sankaran 45019 ஆம் நூற்றாண்டில் உலகவரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், தத்துவ கோட்பாடுகளும், பாட இயல்களும் உருவாயின.  இக்காலக்கட்டத்தில் மூன்று அறிஞர்கள் முக்கியமானவர்கள்: சார்லஸ் டிக்கன்ஸ் (எழுத்தாளர்), சார்லஸ் டார்வின் (உயிரியல் பரிணாம அறிஞர்), கார்ல்மார்க்ஸ் (சமூக விஞ்ஞானி).   இக்காலத்தின் அறிஞர்கள் பெரும்பாலும் பல்துறை வல்லுநராய் இருந்தனர். இது ஒருபுறமிருக்க, 19 ஆம் நூற்றாண்டு நெடுக ஐரோப்பிய நாடுகளிடையே நிலத்தின் மீதும், கடலின்மீதும் நாடுபிடிக்கும் போட்டிகளும் தொடர்ந்து, அதற்கான போர்களும் நிகழ்ந்தன. 

இதற்கான தொழில்நுட்பத்தினை இங்கிலாந்தின் தொழில்புரட்சி வழங்கியது; கருத்தியல் புரட்சியினை பிரான்ஸ் வழங்கியது.   தொழில்புரட்சி வளர வளர, அடிமை தேசங்களும் அடிமைகளும் கூடினர்.  இச் சூழலில் பாதிரி - அறிஞர்கள் ஒருபுறமும், ஆட்சி - அலுவலர் - அறிஞர் ஒருபுறமும் காலனிய நாடுகளின் வரலாறு, மொழி, சமூகம், உற்பத்திமூலங்களான நதிகள், வனங்கள் பற்றிய ஆய்வுகளை செய்தனர்.  இந்தியத் துணைக்கண்டத்திலும் அப்போக்கு நிகழ்ந்தது.

இங்கு நடந்த மைசூர் போர்கள், கர்நாடகப் போர்கள் போன்றன தென்னிந்திய உற்பத்தி மூல வளங்களை இங்கிலாந்தும் பிரான்ஸ§ம் கைப்பற்று தற்கே. உள்நாட்டு ஆட்சியாளர்களிடமிருந்து கைப் பற்றப்பட்ட  நிலப்பிரதேசங்களைச் சட்டப்படி தம் ஆட்சிக்குள் நிறுவிக்கொள்வதற்கு காலனிய நிலப் பிரதேச இலக்கியங்களில் பரிந்துரைக்கப்பட்ட சமூக சட்டங்களைக் கொண்டே ஆளும் முயற்சியினை உருவாக்க ஐரோப்பிய அரசுகள் முயன்றன.  இந்தியாவின் வடமொழி இலக்கியங்களில் உள்ள நீதிசாஸ்திரம், மனுசாஸ்திரம் போன்றவையும், கீதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன; தெற்கில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது.  தமிழகத்தில் இந்நூல்தான் ஓலைச்சுவடி வடிவில் அதிக இடங்களில் கிடைத்தது.

இது ஒருபுறமிருக்க, ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சியையும், அது உருவாக்கிய தொழிலாளர் அமைப்புகளையும் புரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் மொழி, வரலாறு, மானிடவியல் போன்ற அறிவியல் பாடங்களை கார்ல்மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் கற்கத்தொடங்கினர்.  பிரடரிக் எங்கல்ஸ் அந்தந்த நாட்டின் வரலாற்றினை அந்தந்த நாட்டின் மொழியிலேயே கற்றார்.  பண்டைய-கிரேக்கம், லத்தீன், ருஷ்யா, ஸ்காண்டிநேவியன்-மொழிகள், ருமேனிய, பல்கேரியா, ஜெர்மன், பிரன்ஞ்ச், டச்சு - மொழிகளிலும் நன்கு பயிற்சி பெற்றிருந்தார்.  இத்துடன் வேதியல், இயற்பியல், உடற்கூறியல், பொருளியல், மொழியியல் போன்ற துறைகளையும் கற்றுத்தேர்ந்தார். அயர்லாந்தின் விவசாயிகளின், ஆலைத்தொழிலாளர்களின் நிலைமைகளை நேரில் அறிந்துகொள்வதற்கு கார்ல்மார்க்சும், பிரடரிக் எங்கல்சும் நேரிடையாக கள ஆய்வினை மேற் கொண்டனர்.  இப்படி சமூக ஆய்விற்கு கள ஆய்வு, கற்றல் ஆய்வு இரண்டையும் மேற்கொண்டனர்.

பிரடரிக் எங்கல்ஸ்1853 இல் அரபிய வரலாற்றையும், பழையஏற்பாட்டில் குறிக்கப்பட்டுள்ள தந்தைவழி குலமரபினையும் சரியாகப் புரிந்துகொள்ள அரபு மொழி கல்வெட்டு பற்றி அண்மையில் வெளியிடப் பட்ட நூலொன்றைத் தாம் படித்ததாக கார்ல் மார்க்சுக்குக் கடிதம் எழுதினார்.  கல்வெட்டுகள் மூலம் பண்டைக் காலத்து புவியியலைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.  அசோகரின் தென்னெல்லையினை கல்வெட்டுகள்தான் முடிவு செய்கின்றன. ராபர்ட் கால்டுவெல் மொழியியல் ஆய்வுடன் சமூகவியல் ஆய்வினையும் செய்தார்.  தென் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலினை 1856 இல் வெளியிட்டார். 1857 இல் பிரடரிக் ஏங்கல்ஸ் 'பாரசீகமும் சீனாவும்' என்ற நூலினை வெளியிட்டார். இவரைத் தொடர்ந்து பெ.சுந்தரம் பிள்ளை திருஞானசம்பந்தரின் வரலாற்றுக் காலத்தினை முன்வைத்து தமிழிலக்கிய வரலாற்றினை (1895) ஆயும்போது சாசனச் சான்றுகளைப் பயன்படுத்தினார்.

தென்னிந்திய கல்வெட்டுகளை ஆய்வுசெய்த கீல்ஹான், ஹல்ஸ்க், வெங்கய்யா போன்ற அறிஞர் களுக்குப்பின் சென்ற நூற்றாண்டின் முதல் கால் கூற்றில் கல்வெட்டறிஞர் கே.வி.சுப்ரமணிய அய்யர் தென் தமிழகத்தின் குகைத்தளங்களிலுள்ள கல்வெட்டு களின் மொழியமைப்பு இந்தியாவின் பிறமொழி களினின்றும் வேறுபடுகின்றது என்றும், அது தமிழ் மொழியாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்றும் தம் கருத்தை முன்வைத்தார். அக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் திராவிடம் என்ற கருத்தியலின் ஊடே தமிழறிஞர்கள் மத்தியில் தமிழ், இனம், மொழி, பண்பாடு என்ற குரலும் உரக்க ஒலித்தன.  ஆனால், இவ்வுரத்த குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் இத் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, கே.வி.சுப்பிரமணிய அய்யர், டி.என்.சுப்ரமணியன், டி.வி.மகாலிங்கம் போன்றவர்களே சாதித்தனர்.  இவ் வரிசையில்தான் அண்மையில் மறைந்த ஐராவதம் மகாதேவன் இடம்பெறுகிறார். இவரும், அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி போன்று கல்வி புலத்திற்கு அப்பாற்பட்டு இயங்கிய தன்னியல்பான ஆய்வாளர். 

ஐராவதம் மகாதேவனின் குறிப்பிடப் பட்ட கண்டுபிடிப்பு 1965 இல் மொழியினை முன்னிறுத்தி ஒரு தழல் போல் தமிழகத்தில் போராட்டம் கொதித்துக்கொண்டிருந்தபோது சேரர் அரசகுலத்து மூன்றுதலைமுறை மன்னர்களின் பெயர்களைத் தொடர்ந்து பதித்துள்ள புகளூர் கல்வெட்டினை முழுமையாகப் படித்து வெளியிட்ட தாகும்.  இக்கல்வெட்டின் மன்னர் பெயர்கள் பதிற்றுப்பத்து இலக்கியத்தின் சேரர் மன்னர்களுடன் ஒப்பிடப்பட்டது தமிழர் வரலாற்றில் ஒரு புதிய கண்டுபிடிப்பு.  பழந்தமிழ்க் கல்வெட்டுகள் என்ற ஆய்வுநூலினை உருவாக்குதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் அதனை வெளியிட்டதும் தமிழ் வரலாற்றினை உலக வரலாற்றில் ஒரு கல்வெட்டாகப் பொறித்துள்ளது.  இந்நூலிற்கான ஆய்வுத்திட்டத்திற்கு அப்போது அவரைவிட அதிக வயது இளையவர் களான அதே நேரத்தில் பிராமி கல்வெட்டுகளைப் படித்தறிந்து பொருள்சொல்வதில் துறைபோகிய அறிஞர்களான திருவாளர்கள் சு.இராஜகோபால், சொ.சாந்தலிங்கம், வெ.வேதாசலம், சு.இராஜவேலு, அளக்குடி. சீதாராமன் போன்றோர் பெரிதும் துணை நின்றனர்.  வயது பேதமின்றி சமமாக அவர்களுடன் அமர்ந்து வாதிட்டு தம் ஐயங்களை சரிசெய்து கொள்வார்.  சிறு சிறு சந்தேகங்களையும் மிகவும் தெளிவாக்கிக்கொள்வார். 

மட்கலத்துண்டுகளிலுள்ள பழந்தமிழ் கீறல் (இது அவர் சொல்) சொற்களின் வரலாற்றுத்தன்மையினை மண்ணடுக்கு-காலத்தின் பின்புலத்தில் உறுதிசெய்துகொள்ளப் பேராசிரியர் கா.ராஜன் அவர்களிடம் உரையாடுவார்.  கருத்தியல் தொடர்பானவற்றைப் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்களிடம் கலந்துகொள்வார்.  ஆனால், இவர்கள் முன்வைக்கும் மாற்றுக்கருத்துகளை மெல்லிய புன்னகையுடனோ, பலத்த சிரிப்புடனோ மறைத்துக் கொள்வார் என்று அறிந்திருக்கிறேன்.

இவருடைய நூல் வெளிவந்தவுடன் பழந் தமிழிலக்கியத்தின் கால அடுக்குகள் மாற்றப்பட வேண்டுமென்ற தேவையை பேரா.கார்த்திகேசு சிவத்தம்பி வலியுறுத்தினார்.  மேலும் சிலர் சிறப்புக் கட்டுரைகளை மொழியியல் பின்புலத்தில் வெளியிட்டனர்.

இவர் நூலிற்கான களஆய்வில் கல்வெட்டு களைப் படியெடுக்கையில் கல்வெட்டுக் குழிவுகளின் மேல் வேதிவர்ணம்பூசி வாசித்தது ஆய்வுமுறையில் செய்யப்பட்ட பெருந்தவறு. தவறான முன்னுதாரணம். அப்புகைப்படத்தினை தமிழ் இந்து வெளியிட்டிருந்தது.  பிறகு, ஒருசில இளந்தலைமுறையினரும் இதனைச் செய்தனர்.  உ.வே.சா. அவர்கள் பெரும்பாலான சங்க இலக்கியத்தினை சுவடிகளில் இருந்து  நூல்வடிவாக்கித் தந்தார்; ஐராவதம் மகாதேவன் அவர்கள் பாறைகளின்மேல் வரிவடிவமாயிருந்த பழந்தமிழ்க் கல்வெட்டுகளைப் படியெடுத்து நூலாக்கித் தந்தார். இந்நூல் வாயிலாக தமிழிலக்கியத்தின் காலக்கணிப்பிற்கு பழந்தமிழ்க் கல்வெட்டுகளின் உறுதித்தன்மை முன்வைக்கப்பட்டதை ஆய்வாளர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். 

அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டியது: ஆர்வம், விடாமுயற்சி, சுறுசுறுப்பு, கலந்துரை யாடல், கருத்துமோதலை வன்மமாக வளர்க்காமை, கலகலப்பாக இயங்குதல், சான்றுகளை நேரிடை யாகச் சேகரித்தல், துறைபோகிய அறிஞரிடையே உரையாடுதல், அதற்காகப் பயணித்தல், திட்டமிட்ட ஆய்வுரை.

Pin It