சங்ககாலப் பாண்டியர்களில் நிலந்தருதிருவிற் பாண்டியன் எனும் நெடியோனும் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு), பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியும் (கி.மு. 320 - 290) தலைசிறந்தவர்கள். அவர்களுக்கு இணையாகப் புகழ்பெற்றவன் இந்த நெடுஞ்செழியன். இவனை 11 புலவர்கள் பாடியுள்ளனர். இவனது வேந்தர் ஆட்சிக் காலம் கி.மு. 185–165.

pandiya kingஇவன் இரண்டாம் கரிகாலனின் சமகாலத்தவன் (கி.மு. 190–170). இவனுக்குப் பிறகு தான் பாண்டியர்கள் வலிமை மிக்கவர்களாக ஆனார்கள். இவன் ஒரு கவிஞனாகவும் இருந்தான். இவன் இவனது புலவர் அவையின் தலைவராக இருந்த மாங்குடி மருதனார் குறித்து புறம் 72ஆம் பாடலில் பாடியுள்ளான்.

அவர் இவன் குறித்து பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியைப் பாடியுள்ளார். நக்கீரர் இவன் குறித்து பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையைப் பாடியுள்ளார். இவன் இளவயதிலேயே தலையாலங் கானத்துப் போரில் சேர சோழர்களையும் ஐம்பெரும் குறுநில மன்னர்களையும் வென்றவன்.

இவன் எதிரிகளின் படைகளை நடுங்க வைக்கும் பேராற்றல் உடையவன். இவனது வெற்றியைக் கண்டு தமிழகமே மதிமயங்கியது என்கிறார் குடபுலவியனார். சங்ககால பாண்டியர்களில் இவனுக்குப்பிறகு இவ்வளவு புகழ்பெற்றவர்கள் யாரும் இல்லை.

மாங்குடி மருதனார் தனது புறம் 26ஆம் பாடலில் இவனது மறக்களவேள்வி குறித்தும் வேள்வி குறித்ததுமான செயல்களைப் பாடியுள்ளார். வேள்வி என்பது விரும்பிச்செய்யும் வினை என பாவாணர் கூறுகிறார். இங்கு வேள்வி என்பது விரும்பிச் செய்யும் கொடை ஆகும். வேள்வி என்பது பாடாண் திணையின் 20 துறைகளில் ஒன்று. அதன்படி வெற்றிபெற்ற வேந்தன் உரியவர்களுக்கு ஆநிரைகளைப் பரிசாக வழங்கி அனைவருக்கும் பெருஞ்சோறு வழங்கும் நிகழ்வு.

களவேள்வி என்பது வாகைத்திணையின் களவழி என்ற துறையின் கீழ் வருகிறது. உழவையும் போரையும் ஒப்பிட்டுப் பேசும் துறை இதுவாகும். நெற்களத்தில் உழவன் போரடிப்பதும் அதன்பின் பலருக்கும் நெல்லைக் கொடுத்து மகிழ்வதும் போல் வெற்றிபெற்ற அரசன் போரில் வெற்றிபெற்ற பிறகு, போர்க்களத்திலேயே பேய்களுக்கு உணவு வழங்குவதும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்குவதுமான நிகழ்வு.

பிற்காலப் (கி.பி. 9ஆம் நூற்றாண்டு) புறப்பொருள் வெண்பாமாலை மறக்களவேள்வி என்பதை வாகைத் திணையின் ஒரு துறையாகக் கூறுகிறது. இரண்டு வேள்விகளுமே உணவு வழங்குவதும் கொடை வழங்குவதுமான நிகழ்வுகள். இரண்டுமே உணவு வழங்குவதையே முக்கியமாகப் பேசுகின்றன.

மாங்குடி கிழாரின் புறம் 26ஆம் பாடல் மொத்தம் 18 வரிகளைக் கொண்டது. கடலில் ஆழமான இடத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் மரக்கலம் போலப் பகைவர் படை நடுவே யானைகள் புகுந்து பிளந்து செல்லும். யானைகள் பிளந்து சென்ற வழியாக வேலை ஏந்திய போர் வீரர்கள் பகைவரைக் கொன்று குவித்து அவர்தம் முரசங்களையும் கைப்பற்றுவர். முதல் ஐந்து வரிகளின் பொருள்.

மேலும் அவ்வீரர்கள் போரின் வெற்றிக்குப்பின் அப்போர்க்களத்திலேயே பகைவர் முடித்தலையை அடுப்பாக்கி, குருதி நீரை உலையில் ஊற்றி, தசை மூளை முதலியவற்றை உலையில் இட்டு, தோளாகிய துடுப்பால் உலையைத் துளாவி சமைக்கப்பட்ட உணவால் களவேள்வி செய்வர். அதாவது போர்க்களத்தில் சமைக்கப்பட்ட அந்த உணவை போர்க்களத்தில் பேய்களுக்குப் படையலாக வழங்கி களவேள்வி செய்வர். இதுபோன்ற பல களவேள்விகளைச் செய்த, கொல்லும் போரை உடைய நெடுஞ்செழியனே! இவை 6 முதல் 11 வரிகளின் பொருள்.

தமிழின் மூலமறையை நன்கு அறிந்த கேள்வியறிவும் ஐம்புலன் அடக்கிய தன்மையும் கொண்ட முதிய அறிவர்கள் சூழ்ந்திருக்க, தோற்ற மன்னர்கள் ஏவல் செய்ய, நிலைபெற்ற வேள்விகளைச்செய்து முடித்த வேந்தனே! உனது பகைவர் எனப் பெயர்பெற்று உன்னை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றுப் போனாலும் அவர்களுக்கும் துறக்க உலகம் கிடைக்கும். இவை 12 முதல் 18 வரிகளின் பொருள்.

இங்கு வேள்வி என்பது தமிழ் மூலமறையில் உள்ளபடி வேள்விச் சாலைகளை அமைத்து அனைவருக்கும் பெருஞ்சோறு வழங்குவதும், உரியவர்க்கு ஆநிரைகளை வழங்குவதுமான நிகழ்வாகும்.

அதியமானும் பெருஞ்சோறும்:

ஔவையார் தனது புறம் 99ஆம் பாடலில் அதியமான் தனது இறந்து போன முன்னோர்களைப் பேணி, பெருஞ்சோறு வழங்கியதைக் குறிப்பிட்டுள்ளார்.

‘அமரர்ப் பேணியும் ஆவுதி

அருத்தியும்

அரும்பெறன் மரபிற் கரும்புஇவண்

தந்தும்’

என தனது பாடலின் தொடக்கத்திலேயே கரும்பைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டுவந்த, பெயர்பெற்ற முன்னோர்களின் வழிவந்த அதியமான் தனது இறந்து போன முன்னோர்களைப் பேணி, பெருஞ்சோறு வழங்கி அதனை அனைவரும் உண்ணுமாறு செய்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு ஆவுதி என்பது பெருஞ்சோறு ஆகும். ‘அருத்தல், அருத்தி’ என்பதற்கு உண்ணச் செய்தல் என அகராதிகள் பொருள் கூறுகின்றன. ஆகவே அதியமான் ஆவுதி எனும் பெருஞ்சோறை அனைவரும் உண்ணுமாறு செய்தான் எனலாம்.

மாமூலனார் தனது அகம் 233 ஆம் பாடலில் உதியஞ் சேரலாதன் தனது முதியோரைப் பேணி பெருஞ்சோறு வழங்கியதைக் கூறியுள்ளார். அதேபோன்று தான் பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் தனது முதியோரான குலதெய்வத்தைப் பேணி பெருஞ்சோறு (அடுநெய் ஆவுதி) வழங்கினான் என்பதை பதிற்றுப்பத்தின் முதல் பாடல் கூறுகிறது.

உதியஞ்சேரல், செல்கெழுகுட்டுவன், அதியமான் ஆகிய மூவரும் முதியோரைப் பேணி பெருஞ்சோறு வழங்கினர். இவர்கள் மூவரும் வேள்வி செய்யவில்லை. வடமரபு யாகம் செய்யவே இல்லை. இவர்கள் மட்டுமல்ல சங்ககாலத்தில் யாருமே வட மரபு யாகத்தைச்செய்யவில்லை.

முதலாவதாக போரில் வெற்றிபெற்ற வேந்தர்கள் ஆநிரைகளைப் பரிசாக வழங்கியும், பெருஞ்சோறு வழங்கியும் வேள்வி செய்தார்கள். தமிழ் மூலமறையில் உள்ளவாறு, தமிழ் மூலமறையை நன்கறிந்த, கேள்வி ஞானமிக்க முதிய அறிவர்களைக் கொண்டு இவ்வேள்வி செய்யப்பட்டது.

இரண்டாவதாக தமிழ் வேந்தர்கள், அரசர்கள் போன்றோரும் இன்ன பிறரும் இறந்து போன முதியோரை, முன்னோரை, குலதெய்வத்தைப் பேணும் வகையில் பெருஞ்சோறு செய்து அதை அவர்களுக்குப் படையலிட்டு அனைவரும் உண்ணுமாறு வழங்கினர்.

மூன்றாவதாக வெற்றிபெற்ற வேந்தன் போர்க்களத்திலேயே களவேள்வி செய்து பேய்களுக்குப் படையலிட்டு உணவு வழங்கினான்.

இவை மூன்றும் தமிழர் மரபுகள். இவைகளுக்கும் வடமரபு யாகங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்பாடல்கள் பாடப்பட்டு 1000 முதல் 1200 ஆண்டுகள் கழித்து வந்தவர்கள் இவற்றின் உண்மைப்பொருளை அறியாமல், இவற்றை வடமரபு யாகத்தோடு தொடர்புடுத்திப் பொருள் கூறி வந்துள்ளனர். அதற்கேற்றவாறு பாடல்களில் ஒருசில திருத்தங்களும் இடைச்செருகல்களும் செய்தனர். ஆகவே இப்பாடல்கள் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும்.

ஆக, வேள்வி, களவேள்வி, முதியோரைப் பேணும் பெருஞ்சோறு (ஆவுதி) ஆகிய மூன்றும் தமிழர் மரபுகள். இத்தமிழர் மரபுகள்தான் சங்க காலத்தில் இருந்தன. வடமரபு யாகம் என்பது இருக்கவில்லை.

கணியன் பாலன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.