குழந்தைகளின் விளையாட்டுகள் பொழுதை போக்குவதன்று; முழுமையாக்குவதில் விளையாட்டின் பங்கு அளப்பரியவை.

kovai sadasivam bookஉளம், உடல் பலத்தை விளையாடும் போது தான் குழந்தைகளால் பெறமுடியும்! குழுவின் உழைப்பும் கூட்டுச் சிந்தனையுமே வெற்றியின் ஆதாரம் என்பதை விளையாட்டுக்கள் எல்லாக் காலங்களிலும் உணர்த்துகின்றன. காலத்திற்கேற்ப குழந்தைகளின் விளையாட்டும், அவை சார்ந்த பாடல்களும் மாற்றமடைகின்றன. இன்றைய கல்விச் சூழலில் உலகமயமாக்கப்பட்ட மேலைநாட்டு விளையாட்டுக்களில் குழந்தைகள் ஈடுபட்டாலும், மண் சார்ந்த பாரம்பரியத்தை அவைகள் பிரதிபலிப்பதில்லை! தமிழர்களின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், கலை, வாழ்வியல் தடங்களில் பதிந்த சுவடுகள் மெல்ல.. மெல்ல அருகி வருகின்றன. ‘கூடி வாழ்ந்தாலும், விளையாடினாலும் கோடி நன்மை’. ‘மொழி சார்ந்த பண்பாட்டை மீட்டெடுப்போம் !’ அருகியும், அழிந்து வரும் விளையாட்டுகளுக்கும், பாடல்களுக்கும் புத்துயிர் கொடுக்க கல்விக் கூடங்கள் முன்வர வேண்டும் என முன்னுரையில் நூலின் ஆசிரியர் கோவை சதாசிவம் விளையாட்டின் முக்கியத்துவத்தை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

மண்ணை உண்ண முடியாது என்று குழந்தைகளுக்குத் தெரியும். ஆனால்.. உண்கிற எதுவும் மண்ணில் தான் விளைகிறது என்பதை அவர்கள் அறிவார்கள்.

இந்த நூலில்

1. பலிஞ்சடுகுடு 2. பச்சை குதிரை 3. மரப்பாச்சி 4. கிட்டிப்புள்
5. நுங்கு வண்டி 6. நொண்டி 7. கும்மாயம் .. கும்மாயம்
8. கோலிக்குண்டு 9. குலை குலையா முந்திரிக்கா 10. பல்லாங்குழி
11. கண்ணாமூச்சி 12. தாயம் 13. கிச்சு, கிச்சு தாம்பாளம்
14. சங்கிலி.. புங்கிலி 15. பம்பரம் 16. தட்டாமாலை
17. ஒரு குடம் தண்ணீர் ஊத்தி 18. தட்டாங்கல்
19. பட்டம் 20. நிலாச்சோறு
21. சில்லுக்கோடு எனத் தமிழ்நாட்டுக் குழந்தைகளின் 21 பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து விளக்கமாக கூறியுள்ளார்.

இனக்குழுவாக வாழ்ந்த மக்கள்,

‘சடுகுடு விளையாட்டு’
மூச்சை அடக்கவும் ,
கள்வனைப் பிடிக்கவும்,
எதிரணியிடமிருந்து மீளவும்
கொடுக்கப்பட்ட பயிற்சியின் நீட்சிதான்
சடுகுடு என சடுகுடு விளையாட்டின் வரலாற்றினை குறிப்பிட்டுள்ளார்.

கண், காது, மூக்கு, வாய் என உடலில் நான்கு புலன்களும் இயங்கும் சடுகுடு விளையாட்டு உடலுக்கு பலத்தையும், உள்ளத்துக்கு உறுதியும் அளிக்கிறது. சடுகுடு விளையாட்டு தமிழகத்தில் தோன்றி ‘கபடி’ விளையாட்டாக பரிணமித்து இன்று 65 நாடுகளில் விளையாடப்படுகிறது.

பாசமுள்ள தாயாக குழந்தைகளை மாற்றும் வல்லமை மரப்பாச்சி பொம்மைகளுக்கு உண்டு. மரப்பாச்சியில் ஆணும், பெண்ணும் உண்டு, விளையாடுகையில் இரண்டுக்கும் இடையே உள்ள உடலமைப்பின் வேறுபாட்டை குழந்தைகள் உணர்ந்து கொள்ளும். எந்த உறுப்பை மூட வேண்டும், எந்த உறுப்பை தொடக்கூடாது என்ற பாலியல் அறிவு இயல்பாக ஏற்படும் என மரப்பாச்சி பொம்மையின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார்.

“உலகில் உள்ள பல்வேறு பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிட்டு ஒற்றை பண்பாட்டை திணிக்கும் உலகமயமாக்கலின் சதி வலையில் பொம்மைகளும் தப்பவில்லை” என உலகமயம் நமது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், விளையாட்டுக்களையும் அழிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார் நூல் ஆசிரியர்.

குழந்தைகளுக்கு அன்பின் அடையாளமாக அளிக்கப்பட்ட தலையாட்டி பொம்மைகள், கிலுகிலுப்பை, உருளை தட்டுகள், விலங்கு பொம்மைகள், நடைவண்டிகள் மரத்தால் செய்யப்பட்டவை . இந்த மண்ணின் பண்பாட்டை பேசியவை. ஓற்றைப் பண்பாட்டின் ஆதிக்கக் குறியீடாக இன்று நெகிழிப் ( பிளாஸ்டிக்) பொம்மைகளை வைத்து விளையாடும் அவலம். நிலவுகிறது.

மட்டைப் பந்து ( கிரிக்கெட்) விளையாட்டுக்கு தமிழகத்தில் சிறுவர்கள் விளையாடும் கிட்டிப்புள் தான் முன்னோடி என்பர். தமிழக நாட்டுப் புறங்களில் பலகாலமாய் நடை முறையில் இருந்த கிட்டிப்புள் விளையாட்டு இன்றையச் சூழலில் கிரிக்கெட் மோகத்தில் வழக்கொழிந்து வருகிறது என்பது வேதனைக்குரியது.

நொண்டி விளையாடிக் கொண்டே செய்யும் உடற்பயிற்சி. ஒரு காலை மடக்கி , ஒரு காலில் தவ்வும் பொழுது கால்களுக்கு இடையே அதிகரிக்கும் இரத்த ஒட்டம் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்பெறச் செய்து மலட்டுத் தன்மையை நீக்குகிறது. சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது. தன்னம்பிக்கையைத் தருகிறது குழந்தைகளிடத்தில் விளையாட்டுகள் நட்பை வளர்க்கிறது.

ஓரு வயது குழந்தைக்கு அமுதூட்டுகையில் கும்மாயம் செய்து விளையாட்டு காட்டுவாள் தாய். ‘கும்மாயம்’ என்பது ஒரு தொன்மையான உணவு வகை. வரகரிசிசோறும், அவரைப் பருப்பும் கலந்து செய்யும் முல்லை நில உணவு கும்மாயம். அவித்த பயிற்றுடன் கருப்பட்டியை சேர்த்து கும்மாயம் செய்தது மருதநிலம். பாலையும் பாடலையும் சேர்ந்தே புகட்டுகிறாள் தாய். உணவையும், மொழியையும் சேர்ந்து பருகுகிறது குழந்தை. மனிதர்களோடும் , விலங்குகளோடும், பறவைகளோடும், இயற்கையோடும் உணவை பகிர்ந்து கொள்ளும் ஒர் பண்பட்ட, பல்லுயிர் வாழ்வு நெறியை சோற்றுடன் பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டுகிறாள் தாய். ஆனால் இக்காலத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு ரசாயணம் கலந்த வெளிநாட்டு பவுடர்ளை கரைத்து ஊட்டுகிறார்கள் இதனால் பாசமும், அன்புமும் இல்லாத வெறுமையே மிஞ்சுகிறது.

தனித்திருப்பதை அறவே வெறுக்கிறார்கள் குழந்தைகள். பொது வெளியில் கூடுவதும், களிப்பதும் அவர்களின் உரிமை. பாடிக் கொண்டே ஒடுவதும், ஓடிக் கொண்டே பாடுவதும் குழந்தைகளுக்கு நல்ல மூச்சுப் பயிற்சி.

“தேடலொரு தனிசுகம்
தேடும் போதுதான் நம்பிக்கை துளிர்க்கிறது. ”
தேடலை மனதில் விதைத்த மணற்கரை விளையாட்டு.
தோல்வியை எதிர்கொள்ளும் மனப்பக்குவமே விளையாட்டின் வெற்றி.

“நவீனங்கள்
உள்ளங்கையில்
உலகை திணித்து விட்டு ..
உறவுகளை. சமூக உணர்வுகளை
மனிதர்களிடமிருந்து
பிடுங்கிக் கொண்டன.” என்ற கவிதை வரிகளின் மூலம் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.

பாடல், உரையாடல், நடிப்பும் கொண்ட விளையாட்டுகள் செழுமையான பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை.

ஐந்து கூழாங்கல்லில் மனதை ஒருமுகப்படுத்தி, கைவிரல் நரம்புகளுக்கு இரத்தம் பாய்ச்சிடும் எளிய பயிற்சியை அன்றைய தட்டாங்கல் விளையாட்டு தந்தது.

“ ஒரு இனத்தின் பண்பட்ட வாழ்வினை விளையாட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. விளையாட்டில் ஈடுபட வயதோ, பாலினமோ குறுக்கே நிற்பதில்லை ! உடல் திறனும், மன மகிழ்ச்சியும் பெற்ற குழந்தைகளே வீரத்தின் விளைநிலங்களாகயுள்ளார்கள். வெற்றி, தோல்வியை எதிர் கொள்ளும் மனவலிமையையும், போராடும் குணத்தையும் பெறுகிறார்கள். அன்று...

குழந்தைகள் விளையாட
பொம்மைகளைக் கொடுத்தோம்!
இன்று பொம்மைகள் விளையாட
குழந்தைகளைக் கொடுக்கிறோம்!

அதனால் தான் உளவியல் ரீதியாக மனம் உடைந்து போகிறார்கள் குழந்தைகள்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களையும், நமது பண்பாட்டையும் தெளிவாக நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், விளையாட்டுக்கள் குழந்தைகளின் உடலில், உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களையும், நன்மைகளையும் , குதூகலங்களையும், மகிழ்வுகளையும் ஒற்றுமை உணர்வுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதை வலியுறுத்தியுள்ளார் நூலாசிரியர்.

இந்நூலை தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும், இளைஞர்களும் அவசியம் படித்திட வேண்டும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுத்திட வேண்டும்.

- பி.தயாளன்