முன்னுரை
புறநானூறு பழந்தமிழர்களின் வாழ்நிலையைத் தெரிவிக்கும் மிகச் சிறந்த நூல். உ.வே.சாமிநாதய்யர் புறநானூறு ஓலைச் சுவடிகளைத் தொகுத்த பொழுது 267ஆவது, 268ஆவது பாடல்கள் முழுவதுமாகச் செல்லரித்து இருப்பதைக் கண்டார். 244ஆவது, 355ஆவது பாடல்கள் பெரும் பகுதி சிதைந்த நிலையிலும் மேலும் 32 பாடல்கள் சிறிது சிதைந்த நிலையிலும் கிடைத்தது, 398 பாடல்களும் அச்சில் ஏறி, அக்காலத் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கும் அரிய கருவூலங்களாக நமக்குக் கிடைத்துள்ளன.
சமூக அமைப்பு
நடோடிச் சமுதாயமாக இருந்த மனித இனம் நாகரிகச் சமூகமாக வளர்ச்சி அடைந்த பொழுது ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள் உலகின் மற்ற பகுதிகளில் ஒரு விதமாகவும், ஆரியர்கள் குடியேறிய இந்தியாவில் வேறு விதமாகவும் ஏற்பட்டன. ஆரியர்கள் திணித்த வர்ணாசிரம முறையின் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான போராட்டமே இந்திய வரலாறாக உள்ளது.
ஆரியர்களின் ஆதிக்கம் தமிழ் நாட்டிலும் பரவி இருந்தது. ஆரியர்களின் சூழ்ச்சித் திறனை எதிர்த்து வெல்ல முடியாதவர்கள், அடிபணிந்தவர்கள் மருத நிலத்திலும் நெய்தல் நிலத்திலும் நாகரிகச் சமூகமாக வளர்ச்சி அடைந்தனர். மற்றவர்கள் குறிஞ்சி முல்லை நிலங்களில் குறுநில மன்னர்களாக இருந்தனர்.
மறையோர் வாழ்த்தும் பொழுது தலை தாழ வேண்டும் (பாடல் 6) என்று காரி கிழார் பாண்டிய மன்னனிடம், கூறுவதும், தாமப்பல் கண்ணனார் எனும் பார்ப்பனப் புலவரும் சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, மாவளத்தான் விட்டெறிந்த வட்டில் புலவர் மேல் பட்டதற்காக அவன் மேல் சினந்து அவனது முன்னோர்கள் பார்ப்பனர்கள் நோவுமாறு நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதால் அவன் சோழர் குடியில் பிறந்தவன்தானா என்று ஐயம் அடைவதாகக் கூறிப் பணிய வைக்கும் காட்சியும் (பாடல் 43), ஒளவையார் பூவையும் பொன் னையும் பார்ப்பனர்களுக்கு அள்ளித் தருமாறு கூறி அதுவே வாழ்வின் இலக்கணம் என்று மூவேந்தர்களிடம் கூறுவதும் (பாடல் 367), பேரரசர்கள் ஆரியப் பண்பாட்டிற்கு அடி பணிந்து இருந்தனர் என்பதைத் தெரிவிக் கின்றன. ஆனால் வேள்பாரி போன்ற குறிஞ்சி / முல்லை நில அரசர்களைப் பற்றிய பாடல் களில் இது போன்ற ஆரிய ஆதிக்கச் செய்தி கள் இல்லை.
இது நாடோடிச் சமுதாயம் உடைந்து நாகரிகச் சமூகமாக வளர்ச்சி அடைந்த பொழுது, நாகரிக வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் வலிமை இல்லாமலும், அதே சமயம் ஏற்றத் தாழ்வுகளை ஏற்க முடியாமலும் போன மக்கள் திரளினர் குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பழங்குடியினராக வாழ்ந்தனர் /வாழ்கின்றனர் என்ற அறிவியல் உண்மையை உணர்த்துகிறது
பழந்தமிழர் மதம் : புறநானூறில் மத நம்பிக்கைகளைப் பற்றி விரிவான விளக்கங்கள் காணக் கிடைக்காவிட்டாலும் அவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கவே செய்கின்றன. சிவன் வழிபாடும் (பாடல் 6) திருமால் வழிபாடும் (பாடல் 56,58) இருந்தது என்பது சிவன் கோவிலைப் பற்றியும் அரசர் களைத் திருமாலுக்கு நிகராக உவமித்தும் பாடிய பாடல்களில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் நல்லதன் நன் மையும் தீயதன் தீமையும் இல்லை என்பா ரோடு சேராது இருப்பாயாக (பாடல் 29) என்று அறிவுறுத்துவதன் மூலம் நாத்திகக் கருத்து இருந்ததும், ஆட்சி புரிவோர் நாத்தி கத்திற்கு எதிராகவும், மதக்கருத்துகளுக்கு ஆதர வாகவும் இருந்தது தெரிய வருகிறது.
உணவுப் பழக்கம் : மனிதன் இயற்கை யில் கிடைக்கும் காய், கனிகளையும் விலங்கு, பறவை, மீன் போன்ற உயிரினங்களின் இறைச் சியை உண்டு உயிர் வாழ்ந்தான். காலப் போக்கில் வேளாண்மையைக் கற்றுக் கொண்டு அரிசி, கோதுமை போன்ற தானியங்களையும் விளைவித்து உண்டான். பொதுவாக மனிதனு டைய உணவில் மரக்கறியும், புலாலும் சேர்ந்தே இருந்தன. ஆனால் அப்படிப் புலால் உண்பதில் தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தன. ஆரியர்கள் ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு புலால் உண்பதை, அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உண்ணும் வழக்கத்தைக் கைவிட்டனர்.
அதற்கு முன் ஆரியர்களுடைய உவப்பான உணவு உழவுக்குப் பயன்படும் மாட்டின் இறைச்சியும் பயணங்களுக்குப் பயன்படும் குதிரையின் இறைச்சியுமே ஆகும். கையிருப்பில் ஆயத்தமாக இருக்கும் அவற்றைக் கொன்று சாப்பிடுவதினால் உழவுக்கும் பயணத்திற்கும் ஏற்படும் கேடுகளைப் பற்றிய அக்கறை இன்றி ஆரியர்கள் அவற்றை உண்டனர். உழைத்துப் (வேட்டையாடி) பெற வேண்டிய வேலைகளைத் தவிர்த்தனர். ஆனால் தமிழர்கள் உணவிற்காகத் தங்கள் உழைப்பை ஈந்து அதன் மூலம் பெற்ற வற்றையும், பிற தொழில்களுக்குத் தேவைப் படாத ஆட்டையும்தான் உண்டனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்கள் உடும்பு (பாடல் 325), முயல் (பாடல்கள் 33, 319, 395, 396), மீன் (பாடல்கள் 61, 320, 395, 399), மான் (பாடல்கள் 150, 152, 168, 398), பன்றி (பாடல் 177), ஆமை (பாடல் 212), ஆடு (பாடல்கள் 96, 113, 261, 262, 364), புறா (பாடல் 319), ஈசல் (பாடல் 119) ஆகிய வற்றின் இறைச்சியை உண்டனர். உழவுக்கும் தொழிலுக்கும் ஊறு விளைவிக்கக் கூடாது என்ற சமூக அக்கறையுடன் உணவுப் பழக் கத்தை வைத்துக் கொண்ட தமிழர்கள் அவற்றைச் சுவையோடு சமைத்துச் சாப்பிடும் பழக்கத் தையும் கொண்டிருந்தனர். சூடான முயற்கறி யையும் வாளை மீனையும் பல வகைகளில் பக்குவப் படுத்திய கறிகளையும் சோற்றுடன் உண்டனர் (பாடல் 395). மேலும் உண விற்குச் சுவை கூட்டும்படி கடுகு, கறிவேப் பிலை முதலியன தூவி எண்ணெய் அல்லது நெய்யில் காய்ச்சித் தாழிதம் செய்தனர் (பாடல் 127). உணவிற்குச் சுவை கூட்டும் தாழித்தலைக் கண்டவர்கள் தமிழர்களே.
பழந்தமிழர்களும் போரும் : புறநானூறிலும் மற்ற புறத்திணை நூல் களிலும் பழந் தமிழர்களின் போர் ஆர்வம் வெகுவாகப் பாடப்பட்டு உள்ளது. ஆனால் அப்போருக்குக் காரணமாக விளங்கிய சமூக முரண்பாடுகள் பற்றிய செய்திகள் இல்லை. மன்னனும் போர் வீரர்களும் போர் புரிவதைத் தவிர வேறு எண்ணமே இல்லாமல் இருந்தனர் (பாடல் 31). புலவர்களும் தங்களுக்குப் பரிசில் அளித்த அரசர்களின் போர்த் திறமையைப் புகழ்ந்து மேலும் மேலும் வெற்றி பெறவேண்டும் என்றே வாழ்த்தினர்.
இவ்வாறு நடக்கும் போர்களில், மனிதர்கள் மட்டுமன்றி, ஒன்றும் அறியாத விலங்குகள் வதைக்கப்பட்டது மனித இனத்திற்குப் பெருமை சேர்ப்பதாகக் கொள்ள முடியவில்லை. குதிரையின் முகக் கருவி உராய்ந்து உதிரம் சிந்திச் சிவந்த வாய், உதிரம் குடித்த புலி வாயை ஒத்தது; மதிற் கதவுகளைக் குத்தி உடைத்து மழுங்கிய தந்தங்களோடு வரும் யானைகள் கூற்றுவனை ஒத்தன என்ற பரணரின் வர்ணனையில் (பாடல் 4) போரில் புகுத்தப்பட்ட குதிரை களும் யானைகளும் அடைந்த துன்பங்களைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அக்கால மக்கள் போர் வெறியில் பிற உயிர்களுக்கு நேரும் துன்பங்களைக் காணும் தன்மையைப் பெற்று இருக்கவில்லை எனத் தெரிகிறது.
போருக்குப் பிந்தைய அநாகரிகம்
போரின் போதுதான் கொடுமைகள் நிகழ்ந்தன என்றால், போருக்குப் பின் நடந்த கொடுமைகள் அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டன எனலாம். தோற்றவர் நாட்டிலே வென்ற மன்னன் ஊரை எரிப்பதும், நல்ல பொருள்கள் எதுவும் மிஞ்சி இராமல் அழிப்பதும், நீர்ப் பெருக்கை அடைப்பதும் (பாடல் 7), நெல் விளையும் கழனியைக் கொள்ளையிட்டும், வீடுகளை எரியூட்டியும், காவற்குளங்களில் யானைகளை இறக்கி அழித்தும் (பாடல் 16), தேரோடும் தெருக்களில் கழுதைகளைப் பூட்டி உழுது, சாலைகளை அழித்தும், வயல்களில் குதிரைகள் பூட்டிய தேர்களைச் செலுத்தி அழித்தும் (பாடல் 15), விளைநிலங்களில் புகுந்து கொள்ளை அடித்தும் (பாடல் 23), பகைவர்களின் தலைகளைக் கொய்து அடுப்பாக்கிக் குருதியைப் புனலாகப் பெய்து, பகைவர் தசையையும் மூளையையும் அதனுள் இட்டு, வெட்டிய தோள்களைத் துடுப்பாகக் கொண்டு, வேள்வி செய்தும் (பாடல் 26), இது போன்ற மனதாலும் நினைக்க வொண்ணாத கொடுஞ் செயல்களைச் சாதாரண மக்கள் மீது ஏவிய அநாகரிகம் அக்காலத்தே இருந்திருக்கிறது. இதைப் புலவர்கள் வீரம் என்று புகழ்ந்து இருக்கின்றனர்.
தொலை நாடுகளுடன் தொடர்பும் அறிவியல் வளர்ச்சியும் போரில் அநாகரிகம் மிகுந்திருந்த போதிலும், பொதுவாழ்வில் பல துறைகளிலும் முன்னேற்றத்தைக் கண்டிருந்தனர். யவனர்களுடன் வணிகம் செய்து கொண்டு (பாடல் 56) இருந்த தமிழர்கள், காற்று உரிய திசையில் வீசாததால் கப்பல்கள் ஓடாத போது பொறிகளைக் கையாண்டு அவற்றை இயக்கும் அளவிற்கு அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் திறன் பெற்றிருந்தனர். அதியமானின் முன்னோர்கள் சீனத்தில் இருந்து கரும்புப் பயிரைக் கொண்டு வந்து பயிரிட்டனர் (பாடல் 99) என்றால் புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் அறிவியல் அறிவைக் கொண்டிருந்தனர் எனத்தெரிகிறது.
ஆனால் புவியை/அண்டத்தை அறிவதில் வானத்தை நிலம் சுமந்து இருப்பதாகவும் (பாடல் 2), வானம் எந்த ஆதாரமும் இன்றி நிற்பதாகவும் (பாடல் 30) வெவ்வேறு வழிகளில் புரிந்து கொண்டு இருந்தனர். இது தொழில் செய்யும் மக்கள் அறிவியலில் சிறந்து விளங்கிய அளவிற்குக் கற்றோர் கூட்டம் சிறந்து விளங்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
பண்டமாற்று
புறநானூற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் நாகரிகச் சமூகமாக வாழ்ந்தனர். நாகரிகச் சமூகத்தில் பண்ட உற்பத்தி பிரிக்க முடியாத கூறு ஆகும். மருத நிலத்து மக்கள் தங்களுக்கு இடையே உணவு தானியங்கள், ஆடைகள், கருவிகளின் பரிவர்த்தனையில் நாணயங்கள் புழங்கிய செய்திகள் புறநானூற்றில் கிடைக்கவில்லை; ஆனால் குறிஞ்சி முல்லை நில மக்களான வேடர்களும் ஆய் மகளிரும் மான் இறைச்சியையும், தயிரையும் உழவர் வீட்டிலே கொடுத்து வயல்களில் விளைந்த நெல்லுக்குப் பண்டமாற்று செய்து கொண்டனர் (பாடல் 33) என்ற செய்தி உள்ளது.
நெருப்பு
மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு நெருப்பு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. அக்காலத்தில் நெருப்பை உண்டாக்க ஞெலிகோல் (தீக் கடைக் கோல்) பயன்படுத்தப்பட்டது. நிரந்தரமான வீடுகளில் வாழும் மருத நில மக்கள் இதை எந்நேரத்திலும் எளிதில் எடுக்கக் கூடிய வகையிலும் தாழ்வாரத்தின் முன் கூரையில் செருகி வைத்து இருந்தார்கள் (பாடல் 315) குறிஞ்சி, முல்லை நில மக்களும் வேட்டைக்குச் செல்பவர்களும் எப்பொழுதும் கையிலேயே வைத்து இருந்தனர் (பாடல் 247, 33, 1501).
சடங்குகளும் பழக்க வழக்கங்களும்
பிறப்பு முதல் இறப்பு வரையிலும் சடங்குகள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத கூறு களாக இருந்தாலும் புறநானூறில், பிறப்பின் போதும், திருமணத்தின் போதும் பின்பற்றப் படும் சடங்குகளைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை.
போருக்குப் புறப்படும் முன்னே அரசர்கள் வீரர்களுக்குக் கள் வழங்கும் பழக்கம் 258, 262, 286, 290, 292-ஆவது பாடல்களில் காணப்படுகிறது.
மன்னர்கள் இறக்கும் பொழுது அவர் களுடைய உடல்களை எரிக்கும் வழக்கமும் (பாடல்கள் 231, 239, 240, 245) முதுமக்கள் தாழியில் இட்டுக் கவிழ்த்துப் புதைக்கும் வழக்கமும் (பாடல்கள் 228, 238, 239) இருந்தன என்று தெரிகிறது. எரித்தாலும், புதைத்தாலும், அதன் பின் பிண்டம் இடுதலும் (பாடல் 234) நடுகல் நட்டலும் (பாடல்கள் 221, 223, 232) ஆகிய சடங்குகளும் பின்பற்றப் பட்டுள்ளன.
போர்வெறிக்கு எதிரான குரல்
பழந்தமிழர்கள் போர் புரிவதையும், போரில் வெல்வதையும், வெல்ல முடியா விடத்துப் புறங்காட்டாமல் மடிவதையும் பெரும் புகழுக்குரியனவாக நினைத்தனர். ஆளும் வகுப்பாரின் இக்கருத்தைப் பெரும்பான்மை யான புலவர்களின் பாடல்கள் எதிரொலித் தாலும், போரை விட வேளாண்மையையும் பிற தொழில்களையும் ஊக்குவிப்பதே சிறப்பு என நல்லறிவுரை கூறும் போர் வெறிக்கு எதிரான குரலும் இல்லாமல் போய்விடவில்லை. குடபுலவியனார் எனும் புலவர், உலகம் முழுவதும் வெல்ல நினைத்தால் நீரையும் நிலத்தையும் ஒருங்கு கூட்டி வேளாண்மைக்கு உதவுக (பாடல் 18) என்றும் வேளாண்மையின் மூலம் பெறும் புகழே போரில் கிடைக்கும் புகழைவிடச் சிறந்தது என்று அறிவுறுத்துகிறார்.
வெள்ளைக்குடி நாகனார் எனும் புலவர் படைவீரர்கள் போர் முகத்தில் காணும் வெற்றிக்குக் கொழுமுனை கிழித்த விளை வயலின் நெல்லின்பயன் தான் என்றும், உழவர் குடியினரை முதற்கண் பாதுகாத்து, அதனால் ஏனயை குடிமக்களையும் காப்பாற்றினால், படை வலிமைக்கு அடங்காதவர்களும் அடங்கி நடப்பார்கள் (பாடல் 35) என்று அறிவுரை கூறுகிறார்.
புலவர்கள்
பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையைத் தெரிவிக்கும் முக்கியமான ஆதாரம் அக்காலப் புலவர்களின் படைப்புகளே. அக்கால அரசர்களின் வாழ்நிலையை ஆவணப்படுத்திய அப்புலவர்களின் வாழ்க்கையோ மிகவும் இரங்கத்தக்கதாக இருந்திருக்கிறது. வறுமை நிலையின் காரணமாகப் பால் குடிக்கும் வயதுள்ள தன் மகன் தன்னைப் பழித்துக் காட்டுவதைப் பெருஞ்சித்திரனார் எனும் புலவர் குமணனிடம் எடுத்துக் கூறுவதில் (பாடல் 160) இருந்தும், பிற புலவர்களின் வேறு பாடல்களிலிருந்தும், அக்காலத்தில் புலவர்கள் கற்பனைக்கும் எட்டாத வறுமையில் வாழ்ந்திருந்தனர் எனத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு வறுமையில் வாடும் புலவர்கள், அரசர்களின் பரிசிலைப் பெறும் பொருட்டு அரசர்களின் எண்ணம் போலவே நடந்து கொள்வது இயல்பு. ஆனால் அந்த வறுமை நிலையிலும் தவறு செய்யும் அரசர்களை இடித்துரைக்கத் தயங்காத புலவர்களும் இருந்திருக்கின்றனர்.
பேரரசர்களே ஆயினும் தங்களை மதியா தோரைத் தாங்களும் மதிப்பதில்லை என்றும் (நெல்லஞ்சோறு தரும் அளவிற்குச் செல்வம் படைக்காத) சிற்றரசர்கள் அன்புடன் வரகஞ் சோறு தரினும் அதை உவப்புடன் ஏற்றுக் கொண்டு பாராட்டுவோம் (பாடல் 197) என்று மாடலன் மதுரைக் குமரனார் எனும் புலவர் பாடியுள்ளார்.
மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல் பேகன், தன் மனைவியை விடுத்து வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்த காலை, அரிசில் கிழார், பரணர், கபிலர் ஆகிய புலவர்கள் அச்செயலைக் கண்டித்து, அவன் தன் மனைவியுடன் வாழ்வதே தாங்கள் விரும்பும் பரிசில் என்றும் வேறு பரிசில் வேண்டாம் என்றும் (பாடல்கள் 143-147) இடித்துரைத்து இருக்கின்றனர்.
வள்ளன்மை
வேளாண்மையே முக்கியத் தொழிலாகவும் அடுத்து நெசவும், பிற துணைத் தொழில்களும் அக்காலத்து மக்களிடையே இருந்தன. இத்தொழில்கள் மக்களை ஓரிடத்தில் பிணைத்து வைத்திருந்தன. இந்நிலையில் நாடுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு உடலாகவும் உயிராகவும் விளங்கியவர்கள் புலவர்கள், பாணர்கள், விறலியர்கள், கூத்தர்கள் ஆகியோரே. அவர்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளும் கடமை அரசர்களுக்கு இருந்ததால் வள்ளன்மையைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அனைவருமே மனமுவந்த வள்ளலாக இருக்கவில்லை.
சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை பெருங்குன்றூர் கிழாருக்குப் பரிசில் அளிப்பது போலப் போக்குக்காட்டி, காலத்தை நீட்டிய தும், அதனால் பரிசில் பெறாமலே புலவர் திரும்ப நேர்ந்ததும் (பாடல் 210, 211) இதே போன்ற அனுபவம் மூவன் என்னும் சிற்றர சனிடம் பெருந்தலைச் சாத்தனாருக்கு (பாடல் 209) ஏற்பட்டதும் புறநானூறில் காணக்கிடக்கிறது.
ஆனால் பொதுவாக மன்னர்கள், புலவர்கள் முதலிய இரவலர்களுக்குப் பரிசில்களை அளித்து, அவர்களை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுதான் இருந்தனர். அவர்களிலும் சிலர் தங்கள் தேவைகளையும் குறைத்துக் கொண்டு ஈவதில் தயங்கவில்லை. ஆய் அண்டிரன் எனும் வள்ளல் தன்னிடம் உள்ளதை எல்லாம் கொடுத்து, ஒரு நிலையில் அவனுடைய மனைவியின் மங்கல நாண் மட்டுமே மிஞ்சி இருந்ததாக (பாடல் 127) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் கூறி யுள்ளார்.
வள்ளல்கள்
பாரி, ஓரி, காரி, பேகன், எழினி, நள்ளி, ஆய் அண்டிரன் என எழுவரை வள்ளல்கள் என்றுதான் பெருஞ்சித்திரனார் (பாடல் 158) குறிப்பிடுகிறார். கடை ஏழு வள்ளல்கள் என்று குறிப்பிடவில்லை. கடை ஏழு வள்ளல்கள் என்று கூறுவது ஆரியத் தொல்கலைஞர் களின் மோசடி வேலை என்று மொழியியல் வல்லுநர் தேவநேயப் பாவாணர் கூறுகிறார். சேர, சோழ, பாண்டியர்கள் உள்ளிட்ட பேரரசர்கள் ஆரியர்களுக்கு அடிபணிந்து கிடக்கையில், குறிஞ்சி, முல்லை நில மன்னர்கள் அவர்களுக்கு அடிபணிய மறுத்ததும் தமிழ்க் கலை வளர்ச்சிக்கு ஊக்கம் ஊட்டி வந்ததும், மக்களிடையே அவர்களுக்கு நல்ல பெயர் இருந்ததும் ஆரியர்களுக்குப் பிடிக்கவில்லை.
ஆகவே அவர்களைச் சிறுமைப்படுத்த விழைந்த ஆரியர்கள், அவர்களுள் வள்ளல்கள் என்று பெயர் எடுத்தவர்களின் சிறப்பைக் குறைத்துக் காட்ட முற்பட்டனர். புறாவைக் காப்பாற்றும் பொருட்டு, செம்பியன் தன் உடலைக் கழுகு உண்ணக் கொடுத்த கற்பனைக் கதையைத் திணித்தும், அவன் போன்ற எழுவரை வரையாது கொடுத்த தலை ஏழு வள்ளல்கள் என்றும், கர்ணன் முதலிய எழுவரைக் கேட்கக் கொடுத்த இடை ஏழு வள்ளல்கள் என்றும், பாரி முதலிய எழுவரைப் புகழக் கொடுத்த கடை ஏழு வள்ளல்கள் என்றும் பெயரிட்டனர்.
அதியமான் நெடுமான் அஞ்சியும், குமணனும் அப்படிப் பெயரிடப்பட்ட கடை ஏழு வள்ளல்களில் அடங்குவர் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அவ்வள்ளல்கள் இப்பட்டியலில் இல்லை என்பது தமிழ் மக்கள் அறிய வேண்டிய அரிய செய்தி.
வள்ளலின் இடறல்
ஒருமுறை அதியமான் நெடுமான் அஞ்சி, பரிசிலைக் காலத்தே தராததால், சினந்த ஒளவையார் வாயில் காப்போனிடம் அஞ்சி தன் தரமறியானோ? அன்றி என் தரமறியானோ?' என்று கூறி, தான் எங்கும் சென்று பரிசில் பெற முடியும் என்பதை வேந்தனுக்கு அறிவிக்கும்படி (பாடல் 206) கூறிச் சென்றார்.
அதே போல் பெருஞ்சித்திரனார் அதியமானைக் காணச் சென்றபோது, அவன் அவரைக் காணாமல் பரிசிலை வழங்க, அவரோ, தான் வணிகப் பரிசிலன் அல்லன் என்றும் தன் தரம் அறியாமல் கொடுக்கப்பட்ட பரிசைப் பெற்றுக் கொள்ள மாட்டேன் (பாடல் 208) என்றும் கூறித் திரும்பிவிட்டார். வரையாது கொடுத்த வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி பெரும் புலவர்களின் கண்ட னத்திற்கு ஆளானது ஓர் அரிய செய்தியாகும்.
முடிவுரை
பழந்தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய இக்கட்டுரை புறநானூற்றுப் பாடல்களில் உள்ள செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டு உள்ளது. தமிழ் மக்களிடையே பழங்காலத் தமிழர் வரலாற்றைப் பற்றி உலவி வரும் செவிவழிச் செய்திகள் புறநானூற்றுப் பாடல்களுடன் ஒத்துப் போவதானது தமிழர்கள் தங்கள் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்துக் கொள்பவர்கள் என்று தெரிவிக்கிறது.
- இராமியா