எல்லாக் குழந்தைகளுக்கும் உடல் நலமும் மன நலமும் முக்கியம் என்பதனால் தான் பட்டுக்கோட்டையார் கூட பாடுவார்,

"ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

அதுதாண்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு

அதுவே நீ தரும் மகிழ்ச்சி..."

இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் கொடுப்பதில்லை என்பதுதான் வருத்தமான செய்தி. சுவாமி விவேகானந்தர் சொல்வார், "ஒற்றைச் சிறகோடு எந்த பறவையும் பறக்க முடியாது". வாழ்க்கை வானில் வட்டமிட்டு பறக்கப் போகும் நமது குழந்தைகளின் ஒரு சிறகாகக் கல்வியும் மற்றொரு சிறகாக விளையாட்டுமாக இருக்க வேண்டிய சூழலை மாற்றி, விளையாட்டு என்னும் சிறகை ஒடித்து கல்வி என்னும் ஒற்றைச் சிறகோடு விடுவதால்தான் அவர்களால் வாழ்கையில் உயரே பறக்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் படிப்பு நமக்கு அளவற்ற செல்வங்களை அள்ளித்தருகிறது. பெயர், பதவி, பணம், நல்ல துணை என எல்லாவற்றையும் கொடுக்கிறது என்பதுதான். ஆனால் இவற்றையெல்லாம் அனுபவிக்க நல்ல உடல்நலத்தை கொடுக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. இன்றைக்கு இருக்கிற மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறையானது நம்மிடம் இருந்து பறித்துக்கொண்ட  முக்கியமான ஒன்று விளையாட்டாகும். வழக்கமாக பள்ளியில்வரக்கூடிய வாரத்திற்கு இரண்டு உடற்பயிற்சி பாடவேளைகளைக்கூட இதர பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல் என மருத்துவம் மற்றும் பொறியியல் மேற்படிப்புகளுக்கு அடிப்படையாக விளங்கும் பாடங்கள் களவாடிக்கொள்கின்றன. பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களின் விளையாட்டைப்  பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களுடைய ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் போட்டி போட்டு பறித்துக்கொண்டனர். எனவே அவர்களுக்கு அவற்றை மீட்டுத் தருவது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இந்தச் சமூகத்தின் கடமையாகும்.

எந்தச் சமூகத்தில் காவல் நிலையங்களும் நீதிமன்றங்களும் மருத்துவமனைகளும் குறைவாகத் தேவைப்படுகிறதோ அந்த சமூகம் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளது என்று பொருள். தமிழர்களின் பெரும்பாலான விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி ஒழுக்கம், நேர்மை, ஆரோக்கியத்தின் மேல்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. விளையாடுபவர்களே நடுநிலையோடும் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் பெற்றிருப்பதால்தான் இவர்கள் விளையாட்டுக்கென்று ஒரு தனி நடுவரை வைத்துக்கொள்வதில்லை. இந்த கட்டுரையின் மூலம் கள்ளன் போலீஸ் என்னும் விளையாட்டை எப்படி ஆடுவது அதன் வாயிலாக குழந்தைகள் என்ன கற்கிறார்கள் என்று பார்ப்போம்.

திருடன் போலீஸ் அல்லது கள்ளன் போலீஸ் என்ற விளையாட்டை வீட்டிற்குள்ளேயோ அல்லது வீட்டிற்கு வெளியிலேயோ விளையாடும் விளையாட்டாகும். பொதுவாக இந்த விளையாட்டைக் குறைந்தது நான்கு பேர் சேர்ந்து விளையாடுவார்கள். நான்கு சீட்டை எடுத்து அதில் ராஜா, ராணி, போலீஸ் மற்றும் திருடன் என்று எழுதி வைத்திருப்பார்கள். ஒவ்வொரு சீட்டில் எழுதப்பட்டிருக்கும் பெயருக்கும் ஒரு மதிப்பெண் இருக்கும். உதாரணமாக ராஜாவுக்கு 100, ராணிக்கு 50, போலீஸுக்கு 10, திருடனுக்கு 0 என்று  மதிப்பெண்கள் கொடுத்துக்கொள்வார்கள். சிலசமயங்களில் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமானால், மந்திரி, சிப்பாய் என சில சீட்டுக்களையும் எழுதி சேர்த்துக்கொண்டு அதற்குத் தகுந்தாற்போல மதிப்பெண்ணையும் போட்டுக்கொள்ளவது வழக்கம். இப்படியாக நான்கு சீட்டுக்களையும் எழுதி ஒன்றுபோல சுருட்டியோ அல்லது மடித்தோ, யாராவது ஒருவர் குலுக்கி போடுவார்கள். குலுக்கிப் போட்ட சீட்டை அவசர அவசரமாக ஆளுக்கொரு சீட்டு எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொருக்கும் தனக்கு வந்த சீட்டைத்தவிர மற்றவர்களுக்கு, யார் யாருக்கு என்ன சீட்டு வந்துள்ளது என்று தெரியாது.

போலீஸ் என்று எழுதப்பட்ட சீட்டு யாரிடம் உள்ளதோ அவர் மட்டும் தைரியமாக நான்தான் போலீஸ் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வார். மேலும், அவருக்குத் திருடன் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய கடமை இருக்கிறது. சரியாகத் திருடன் யார் என்று கண்டுபிடித்தால் போலீஸ் சீட்டு எடுத்தவருக்கு 10 மதிப்பெண்ணும் திருடனுக்கு 0 மதிப்பெண்ணும் கொடுக்கப்படும். ஒருவேளை தவறாகக் கூறினால் திருடனுக்கு 10 மதிப்பெண்ணும், தவறாக கூறிய போலீஸ்க்கு 0 மதிப்பெண்ணும் கொடுக்கப்படும். விளையாடுபவர்களின் பெயர்களை ஒரு காகிதத்தில் எழுதி ஒவ்வொரு சுற்று முடிவிலும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை அதில் குறித்துக்கொள்ளப்படும். பல சுற்று ஆட்டத்திற்குப் பின் ஆட்டம் முடியும் நேரத்தில் யாருடைய மதிப்பெண்கள் அதிகமாக இருக்கிறதோ அவர் வெற்றி பெற்றவராவார். படிப்பில்தான் மதிப்பெண்கள் உயிரை வாங்குகிறது என்றால் இங்கேயும் மதிப்பெண்கள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறதா? என்று நீங்கள் எண்ணக் கூடும். இது வெறும் மதிப்பெண்களை பெறவைப்பதல்ல இந்த விளையாட்டின் நோக்கம், மதிப்பான எண்ணங்களை பெறவைப்பதுதான் இந்த விளையாட்டின் நோக்கம்.

ஒவ்வொருமுறை ஆடும் போதும் சீட்டை அடையாளம் காணாமல் இருக்க, சீட்டை ஒவ்வொரு முறையும் பல்வேறு வடிவங்களில் தினுசு தினுசாக மடிப்பதோடல்லாமல், அனைத்து சீட்டுகளும் ஒரே மாதிரி மடிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும், அனைவரும் பரிசோதித்துக் கொள்வார்கள். சில சமயம் போட்டி போட்டுக் கொண்டு சீட்டை எடுக்கும்போது காகிதம் கிழிந்து விடும் விபரீதங்களும் நடப்பதுண்டு.

பள்ளியின் கோடை விடுமுறையில் மதியம் உச்சி வெய்யிலில் பிள்ளைகளை  வெளியே விளையாட அனுமதிக்கமாட்டார்கள். அப்பொழுதெல்லாம் இப்படி வீட்டிற்குள்ளேயே கள்ளன் போலீஸ் விளையாடுவார்கள்.

இதே கள்ளன் போலீஸ் விளையாட்டை விட்டுக்கு வெளியில் விளையாடும்போது கிட்டத்தட்ட நிஜ போலீஸ் திருடனை துரத்திச்சென்று பிடிப்பதைப் போல் இருக்கும். கள்ளன் போலீஸ் விளையாட்டை வெளி களத்தில் விளையாடும்போது ஆட்டக்காரர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து கொள்வர் அதில் ஒரு அணியினர் போலீஸ்காரர்களாகவும் மற்றொரு அணியினர் திருடர்களாகவும் இருப்பார்கள். திருடர்கள் சில பொம்மைகளையோ அல்லது வேறு ஏதாவது ஒரு முக்கியமான பொருள்களையோ திருடிக்கொண்டுபோய் மறைந்துகொள்வர்கள். அப்படி மறைந்துகொள்ளும் திருடர்களை போலீஸ்காரர்கள் துரத்திக்கொண்டுபோய் பிடிப்பார்கள். இந்த நிகழ்வு நிஜத்தில் போலீஸ் திருடர்களைத் துரத்திப்பிடிப்பதை போன்ற உணர்வை விளையாடும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும்.

திருடன் போலீஸ் விளையாட்டின் வாயிலாக நம் பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்கிறார்கள்? சமூகத்தில் ராஜா, ராணி போன்ற சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் தன் பணியின் மூலம் வாழ்க்கை நடத்தும் போலீஸ்காரர்கள் போன்ற நடுத்தர வர்க்க மக்களும் மற்றவர்களின் உழைப்பையே திருடி வாழும் திருடர்களும் இந்த சமூகத்தில் உள்ளார்கள் என்பதை  நமது பிள்ளைகள் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது இந்த விளையாட்டு. இதில் நம் குழந்தைகள் எந்த மாதிரி மனிதர்களாக வாழ விரும்புகிறார்கள் என்று அவர்களின் வாழ்வை வடிவமைத்துக் கொள்ள உதவுகிறது இந்த விளையாட்டு.

சமூகத்தில் போலீஸ்காரர்கள், தாங்கள் யார்? என்ன வேலை செய்கிறார்கள் என்பதைப் பெருமையோடு பிறரிடம் சொல்ல முடியும். திருட்டுத் தொழிலைச் செய்பவர்கள் வெளியில் சொல்லவும் முடியாது நடமாடவும் முடியாது எந்த நேரத்திலும் நாம் பிடிபடலாம் என்ற அச்சத்தோடு வாழ்க்கை நடத்துபவர்கள் என்பதை இந்த விளையாட்டை விட வேறு எது தெளிவாக  சொல்ல முடியும் நம் குழந்தைகளுக்கு.

ராஜா, ராணி போன்றவர்களுக்கு உழைக்காமலே கிடைக்கும் மதிப்பெண்கள் போல அவர்களுக்கான வாழ்வாதாரம் வலுவாக உள்ளது என்பதையும் அன்றாடம் ஒழுங்கா உழைத்தால் மட்டுமே தங்களுக்கான வாழ்வாதாரத்தைச் சம்பாதிக்கமுடியும் சற்று ஏமாந்தால் கூட திருடர்கள் அதை தட்டிப்பறித்துக்கொள்வார்கள் என்பதை போலீஸ் மூலம் நமது பிள்ளைகள் தெரிந்துகொள்ளலாம். வாழ்வில் எத்தகைய சூழல் வந்தாலும் அச்சப்பட்டு வாழும் திருடனைப் போல ஒருபோதும் வாழக்கூடாது என்று நம் குழந்தைகளுக்கு மன உறுதியைக் கொடுக்கிறது இந்த விளையாட்டு.

இந்த விளையாட்டில் யாரிடம் திருடன் சீட்டு உள்ளது என்பதை அவர்களின் முக பாவனைகளைக் கொண்டே கண்டறியும் போலீஸ்காரர் போல நமது பிள்ளைகளும் மற்றவர்களின் முக பாவனைகளைக் கொண்டு ஒருவர் எப்படிப்பட்ட மனிதர் என கண்டறியும் திறனை வளர்த்துக்கொள்ள இந்த விளையாட்டு உதவுகிறது. ஒரு காலத்தில் கை நாட்டை கையெழுத்து போடச்சொல்லிக் கொடுத்தது நமது கல்வி, அதிலும் பல போலி கையெழுத்து போட்டு ஏமாற்றும் நபர்கள் பெருகவே, தற்போதைய தொழில் நுட்பம் கையெழுத்து போடுபவனையும் கைநாட்டு வைக்கச்சொல்கிறது கார்பரேட் கம்பெனிகள்.

அதிலும் ஏமாற்றுபவர்கள் அதிகம் இருப்பதால் இப்பொழுது விமான நிலையங்களில் முகம் பார்த்து அடையாளம் காணும் கருவி பொறுத்த இருப்பதாக இந்திய அரசு சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. முதலில் ஒரு சில குறிப்பிட்ட விமான நிலையத்தில் சோதனை முறையில் அறிமுகம் செய்து பின்பு எல்லா விமான நிலையத்திற்கும் அதை விரிவுபடுத்த உள்ளதாக வந்த செய்தியைப் படித்தவுடன் தமிழர்களின் முகம் பார்த்தே ஒருவனை திருடனா நல்லவனா எனக் கண்டறியும் கள்ளன் போலீஸ் விளையாட்டின் மகிமை புரிந்தது.

பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் எந்த வேலை செய்தாலும் அது நாலுபேருக்கு மத்தியில் தன் பணியை சொல்லிக்கொள்கிற பணியாக அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் கள்ளன் போலீஸ் விளையாட்டை விளையாடச் சொல்லிக்கொடுப்போம். அது நமது குழந்தைகளுக்கு எப்படி எல்லாம் வாழ வேண்டும் எப்படி எல்லாம் வாழக்கூடாது என சொல்லிக்கொடுக்கும்.

இன்னும் விளையாடலாம்

Pin It