tamil cultureதோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!

கொடுமணல் பழங்கால தமிழ்நாட்டின் வணிக நகராக இருந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் கொடுமணல் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.

கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபிற் கைவல் பாண
தெண்கடன் முத்தமொடு நன்கலம் பெறுகுவை
– (பதிற்று : 67) என்று கபிலரும்,

கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
– (பதிற்று : 74) என்று அரிசில் கிழாரும் 

பாடியுள்ளனர்.

தமிழகத்தில் மிக முக்கியமான தொல்லியல் தளமான கொடுமணலில் நடந்து வந்த நான்கு மாத அகழாய்வு முடிவிற்கு வந்துள்ளது. இங்கு மக்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான கூடுதல் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன. மேலும் கிணறு போன்ற வடிவத்தில் தானியங்கள் சேமிக்கும் பகுதியும் கிடைத்துள்ளது. கொடுமணல் பழந்தமிழர்களின் வாழ்விடப் பகுதி மற்றும் வணிக நகராக இருந்ததற்கு ஆதரங்களும் கிடைத்திருக்கின்றன. 

கொடுமணல் அகழாய்வின் வரலாறு

  • 1979-ல் கொடுமணலில் முதல்முறையாக மாதிரி ஆய்வுக் குழிகளைத் தோண்டி அகழாய்வுப் பணிகளை தொடங்கினர். அதில் ரோமானிய ஓடுகள் கிடைத்தன.
  • அதன் பின் 1985-ல் தஞ்சை பல்கலைக்கழகம் மூன்று கட்டங்களாக அகழாய்வுப் பணிகளை நடத்தியது.
  • 1997-ல் தொல்லியல் துறை பெரிய அளவிலான அகழாய்வினை அப்பகுதியில் நடத்தியது. அதில்தான் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்தன.
  • பின்னர் 2014-ம் ஆண்டு அகழாய்வு நடத்தப்பட்டது.
  • அதன்பிறகு இந்த ஆண்டு மே 27-ம் தேதி துவங்கி 4 மாதங்களாக நடந்துவந்த அகழாய்வு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இங்கு கிடைத்துள்ள பொருட்கள்

இங்கு தோண்டப்பட்ட குழிகளில் சுடுமண்ணாலான மணிகள், சங்கு வளையல்கள், பளிங்கு கற்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழி, சுடுமண் அடுப்பு, இரும்புப் பொருட்கள், கொள்ளுப் பட்டறைகள் மற்றும் படிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை அனைத்தின் மாதிரிகளும் அவற்றின் காலம் மற்றும் தன்மைகளை அறிய ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் மூலம் கடந்த கால சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்களின் ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

500 கிலோ எலும்புக் கூடுகள்

இந்த பகுதியில் 500 கிலோ எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. அது என்ன விலங்கின் எலும்பு என்று தெரிந்துகொள்ள 75 கிலோ எலும்புக் கூடுகள் ஆய்வுக்காக அனுப்பப்பட இருக்கிறது. 25 மீட்டர் அளவிலான ஒரு இடிந்த சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான ஆய்வை விரிவுபடுத்தினால் அது நீர்வழிப் பாதையாக இருந்ததா என்பதும் தெரியவரும். 

நெசவுப் பொருட்கள்

நெசவுத் தொழில் செய்வதற்கு தேவையான பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே பண்டைய காலத்தில் இப்பகுதி வர்த்தகத்திற்கான முக்கிய நகரமாக விளங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 ஏனெனில் கொடுமணல் நொய்யல் நதிக்கரையில் உள்ள தொல்லியல் தளமாகும். மேலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள செங்கல் அடுக்கு சங்ககாலத்தை சேர்ந்ததாகும். 

தானியக் களஞ்சியம்

கிணறு வடிவத்திலான தானியக் களஞ்சியம் 4.25 மீட்டர் உயரத்தில் மட்கிய நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தானியக் கிடங்கு மூன்று அடி ஆழத்திற்கு மேல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள்

மேலும் அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த ஈமத் தாழிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. இதில் மூன்று வகையான இறுதி சடங்குகள் நடைபெற்றிருந்தது தெரியவந்துள்ளது. தாழிகளில் ஒன்றில் மனித மண்டை ஓடு, பல், கை மற்றும் கால் எலும்புகள் கிடைந்துள்ளது. இது இந்த பகுதியின் காலத்தை வரையறுக்க உதவும். இவை மரபணு ஆய்விற்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

எழுத்து பொறிக்கப்பட்ட குவளை மற்றும் ஓடுகள்

மேலும் ‘சம்பன்’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட குவளையும், ‘ஏகன்’ என்ற பெயர்ச்சொல் பொறித்த மண் கலங்களின் ஓடுகள் இரண்டும் கிடைத்துள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்து பொறிக்கபட்ட ஓடுகள் கிடைத்துள்ளன

- தியாகு