இந்திய சட்டசபையில் குழந்தைகள் விவாகத் தடுப்பு மசோதாவின் மேல் விவாதம் நடக்கையில் “சென்னை பிரதிநிதிகளான” அய்யங்கார் கூட்டத்தைச் சேர்ந்தவரும், சட்டசபை பிரயாணச் செலவிலேயே பெரிதும் வாழ்க்கை நடத்துகிறவருமான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் அவர்கள் மேற்கண்ட மசோதாவை எதிர்த்துப் பேசும் போது, இந்தியாவின் செல்வாக்குள்ள சனாதன தர்மிகளின் பிரதிநிதியாகவே தான் அச்சபையில் இருப்பதாகவும், எவ்வித சீர்திருத்தமும் சட்டத்தின் மூலம் செய்யக் கூடாதென்றும், மதத்தில் தலையிட யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், அதிலும் சர்க்கார் தலையிட கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், சர்க்காரை மிரட்டிப் பேசினபோது அதற்கு பதில் சொல்லக் கிளம்பிய ஸ்ரீமான் ஈஸ்வரண் சரமுன்ஷி அவர்கள், வைதீகர்களில் சிலர் இம்மசோதாவை எதிர்த்தாலும், ஏராளமான பொது ஜனங்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்றும், ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இம் மசோதாவை எதிர்ப்பதன் இரகசியம் தனக்கு விளங்கவில்லை என்றும், இன்று இந்து மதம் அடைந்திருக்கும் கேவல நிலைக்கு ஸ்ரீஆச்சாரியார் போன்றவர்களே காரணம் என்றும், ‘இந்து மதம் முன்னேற்றத்திற்குத் தடையிருக்குமானால் அதை ஒழித்து விடுவதே மேல்’ என்று சுவாமி ராமதீர்த்தர் கூறியிருக்கின்றார் என்றும் கூறினாராம்.
இந்து மதத்தை காப்பாற்றத் தோன்றியிருப்பதாய் நடிக்கும் நமது “தமிழ்நாடு” பத்திரிகையோ அல்லது ஸ்ரீ வரதராஜுலுவோ இந்திய சட்டசபையிலும் இருந்திருந்தால் “முன்ஷி” ஈஸ்வர சரணரின் நயவஞ்சகம் என்றோ அல்லது “ஈஸ்வர சரணர் பிரசாரம்” என்றோ தலையங்கம் கிளம்பியிருக்கும். அவைகள் அருகிலில்லாதது ஸ்ரீஈஸ்வர சரணர் நல்ல காலமே ஆகும். தவிர பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லி சட்ட சபைக்குப் போய் அதனால் வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இப்போது தாம் சனாதன வைதீகர்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் அயோக்கியத்தனத்தை அறிந்து அவருக்குப் பொது ஜனங்கள் தக்க புத்தி கற்பிப்பார்களா என்றும் கேட்கின்றோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.04.1928)