sword troop2500 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எஃகு உற்பத்தி

திப்புசுல்தானின் போர்வாள் பற்றிய பேச்சுக்கள் காலனிய அரசுகளில் அன்றைய காலக்கட்டத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. சிப்பாய் கலகத்திற்கு பின்பு எண்ணற்ற வாள்கள் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது என்பது காலனிய வரலாறு.

இந்திய துணைக்கண்டத்தில் தயாரிக்கப்பட்ட சிறப்பு எஃகின் மதிப்பினாலேயே உலகின் சிறந்த வாள்கள் தயாரிக்கப்பட்டன. இந்த மதிப்புமிக்க எஃகு வார்த்தெடுக்கப்பட்ட நிலமாக தென்னிந்தியா திகழ்ந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இது சிறந்தோங்கி விளங்கியது.

அதுமட்டுமல்ல, இத்தொழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தது. உலகின் சிறப்புமிக்க எஃகை உற்பத்தி செய்த முன்னோடி நிலமாக தமிழ் நிலம் விளங்கியதைப் பற்றி எண்ணற்ற ஆய்வுகள் வெளிவந்து கொண்டுள்ளன.

உலகின் மிகச்சிறந்த வாள் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சைப்பகுதியில் உற்பத்தியாகியது என்பது மறுக்க இயலாத வரலாறு. பண்டைய தமிழர்கள் நகரங்களிலிருந்தே மேற்குலகிற்கு வாள் ஏற்றுமதியாகின.

மேற்கு தொடர்ச்சி மலையின் கனிம வளங்களின் காரணமாக உற்பத்தியாகிய இந்த எஃகு இரும்பு கரூர், முசிறி, மலபார் கடற்கரை பகுதிகள் வழியாக ஏற்றுமதியாகின. இந்த மேற்குலக ஏற்றுமதி வணிகத்திற்கு சான்றாக சேரர்களின் தலைநகரமான கரூரில் ஏராளமான ரோமானிய நாணயங்கள் கிடைத்தன. மேலும், கரூரில் நாணயங்கள் அச்சகம் இருந்திருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு 1000) தமிழ்நிலத்தில் இரும்பு பதப்படுத்தப்படுவது தொடங்கிவிட்டது. கி.மு 300 காலகட்டத்தில் சிறப்புமிக்க எஃகு வார்க்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

முனைவர் சாரதா சீனிவாசன் என்பவர் NIAS (National Institute of Advance Studies) பெங்களூருவில் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவர் உலோகவியல் குறித்தும் தென்னிந்திய உலோகவியல் குறித்தும் தன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இவர் தனது ஆய்வின் அடிப்படையில் கி.மு 600களில் உலகின் தலைசிறந்த உலோகக் கலவைகள் தமிழ்நாட்டின் சேரப் பேரரசின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார். தமிழர்களின் உலோகவியல் படைப்புகளில் “ஊட்ஸ் எஃகு” (Wootz Steel) என்பது முக்கியமானது.

இதை, “டமாஸ்கஸ் எஃகு” (Damascus Steel) என்றும் அழைப்பார்கள். இது பண்டையக்கால தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்று. இந்த உலோகங்களின் நுண்ணிய உள்ளமைப்புகளும் அதன் காரணமாக ஏற்படும் பண்பு மாற்றங்களும் நவீன உலோகவியல் உலகின் பார்வையை தனது பக்கம் ஈர்த்து வந்தது.

“Steel” (ஸ்டீல்) என்ற ஆங்கில சொல்லுக்கு "உருக்கு" அல்லது "எஃகு" என்று பொருள். இந்த “Wootz Steel” (வூட்ஸ் ஸ்டீல்) என்ற சொல்லே "உருக்கு" (Urukh) என்ற தமிழ் வேர்ச்சொல்லில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல், “Wootz” என்பது "உக்கு" என்ற கன்னட மற்றும் தெலுங்கு மொழி சொற்களுக்கும் நெருக்கமாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கி.பி 1700 - 1900களில் இந்த உருக்கு இரும்புகளின் சிறப்புத் தன்மையை அறிய மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக நவீன உலோகவியல் வளர்ச்சி பெற்றது. “Wootz Steel” அல்லது “Damascus Steel”ன் சிறப்புத் தன்மைக்கான காரணம் அதன் நுண்ணிய உலோக உள் வடிவமைப்புகள் தான்.

1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை கார்பனை கொண்ட இரும்பு கலவை தான் இத்தகைய சிறப்பை அளிக்கிறது. இந்த வகை இரும்பு அதிக நெகிழும் தன்மையும், இழுவிசையை தாங்கும் தன்மையும், அதே நேரம் மிக அதிக உறுதி தன்மை உடையதாகவும் பண்பு மாற்றம் அடைகிறது.

தற்காலத்தில்கூட மிக அதிக தொழில்நுட்ப வசதிகளோடு மட்டுமே உருவாக்கக்கூடிய இத்தகைய இரும்பு உருக்குகளை எந்த தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள “Wootz Steel” நவீன உலோக அறிவியல் உலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலக புகழ்பெற்ற “டமாஸ்கஸ் போர்வாள்” தயாரிக்க பழங்கால இந்தியாவில் இருந்து தான் உருக்கு கட்டிகள் (Ingots) சென்றதாக கிரேக்கம், பெர்சியா மற்றும் ரோம் நாட்டு (கி.மு 100) தரவுகள் குறிப்பதாக பேராசிரியர் கூறுகிறார்.

அலெக்சாண்டருக்கு தக்கசீலத்தின் மன்னன் போரசு 100 எஃகு இரும்பு கட்டிகளை பரிசளித்ததாக குறிப்புகள் உள்ளன. பண்டைய ரோமில் சேரப்பேரரசில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஃகு இரும்புகளுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்துள்ளது.

இந்திய துணைக்கண்டத்தின் தென் பகுதிகளில் இருந்து தான் பழங்காலத்தில் சீனா, அரபு நாடுகள், ஐரோப்பா மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகள் அனைத்திற்கும் ஏற்றுமதியானதாக வெளிநாட்டு தரவுகள் சான்றளிக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தரம் வாய்ந்த உலோக கலவைகள் உருவாக்கப்பட்டுள்ளது அகழ்வாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கி.மு1100லேயே இரும்பு பொருட்கள் பயன்பாட்டில் இருந்தன என்று கர்நாடகத்தின் ஹல்லூர் அகழ்வாய்வு முடிவுகள் கூறுகின்றன. கொடுமனல் அகழாய்வு பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட எஃகு இரும்பு உற்பத்திக்கான தடையங்கள் கி.மு300யை சார்ந்தவை என்று அறியப்படுகிறது.

அரேபியர்கள் மற்றும் பெர்சியர்களின் போர்வாள்கள் மிகவும் நேர்த்தியானது மற்றும் வலிமையானது என்று நாம் அறிந்திருக்கிறோம். பெர்சியாவின் (இன்றைய சிரியா) டமாஸ்கஸ் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட வாள்கள் அதன் பெயராலேயே உலக புகழ்பெற்ற டமாஸ்கஸ் வாள் (Damascus Sword) என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், உண்மையில் டமாஸ்கஸ் வாளின் சிறப்பம்சம் என்பது அதன் உறுதி தன்மையை குறிப்பது தான். அத்தகைய வாள்கள் பண்டைய தென்னிந்திய நிலப்பரப்பில் அன்றைய சேரத் தமிழர்களால் தான் தாயாரிக்கப்பட்டுள்ளன.

அரபு, கிரேக்க மற்றும் ரோம் நாடுகளில் இந்த வாள்களுக்கு கிடைத்த முக்கியத்துவத்தால், அவை தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருளான தரமான எஃகு இரும்பு கட்டிகள் மிக பெரிய அளவில் இங்கிருந்து ஏற்றுமதியாகியுள்ளது.

தற்போது, பேராசிரியர் சாரதா சீனிவாசன் எஃகு இரும்பு பற்றிய தனது ஆய்வுகளை சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள உலோக பொருட்களை உட்படுத்தி உள்ளார். ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளில் கிடைத்த அந்த உலோகங்களை மின் நுண்ணோக்கி மூலம் (Electron Microscope) ஆய்வு செய்த பொழுது, மிக நவீன உலோகவியல் தொழில்நுட்பத்தின் மூலமே சாத்தியப்படக்கூடிய நுண்ணிய கார்பன் அடுக்குகள் உள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுபோன்று, அதிக கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட இரும்பு கலவைகள் சுமார் 1,400 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உருக்கு கலன்களில் (Crucibles) வெப்பபடுத்தப்படாமல் சாத்தியமில்லை. இந்த செயல்முறை “Crucible Steel Process” ( எஃகு கலன் செயல்முறை) என்று அறியப்படுகிறது. ஆனால், பழங்காலத்திலேயே தேர்ந்த மற்றும் உலோகவியலில் ஆழமான அறிவும் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கி.பி 1900களில் பயணிகள் குறிப்புகளில் இருந்து தென்னிந்திய பகுதிகளில் இந்த வகை “Crucible Steel Process” செயல்முறை மூன்று இடங்களில் இருந்ததாக அறியப்படுகிறது என்கிறார். அவை, “தக்காண” அல்லது “ஹைதராபாத்” முறை ( Deccan or Hyderabadi process), “மைசூர்” முறை ( Mysore Process) மற்றும் “தமிழ்நாட்டு” முறை (Tamil Nadu Process) என்று வகைப் படுத்துகிறார். இந்த மூன்று வகைகளில் தமிழ்நாட்டு செயல்முறை (Tamil Nadu Process) மிகவும் தனித்துவமானது மற்றும் காலத்தால் மிகவும் பழமையானது என்றும் கூறுகிறார்.

அதாவது, ஏனோ தானோ என்று உருவாக்கப்பட்ட உலோக கலவைகள் அல்ல அவை! இதை உருவாக்கியவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நன்கு அறிந்தவர்கள் மட்டுமல்ல, அவர்கள் பல்வேறு முயற்சிகளின் ஊடே முறையான உறுதி செய்யப்பட்ட செயல்முறையையும் உருவாக்கி வைத்திருந்தவர்கள் என்பதும் இதன் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதைப்போன்றே ஆதிச்சநல்லூரில் கிடைத்த சோழர் கால தாமிரம் மற்றும் ஈயம் உலோகக் கலவையான வெண்கல உலோகத்தின் சிறப்பைப் பற்றியும் பேராசிரியர் தன் ஆய்வுகளில் கூறுகிறார். “Beta Bronze” (பீட்டா வெண்கலம்) என்று அழைக்கப்படும் இந்த வகை உலோக கலவைகள் மிக அதிகமான 23 சதவிகித ஈயத்தை கொண்டுள்ளது. இதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மிக அதிக வெப்பநிலையில் மட்டுமே சாத்தியம் என்று தெரிவிக்கிறார்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த இந்த வகை வெண்கல உலோகங்கள் உலகின் மற்றப் பகுதிகளில் இதுவரை கிடைத்த பழங்காலத்து வெண்கல உலோகங்களிலே தலைசிறந்தது மட்டுமல்லாமல் வேறு எங்கும் கிடைத்திறாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி அதிக வெப்பநிலைகளில் நடக்கும் இந்த உருக்கும் செயல்முறைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கலன்கள் இதைவிட அதிக வெப்பம் தாங்க கூடிய பொருளால் ஆனதாக இருந்திருக்க வேண்டும். தென் ஆற்காடு மாவட்டத்தின் மேல் சிறுவள்ளூர் (மாமண்டூர் அருகிலுள்ள) அகழ்வாய்வில் கிடைத்த உருக்கு கலன்களின் உடைந்த துண்டுகள் பற்றிய ஆய்வுகள் அதை மீ அதிக கார்பனேற்றம் செய்யப்பட்ட எஃகிறுப்புகளால் (Hypereutectoid or Ultra -High Carbon Steel) ஆனவை என்று உறுதிப்படுத்துகிறது.

2500 ஆண்டுகளுக்கு முன்பே மிக நுணுக்கமான உலோகவியல் அறிவை பெற்றிருந்தவர்கள் அதன் வளர்ச்சி போக்கில் இன்று உலகின் தலைசிறந்த கருவிகளை உருவாக்கக் கூடியவர்களாக திகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால், தமிழர்களின் தனித்துவமான உலோகங்களை கையாளும் இந்த தொழில்நுட்பமும் அதற்கான உண்மையான செயல்முறைகளும் வரலாற்றின் பக்கங்களில் சுவடுகளாக மாறியிருக்கின்றன. தமிழர்கள் தங்களின் பாரம்பரிய மரபுவழி தொழில்நுட்ப அறிவுகளை இழந்த சமூகமாக மாறி இருக்கிறார்கள்.

சனாதன அரசியல் ஊடுறுவிய பின்னர் தமிழ்நிலம் இந்த அறிவியல் பாரம்பரயத்தினை இழந்தது. ஆரிய வேத அரசியல் சுரண்டல் போக்கினை நிறுவனமாக்கியதால் மதத்தலைமை கொண்ட அரசுகள், நகரமயமான வணிக அரசுகள் ஆகியன அறிவியலை பின்னுக்கு தள்ளி வேத மதச்சடங்குகள், உழைப்புச் சுரண்டல்களுக்கான கட்டமைப்புகளாகின.

அரண்மனைகளோடும், நிலங்களோடும், கோயில்களோடும் பிணைக்கப்பட்டு சாதிய சமூகமாக நிறுவப்பட்டதால் தான் தமிழர்கள் தங்களுடைய மரபுவழி தொழில்நுட்பத்தை இழந்து நிற்கின்றார்கள்.

இந்த தொழில்நுட்ப அறிவு தமிழ் சமூகத்திற்கு எந்த வகையிலும் பயன்படாமல் பார்ப்பனீய காற்றில் கரைந்து, சாதிய புழுதியில் புதைந்து நாம் அகழ்வாய்வு செய்யும் ஆழத்திற்கு வீழ்த்தப்பட்டு கிடக்கிறது.

- மே பதினேழு இயக்கம்

Pin It