suriyavarman 2இரண்டாம் சூரியவர்மன் கெமர் வரலாற்றிலேயே மிகச் சிறந்த மன்னனாகத் திகழ்ந்தான். இம்மன்னனுடைய மிக சக்தி வாய்ந்த முடியாட்சி முறையும், ஆட்சி அதிகார விஸ்தரிப்புக் கொள்கைகளும் அங்கோர் நகரை மையமாகக் கொண்டே திகழ்ந்தது.

இவனுடைய கட்டிடக்கலை, படையெடுப்புக்கள், சிறந்த அரசாங்கம் முதலியவற்றுக்காக இவனை கெமர் பேரரசின் சிறந்த அரசராக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவனுடைய தந்தை சித்திந்திராதித்யா, தாய் நரேந்திரலட்சுமி. இம்மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம் யசோதபுரம் ஆகும். மிக நீண்ட பரந்த நிலப்பிரதேசம் இவனது ஆளுகையின் கீழ் இருந்தது.

இம்மன்னனது பேரரசு ஆட்சிப்புல எல்லையானது புராதன கெமர் எல்லைகளையும் மீறி மேற்கே சீயம் வரைக்கும், கிழக்கே பாகன் அரசின் எல்லை வரையும் பரந்திருந்தது. தெற்கே மலாய் குடாநாடு முழுவதும் இப்பேரரசுக்குள் இருந்தது. இம்மன்னன் கி.பி 1112 தொடக்கம் 1152 வரை ஆட்சி செய்தான்.

இம்மன்னன் 14 வயதில் அரியணைப் பெறுப்பை ஏற்றுக் கொண்டான். “கருடர் போல் மலை மீதிருந்து குதித்தார்” எனவும் வரலாற்றாசிரியர்கள் இம்மன்னனைச் சிறப்பித்தக் கூறியுள்ளனர். கி.பி 1145இல் சம்பா அரசுடன் இப்பேரரசு இணைக்கப்பட்டு கெமர் பேரரசு பெரும் வியாபகத்தைத் தென் கிழக்காசியாவில் கொண்டு விளங்கிய காலம் இக்காலம் ஆகும்.

இவன் பட்டத்துக்கு வந்த சமயத்தில் சம்பா மன்னனான இரண்டாம் இந்திரவர்மனும், பாகன் மன்னனான கியாசித்தனும் இறந்தனர். கெமர் வரலாற்றிலேயே ஒருபோதும் படையெடுத்து செல்லாத பிரதேசங்களுக்கு இரண்டாம் சூரியவர்மனின் படைகள் சென்றன.

இருப்பினும் இவனது ஆட்சிக்கால கல்வெட்டுகளில் இவன் சம்பா, அன்னம் ஆகிய நாடுகளின் மீது படையெடுத்தமை பற்றியோ, மொன்களையும், தாய்களையும் தாக்கியமை பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இவனது கல்வெட்டுக்கள் பெரும்பாலானவை வடபகுதியில் காணப்படுகின்றன. இதனால் இவனது காலத்தை அங்கு கழித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பல கோயில்களையும் இம்மன்னன் இங்கு அமைத்துள்ளான்.

இரண்டாம் சூரியவர்மன் சம்பாவை வென்றது பற்றி வேறு இடங்களில் விவரிக்கப்பட்டடுள்ளது. இவன் ஆட்சிக்கு வந்ததும் அன்னம், சம்பா ஆகிய நாடுகளின் மீது பலமுறை படையெடுத்தான். இவனுடைய அன்னம் படையெடுப்புப் பேரழிவைக் கொடுத்தது. இவன் நான்கு முறை படையெடுத்து சென்றான்.

இருப்பினும் நான்கு முறையும் தோல்வியடைந்தான். தை – வியட் என்னும் அன்னம் இராச்சியத்துக்கு எதிராக அவன் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உதவ சம்முக்களை நட்பினராகச் சேர்க்க அவன் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தமையே அவன் சம்பா மீது படையெடுக்க காரணமாயிருந்தது.

சம்பா, அன்னம்மோடு சமரசமான முறையில் உடன்படிக்கை செய்து கொண்டதைக் கண்டு அவன் பொறாமையும், வெறுப்பும் அடைந்தான்.

இறுதியில் சம்பாவின் மீது போர் தொடுக்கப் பெரும்படையுடன் இம்மன்னன் சென்றான். முதல் முயற்சியில் அவன் வெற்றி அடைந்தான். இதனால் சம்பாவின் வடபகுதியான விசய இராச்சியம் அவனுக்குக் கப்பம் கட்ட இசைந்தது.

ஆனால் அவன் சம்பாவின் தென்பகுதியை கைப்பற்ற விரும்பி இருமுறை அதன் மீது படையெடுத்துச் சென்றபோது படுதோல்வி அடைந்தான்.

சவன்னக்கெட்டிலிருந்து கே - அன் வரையிருந்த நிலப்பாதை மூலம் அன்னத்தின் மீது படையெடுக்க இம்மன்னன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

அடுத்து இம்மன்னன் குலோத்துங்க சோழனின் உதவியுடன் வியட்நாமையும் வெற்றி கொண்டான். இதனடிப்படையில் முதலாம் குலோத்துங்க சோழனுடன் மிகச் சிறந்த நட்புறவைப் பேணினான்.

இரண்டாம் சூரியவர்மன் மேற்கே படையெடுத்தமை பற்றிய விடயங்கள் தெரியவில்லை. தாய்கள் மீனாம் பள்ளத்தாக்கில் ஊடுருவி லாவோ மாகாணத்தில் குடியேறத் தொடங்கினர்.

அம் மாகாணத்திலும் ஹரிபுஞ்சயம் என்ற மொன் இராச்சியத்திலும் அவனது படையெடுப்பு தோல்வியடைந்ததென தாய் வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.

ஆனால் அக்காலத்து லோப்புரிக் கட்டடக்கலையில் கெமர் அம்சங்கள் பெரும் அளவில் காணப்படுவதால் இக்கூற்றில் சந்தேகம் உள்ளது. கெமர் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகள் குறிப்பிடத்தக்களவு பரந்திருப்பதாக சுங் வரலாறு கூறுகின்றது.

சம்பாவின் தென் எல்லைக்கோடு, தெற்கே கடல், மேற்கே பாகன் நாட்டு எல்லைக்கோடு, மலாயத் தீபகற்பத்தின் கிழக்குக் கரையிலுள்ள கிறைஹி என்பவற்றை கம்போடியாவின் எல்லைப் புறங்களாக சுங் வரலாறு கூறுகின்றது.

பல இடர்பாடுகள் இவனுடைய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட போதிலும் சூரியவர்மன் பெரியதொரு பேரரசை ஆண்ட ஆற்றல்மிக்க பேரரசனாக போற்றப்படுகின்றான்.

இம்மன்னனது அயலகத் தொடர்பைப் நோக்கும் போது இரண்டாம் ஜயவர்மனுக்கு பிறகு சீனாவுடன் தூதுக்குழு தொடர்பு வைத்திருந்த முதல் கம்போடிய மன்னன் இரண்டாம் சூரியவர்மன் ஆவான்.

கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பின் சீன நட்புறவை இவன் புதுப்பித்துக் கொண்டான். 1116, 1120 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நல்லெண்ணத் தூதுக்குழுவினை சீனாவுக்கு அனுப்பினான்.

எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்றாவது தூதுக்குழு சீனா சென்றபோது சீனப் பேரரசன் சூரியவர்மனுக்கு பல பட்டங்கள் வழங்கிப் பாராட்டியதாகக் கூறப்படுகின்றது.

இவனது காலத்தில் காம்போஜப் பேரரசு மிகப்பரந்த ஒன்றாக விளங்கியது. கம்போடியாவை விரிவுபடுத்தும் நோக்கில் பல சிற்றரசர்களை வென்று மிகப்பெரிய கம்போடிய இராச்சியத்தை உருவாக்கினான்.

இதனால் இவன் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள் பல உண்டாகின. எனினும் காம்போஜப் பேரரசின் பரப்பும், ஆதிக்கமும் பெருகிக் கொண்டது. 1136க்கும் 1147க்கும் இடையே வாணிபப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு சமாதான முறையில் தீர்க்கப்பட்டன.

இம்மன்னன் போரில் சிறந்து விளங்கியதைப் போன்று கட்டடங்களை அமைப்பதிலும் சிறந்து விளங்கினான். 700க்கு மேற்பட்ட கோயில்கள் இவன் காலத்தில் கட்டப்பட்டது. இவனால் கி.பி 1113இல் உருவாக்கப்பட்ட பேரரசமுகாமையுடன் அங்கோவாட்டின் உச்சமான கலை வளர்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் பேரரசின் மாண்புமிக்க பழம்பொருள் சின்னங்கள் இன்றும் நின்று நிலவுகின்றன. உலகப் பேரதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற சிறப்புமிக்க அங்கோர்வாட் கோயிலை கட்டியதன் மூலம் இரண்டாம் சூரியவர்மன் இறவாப் புகழ் பெற்றுத் திகழ்கின்றான்.

போரின் மூலம் அங்கோவாட் பகுதியைக் கைப்பற்றிய இம்மன்னன் போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், இந்திய பாரம்பரியத்தையும், கலைநயத்தையும் அன்னிய மண்ணில் பதிக்கும் வகையிலும் 12 ஆம் நூற்றாண்டில் இக்கோயிலைக் கட்டினான்.

இரண்டாம் சூரியவர்மன் ஓர் இந்து அரசனாவான். இருப்பினும் அங்கோர்வாட் என்ற விஸ்ணு ஆலயம் இவனால் அமைக்கப்பட்டது. அங்கோர்வாட் என்பது “கோயில்களுடைய நகரம்” எனச் சிறப்பிக்கப்படுகின்றது.

பெருமிதம், ஆற்றல், ஆதிக்கம், இயைபு, அழகு ஆகியவற்றின் திரண்ட வடிவமான அங்கோர்வாட் கோயில் இவனது ஆட்சியின் மிகச்சிறந்த படைப்பாகும்.

இக் கோயில் சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மன்னன் இவ்வாலயத்தை பெரிய அகழிக்கிடையே அமைத்துள்ளான். இதனால் இவ்வாலயம் ஓர் ஏரிக்கு நடுவே சிறுதீவைப் போன்று அழகாகக் காட்சியளிக்கின்றது. இது இம்மன்னனுடைய சிறந்த தொழில்நுட்ப அறிவைப் பறை சாற்றுகின்றது.

இவ்வாலயம் நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சமுதாயத்தின் உள்ளத்தில் அருளுணர்வையும், ஒற்றுமை நயத்தையும் ஊட்டுவித்து, மக்களுக்கும் விண்ணுலகிற்கிடையிலும், சிற்றண்டத்திற்கும் பேரண்டத்திற்கும் இடையிலும், அரசருக்கும் தெய்வங்களுக்கிடையிலும் ஒருவகை ஆண்மிகத் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் இவ்வாலயத்தை இரண்டாம் சூரியவர்மன் அமைத்துள்ளான்.

திராவிடக் கலைப்பாணியைக் கொண்டு இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் நேர்த்தியான புடைப்புச் சிற்பங்கள் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்தியக் காப்பியங்களில் காணப்படும் கதை நிகழ்ச்சிகளே இங்கு சிற்பங்களாகவும், ஒவியங்களாகவும் காட்சி தருகின்றன.

அங்கோர்வாட்டின் பேரழகும், பல்சுவை நல்கும் சிற்ப அலங்காரமும் அதற்கொரு தனிச் சிறப்பைக் கொடுத்துள்ளன. இவை இம்மன்னனின் கட்டடக்கலை நுட்பத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது.

அங்கோர்வாடின் நான்கு மூலைகளிலும் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மத்திய மண்டபத்தில் கருட வாகனத்தில் அமர்ந்த திருமாலின் சுவர்ண விக்கிரகம் காணப்பட்டது.

அது உற்சவ காலங்களில் அதன் மூலஸ்தானத்தில் இருந்து வெளியே எடுத்து செல்லப்படும். அது திருமாலாக மதித்து வழிபடப்பட்ட அரசனைக் குறித்தது.

இக்கோயிலின் சுற்றரங்கின் தென்பகுதியில் இரண்டாம் சூரியவர்மன் நகர்வலம் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. அங்கோர்வாட் கோயிலை இமயமலையையும் அதன் ஐந்து உச்சிகளையும் உருவகப்படுத்தி சூரியவர்மன் அமைத்துள்ளான்.

இக்கோயிலில் காணப்படும் சிற்பங்கள் இரண்டாம் சூரியவர்மன் எவ்வாறு ஆட்சி புரிந்தான் என்பதை உலகுக்குப் பறை சாற்றுகின்றன.

சூரியவர்மனின் போர்த்திறனை விளக்கம் சிற்பங்களும் அங்கோர்வாட் கோயிலில் காணப்படுகின்றது. 27 வருடங்கள் அங்கோர்வாட் பகுதியை ஆண்ட இரண்டாம் சூர்யவர்மன் இறக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே அங்கோர்வாட் கோயிலின் வேலைகள் நிறைவடைந்தன.

அங்கோர்வாட் கோயில் மேற்கு நோக்கி இருப்பதை வைத்து இக்கோயில் இரண்டாம் சூரியவர்மன் இறந்த பின்பு அவனது அஸ்தியை வைக்கும் இடமாகவும் கட்டப்பட்டிருக்கலாம் என சில அறிஞர்கள் கருதுகின்றனர். இவனுடைய சமாதியும் இக்கோயிலுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் சூரியவர்மன் தன்னை விஸ்ணுவின் அவதாரமாகக் கொண்டதாகவும் தான் இறந்த பின்னர் தன்னை இவ் ஆலயத்தில் புதைக்கும் படி அம்மன்னன் வேண்டிக் கொண்டதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

கம்பீரமாக விளங்கும் இக்கோயில் இம்மன்னன் இறந்ததும் அவனது கல்லறைக் கூடமாகத் திகழ்ந்தது. சூரியவர்மன் போன்ற கெதிரி மன்னர்கள் ஜாவாவில் திருமாலின் அவதாரங்களாக கருதப்பட்டனர்.

இரண்டாம் சூரியவர்மன் சமய வாழ்க்கையிலும் பெரிதும் ஈடுபாடு உடையவன். இவனது காலத்தில் சைவசமயமும், வைணவமும் சிறப்புடன் திகழ்ந்தன. அக்காலத்தில் சைவசமயம் சார்ந்த காட்சிகள் அங்கோவாட் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளமை மூலம் அக்கால சைவ சமயத்தின் சிறப்பை அறிந்து கொள்ள முடிகின்றது.

ஆயினும் வைணவத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எது எவ்வாறு இருப்பினும் இவனுடைய காலத்தில் இரு சமயங்களும் கலந்த இணைப்பாகக் காணப்பட்டது. “நமச்சிவாய” என்ற தொடக்கத்தோடு இம்மன்னன் கல்வெட்டுக்களையும் அமைத்துள்ளான்.

திவாகர பண்டிதர் என்ற குரு பெருமறை என்னும் தாந்திரீகக் கலையைப் பற்றிய தெய்வீக உண்மையை இவ்வரசனுக்கு போதித்து அருளினான். அக்குருவின் விருப்பப்படி சூரியவர்மன் பல யாகங்கள் செய்தான்.

இவன் ஆட்சிக்காலத்தில் அமைந்த மற்றுமொரு ஆலயம் தொம் மனோன் என்பதாகும். போர்கள் நடைபெறும் போது நாட்டு மக்களையும், உணவுத் தானியங்களையும் பாதுகாக்கும் இடங்களாக ஆலயங்கள் இவனுடைய காலத்தில் நிகழ்ந்தன.

2ஆம் சூரியவர்மன் எந்த ஆண்டில் இறந்தான் என்பது பற்றி தெரியவில்லை. 1149இல் இம் மன்னன் ஆட்சி செய்து கொண்டிருப்பதாகச் சம்முகக் கல்வெட்டு காட்டுகிறது.

தொங்கிங்குக்கு எதிராக சென்று 1150இல் தோல்வியுற்ற கம்போடியப் படையை சூரியவர்மன் அனுப்பியிருக்கக் கூடும் என்றும் அவன் அவ்வாண்டிலேயே இறந்திருக்கலாம் என்று சிதே கருதுகின்றார்.

இம்மன்னனது இறப்புக்குப் பின் பரமவிஸ்ணுலோகன் என்ற பெயர் சூட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டான். இம்மன்னன் மேற்கொண்ட பிரம்மாண்டமான கட்டிடங்கள், போர்கள், அயல்நாட்டு கொள்கைகள், சமய அனுட்டானங்கள் என்பவற்றால் வரலாற்றில் முக்கிய இடம் பெறுகின்றான்.

- தனுஷா மோகனதாசன்

Pin It