தன்மையற்று, சான்றுகளின் அடிப்படையில் பேசுவதுதான் நேர்மை. இப்போது சோழர்கள் காலத்துச் சமூகநிலையையும் அரசுமுறையையும் பற்றி நம் கவனத்தைத் திருப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தொல். திருமாவளவன் பேசியதில் என்ன தவறு?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், சென்னை கொளத்தூரில், தழல் ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் (29.1.2026) நிகழ்வில் பேசும்போது:

"சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாத மன்னர்களாக இருந்தாலும், தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அவர்களின் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது."

"எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. எவனையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சமஸ்கிருத மயமானது, இந்துத்துவ மயமானது.

கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீச்பாடை பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள், பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில்தான். வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ்ப் பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களைத் தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக் கொண்டார்கள். இராஜராஜன் என்பது தமிழ்ப் பெயரா? இராஜேந்திரன் என்பது தமிழ்ப் பெயரா? எல்லோரும் வடமொழிப் பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள். வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாத மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்தவன் நான். எனவே எனக்கு ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை. அதில் உடன்பாடும் இல்லை. வெறும் மொழிப்பற்று எனக்குக் கிடையாது. வெறும் இனப்பற்று, இன உணர்வு எனக்குத் தேவையில்லை என்று கருதக்கூடியவன் நான். அதுதான் பெரியாரின் பார்வை. சாதியை ஒழிக்காமல் இங்கே சமத்துவத்தை நிலைநாட்ட முடியாது என உறுதியாக நின்றவர் தந்தை பெரியார்" என்று பேசினார்.

தமிழ் மன்னர்கள் மீதும் அந்தக் காலகட்டத்தின் மீதும் தொல். திருமாவளவன் அவர்கள் வைத்த விமர்சனம் ஆய்வின் அடிப்படையில் சரியாக இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்; அவருடைய கருத்துக்கு எதிர்வினை ஆற்றுகிறவர்கள் ஆய்வின் அடிப்படையில் எதிர்வினை ஆற்ற வேண்டும். ஆனால் இதற்கு எதிர்வினை ஆற்றுகிறவர்கள் இராஜராஜ சோழனையும், இராஜேந்திர சோழனையும் யாராவது குறை கூறிவிட்டால், அவர்கள் தமிழினத்திற்கே எதிரிகள் என்ற கோணத்தில் விமர்சனங்களை அள்ளி வீசுவது ஏற்க முடியாத ஒன்று.

தொல். திருமாவளவன் அவர்களின் பேச்சுக்கு ஐயா பெ. மணியரசன் ஆற்றியிருக்கும் எதிர்வினை திகைக்க வைக்கிறது.

"சிங்கள புத்தத்திற்குத் தமிழர்களை மாற்றத் தமிழ் மன்னர்களையெல்லாம் தாக்குகிறார் திருமாவளவன்!" என்கிறார்.

பேரரசன் இராஜராஜன், இராஜேந்திரன் காலத்திய சமூகப் போக்கை ஒருவர் விமர்சனம் செய்தால் அவர் புத்த மதத்தைப் பரப்ப முயற்சிக்கிறார் என்றா பொருள்?

திருமாவளவன் என்ன மதப் பிரசங்கம்தான் செய்து கொண்டிருக்கிறாரா? புத்தத்திற்கு மதம் மாற்றுவதைத்தான் அவர் தன் வேலையாக ஏற்றுக் கொண்டிருக்கிறாரா? அவருடைய உரை மக்களை மதம் மாற்றுவதற்கான உரையா? கடந்த பல்லவர் கால, சோழர் கால, பாண்டியர் காலச் சமூக அரசியல் நிலைகள் பற்றிய கடுமையான விமர்சனம் அவருடையது. ஐயா மணியரசன் சான்றுகளின் அடிப்படையில் அவருடைய விமர்சனத்தை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், எவ்வகைத் தொடர்பும் இல்லாமல், தொல். திருமாவளவன் மீது அபத்தமான ஒரு குற்றச்சாட்டை வைப்பது எல்லோரையும் திகைக்க வைக்கிறது.

அதுமட்டுமின்றி, ஐயா மணியரசன்: "தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் திருமாவளவன் இழிவுபடுத்தி விட்டார்" - என்கிறார். தொல். திருமாவளவன் உரையில் தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் இழிவுபடுத்தக்கூடிய ஒற்றைச் சொல் கூட இல்லையே! ஆனாலும் அப்படி ஒரு குற்றச்சாட்டை ஐயா மணியரசன் வைக்கிறார்.

அதுமட்டுமின்றி, தொல். திருமாவளவன் அவர்களை எதிர்த்துச் சாதிகளையெல்லாம் அணிசேர்க்கை செய்கிறார். "தமிழ் மொழியை - தமிழ் இனத்தை இழிவுபடுத்தினால் தமிழர்கள் - கட்சி வேறுபாடின்றி - சாதி வேறுபாடின்றி எதிர்ப்போம்!" என்கிறார்.

ஐயா மணியரசன் மேலும் கூறுகிறார்:

"தமிழ் மன்னர்களைத் தாக்குவதற்காக, சூழ்ச்சியாகத் தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்கள், சமஸ்கிருதத்தில் - பெயர் வைத்துக் கொண்டார்கள் என்று தந்திரமாகப் பேசுகிறார் - திருமா. தமிழர்களே விழிப்போடிருங்கள்!" என்கிறார்.

தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்தை அனுமதிக்கவில்லையா? சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துக் கொள்ளவில்லையா? தங்கள் நிர்வாகத்தில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தவில்லையா? சோழ, பாண்டிய மன்னர்கள் வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு நாம் சான்றுகளின் அடிப்படையில் பேச வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர்களும் தொல். திருமாவளவனைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்கள். திரு. அண்ணாமலை மாபெரும் மன்னர்களைத் தொல். திருமாவளவன் அவதூறாகப் பேசுவதாகக் கூறுகிறார். அதாவது, அவர்களெல்லாம் மாபெரும் மன்னர்கள், பெரிய மனிதர்களைக் கண்டித்துப் பேசக்கூடாது என்பது அவர் பார்வை.

தொல். திருமாவளவனைக் கண்டித்துப் பேசியவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் அனைவருமே சாதிய உணர்வாளர்களாகவும், பார்ப்பன ஆதரவாளர்களாகவும், இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

திரு. தொல். திருமாவளவன் "தமிழ் மன்னர்களைத் திட்டமிட்டே தாக்குகிறார்" என்று ஐயா மணியரசன் கூறுகிறார்.

"தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்கள், சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்று கூறுவது, சூழ்ச்சியாக, - தந்திரமாகப் பேசுவது" என்று ஐயா மணியரசன் கூறுகிறார்.

திருமாவளவன் கூறியது சான்றுகளின் அடிப்படையில் தவறு என்றுதான் நிரூபிக்க வேண்டுமேயொழிய, அவர் சூழ்ச்சி செய்கிறார் என்றெல்லாம் பேசக்கூடாது.

சோழ மன்னர்கள் சமஸ்கிருத பெயர்களைச் சூடவில்லையா? இராஜராஜன், இராஜேந்திரன் என்பவை தமிழ்ப் பெயர்களா? என்று திருமாவளவன் கேட்டதற்கு விடையாக சிலர், அருள்மொழி என்பது இராஜராஜனின் இயற்பெயர்; மதுராந்தகன் என்பது இராஜேந்திரனின் இயற்பெயர் என்று பதில் அளித்திருக்கிறார்கள். இராஜராஜ சோழன் அருள்மொழி தேவன் என்றும் அருள்மொழிவர்மன் என்றும் வரலாற்றில் அறியப்படுகிறான். இதில் தேவன் என்பது தமிழ்ச் சொல்லா? வர்மன் என்பது தமிழ்ச் சொல்லா? வர்ணாசிரமத்தில் இரண்டாம் நிலையில் இருக்கும் சத்திரியர்களின் பட்டப் பெயர்தான் வர்மன் என்பது. இராஜேந்திரன் என்பது தமிழா என்ற கேள்விக்கு பதிலாக, அவருடைய இயற்பெயர் மதுராந்தகன் என்று கூறுகிறார்கள். மதுராந்தகன் என்பது தமிழா? மதுரம் என்ற சொல் தமிழா? மதுராந்தகன் என்ற சொல்லுக்கும் மதுரை நகருக்கும் தொடர்பு இல்லை. இராஜராஜன் சூடிக்கொண்ட அத்தனைப் பட்டப் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்கள்தான்.

சமீபகாலத்தில் பலர் ஆய்வு என்ற பெயரில் சோழர்கள் காலத்தில் சாதிமுறையே கிடையாது என்றும், சோழர்கள் காலத்தில் வர்ணாசிரமம் கிடையாது என்றும், சோழர்களால் சமஸ்கிருதம் ஆதரிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து எழுதி வருவதன் உண்மைத் தன்மையை நாம் ஆய்வு செய்தாக வேண்டும்.

பேரரசன் முதலாம் இராஜராஜன் (கி.பி. 985-1014) காலத்தில் வர்ணாசிரமம் சோழப் பேரரசில் ஏற்கப்பட்டதா?

ஏற்கப்பட்டது என்பதே உண்மை. சோழ மன்னர்கள் மனுநெறி காப்பதில் மகிழ்ச்சி கொண்டார்கள். சமஸ்கிருதத்திற்கு கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் முதலிடம் தந்தார்கள். தமிழைக் கற்பிக்க கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அவர்கள் உருவாக்கிய பெரிய கல்வி நிலையங்கள் எல்லாம் சமஸ்கிருதமே கற்பித்தன. மாணவர்களும் ஆசிரியர்களும் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். பிரமிக்க வைக்கும் பெரும் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. முதலாம் இராஜராஜன் ஏற்ற பட்டங்களில் ஒன்று 'சத்திரிய சிகாமணி'. இது சமஸ்கிருதப் பட்டம்தான். இதன் பொருள் சத்திரிய குலத்தின் தலைசிறந்த இரத்தினம் என்பதுதான். சத்திரிய சிகாமணி என்ற சொல் சோழ மன்னர்கள் வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதற்கான சான்று. 'சத்திரிய சிகாமணி வளநாடு' என்று ஒரு நிர்வாகப் பிரிவு அப்போது இருந்தது. இன்றைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் ஆகியவை சத்திரிய சிகாமணி வளநாட்டில் அடங்கும். தஞ்சைப் பெரிய கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் பீடப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ள நீண்ட கல்வெட்டில் இதற்குச் சான்றுள்ளது. (தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி : 2, பகுதி 1, எண் 69).

இராஜராஜ சோழனின் தளபதி பஞ்சவன் மாராயன் என்பவன் கொங்கு பகுதியில் பெற்ற வெற்றிக்காக "சத்திரிய சிகாமணி கொங்காள்வான்" என்ற பட்டத்தை இராஜராஜ சோழன் வழங்கினான். தஞ்சைப் பெரிய கோயில் வடக்குச் சுவரில் இதற்கான சான்று கல்வெட்டாக உள்ளது (தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி 2, பகுதி 3, எண் 66).

முதலாம் இராஜராஜனின் மற்றொரு பட்டப்பெயர் "சத்திரிய சூடாமணி". இது ஆனைமங்கலம் செப்பேட்டில் சமஸ்கிருதப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Larger Leiden Plates of Rajaraja I, Epigraphia Indica, vol. 22 , No.34, pp. 213 -236.)

மேலும், ஆனைமங்கலம் "சத்திரிய சூடாமணி வளநாடு" என்ற நிர்வாகப் பகுதிக்குள் இருந்ததை ஆனைமங்கலம் செப்பேடு கூறுகிறது.

முதலாம் இராஜேந்திர சோழன் கி.பி 1020-இல் அவனுடைய எட்டாவது ஆட்சி ஆண்டில் வெளியிட்ட கரந்தைச் செப்பேட்டில் "சத்திரிய சிங்கன்" என்று குறிப்பிடப்படுகிறான். அவன் தனது பெயரால் "சத்திரிய சிங்க வளநாடு" என்ற நிர்வாகப் பிரிவையும் ஏற்படுத்தியிருந்தான். (The Karandai Tamil Sangam Plates of Rajendra Chola I , Memoirs of the Archaeological Survey of India (MASI), No.79, Ed. K.V. Subrahmanya Aiyer, 1949).

முதலாம் இராஜராஜ சோழனின் இன்னொரு பட்டப்பெயர் "சத்திரிய பயங்கரன்". இவர் பெயரால், "சத்திரிய பயங்கர வளநாடு" என்ற ஒரு நிர்வாகப் பகுதி இருந்தது. (தென்னிந்திய கல்வெட்டு தொகுதி 2, பகுதி 1, கல்வெட்டு எண் 1).

இராஜராஜ சோழனின் தனிப்பட்ட பாதுகாவலர் படைகளுள் ஒன்று "சத்திரிய சிகாமணி தெரிஞ்ச வலங்கை வேலைக்காரர்" என்ற பெயரில் இருந்தது. தஞ்சைப் பெரிய கோயில் தெற்குச் சுவர் கல்வெட்டு (தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி : 2, பகுதி : 1, கல்வெட்டு எண் 1 & 66).

அன்பில் செப்பேடு என்பது சுந்தர சோழன் என்ற இரண்டாம் பராந்தகன் காலத்தில் நான்காவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 957) வெளியிடப்பட்டது. இது சோழ மன்னர்களின் வம்சாவளி குறித்துப் பேசுகிறது. பிரம்மன், மனு ஆகியோர் வழிவந்தவர்கள் சோழர்கள் என்றும், சுந்தரச் சோழன் "சத்திரிய சூடாமணி" என்றும் புகழப்படுகிறான்.

அன்பில் செப்பேட்டில் சமஸ்கிருதப் பகுதியான பிரசஸ்தியை கவிஞர் நாராயணன் மற்றும் பிற்பகுதியை (தமிழில்) மாதவபட்டன் ஆகியோர் எழுதினர். இந்தச் செப்பேடுகளைப் பார்ப்பனர்களே எழுதினார்கள். சுந்தரச் சோழனின் அமைச்சர் அனிருத்த பிரம்மராயருக்கு மயிலாடுதுறை அருகே கருணாகரமங்கலம் என்ற ஊரைத் தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு ஆவணப்படுத்துகிறது. அனிருத்தருக்கு "பிரம்மாதிராஜன்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தச் செப்பேடு, திருமால் உந்தியிலிருந்து பிரம்மனும், அதை எடுத்து மரீசி, காசிபர், மனு, சிபி, பகீரதன் போன்றோர் வழிவந்தனர் என்றும், அந்த வழியில் சோழர்கள் பிறப்பெடுத்தார்கள் என்றும் குறிப்பிடுகிறது. சமஸ்கிருதம், தமிழ் என்ற இரண்டு மொழிகளில் இந்தச் செப்பேடுகள் அமைந்துள்ளன. (Epigraphia Indica, Volume XV, பக். 58-72. பதிப்பாசிரியர்: டி. ஏ. கோபிநாத ராவ்).

அன்பில் செப்பேடு, திருவாலங்காடு செப்பேடு ஆகியவை சோழர் குலத்திற்கு ஆரிய புராணங்களில் தோற்றத்தைத் தேடுகின்றன. இவர்களுடைய காலத்தில் மனு தர்மம் பேணப்பட்டது என்பதில் சந்தேகமில்லை; சமஸ்கிருதம் உயர்நிலையில் போற்றப்பட்டது என்பதிலும் சந்தேகமில்லை.

கரந்தைச் செப்பேடு முதலாம் இராஜேந்திர சோழனின் (கி.பி. 1012-1044) எட்டாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது. இதில் 55 ஏடுகள் உள்ளன. இது சோழர்களைச் சூரிய வம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்கள் என்று குறிப்பிடுகிறது. சமஸ்கிருதப் பகுதிக்கான ஆங்கில மொழியாக்கத்தை மேற்கோளாகக் காட்டினால், முதலாம் இராஜேந்திர சோழனை:

"He was the Crest-jewel (Shikhamani) of the Kshatriya race, a sun to the darkness of his enemies, and a kalpa-tree to those who sought refuge in him."

என்று புகழ்ந்து குறிப்பிடுகிறது. (Karanthai Tamil Sangam Copper Plate Inscriptions of Rajendra Chola I., Edited by K.G. Krishnan, Archaeological Survey of India (Memoirs of the ASI, No. 79); SII, Vol.25, No.57-58)

இவ்வாறு சோழர்கள் தங்களைச் சத்திரியர்களாக அடையாளப்படுத்திக் கொள்வது என்பதன் பொருள் என்ன? வர்ணாசிரம முறையை ஏற்றுக் கொண்டதற்கான அடையாளம் இதுவாகும்.

முதலாம் இராஜராஜ சோழன் "சத்திரிய சிகாமணி" என்ற பட்டத்தை ஏற்றியிருந்தான். அவனுடைய பெயரில் ஒரு வளநாடு விளங்கியது. இராஜராஜனின் 29-ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1014) தஞ்சைப் பெரிய கோயிலில் வெட்டிய கல்வெட்டு "சத்திரிய சிகாமணி வளநாட்டு மருங்கல் நாட்டு இடையன்..." என்று குறிப்பிடுகிறது. (South Indian Inscriptions - SII, Vol. 2, No. 92).

முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடுகள் (கி.பி 1018-19) சுந்தரச் சோழரை "சத்திரிய சூடாமணி" என்று குறிப்பிடுகிறது. சத்திரிய சூடாமணி என்பதன் தமிழாக்கமாக "சத்திரியர் தலைமணி வளநாடு" என்ற பெயரில் நிர்வாகப் பகுதி ஒன்று இருந்தது. நாகை, திருவாரூர், கீழ்வேளூர், தேவூர் ஆகிய பகுதிகள் இதில் அடங்கியிருந்தன. (South Indian Inscriptions (SII), Volume III, Part III, Section 2 (The Tiruvalangadu Copper-Plates, slokas 61 and 62)

இராஜராஜ சோழன் தனது தந்தையின் நினைவாக 'சத்திரிய சூடாமணி மங்கலம்' என்ற ஊரை உருவாக்கினான். இதனால் சில நேரங்களில் இந்தப் பட்டம் இராஜராஜனுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது. ஆனால், செப்பேட்டுச் சான்றுகளின்படி, இது இராஜராஜனின் தந்தை சுந்தரச் சோழரையே குறிக்கிறது.

திருவாரூர் தியாகராசர் கோயில் கல்வெட்டுகளில் "சத்திரிய சூடாமணி வளநாட்டுத் திருவாரூர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி 2, கல்வெட்டு எண் 67).

இராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டில் "சத்திரிய சிங்க வளநாடு" என்று ஒரு நிர்வாகப் பகுதி குறிப்பிடப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, அரியலூர் மாவட்டப் பகுதிகள் இதில் அடங்கும். (தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 2, கல்வெட்டு எண் 92).

இந்தக் கல்வெட்டுகளில் இருந்து ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளலாம். வர்ணாசிரம அடிப்படையில் நாடு இயங்கியது. சமூகத்தின் நான்காவது வர்ணம் அந்தந்தச் சாதிப் பெயர்களிலேயே அடையாளப்படுத்தப்பட்டது. சோழர்கள் பிரம்மதேயங்களைப் பார்ப்பனர்களுக்கு வழங்கினார்கள். வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் அளிக்கப்பட்டன. சமூகத்தில் பார்ப்பனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. சோழர்கள் ஒரு காலத்திலும் வர்ணாசிரம முறையை மாற்ற முற்படவில்லை.

முதலாம் குலோத்துங்க (கி.பி. 1070-1120) சோழனின் "...மனுநெறி தழைப்ப நால்வகை வர்ணமுந் தத்தம் நிலைமையில் நிற்ப..." என்று பேசும் மெய்க்கீர்த்தி "புகழ் மாது விளங்க..." என்று தொடங்குகிறது.

முதலாம் இராஜராஜனின் 29-வது ஆட்சியாண்டில் (கி.பி 1014) வெட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டில் "...சத்திரிய சிகாமணி வளநாட்டு மருங்கல் நாட்டு இடையன்..." என்று குறிப்பிடுகிறது.

முதலாம் இராஜராஜன் "சத்திரிய சிகாமணி" என்று பல கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறான். (தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி : 2, கல்வெட்டுகள்: 1, 4, 5, 9)

மற்றொரு கல்வெட்டில் இராஜராஜ சோழன் பெயரில் அமைந்துள்ள வளநாடு "சத்திரிய சிம்ம வளநாடு..." என்று குறிப்பிடப்படுகிறது. (தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி : 2, எண் 66, 94.)

முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேட்டில், தமிழ்ப் பகுதியில் "...மனுநெறி தழைப்ப சதுர்வேத நெறி வளர..." என்று வருகிறது. (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி : 3, திருவாலங்காடு செப்பேடுகள்). முதலாம் இராஜேந்திர சோழன் வர்ணாசிரம தர்மத்தை ரட்சித்தவன், பாதுகாத்தவன் என்று இக்கல்வெட்டு புகழாரம் சூட்டுகிறது.

திருவாரூர் தியாகராசர் கோயிலில் உள்ள இரண்டாம் இராஜராஜனின் 15-வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட, "பூமருவிய பொழிலேழும்..." என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியில், வர்ணாசிரம பாதுகாப்பு குறித்த சான்று உள்ளது.

"மனுநெறி தழைப்பச் சதுர்வேத நெறி வளர" "வர்ணாச்சிரமந் தழைப்பத் தர்மஞ் செழிக்க..." என்று வருகிறது. நான்கு வருணங்களையும், நான்கு ஆச்சிரமங்களையும் (பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகியவை) பாதுகாத்தான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி : 8, எண் : 163)

முதலாம் இராஜராஜ சோழன் தன் 29-வது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1014), தஞ்சைப் பெரிய கோயில் தெற்குப் புறச் சுவரில் வெட்டுவித்த கல்வெட்டில் நிர்வாகப் பிரிவுகளான ஒன்பது வளநாடுகளின் பெயர்களையும் குறிப்பிடுகிறான். இதில் நிர்வாகப் பிரிவான "சத்திரிய சிம்ம வளநாடு" என்பதும் குறிப்பிடப்படுகிறது. இதில் இராஜராஜன் கோயிலுக்கு நேரடியாக வழங்கிய நிலக் கொடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முதலாம் இராஜேந்திர சோழனின் 31-வது ஆட்சி ஆண்டில் திருவாலங்காடு செப்பேடுகள் வெளியிடப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்குப் பழையனூர் என்ற கிராமத்தை தேவதானமாக வழங்கியதையே திருவாலங்காடு செப்பேடு குறிப்பிடுகிறது. இந்தச் செப்பேட்டில் சோழ வம்சத்தின் வம்சாவளி விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. சோழ வம்சாவளியைப் புராணப் பின்னணியில் சமஸ்கிருதப் பகுதி விரிவாக விவரிக்கிறது. சோழர்கள் சூரிய வம்சத்தினரும், சூரியனிலிருந்து மனு, அதன் பிறகு இக்ஷ்வாகு, சிபிச் சக்கரவர்த்தி, காவேரி கண்டன், கரிகால் சோழன், கோச்செங்கணான் போன்றோர் வழியில் சோழர்கள் வந்ததாகவும் குறிப்பிடுகிறது. (விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை குறிப்பிடுகிறபடி, வைவஸ்வத மனுவின் மகன் மனு ஆவார். புராணங்கள் கூறுகிறபடி, நீண்ட காலம் குழந்தைகள் இல்லாமல் இருந்த மனு ஒரு தும்மல் போட்டதில் இக்ஷ்வாகு பிறந்தார். இவர் அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆளத் தொடங்கினார். இவரே அயோத்தியின் முதல் மன்னர். மனுதர்மத்தைப் பூமியில் முறையாக அமல்படுத்திய முதல் அரசர். வால்மீகி இராமாயணத்தில் வரும் இராமரும் இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவர்.) அந்த இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த சிபி சக்கரவர்த்தி போன்றோரை இராஜேந்திர சோழனின் முன்னோர்களாக இது குறிப்பிடுகிறது. சோழர்கள் மரபுக்குப் புராண அடிப்படையில் பிறப்பு, தெய்வீகத் தன்மை போன்றவற்றைக் கற்பிக்கிறது.

வடமொழிப் பகுதியில் 69 மற்றும் 70-ஆவது சுலோகங்களின் பகுதிகளில் இராஜேந்திர சோழனின் ஆட்சித் திறனைப் பற்றிக் கூறும்போது: உலகில் கலியுகத்தினால் ஏற்படும் குழப்பங்களை நீக்கி, நான்கு வருணங்களையும் அவற்றிற்குரிய கடமைகளில் நிலைநிறுத்தி வர்ணாசிரம தர்மம் தவறாமல் காத்தவன் என்று திருவாலங்காடு செப்பேடு பதிவு செய்கிறது.

இது இராஜராஜ சோழனின் மகன் பற்றியது; இராஜராஜ சோழனின் தந்தையாகிய சுந்தரச் சோழனைப் பற்றியும் திருவாலங்காடு செப்பேடு இப்படிச் சொல்கிறது: (வடமொழிப் பகுதியில் 57-வது சுலோகத்தில்) "கலியுகத்தின் தாக்கத்தால் தளர்ந்து போன தனது சட்டங்களை மனுநீதி மீண்டும் நிலைநாட்டுவதற்காக மனுவே இந்த மன்னன் உருவில் மீண்டும் பூமிக்கு வந்திருப்பதாக மக்கள் நம்பினர்." (Verse 57: "The mass of people believe this king to be Manu, who, out of Love for the (good) conduct which was set forth by himself, has come to the earth once again to establish his law which had become lax under the influence of the Kali (age).")

சமுதாய அடுக்கைக் குறிக்கும் போது நான்கு வர்ணங்களும் (சதுர்வர்ணங்கள்) தத்தம் தர்மங்களைப் பின்பற்றி வாழ்ந்ததாகச் செப்பேட்டின் சமஸ்கிருத மெய்க்கீர்த்திப் பகுதி குறிப்பிடுகிறது. நான்காவது வர்ணத்தைக் குறிக்கச் சதுர்த்த வருணம் என்று சமஸ்கிருத பகுதி குறிக்கிறது. ஆனால் தமிழ்ப் பகுதியில் வேளாளர் என்று வருகிறது.

சங்ககாலத்தில் இருந்தே ஆரியத்துக்கு அடிமைப்பட்ட மன்னர்கள் இருந்து வந்திருக்கின்றனர். இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, மனுநீதிச் சோழன் என்ற பெயர்கள் தமிழ் மன்னர்களின் ஆரிய அடிமைத்தனத்தைக் காட்டவில்லையா?

இடைக்காலத்தில் கலிங்கத்துப் பரணி:

"மனுவினுக்கு மும்முடி நான் மடியாஞ்சோழன்..." என்று கூறுகிறது.

"தருமநெறி நிற்ப மனுநெறி நடத்திய கோவிராசகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ இராஜ மகேந்திரதேவர்" என்ற கல்வெட்டு வரிகள் இரண்டாம் இராஜேந்திர சோழனின் தம்பியான இராஜ மகேந்திரன் என்பவன் மனுநீதி போற்றியதைப் பதிவு செய்கிறது.

முதலாம் குலோத்துங்கன் "மனு குல தீபன்" என்ற சிறப்புப் பெயரை எடுத்துக்கொண்டான். அவனுடைய ஒரு மெய்க்கீர்த்தி இவ்வாறு புகழ்கிறது: "...மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச் செங்கோல் திசைதொறுஞ் செல்ல..."

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் இந்த மன்னர்கள் எப்படி ஆரிய அடிமைகளாக இருந்தார்கள், எப்படி மனுதர்மத்தை நிலைநிறுத்தினார்கள் என்பதைப் பதிவு செய்கிறது.

இரண்டாம் குலோத்துங்கனுடைய மெய்க்கீர்த்தியில், "மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க மாதவர் தவமும் மங்கையர் கற்பும் ஆதி அந்தண ராகுதி கனலு மீதெழு கொண்டல் வீசுதண் புனலு மேனினி வளருஞ் சாதி ஒழுக்கமும் நீதி அறமும் பிறழாது நிகழப் பாவம் பழனப் பரப்பும பனைக்கை மாவு மல்லது வன்றளைப்படுதல்..." என்று புகழப்படுகிறான்.

அதாவது, இரண்டாம் குலோத்துங்கன் மனுதர்மம் விளங்கச் செய்தானாம்; சாதி ஒழுக்கத்தைக் காத்தானாம்.

இரண்டாம் இராஜராஜ சோழன் மெய்க்கீர்த்தியில்,

"...அரு மறை விதிநெறி யனைத்துந்தழைப்ப வருமுறை யுரிமையில் மணிமுடி சூடி திங்கள் வெண்கொடை திசைக்களிரட்டி..." என்று புகழப்படுகிறான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் மறைநெறி நிலைநிறுத்தப்பட்டது.

இரண்டாம் இராஜாதிராஜ சோழனது மெய்க்கீர்த்தியில், "சமய ஆறும்தலைஎடுப்பத் தருமமும் மருமறையு மோங்கி அமைவில்லா மனுவொழுக்க மாதியாம்படி நிலை நிற்க..." என்று பேசப்பட்டுள்ளது. ஆறுவகைச் சமயமும், வர்ணாசிரம தர்மம், மறைகளும், மனுநீதி வரையறுத்த ஒழுக்கமும் வளர்க்கப்பட்டதாகப் பதிவு செய்கிறது.

மூன்றாம் குலோத்துங்க சோழனது மெய்க்கீர்த்தி, "...புயல் பெருக வளம் பெருகப் பொய்யாத நான்மறையின் செயில் வாய்ப்பத் திருமகளும் சயமகளும் சிறந்து வாழ..." என்று நான்மறை ஆதிக்கம் செலுத்தியதைப் பதிவு செய்கிறது.

மூன்றாம் இராஜராஜ சோழனது மெய்க்கீர்த்தி, "....ஒப்பறிய மறை நூலும் உரைதிறம்பா மனு நூலுங் செப்பரிய வடகலையும், தென்கலையுந் தலையெடுப்ப நீதிதரு குலநான்கும் நிலை நான்கு நிலைநிற்ப ஆதியுகங் குடிபுகுத அறுசமயம் தழைத்தோங்க..." என்று பேசுகிறது.

இவனுடைய ஆட்சியில், வேதங்கள் சிறப்பிக்கப்பட்டதையும், மனுநூல் பின்பற்றப்பட்டதையும், வடகலையும் தென்கலையும் செழித்ததையும், மனு சாஸ்திரம் வகுத்துத் தந்த நான்கு வர்ணங்களும் நிலைநிறுத்தப்பட்டதையும், ஆறு வகைச் சமயங்கள் தழைத்தோங்கியதையும் பதிவு செய்கிறது.

மூன்றாம் இராஜேந்திர சோழனது மெய்க்கீர்த்தி "...வீரராட்சசன் எனப் போற்றப்படுபவனும், லங்காராமன் என்னும் பெயருடையானும், மனுக் குலத்தை உயர்த்தியவனும்..." என்று தொடர்கிறது.

இந்தப் பதிவுகள் அனைத்தும் சோழ அரசர்கள் மனுதர்மத்தைக் கடைப்பிடித்தனர் என்பதையும், நாட்டில் நடைமுறைப்படுத்தினர் என்பதையும் தெளிவாகப் பதிவு செய்கின்றன.

இந்தச் சோழ மன்னர்கள் காலத்தில் பார்ப்பனர்களுக்கு ஏராளமான பிரம்மதேயங்களை வழங்கியதும், அவர்களுடைய நலன் பாதுகாக்கப்பட்டதும், சமூகத்தில் சாதிகளும், சாதி அடிப்படையில் படிநிலைத் தகுதிகளும் உருவாக்கம் பெற்றதும், அடிமை முறை விரிவாக்கம் பெற்றதும், சாதி அடிப்படையில் இழிவுகளும், துயரங்களும் எளிய மக்கள் மீது சுமத்தப்பட்டதும் சோழர்கள் கால வரலாற்றின் மறைக்க முடியாத ஒரு கூறுதான்.

சோழர்கள் காலத்தில் வர்ணாசிரம முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது என்பதற்கு ஏராளமான கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் சான்றுகள் இருக்கின்றன. இந்நிலையில் சோழர்கள் காலத்தில் வர்ணாசிரம முறையே கிடையாது என்றும், ஏற்றத்தாழ்வு என்பதே கிடையாது என்றும் எழுதுவது அப்பட்டமான பொய்யல்லவா? ஒரு நிலவுடைமை காலகட்டத்தின் அத்தனை சமூக ஒடுக்குமுறைகளும் துயரங்களும் சோழர்கள் காலத்திலும் இருந்தன; அதற்குப் பிறகும் அவை தொடர்ந்தன. சோழர்கள் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன; வேளாண்மைத் தகவமைப்புகள் உருவாக்கப்பட்டன; பல நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன. ஆனால் அதே நேரம் மக்களில் ஒரு பகுதியினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டனர் என்ற நிலையும் இருந்தது. உடன்கட்டை ஏறும் பழக்கமும் இருந்தது. பெண்களை அடிமைகளாகக் கோயில்களுக்கும் பெருமக்களுக்கும் விற்கும் பழக்கம் இருந்தது. இவை கடந்த கால உயர்வும் துயரங்களும்.

இந்நிலையில், சோழர்கள் தமிழ் மன்னர்கள் என்று கூறி, அதை பொற்காலம் எனப் போற்றுவதும், அதைத் தங்கள் அடையாளமாக முன்னிறுத்துவதும் மிகவும் பிற்போக்குத்தனமானது. சோழ மன்னர்கள் தங்கள் சாதிக்காரர்கள் என்று எந்த அடிப்படையுமின்றி சில சாதிகள் சொந்தம் கொண்டாடுவதும், தாங்கள் ஆண்ட சாதிகள் என்று பெருமை பேசுவதும், சாதி உணர்வை விசிறிவிடுவதும், பிற சாதிகளை அடக்கி ஆள முற்படுவதும், நாம் அடைந்து விட்டதாகக் கருதும் ஜனநாயக அரசு முறையையும், ஜனநாயகச் சிந்தனையையும் கேலி செய்வதாகும்.

தமிழ்த் தேசிய இனத்தின் பொற்காலம் எதிர்காலத்தில் இருக்கிறது; கடந்த காலத்தில் இருந்ததாகக் கற்பனை செய்து கொண்டு மயங்கக் கூடாது.

பேராசிரியர் த.செயராமன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.