பழந்தமிழ்ச் சமூகத்தின் மிகச் சிறந்த காலகட்டம் சங்க காலம் என்பதைப் பலரும் ஏற்கின்றனர். ஆனால் அதன் காலம் எது? அது எத்தகைய சமூகம்? பலரும் அதன் காலத்தைக் கி.மு. 300 முதல் கி.பி. 250 வரை எனக் கருதுகின்றனர். ஆனால் சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும், சங்கம் மருவிய காலம் கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை எனவும் ஆசிரியரின் நூல் உறுதி செய்துள்ளது. சங்க காலத் தமிழ்ச் சமூகம் ஒரு உயர் வளர்ச்சி பெற்ற, கிரேக்க நகர அரசுகளைப் போன்ற நகர அரசுகளைக் கொண்ட, ஒரு தனித்துவமான மிகச் சிறந்த சமூகம் என்பதையும், அதன் காலம் கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை என்பதையும் உறுதி செய்யப் பல கோணங்களில், பல தளங்களில் செய்த ஆய்வும் அதன் முடிவும், ‘பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்’ என்ற ஆசிரியரின் நூலில் தரப்பட்டுள்ளது.

சங்க காலத்தின் தொடக்க காலம் - கி.மு.750:

தொல்கபிலர் எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்த ஒரு தமிழர். அவர் ஒரு தமிழர் என்பதை ஆய்வு செய்து பல சான்றுகளுடன் உறுதி செய்துள்ளார் க.நெடுஞ்செழியன்(1). தொல் கபிலர் வட இந்தியாவில் தோன்றுவதற்கான பின்புலம் அங்கு இல்லை எனவும், அவர் தமிழகத்தில் தோன்றுவதற்கான பின்புலம் இங்கு உள்ளது எனவும் ஆசிரியரது நூல் உறுதி செய்துள்ளது. புறநானூறு, தொல்கபிலரை முதுமுதல்வன் எனவும், அவர் எழுதிய நூலை 24 கூறுகளைக் கொண்ட மிகத் தொன்மையான நூல் எனவும், 21 துறைகளைக் கொண்ட ஒரு ஏரண(தருக்க) நூல் எனவும் குறிப்பிடுகிறது(2). சங்க இலக்கியத் தொகுப்புகள் அவரது தொன்மையையும், சிறப்பையும் குறிக்கும் வகையில் அவரைத் தொல்கபிலர் என்கின்றன. சித்தர் பத்ரகிரியார் அவரை ஆதிகபிலர் என்கிறார். வடமொழி நூல்கள் அவரை கபிலர், கபிலமுனி எனக் கூறுகின்றன. சில வடமொழி நூல்கள் அவரை ‘அசுரர்’ என்கின்றன. பாகவதம் என்ற நூல் அவரை கடவுளின் அவதாரம் என்கிறது. ஆதி சங்கரர் அவரை மிகப்பெரிய அறிவாளி என்கிறார். ஆகவே கி.மு 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை 1500 ஆண்டுகாலம் இந்திய அளவில் மிகப் புகழ் பெற்ற ஒரு பேரறிஞராக தொல்கபிலர் இருந்துள்ளார். அவரது எண்ணிய மெய்யியல் தமிழகத்தில் முதலில் தோன்றிய ஒரு முழுமையான தத்துவார்த்த அறிவியல் கோட்பாடு என்பதால், ஆசிரியர் தொல்கபிலரை “தமிழ் அறிவு மரபின் தந்தை” என்கிறார்.

kaniyan balan book on tamil historyமகாபாரதத்திலேயே சாங்கியம் மிகப் பழமையானது எனக் கூறப்பட்டுள்ளது எனவும், சாங்கியம் புத்தருக்கும் மகாவீரருக்கும் முந்தையது எனவும், உபநிடதங்கள் கூட சாங்கியம் அவற்றுக்கு முந்தையது எனக் காட்டுகின்றன எனவும் சட்டோபாத்தியாய கூறுகிறார்(3). கி.மு. 7ஆம் என்கிற தொன்மை உபநிடதங்களின் காலத்தைக் குறிக்கிறது.(4) ஆகவே மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த, உபநிடதங்களுக்கும் முந்தைய சாங்கியத்தின் காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு எனக் கொண்டு தொல்கபிலரின் காலம் கி.மு. 750 எனக் கணிக்கப்பட்டது. தொல்கபிலர் பாடிய ஆறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளதால் அதன் அடிப்படையில் சங்க இலக்கியத்தின், சங்க காலத்தின் தொடக்க காலம் கி.மு. 750 என உறுதி செய்யப்பட்டது.

சங்க காலத்தின் இறுதிக் காலம் கி.மு.50:

சங்க காலத்தின் இறுதிக் காலகட்ட நூலான முத்தொள்ளாயிரம் பாண்டியன் மாறன் வழுதி, சோழன் நலங்கிள்ளி, சேரன் குட்டுவன் கோதை ஆகிய மூன்று சமகால வேந்தர்களைப் பற்றிப் பாடுகிறது. சேரன் குட்டுவன் கோதையின் நாணயமும், பாண்டியன் மாறன் வழுதிக்கு முன்பு ஆண்ட பெருவழுதிகளின் தலைவடிவப்பெருவழுதி நாணயங்களும் கிடைத்துள்ளன. இந்த குட்டுவன் கோதையின் நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், தலைவடிவப்பெருவழுதி நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதி எனவும் நாணயவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்(5). ஆகவே குட்டுவன் கோதையும், மாறன் வழுதியும் கி.மு. முதல் நூற்றாண்டு ஆவதோடு அவர்களது சம காலத்தவனான சோழன் நலங்கிள்ளி கி.மு. முதல் நூற்றாண்டு ஆகிறான். முத்தொள்ளாயிரம் சோழன் நலங்கிள்ளி ஈழத்தை வென்றதோடு உச்சயினிவரை படையெடுத்து அதனையும் வென்றான் எனக் கூறுகிறது(6).

வரலாற்று ஆய்வாளர் டி.டி. கோசாம்பி கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்கேயிருந்து வந்த சாதவாகனர்கள் உச்சயினியைத் தாக்கி சுங்க வம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தனர் என்கிறார்(7). ஆனால் கி.மு. 124 முதல் கி.மு. 30 வரையான கால கட்டத்தில் சாதவாகனர்கள் வலிமையற்றவர்களாக இருந்தார்கள்(8). ஆகவே அவர்களால் கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் உச்சயினியைத் தாக்கியிருக்க முடியாது. ஆதலால் தெற்கேயிருந்து வந்த சோழன் நலங்கிள்ளிதான் உச்சயினியைத் தாக்கிச் சுங்க வம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தவன்(கி.மு.82-80). நலங்கிள்ளிக்குப் பின் அவன் மகன் ஆண்டான். அவனே இறுதிச் சங்க கால சோழவேந்தன். முத்தொள்ளாயிரம் குறிப்பிடும் சேரன் குட்டுவன் கோதையும், பாண்டியன் மாறன் வழுதியும் இறுதிச் சங்க காலச் சேர பாண்டிய வேந்தர்கள். இவர்கள் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆண்டவர்கள். ஆகவே இவர்களின் ஆட்சிக் காலம் கி.மு. 50க்குள் இருக்கும் எனக் கணித்து சங்க காலத்தின் இறுதிக் காலம் கி.மு. 50 என உறுதி செய்யப்பட்டது. நாணயங்களின் காலமும், கோசாம்பியின் உச்சயினி குறித்தான வரலாற்றுத் தரவும் இந்தச் சங்க காலத்தின் இறுதிக் காலத்துக்கு உறுதியான சான்றாதாரங்களாக இருக்கின்றன.

சங்க காலம் - கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை:

சங்க காலம் என்பது மேற்கண்ட தரவுகளின்படி தொல்கபிலரின் காலமான கி.மு. 750இல் தொடங்கி கி.மு. 50இல் முடிவடைகிறது. ஒரு மொழியில் எழுத்து உருவாகாமல் சிறந்த இலக்கியங்கள் உருவாகாது. ஆகவே தமிழ் மொழிக்கு கி.மு. 750க்கு முன்பே எழுத்து உருவாகியிருக்க வேண்டும். தமிழ் மொழிக்கான ‘தமிழி’ எழுத்தின் தொடக்க காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்பதை பொருந்தல், கொடுமணல், கொற்கை, ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வுகள் உறுதி செய்துள்ளன(9). தமிழி எழுத்துக்கு முன் கி.மு. 1000 வாக்கில் தமிழர்கள் குறியீடுகளைத் தங்களின் எழுத்தாகப் பரவலாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என குறியீடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த முனைவர் க. இராசன், முனைவர் பவுன்துரை ஆகியவர்கள் உறுதி செய்துள்ளனர்(10). மயிலாடுதுறை செம்பியன் கண்டியூரில் கிடைத்த கற்கோடாலியில் இருந்த குறியீடுகளைப் படித்துப் பொருள் கூறியதோடு அதன் காலம் கி.மு. 1500 எனத் தொல்லியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார்(11). ஆகவே இத்தரவுகள் தமிழ் மொழியின் எழுத்தாகக் குறியீடுகள் கி.மு. 1000 வாக்கில் தமிழகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன என்பதை உறுதி செய்கின்றன. கி.மு. 1000 வாக்கில் தமிழ் மொழி தனக்கான எழுத்தைக் கொண்டிருந்ததால்தான், கி.மு. 750 என்பது சங்க இலக்கியத்தின் தொடக்க காலமாக ஆகிறது.

இலங்கையின் மகாவம்ச நூல், சிலப்பதிகாரப் பதிகம் ஆகியவற்றிலுள்ள வரலாற்றுச் சான்றாதாரமற்ற தரவுகளைக் கொண்டு சேரன் செங்குட்டுவனின் காலம் கிபி. 2ஆம் நூற்றாண்டு என முடிவு செய்யப்பட்டு, அந்த முடிவின் அடிப்படையில் சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 250 வரை என கருதப்பட்டு வருகிறது. சம்பைக் கல்வெட்டு, அசோகர் கல்வெட்டு, புகளூர் கல்வெட்டு, தலைவடிவப்பெருவழுதி நாணயங்கள், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள், இலக்கியக் கணிப்புகள் போன்ற பலவற்றைக் கொண்டு முழுமையான ஆய்வுகளைச் செய்து, சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதை ஆசிரியரின் நூல் நிறுவியுள்ளது(12). அதுபோன்றே வரலாற்றுப் பெரும்புலவர் மாமூலனாரின் பாடல்களையும் பிற சங்ககாலப் பாடல்களையும் கொண்டு, வட இந்தியாவின் மகத அரசில் ஏற்பட்ட நந்த-மௌரியர் அரசியல் மாற்றங்களையும், மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பையும், அதனைச் செருப்பாழிப் போரில் முறியடித்த செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியின் தலைமையிலான தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி படையையும் குறித்த பல்வேறு இலக்கிய, கல்வெட்டு, நாணயச் சான்றாதாரங்களைக் கொண்டு மாமூலனாரின் காலம் கி.மு. 4 ஆம், 3 ஆம் நூற்றாண்டு எனவும் செருப்பாழிப் போரின் காலம் அசோகனின் தந்தை பிம்பிசாரனின் தொடக்க காலம் (கி.மு.297-288) எனவும் உறுதி செய்யப் பட்டுள்ளது(13). இம்முடிவுகள் சங்ககாலம் என்பது கி.மு. 300க்கு மிக முந்தைய காலகட்டம் என்பதை உறுதி செய்கின்றன. கல்வெட்டுகள், நாணயங்கள், இலக்கியக் கணிப்புகள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த உறுதியான வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் காலக் கணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே சங்க காலம் என்பது கி.மு. 300க்கு முந்தைய, கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலம்.

சங்க காலம் நகர அரசுகளின் காலம்:

சங்க காலம் என்பது நகர அரசுகளின் காலம். உலகமெங்கும் முதலில் நகர அரசுகள் தான் தோன்றின. தமிழகத்திலும் நகர அரசுகள்தான் தோன்றின. ஆனால் நமது நகர அரசுகள் 1000 வருடங்களுக்கும் மேல் இருந்தன. அதற்கு நமது அரச பரம்பரைகளிடம் இருந்த சிறப்பு அரசுரிமை முறைதான் காரணம். தந்தைக்குப் பின் மகன், மகனுக்குப் பின் அவனது மகன் என்ற முறை இங்கு இருக்கவில்லை. இங்கு தந்தை ஒரு நகரின் வேந்தனாக இருந்தால் அவனது தம்பிகளும், பின் அவர்களது மகன்களும் பிற நகர்களின் அரசர்களாக இருந்தார்கள். அரச குடும்பத்தில் பிறந்த அனைவரும் உரிய வயதாகும் பொழுது அரசர்களாக ஆக்கப்பட்டார்கள். அவர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாக இருந்தான். மற்றவர்கள் அரசர்களாக இருந்தார்கள். இம்முறைதான் மூவேந்தர்களிடமும் இருந்து வந்தது. அதனால் ஒரே சமயத்தில் 5 அல்லது 6 சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டார்கள். இவை போக வேந்தர்களின் முதுகுடியைச் சேர்ந்த வேளிர்களும், குறிஞ்சி நிலக் குறுநில மன்னர்களும், முல்லை நிலச் சீறூர் மன்னர்களும், மருத நில மூதூர் மன்னர்களும் நிறைய நகர நகர் மைய அரசுகளை ஆண்டு வந்தனர். ஆக அன்று நூற்றுக்கணக்கான நகர, நகர்மைய அரசுகள் இருந்தன.

கி.மு. 1500 வாக்கில் குறியீடுகள் தமிழ் மொழிக்கான எழுத்தாக இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு உருவாகாமல் எழுத்து உருவாகாது என்பதால் கி.மு. 1500 வாக்கிலேயே தமிழகத்தில் நிறைய சிறு குறு நகர அரசுகள் இருந்தன. சான்றாக ஆதிச்ச நல்லூர் கி.மு. 1500 வாக்கிலேயே ஒரு தொழில் நகராக இருந்துள்ளது. அதன் மேல் மட்ட அடுக்கின் காலக்கணிப்பு கி.மு. 2000 என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்குக் கீழ் இரு அடுக்குகள் உள்ளன. அவைகளின் காலம் கி.மு. 4000 வரை இருக்கும் எனக் கருதப்படுகிறது. அங்கு கிடைத்த மிகப் பழமையான மட்பாண்டத்தின் காலம் கி.மு. 4000 என எசு.பதிரிநாராயணன் தெரிவித்துள்ளார்(14). கீழடி அகழாய்வு தமிழகத்தில் நகரங்கள் இருந்தன என்பதை உறுதி செய்துள்ளது. அங்கு 2 மீட்டர் ஆழத்தில் கிடைத்த பொருட்களின் கார்பன் கணிப்பு அதன் காலத்தைக் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என உறுதி செய்துள்ளது(15). அங்கு 6.5 மீ ஆழம் வரை அகழாய்வு செய்ய வேண்டியதுள்ளதால், அதன் காலம் கி.மு. 1500 வரை போகும் எனக் கருதப்படுகிறது. தமிழகத்தில் மூன்று இடங்களில் செம்பு உணர் கொம்புடை வாள்கள் (COPPER ANTENNAE SWORD) கிடைத்துள்ளன. அவை கி.மு. 2000 முதல் கி.மு. 3000 வரை பழமை வாய்ந்தவை(16). இத்தரவுகள் தமிழகத்தில் நகரங்களும், நகர அரசுகளும் கி.மு. 1000க்கு முன்பிருந்து சங்ககாலம் முடியும் வரை(கி.மு.50) கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளன என்பதை உறுதி செய்கின்றன.

நகர அரசுகளின் சிறப்பு:

.நகர அரசுகளில்தான் சுயமான, சுதந்திரமான சிந்தனைகளும், பொருள் முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட முற்போக்குக் கருத்துக்களும் உருவாகின. ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தில் வெனிசு, நேபில்சு போன்ற இத்தாலிய நகர அரசுகளில்தான் முதலில் முற்போக்கான மறுமலர்ச்சிச் சிந்தனைகள் உருவாகின என்பதை வரலாறு உறுதி செய்கிறது. ஆனால் இந்த நகர அரசுகள் பேரரசுகளாக ஆகும்பொழுது அவை மக்களை அடக்கி வைத்துக் கட்டுப்படுத்த மதங்களையும், மூட நம்பிக்கைகளையும் பிற்போக்கான சிந்தனைகளையும் கொண்டு வருகின்றன. சான்றாக கிரேக்க நகர அரசுகளில் இருந்த தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உரோமப் பேரரசில் இருக்கவில்லை(17). கார்டன் சில்டே (Gordon childe) என்ற தொல்லியலாளர் சுமேரிய நகர அரசுகளில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் உயர்வளர்ச்சி அதன் பிந்தைய பேரரசு காலங்களில் ஏற்படவில்லை என்கிறார். நகரங்களின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை அவர் ‘நகர்ப்புரட்சி’ எனக் கூறுகிறார்(18).

தமிழகத்தில் நகர அரசுகள் 1000 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்ததன் காரணமாகவே தொல்கபிலர் போன்ற மாமேதைகள் உருவாக முடிந்தது. தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார், கணாதர், கௌதமனார் போன்றவர்களின் கருத்துக்களால், பொருள்முதல்வாத மெய்யியல் சங்ககாலச் சமூகத்தின் அடிப்படையாக உருவாக முடிந்தது. அதனால் பழந்தமிழக மக்கள் அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்களாகவும், சாதாரண மக்கள் கூட சங்க இலக்கியம் போன்ற உயர்தரமான இலக்கியத்தைப் படைக்கும் அளவு கல்வித் தரம் கொண்டவர்களாகவும் இருந்தனர். சங்க காலத்தில் உருவான மிகச் சிறந்த படைப்புகளில் பெரும்பகுதி அழிந்து விட்டது. அதன் இறுதிக் காலத்தில் உருவான ஒரு சிறு பகுதிதான் சங்க இலக்கியம். அந்த சங்க இலக்கியம் இன்று உலகப் புகழ்பெற்ற படைப்பாகக் கருதப்படுகிறது. அதன் மூலம் நாம் இழந்து போன படைப்புகளின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். தமிழக நகர அரசுகளை மக்களின் பிரதிநிதிகள் கட்டுப்படுத்தினர் என மெகத்தனிசு கூறுவதாக நேரு கூறுகிறார். தமிழக நகர்மைய அரசுகளில் மிக நீண்ட காலத்திற்கு மக்களாட்சிக் கருத்துக்களும், அதன் உறுப்புகளும் நிலைத்திருந்தன. மருதன் இளநாகனார் எழுதிய அகம்-77ஆம் பாடல் அன்று மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன என்பதை உறுதி செய்கிறது. ஆகவே தமிழக நகர அரசுகளில் சுதந்திரச் சிந்தனைகள் நிலவின. நகர அரசுகளின் தொழில் வணிக வளர்ச்சியும் இவைகளுக்கு ஆதரவு தந்தன.

மகதப் பேரரசும் சங்க கால நகர அரசுகளும்:

தமிழகச் சேர சோழ பாண்டிய அரசுகளின் ஆட்சிக்கும், வட இந்திய மகதப் பேரரசின் ஆட்சிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. மிகப் பெரிய, பரந்து விரிந்த பேரரசுகளின் நகரங்களை பேரரசின் மண்டல அதிகாரிகளே ஆட்சி செய்து வந்தனர். பேரரசுகளில் படிப்படியான அதிகார வர்க்க நிர்வாக முறை இருந்து வந்தது. ஆனால் தமிழக நகர அரசுகள் அனைத்துமே தங்கள் நகர அரசுகளை நிர்வகிப்பதில் முழு சுதந்திரம் உடையவைகளாகவும், தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டவைகளாகவும் இருந்தன. அவை மக்கள் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு ஆளப்பட்டன. இவைகளின் காரணமாக தமிழகத்தின் பண்டைய நகர அரசுகள் பலவகையிலும் நன்கு வளர்ச்சி அடைந்தவனாக உருவாகின. ஆதலால், சங்க காலத்தில் இருந்த அளவு எழுத்தறிவும், கல்வியறிவும் வடஇந்தியாவில் இருக்கவில்லை. இங்கு சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்கள் உருவாகின. மகதப் பேரரசு காலத்தில் (கி.மு.600 முதல் கி.மு.30 வரை), வட இந்தியாவில் செவ்வியல் இலக்கியம் எதுவும் உருவாகவில்லை என டி.டி. கோசாம்பி குறிப்பிடுகிறார்(19). இவை போக பிற தொழில்நுட்பமும், உற்பத்தித் திறனும், வணிகமும் பழந்தமிழகத்தில் இருந்த அளவு வட இந்தியாவில் இருக்கவில்லை. அரசியல், பொருளாதாரம், வேளாண்மை, உற்பத்தி, அறிவியல், தத்துவம், தொழில்நுட்பம், கலை இலக்கியம், கல்வி, மருத்துவம், கட்டிடக்கலை, ஓவியம் போன்ற பல துறைகளிலும் கிரேக்க நகர அரசுகளுக்கும் உரோமப் பேரரசுக்குமிடையே இருந்த வேறுபாடுதான் தமிழக நகர அரசுகளுக்கும் மகதப் பேரரசுக்குமிடையே இருந்தது. ஆகவே பழந்தமிழகம் பல துறைகளிலும் மிக உயர்வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது. மகதப் பேரரசு காலத்தில் அதுபோன்ற வளர்ச்சி அங்கு இருக்கவில்லை. அதனால்தான் கி.மு. 3ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி மௌரியப் பேரரசின் பெரும்படையைத் தோற்கடித்து விரட்டியடிக்க முடிந்தது(20). வரலாற்றில் இதனை கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க நகர அரசுகள் பாரசீகப் பேரரசின் பெரும்படையை முறியடித்ததோடு ஒப்பிடலாம்.

பழந்தமிழ்ச் சமூகம்:

ஒரு மொழியில் ‘செவ்வியல் இலக்கியங்கள்’ உருவாக அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு அறிவியல், தத்துவம் ஆகிய பல துறைகளிலும் அம்மொழிக்கான சமூகம் ஓர் உயர் வளர்ச்சியை எட்டிய சமூகமாக இருந்தாக வேண்டும். நமது சங்க காலகட்டத் தமிழ்ச் சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு, அறிவியல், தத்துவம் ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர்வளர்ச்சியை எட்டிய, ஒரு வரலாற்றுக் கால உயர்நிலைச் சமூகமாக இருந்துள்ளதன் காரணமாகவே சங்க இலக்கியம் போன்ற ஒரு செவ்வியல் இலக்கியக் காலகட்டத்தைப் படைக்க முடிந்துள்ளது. எனவே நமது பழந்தமிழ்ச் சமூகம் அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு, அறிவியல், தத்துவம் ஆகிய பலதுறைகளிலும் உயர் வளர்ச்சியடைந்த சமூகமாக இருந்துள்ளது என்பதை அதன் செவ்வியல் இலக்கியம் உறுதி செய்கிறது. பழந்தமிழ்ச் சமூகத்தில் அன்று செல்வம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையிலான வகுப்புகள் இருந்தன. ஆனால் பிறப்பின் அடிப்படையிலான சாதி இருக்கவில்லை. மேலோர் கீழோர் ஆவதும், கீழோர் மேலோர் ஆவதும் நடந்து வந்தது. பொருள்முதல்வாத மெய்யியல் தான் பழந்தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாக இருந்தது. முசிறி அகழாய்வில் கிடத்த ஒரு இலட்சம் பொருட்களிலும் கீழடி அகழாய்வில் கிடைத்த 10,000 பொருட்களிலும் சமயம் சார்ந்த பொருள் எதுவும் இல்லை என்பது அதனை உறுதி செய்கிறது(21).

பழந்தமிழக வணிகமும் தொழில்நுட்பமும்:

மிகப்பழங்காலம் முதல், மிக நீண்டகாலமாக மிகப் பெரிய கடற் படையையும், உலகளாவிய வணிக மேலாண்மையையும் பழந்தமிழ் அரசுகள் கொண்டிருந்தன. பண்டைய உலகின் மிக ஆடம்பரமான பொருட்களாக இருந்த வாசனைத் திரவியங்கள், வாசனைப் பொருட்கள், முத்துக்கள், மணிக் கற்கள் போன்ற பலவற்றின் உற்பத்தியும் மூலவணிகமும் பழந் தமிழரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் காரணமாக சங்க காலத்தில் தமிழர்கள் வணிகத்தில் உலகப் புகழ் பெற்றவர்களாக இருந்தனர். திரு.சுகாப் எழுதிய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளசு” என்கிற ஆங்கில நூல், பண்டையத் தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப் பொருட்கள் பற்றி மட்டும் 40 பக்கங்களில் (பக்:203-242) விரிவாகவும், விளக்கமாகவும் பேசுகிறது. இந்நூலை பழந்தமிழக வணிகம் பற்றிய மிகச்சிறந்த ஆவணம் எனலாம். அந்நூல் எகிப்திலிருந்து தமிழகம் வந்த கப்பல்களைவிட அதிக எண்ணிக்கையிலும் பெரிய அளவிலும் உள்ள கப்பல்கள் தமிழகத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றன என அந்நூல் கூறுகிறது. கி.பி. 78இல் எகிப்திலிருந்து தமிழகம் வழியாக கங்கை வரை பயணம் செய்த பெரிப்ளசு என்பவரின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது(22). அடுத்ததாக “முசிறி - அலெக்சாண்டிரியா ஒப்பந்தம்” என்பது, கி.பி.150 ஆம் ஆண்டைய கிரேக்க மொழியில் எழுதப்பட்ட வணிக ஒப்பந்தம். அதன்படி, ஒரு தமிழ் வணிகன் ஒரு கப்பலில் ஒரு தடவை உரோமுக்கு ஏற்றுமதி செய்த வணிகப் பொருட்களின் இன்றைய மதிப்பு ரூ.120 கோடி(23). வருடம் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களில் பல நூறு வணிகர்கள் உரோமுக்கு ஏற்றுமதி செய்து வந்ததைக் கணக்கிட்டால் அது பல ஆயிரம் கோடி வரும். இச்செய்திகள் பழந்தமிழக வணிகத்தின் அளவை, அதன் உலகளாவிய தன்மையை நமக்குக் காட்டுகிறது.

முசிறி அகழாய்வு குறித்து, அதன் இயக்குநர் செரியன், முசிறி நகர் தென் சீனத்திலிருந்து, ஐரோப்பாவின் ஜிப்ரால்டர் சலசந்தி வரை, மத்தியதரைக் கடல், செங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் உள்ள 40 துறைமுக நகரங்களோடும், 30 வேறுபட்ட பண்பாடுகளோடும் நேரடித் தொடர்பில் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன என்கிறார். மேலும், “கிரேக்க இலத்தீன் இலக்கியங்களை நன்கு அறிந்த அமெரிக்க ஐரோப்பிய அறிஞர்கள், அன்று இந்த முசிறி நகரானது, இன்றைய நியூயார்க், இலண்டன், சாங்காய் போன்ற புகழ்பெற்ற பெரும்துறைமுக நகரங்களுக்கு இணையாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்” எனக் கூறுகிறார்(24). உலகின் இன்றைய பெரும் துறைமுக நகரங்கள் இவை. அன்று முசிறி அன்றைய உலகின் பெருந்துறைமுக நகரங்களுக்கு இணையான நகராக இருந்துள்ளது. பூம்புகார், கொற்கை போன்றவை முசிறியைவிடப் பெரிய நகரங்கள். இத்தரவுகள் அன்று தமிழகம் உலகின் மிகப் பெரிய உற்பத்தி மையமாகவும், வணிக மையமாகவும் இருந்துள்ளது என்பதை உறுதி செய்கின்றன. பெருங்கப்பல்களைக் கட்டும் திறன், கடல் நீரோட்டம் பற்றிய அறிவு, பருவக் காற்று என்னும் இயற்கைச் சக்தியை தன் வசப்படுத்திக் கொள்ளுதல், இறக்குமதி நாட்டின் எதிர் பார்ப்புக்குத் தக்கவாறு பொருட்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளப் பேணும் தொழில் நுட்பத் திறன், தனித்து இயங்காமல் வணிகக் குழுவாக இயங்குகின்ற தன்மை, பிற நாடுகளின் மொழி பண்பாடு ஆகியவற்றை அறிந்து அவற்றுடன் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய சமூக இணக்கம் போன்றவையே தமிழகம் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பன்னாட்டுடன் தொடர்ந்து வணிக உறவுகளை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தமைக்குக் காரணம் எனலாம். இதற்குப் பெரும் துணையாக இருந்த ஒரு மிக முக்கியக் காரணி ‘தொழில் நுட்பத்தின் மேன்மை’(25).

சங்க காலத்தில் எஃகு, வார்ப்பு இரும்பு ஆகியவற்றைத் தயாரிக்கும் இரும்புத் தொழில்நுட்பத்தில் திறமை மிக்கவர்களாகத் தமிழக மக்கள் திகழ்ந்துள்ளது போல் ஆடை நெய்வதிலும், சங்கு அறுப்பதிலும், நீர்ப்பாசனத்திலும் தமது தொழிநுட்பத்திறனைக் கொண்டிருந்தனர் என்பதை எண்ணற்றத் தொல்லியல் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. கொடுமணல் பகுதியில் பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, சூதுபவளம், சேசுபர், அகேட், குருந்தம், வைடூரியம், மாவுக்கல் முதலிய அரிய கற்களைக் கொண்டு, மயிரிழை அளவு துளைகள் கொண்ட மணிகள் தயாரிப்பதில் பழந்தமிழர்கள் மிகச் சிறந்த தொழில்நுட்பத் திறன் உடையவர்களாக இருந்துள்ளனர்(26). ஆதிச்ச நல்லூர் அகழாய்வு பழந் தமிழர்களின் தொழிநுட்ப மேன்மையை வெளிப்படுத்துகிறது. அகழாய்வின் போது பழந்தமிழ் மக்கள் பயன்படுத்திய ஆயிரக் கணக்கான பொருட்கள் கிடைத்தன. அவைகளில் பொன்நெற்றிப் பட்டங்கள், வெண்கலக் கிண்ணங்கள், வெண்கல ஏனங்கள், மூடிகள், குடுவைகள், பூச்சாடிகள், வெண்கலச் சல்லடைகள், வெண்கலச் சட்டிகள், வெண்கல அணிமணிகள், இரும்பு வாள்களும் குத்துவாள்களும், இரும்பு ஈட்டிகள், அம்புகள், இரும்புக் கோடாரிகளும், மண்வெட்டிகளும், பல்வேறு விதமான மட்பாண்டங்கள் ஆகியன அங்கு கிடைத்தன. வெண்கலப் பொருட்களும் மட்பாண்டப் பொருட்களும் மிகச் சிறந்த கலையழகு மிக்கப் பொருட்களாக இருந்தன(27). இங்கு தரப்பட்ட பழந்தமிழர்களின் வணிகம் தொழில்நுட்பம் குறித்த தரவுகள் சங்ககாலச் சமூகம் ஒரு உயர் வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது என்பதை உறுதி செய்கின்றன. ஆசிரியரது நூலில் பழந்தமிழக வணிகம் குறித்து 50க்கும் மேற்பட்ட பக்கங்களில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது..

பழந்தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி:

பழந்தமிழரசுகள் அன்று உலகின் மாபெரும் கடல் வல்லரசுகளாக இருந்தன. இது குறித்து வின்சென்ட் ஆர்தர் சுமித் என்கிற வரலாற்றறிஞர், தமிழ் அரசுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளை பல நூற்றாண்டுகளாகப் பராமரித்து வந்துள்ளன எனவும் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வணிகக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன எனவும் தனது இந்திய வரலாறு, அசோகர் ஆகிய இரு நூல்களில் குறிப்பிடுகிறார்(28). வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வணிகத்தைப் பாதுகாக்கவும், மொழிபெயர் தேயப் பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும், வடக்கிலிருந்த அநாகரிக மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இந்த ஐக்கியக் கூட்டணியின் கடற்படை கொண்டுதான் அவர்கள் இன்றைய அரபிக் கடல், வங்காளக் கடல், இந்துமகாக் கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகிய அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பிற்காலச் சோழர்களைவிட அவர்கள் பல மடங்கு வலிமை வாய்ந்த கடற் படைகளைக் கொண்டிருந்தனர். கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் கலிங்கத்தின் பித்துண்டா நகரம் தமிழரசுகளின் காவல் அரணாக இருந்தது எனக் குறிப்பிட்டதும், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 1300 ஆண்டுகள் பழமையானது எனக் கூறியிருப்பதும், கங்கை நதிவரை இருந்த கலிங்கத்தின் பண்டைய நகரங்கள் தமிழ்ப் பெயர்களோடு இருப்பதும் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தையும், வணிக மேலாண்மையையும் பறைசாற்றும் சான்றுகள்(29).

காரவேலன் கூறும் 1300 ஆண்டுகள் என்பதைப் பல வட இந்திய வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழக நகர அரசுகள் கி.மு. 1000க்கு முன்பிருந்தே உருவாகியிருந்தன எனவும் கி.மு. 750க்கு முன்னரே மூவேந்தர்கள் நிலைபெற்ற அரசுகளாக ஆகியிருந்தனர் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்குள் அன்றே ஒரு ஐக்கியத்தை உருவாக்கிக் கொண்டு வேறு யாரும் வேந்தர்கள் ஆகாமல் பார்த்துக் கொண்டனர். அதனால்தான் 1000 வருடங்களுக்கு மேலாக சேர சோழ, பாண்டியர்களைத் தவிர வேறு யாரும் வேந்தர்களாக ஆக முடியவில்லை. அவர்களிடையே ஐக்கியம் இல்லை எனில் இது சாத்தியமாயிருக்காது. அவர்களின் ஐக்கியம் என்பது தமிழரசுகளின் ஐக்கியமாகவே இருந்தது. ஆகவே காரவேலனின் கல்வெட்டில் இருக்கும் காலத்தில் பாதியளவு சாத்தியமான காலம் என்றே கருத வேண்டியதுள்ளது. 1300 ஆண்டுகள் இல்லை எனினும் கி.மு. 750 முதல் அவர்களிடம் ஐக்கியக் கூட்டணி இருந்து வந்தது எனக் கொண்டு அவன் காலம் வரை(கி.மு. 165) தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 600 ஆண்டுகளாக இருந்து வந்தது எனலாம்.

வரலாற்றுப் பெரும்புலவர் மாமூலனார் தனது அகம் 31ஆம் பாடலில் ‘தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த’ என்கிறார். அதாவது தமிழ் மூவேந்தர்கள் மூவரும் இணைந்து மொழிபெயர்தேயம் எனப்படும் இன்றைய கர்நாடகா, ஆந்திரா, மராட்டியத்தின் சில பகுதிகள் ஆகிய தேயங்களைப் (பிரதேசங்களை) பாதுகாத்து வந்தனர் என்கிறார். அதன்மூலம் தமிழ் அரசுகளிடையே ஒரு ஐக்கியக் கூட்டணி இருந்தது என்பதை அவர் உறுதிப் படுத்துகிறார். மேலும் தக்காணப் பகுதியில் இருந்த வணிகப் பாதைகளை, அதன் கிழக்கு, மேற்குக் கடற்கரைத் துறைமுக நகரங்களை தமிழரசுகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் என்பதையும் இப்பாடல் உறுதிப் படுத்துகிறது. ஆற்று நீர் கடலில் கலக்கும் உலகிலுள்ள கடற்கரை நகரங்கள் அனைத்திற்கும், கடலில் செல்லும் வங்கம் எனப்படும் உலகமே பெயர்ந்து வருவது போன்ற மிகப் பெரும் கப்பல்கள் மூலம் சென்று வணிகம் செய்யும் வணிகத்தை உடையவர்களாகப் பழந்தமிழர்கள் இருந்தனர் என்பதை அகம்-255, புறம்-400 ஆகிய பாடல்கள் உறுதி செய்கின்றன. இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரை வணிகத்தையும், தக்காணப் பகுதியையும், தென்கிழக்கு ஆசிய வணிகத்தையும் தமிழரசுகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தன. பண்டைய சங்க காலத் தமிழகம் பொருள் உற்பத்தியிலும், தொழில்நுட்பத்திலும், வணிக மேலாண்மையிலும், வேளாண்மையிலும் உயர்நிலையில் இருந்ததன் காரணமாகவும், தமிழ் அரசுகளிடையே இருந்த ஐக்கியக் கூட்டணியின் காரணமாகவும் உலகளாவிய வணிகத்தில் 750 வருடங்களாக (கி.மு.600-கி.பி.150) இடைவிடாது, உயர்ந்து நின்று தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது. கேரளத்தில் முசிறியிலும், தமிழகத்தில் கீழடி, கொடுமணல், அழகன்குளம், அரிக்கமேடு போன்ற இடங்களிலும் நடந்த அகழாய்வுகள் இதனை உறுதி செய்கின்றன.

பழந்தமிழகத்தில் கல்வி, இசை, மெய்யியல்….. :

பழந்தமிழகத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில், ஈமச் சின்னங்களில், மதிப்புமிக்க, மதிப்பற்ற தொல்பொருட்களில், நாணயங்களில், மோதிரங்களில் என எண்ணற்ற பழம்பொருட்களில் எழுத்துப் பொறிப்புக்களைக் காண முடிகிறது. அதுபோன்றே பல நிலைகளில் உள்ள குடிமக்கள் சமயத் துறவிகளுக்கு வழங்கிய பாறைகளிலும் எழுத்துப் பொறிப்புகளைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தைத் தவிர பிற இடங்களில் இதுபோன்ற நிலை இல்லை. இத்தரவுகள் மிக மிகச் சாதாரண மனிதர்கள் முதல் உயர் நிலையில் உள்ளவர்கள் வரை எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர் என்பதை உறுதி செய்கிறது. தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், சங்க காலத் தமிழகத்தில், மிகப் பரந்த அளவில், சாதாரண மக்கள் கூட கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறார்(30).

தமிழிசை என்பது 2000 ஆண்டுகளுக்கும் மேலான புகழ் பெற்ற மரபை உடையது; சங்க காலத்திலேயே இசைத் தமிழும், நாட்டியமும் உன்னதமான சாத்திர நெறிகளாக வளர்ந்து பல புகழ்பெற்ற நூல்களைப் பெற்றிருந்தன; தமிழில் இருந்த சங்ககால இசை, நாட்டிய நூல்கள் அனைத்தும் அழிந்து போயின; இந்தியாவின் ஆதி இசை என்பது தமிழிசையே; சிலப்பதிகாரகால இசையும், திருஞானசம்பந்தர் இசையும், அருணகிரிநாதர் இசையும், முத்துத்தாண்டவரின் கீர்த்தன இசையும் தமிழிசை மாளிகையின் நான்கு தூண்கள்; கர்நாடக சங்கீதம் என்பதும் தமிழிசையே; பரத நாட்டிய சாத்திரம் முதலான வடமொழி நூல்கள் தமிழ் நூலின் மொழி பெயர்ப்பே; வடமொழி இசை இலக்கண நூல்கள் பெரும்பாலும் தமிழ் சாகித்தியங்களைக் கொண்டு கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப்பின் உருவானவை(31).

தமிழகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் ஒரு உன்னத நிலையை அடைந்திருந்தது. இந்திய மெய்யியலில் மிகப் பெருந்தாக்கத்தைத் தந்த சாங்கியம் என்கிற எண்ணியம் தமிழகத்தின் தொல்கபிலரால் கி.மு. 750 வாக்கில் உருவாக்கப்பட்டது. இயக்கம், வெளி, காலம் ஆகியன பருப் பொருளின் கூறுகள் என அன்றே தொல்கபிலர் கூறியுள்ளார். இக்கருத்து மூலச்சிறப்புடைய ஒரு கருத்தாகும். அதன் தொடர்ச்சியாகத்தான், தற்கால உலகப் புகழ் பெற்ற சுடீவன் ஆக்கிங்சு (STEPHEN HANKINGS) போன்றவர்கள் கூறுகிற வெளி-காலம், அண்டவியல் பற்றிய கருத்துக்களைத் தொல்காப்பியரால் சொல்ல முடிந்துள்ளது.

மூலச் சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு தனது அடிப்படையாகத் தூய, கலப்பற்ற பொருள்முதல்வாதச் சிந்தனையைக் கொண்டு, மிக நீண்ட நெடும் காலமாக பல்வேறு தத்துவார்த்த அறிவியல் ஆய்விலும், வெளி-காலம் பற்றிய ஆய்விலும் ஈடுபட்டு வந்ததே பழந்தமிழக மெய்யியலின் வெற்றிக்குக் காரணம். பண்டைய பொருள் முதல்வாத நூல்கள் அனைத்தும் அழிந்து போயின என்பதால் அவ்வாய்வுகள் குறித்த புரிதல்கள் நம்மிடையே இல்லை. வெளி, காலம், இயக்கம், அண்டம் குறித்துத் தொல்கபிலரும், தொல்காப்பியரும் கூறிய கருத்துக்கள் தமிழருக்குப் பெருமை தருபவை. கல்வி, இசை, மெய்யியல் குறித்த விரிவான தரவுகள் ஆசிரியரது நூலில் தரப்பட்டுள்ளன(32). ‘மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு’ என்ற மற்றொரு நூல் பழந்தமிழகத்தின் மெய்யியல் குறித்தும் தொல்கபிலரின் எண்ணியம், கணாதரின் சிறப்பியம் முதலியன குறித்தும் விரிவாகப் பேசுகிறது.

சஙகம் மருவிய காலம் எனப்படும் பேரரசுக் காலம்:

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மூவேந்தர்கள் சிறு குறு நகர அரசுகளை அழித்து அவைகளைத் தங்களோடு இணைத்துக் கொள்ளும் பேரரசுக் கொள்கையைச் செயல்படுத்தத் துவங்கினர். குடும்ப உறுப்பினர் அரசராவதும் நாளடைவில் இல்லாது போனது. அதன் காரணமாக கி.மு. 50க்குள் பெரும்பாலான தமிழகச் சிறு குறு நகர அரசுகள் இல்லாது போய், மூவேந்தர்களும் பேரரசுகளாக ஆனதோடு வேந்தனும் வரம்பற்ற அதிகாரம் கொண்டவனாக ஆகிப் போனான். சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலகட்டம் எனில் கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும் பேரரசுக் காலமாகும். இந்த 300 வருட காலத்தில்தான் திருக்குறள், சிலப்பதிகாரம், கலித்தொகை, பரிபாடல் முதலியன எழுதப்பட்டன. இதே காலகட்டத்தில்தான் சங்கக் கருத்தியலைச் சார்ந்த பதினெண் கீழ் கணக்கு நூல்களும் எழுதப்பட்டன. கி.மு. 50 முதல் கி.பி. 150 வரை பழந்தமிழ்ச் சமூகம் ஓரளவு சங்க கால நற்பண்புகளையும், உயர்ந்த சமூக மதிப்பீடுகளையும் கொண்டதாக இருந்தது. சுயசிந்தனையும், புதுமை செய்யும் திறனும், புத்துணர்வும் ஓரளவு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்தன. படைவலிமையும், உலகளாவிய வணிகமும், செல்வமும் தொடர்ந்து வளர்ந்து வந்தன. ஆனால் வீழ்ச்சிக்கான அறிகுறிகளும் உருவாகியிருந்தன.

வீழ்ச்சிக்கான அறிகுறிகளை உணர்ந்து அதனைத் தவிர்க்கவே சங்கக் கருத்தியலைச் சார்ந்த பதினெண் கீழ் கணக்கில் உள்ள நீதி நூல்கள் இக்கால கட்டத்தில் எழுதப்பட்டன. இவை களப்பிரர் காலத்தில் எழுதப் படவில்லை. ஆனால் கி.பி. 150க்குப் பின் வர்க்க வேறுபாடுகள் மிக மிக அதிக அளவு அதிகரித்து, சகிக்க இயலாத நிலையை அடைந்ததோடு, கருத்து வேறுபாடுகள் மிகுந்து, நற்பண்புகளையும், உயர் மதிப்பீடுகளையும் இழந்து போன சமூகமாக, பழக்க வழக்கங்களும், சடங்குகளும், மரபுகளும் இறுகிப் போன சமூகமாக ஆகி, சுயசிந்தனையோ, புத்துணர்வோ, புதுமை செய்யும் திறனோ இல்லாதுபோய், ஒளியிழந்த, இருள்படர்ந்த சமூகமாக ஆகி, இறுதியில் ஒரு புரையோடிப் போன சமூகமாக கி.பி. 150க்குப் பிந்தைய பழந்தமிழ்ச் சமூகம் ஆகிப் போயிருந்தது. பலவிதங்களிலும் வீழ்ச்சியடைந்து புரையோடிப் போயிருந்த இக்கால கட்டத்தில்தான், கி.பி. 250 வாக்கில் களப்பிரர் படையெடுப்பு தமிழகத்தில் நடந்தது. அதன் காரணமாக 1500 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த பழம்பெரும் தமிழக நாகரிகம், மிகப் பெரிய வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் உள்ளானது. அதில் இருந்து தமிழகம் மீளவே இல்லை எனலாம். சங்கம் மறுவிய காலத்துக்குப் பின் வந்த கி.பி. 250 முதல் கி.பி. 550 வரையான காலம் களப்பிரர் காலம்.

சங்க இலக்கியமும், பழந்தமிழக வரலாறும்:

சங்க இலக்கியத்தின் காலம் கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை என நாம் இறுதி செய்துள்ளோம். சங்க காலப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டும், அக்காலகட்டக் கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுத் தரவுகள், வெளிநாட்டுக் குறிப்புகள், பழந்தமிழக வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல்கள், இன்ன பிற விடயங்கள் ஆகியவற்றினைக் கொண்டும் பழந்தமிழக வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.. இந்த சங்க இலக்கியப் பாடல்களில் கி.மு. 350க்குப் பிந்தைய பாடல்கள் மிக அதிகமாக இருப்பதோடு அதில்தான் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. கி.மு. 350க்கு முந்தைய பாடல்கள் மிக மிகக் குறைவாக இருப்பதோடு அதில் வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை. ஆகவே கி.மு. 350க்கு முந்தைய வரலாற்றைக் கட்டமைக்க இயலவில்லை.

சங்க இலக்கிய நூல்களில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறூ, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய எட்டுத் தொகையின் ஆறு நூல்களையும், பத்துப்பாட்டின் 1, 10 ஆகிய இரு பாடல்கள் போக மீதி உள்ள 8 பாடல்களையும், இவை போக தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் ஆகிய இரு நூல்களையும் நான் முழுமையாக ஆய்வு செய்து இந்த வரலாற்றைக் கட்டமைத்துள்ளோம். சங்ககால 2371 பாடல்களில் 185 போக, தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் ஆகியவற்றின் 178 பாடல்களைச் சேர்த்து மொத்தம் 2364 பாடல்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின்படி 450க்கும் மேற்பட்ட புலவர்களில், கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த 126 புலவர்கள் பாடிய 1647 பாடல்கள் மட்டுமே வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டுள்ளன என்பது கண்டறியப்பட்டது. கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டம் பத்து காலகட்டமாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள புலவர்கள் அவர்கள் பாடிய வேந்தர்கள், அரசர்கள், சிறுகுறு மன்னர்கள் ஆகியவர்களின் காலகட்டமும், ஆண்டுகளும், பழந்தமிழக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளும் அதன் ஆண்டுகளும், (குறியீட்டு முறை, கோட்டியல் வரைபடமுறை போன்ற புதிய முறைகளைக் கையாண்டு) கண்டறியப்பட்டு நமது பழந்தமிழக வரலாறு ஓரளவு துல்லியமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சங்க காலம் எனப்படும் பழந்தமிழ்ச் சமூகத்தின் காலம் கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையாகும். நகர அரசுகளைக் கொண்ட, தனித்துவமான ஒரு உயர் வளர்ச்சி பெற்ற சமூகமாக பழந்தமிழ்ச் சமூகம் இருந்தது. பழந்தமிழகம் தொழில்நுட்பத்திலும், உலகளாவிய வணிகத்திலும், உற்பத்தியிலும் சிறந்ததாக இருந்ததோடு, பழந்தமிழக அரசுகள் ஐக்கிய கூட்டணி கொண்டு ஒரு பெரும் கடல் வல்லரசாகத் திகழ்ந்தன. கல்வி, மெய்யியல், இசை போன்றவற்றில் இந்திய அளவில், ஏன் உலக அளவில் ஒரு முன்னோடிச் சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்துள்ளது. இவை மட்டுமின்றி மருத்துவம் (சித்த மருத்துவம்) போர்க் கலைகள் (களரி, சிலம்பம்) மருத்துவமும் போர்க் கலையும் இணைந்த வர்மக் கலை, ஓவியம், நாட்டியம், வானவியல் போன்றவற்றிலும் மிக உயர்ந்த நிலையில் பழந்தமிழ்ச் சமூகம் இருந்துள்ளது. இவைகளின் காரணமாக கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் மொழி ஒரு அறிவியல் மொழியாக, ஒரு உலகளாவிய வணிக மொழியாக, ஒரு இலக்கிய மொழியாக இருந்து வந்தது.

கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழிலிருந்து பலவற்றைக் களவாடிக் கொண்ட சமற்கிருதம் (சான்றாக சரக சம்கிதை என்ற வடமொழி மருத்துவ நூலும், பரத நாட்டிய சாத்திரம் என்ற இசை நாட்டிய நூலும் தமிழ் வழி நூலாகும்) அறிவியல் மொழியாக ஆனது. தமிழ் அந்தத் தகுதியை இழந்தது. ஆனால் 14 ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழ் மொழி ஓரளவு வணிக மொழியாக, இலக்கிய மொழியாக இருந்து வந்தது. ஆனால் அதன்பின் அந்தத் தகுதிகளையும் அது இழந்து போனது. இன்றுவரை தமிழ் அத்தகுதிகளைப் பெற இயலவில்லை. சங்க காலச் சமூகம் பற்றிய தெளிவு, தமிழ் தேசத்தவர்கள் அனைவரும் ஒன்றிணையவும் தமிழ் மொழியையும், அதன் மக்களையும், நாட்டையும் வளர்த்தெடுக்கவும் வழி வகுக்க வேண்டும்.

பார்வை: 

1. க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும் சரக சம் கிதையும், பாலம், 2009, பக்: 20-23.

2. ஆவூர் மூலங்கிழார், புறநானூறு – 166.

3. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, படைப்பாளிகள் பதிப்பகம், தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, பக்: 196.

4. இந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி காங்கோபாத்தியாயா, தமிழில் சா. செயராஜ், டிசம்பர்-2011, NCBH , பக்: 23, அணிந்துரை- XII..

5. இரா. கிருஷ்ணமூர்த்தி, பாண்டியர் பெருவழுதி நாணயங்கள்(பக்: 81,84,91)& paper on Makkothai coins presented at the first oriented numismatic conference, held at Nagpur, date: 29.10.1990. & Natana, Kasinathanan-Tamils Heritage page: 45.

6. முத்தொள்ளாயிரம், என். சொக்கன், 2010, கிழக்குப்பதிப்பகம் & கவிஞர் தெசிணி, கலித்தொகையும், முத்தொள்ளாயிரமும், டிசம்பர் 2004, பக்: 180.

7. டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, தமிழில் ஆர். எசு. நாராயணன், செப்டம்பர்- 2006, NCBH, பக்: 388.

8. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 275, 311-312.

9. “ “ “ பக்: 81-83, 88-90

10. “ “ “ பக்: 85-88 & முனைவர் இராசு. பவுன்துரை அவர்கள், “பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 263. & முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்:74, 56.

11. “Significance of Mayilaaduthurai Find” and “Discovery of a century” in Tamil Nadu, THE HINDU Newspaper Dated 1.5.2006 and 21.5.2008.

12. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 317-329.

13. “ “ “ பக்: 330-334.

14. அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள், தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 62, 88-93. 2.B.Sasisekaran et al. Adichanalur: A Prehistoric mining site, Indian Journal of History of Science, 45. 3 (2010) PP. 369- 394 3.D. Venkat Rao et al., Recent Scientifics Studies at Adichanalur: A Pre Historic mining site, in Sangam: Numismatics and Cultural History, New Era Publications Chennai – 2006, PP. 146-154.

15. An interview to Scroll.in, Amarnath Ramakrishna by Sruthi Sagar yamunan dt 11.5.2017.& carbon dating confirms keezhadi site is from sangam era, Dennis S. Jesudasan -The Hindu.

16. அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராம சாமி அவர்கள், தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, NCBH, டிசம்பர் 2013, பக்: 63-64; 2. M. Gandhi Copper Antennae Swords of Appukkal Museum’s Journal December 2001 chennai pp. 102-103; 3. Letter From DR. C. Matheswaran Curator Govt. Museum Chennai.

17. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 809-811.

18. உலக மக்களின் வரலாறு, கிரிசு ஆர்மன், தமிழில்: நிழல்வண்ணன், மு.வசந்தகுமார், விடியல் பதிப்பகம், சூலை-2017, பக்: 48, 74, 75.

19. இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி, ‘பண்டைய இந்தியா’ தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH, செப்டம்பர்-2006, பக்.410 & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 73-75.

20. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 333-341

21, 24. தின மலர் நாளிதழ், நாள்: 4-11-2018; 2)எம்.டி. சஜு(M.T. SAJU) என்பவர் செரியன் அவர்களிடம் எடுத்த பேட்டி; 3)பட்டணம் அகழாய்வு, சகபெடியா(Sahapedia) என்பவர் செரியன்(Director of KCHR) அவர்களிடம் எடுத்த பேட்டி, வெளியிட்ட நாள்: 22.4.2016, (https://www.sahapedia.org/interview-pj-cheriyan).

22. THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF, Pa: 203-242.

23. முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 89, 90.

24. பார்வை-21இல் பார்க்கவும்

25. முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 107, 108.

26. “ “ “ பக்: 122-130

27. அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள், தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 52-60. 2. ANNUAL REPORT 1902-03, 1903-04, ARCHAEOLOGICAL SURVEY OF INDIA, NEW DELHI, 2002, P. 117- 163.

28. கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம், ழிசிஙிபி, சூலை 2010 முன்னுரை & அசோகர், வின்சென்ட் ஆர்தர் சுமித், தமிழில் சிவமுருகேசன், சந்தியா பதிப்பகம், 2009. பக்: 79

29. MARITIME TRADE OF ANCIENT KALINGA, DR.PRAFULLA CHANDRA MOHANTY, ORISSA REVIEW odisha.gov.in/emagazine/Orissareview/2011/Nov/engpdf/39... & MARITIME HERITAGE OF GANJAM,(www.orissa.gov.in/e-magazine/Orissareview/2009/July/)& www.jatland.com/home/Hathigumpha <http://www.jatland.com/home/Hathigumpha>- inscription & சதானந்த அகர்வால் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

30. An epigraphic perspective on the antiquity of Tamil - Iravatham Mahadevan, The Hindu. dt 24.6.2010.

31. தமிழ் இசை இலக்கிய, வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர் -2009, முன்னுரை.

32. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 108, 109, 777-851.

- கணியன் பாலன், ஈரோடு

(குறிப்பு: இக்கட்டுரை கீழடியின் 4 ஆம் கட்ட அறிக்கைக்கு முன் கோவை NGP கல்லூரியில் ‘உலகத் தமிழ் பண்பாட்டு மையம் நடத்திய’ கருத்தரங்கில் (13.9.2019) உரை நிகழ்த்த எழுதப்பட்ட கட்டுரை)

Pin It