மனித உடல் முழுவதும் கிருமிகள் ராஜ்ஜியம்தான்!

உயிரினங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழுகின்றன. உயிரியல்படி அவைகளின் குறிக்கோள் இவ்வுலகில் உயிர் பிழைத்து வாழ வேண்டும்: தன் இனம் பெருக வேண்டும் என்பது மட்டுமே. ஒரு செல் உயிரினத்தில் இருந்து அனைத்தும் இந்த விதிக்கு உட்பட்டவைகள்தான்.

இப்போது மனிதனையும் அவனைச் சார்ந்து இருக்கும் கிருமிகளின் உலகத்தையும் பார்ப்போம். எப்போதும் மனிதனின் உடல் முழுதும், வெளிப்புறத்திலும், உடலுக்குள்ளும் நுண்கிருமிகள் இருந்து கொண்டேதான் இருக்கும். வாய், மூக்கு, காது, ஆசனவாய் போன்ற வெளி உலகுடன் தொடர்புடைய பகுதிகளில் அதிகமாகவும், மற்ற தோல் பகுதிகளில் சற்றுக் குறைவாகவும் இருக்கின்றன. துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும் தோராயமாக மனிதனின் மலக்குடலுக்குள் மட்டும் 100 டிரில்லியன் அல்லது நூறு லட்சம் கோடி நுண்ணுயுரிகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.

நம் உடலின் உள்ளும் வெளியிலும் இருந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டுவிக்கும் இந்த நுண்ணுயிரிகளில் சிலவகைகள் மனிதனைச் சார்ந்து, அவனுடனே இருந்து தீங்கு எதுவும் விளைவிக்காத சாதுக்கள். சில வகைகள் உடலுடன் ஒட்டிக்கொண்டே இருந்துகொண்டு, எப்போது மனித உடலின் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ அந்த நேரத்தில் உள்ளே நுழைந்து நோய்களை உண்டுபண்ணும் சந்தர்ப்ப வாதிகள். சிலவகைகள் மனிதனுக்கு எதிர்ப்பு சக்தி உண்டுபண்ணி அவனைக் காப்பாற்ற உதவும் மெய்க்காப்பாளர்கள். சிலவகைகள் எப்போதுமே மனித உடலில் நோய்களை உண்டு பண்ணும் எதிரிகள். ஆக மனித உடலே கிருமிகளின் கூட்டங்கள் நிறைந்த ஒரு நுண்ணுயிர்க் காட்சி சாலை என்றே சொல்லலாம்.

mother and new born babyதாய்ப்பாலிலும் கிருமிகளா?

தாய்ப்பாலில் கிருமிகள் அறவே இருக்காது என்றுதான் 19ம் நூற்றாண்டின் பின்பகுதி வரையிலும் அறிவியல் உலகம் நினைத்துக் கொண்டிருந்தது. 19ம் நூற்றாண்டின் கடைசியிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் நடந்த ஆய்வுகளில் தாய்ப்பாலிலும் கிருமிகள் இருப்பதை உறுதி செய்தன. இவைகள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும், உடல் சுத்தம் இல்லாத தாய்மார்களின் தாய்ப்பாலில்தான் இம்மாதிரியான கிருமிகள் இருப்பதாகவும் அக்கால கட்டத்தில் நம்பப்பட்டது.

2003 ம் ஆண்டில் நடந்த ஆய்வில் மிகவும் ஆரோக்கியமாக இருந்த தாய்மார்களின் தாய்ப்பாலை எடுத்து சோதனைச்சாலைகளில் ஆராய்ந்த போது அவர்களின் குடலில் உள்ள லாக்டோபேசில்லஸ் என்ற பாக்டீரியா தாய்ப்பாலிலும் இருப்பதைக் கண்டார்கள். ஆக உடல் சுத்தத்திற்கும் பாலில் காணப்படும் கிருமிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைக் கண்டு கொண்டார்கள். தொடர்ந்து நடந்த நுண்ணறிவியல் வளர்ச்சியின் பயனாக கிருமிகளை அடையாளம் காணவும், இனம் பிரித்து வளர்க்கவும், பெருக்கவும் தெரிந்ததால் தாய்ப்பாலில் இயல்பாகவே கிருமிகள் இருப்பது தெரிய வந்தது.

கிருமிகள் எப்படித் தாய்ப்பாலுக்குள் வந்தன?

தாயின் பிரசவக் காலத்தின் கடைசி வாரங்களில் தாயின் குடலில் உள்ள லாக்டோபசில்லஸ் போன்ற நன்மை பயக்கும் கிருமிகள் எல்லாம் உள்ள நிணநீர் குழாய்களின் வழியாக தாயின் மார்பகம் வந்து பால் சுரப்பிகளில் வந்து தங்கிக் கொள்கின்றன. குழந்தை பிறந்து பால் குடிக்க ஆரம்பித்தவுடன் புது வயலில் விதை விதைப்பது போல குழந்தையின் குடலுக்குள் தாய்ப்பால் மூலம் இக்கிருமிகள் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. மேலும் தாயின் தோலின்மேல் ஒட்டியிருக்கும் நன்மை பயக்கும் கிருமிகளும் பால் குடிக்கும்போதே குழந்தைக்குப் போய்விடுகின்றன. பிறந்தவுடன் கிருமிகள் அறவே இல்லாத குழந்தையின் குடலுக்குள் 24 மணி நேரத்துக்குள் தாயின் உடலில் உள்ள நன்மை பயக்கும் கிருமிகள் அனைத்தும் தாயால் பகிரப்பட்டு விடுகின்றன.

நன்மை பயக்கும் கிருமிகளில் பலவகையான பாக்டீரியாக்கள் (லாக்டோபசில்லஸ், ஸ்டெரெப்டோகாக்கஸ், ஃபைபிடோபாக்டீரியம்), வைரஸ்கள், பூஞ்சைகள், யீஸ்டுகள் உள்ளன. ஆக இந்த நுண்ணுயுரிகளின் உலகம்தான் தாய்ப்பால். தாய் தன் குழந்தையைக் காப்பாற்றி இவ்வுலகில் வாழவைக்க, இயற்கையில் நடக்கும் அற்புதம்!

தாய்ப்பாலில் கிருமிகள் ஏன்?

தாயின் உடலில் இருக்கும் அத்தனை வகையான கிருமிகளும் தாய்ப்பால் மூலம் குழந்தைக்குப் போய்ச் சேருகிறது. இந்த 'மெய்க்காப்பாளர்கள்' கிருமிகள்தான் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி விடுகிறது. இவை எப்படி குழந்தையைப் பாதுகாக்கும் என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கலாம். அனைத்தும் குழந்தையின் குடலுக்குள் சென்று அங்கே உள்ள எதிர்ப்பு சக்தி மண்டலத்தைத் தூண்டிக்கொண்டே இருப்பதால் வெளி உலகில் உள்ள நோய் உண்டுபண்ணும் கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாகி விடுகிறது. தாய்க்கு உள்ள எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் அனைத்து நன்மை பயக்கும் கிருமிகளும் அப்படியே சேய்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு விடுகிறது. பாலூட்டிகளின் தொகுப்பில், மற்ற மிருகங்களின் பாலைவிடவும், மனித இனத்தின், தாய்ப்பாலின் அமைப்பு மிகவும் சிக்கலானது. தோராயமாக 200க்கும் மேற்பட்ட சர்க்கரைச் சத்தின் மூலக்கூறுகள் குழந்தையின் குடலுக்குள் சென்று நன்மை உண்டாக்கும் கிருமிகளுக்கு எல்லாம் உணவாகப் பயன்பட்டு அவைகள் பல்கிப் பெருகுவதற்கான சூழலை அமைத்துக் கொடுக்கிறது.

‘டிசைனர் மில்க்’

பரிணாம வளர்ச்சியில் மனிதன் காட்டு விலங்குகளைப் பழக்கி வீட்டு விலங்குகளாக்கி தன் உதவிக்கும், உழைப்புக்கும், உணவுக்கும் உபயோகப்படுத்தினான். அதன் தொடர்ச்சியாகத் தற்போது மாட்டுப்பாலை மாற்றித் தாய்ப்பாலுக்கு இணையானதாக ஆக்குவதற்கு முயன்று வருகிறோம். சில நேரங்களில் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்க முடியாத சூழ்நிலைகள் வருவதால் குழந்தையைக் காப்பாற்ற வேண்டி மிருகத்தின் பாலை நாட வேண்டியுள்ளது.

உயிரியல் தொழில்நுட்பம் மூலம் மிருகங்களில் மரபணு மாற்றங்களை உண்டுபண்ணி அவைகளின் பாலின் குணங்களை மாற்றி தாய்ப்பாலுக்கு சமமாக மாற்ற முயற்சிக்கிறோம். பாலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கவோ, நீக்கவோ, அல்லது அதன் மூலக்கூறுகளை மாற்றவோ செய்யலாம். கார்போஹைட்ரேட் சத்தில் உள்ள லாக்டோஸ், மற்றும் புரோட்டீன் சத்துக்களில் மாற்றம் செய்து அதனால் வரும் ஒவ்வாமையைக் குறைக்கலாம். மொத்தத்தில் அச்சு அசலாக தாய்ப்பால் போலவே ஒரு ‘டிசைனர் மில்க்’ தயாரிக்க முற்படுகிறோம்.

குழந்தையின் வளர்ச்சியும் தன்மையும் அறிந்து ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் இயற்கையால் வடிவமைக்கப்படுகிறது. குறைமாதக் குழந்தையைப் பெற்ற தாயின் பாலில் உள்ள சத்துக்கும் நிறைமாதக் குழந்தையைப் பெற்ற தாயின் பாலில் உள்ள சத்துக்கும் நிறைய வித்தியாசங்கள். குறைமாதக் குழந்தை விரைவில் வளரும் நோக்கில் அங்கே சத்துக்கள் அதிகம். தாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பாலுக்கும் பின்னர் வரும் ரெகுலர் தாய்ப்பாலுக்கும் நிறைய வித்தியாசங்கள். இயற்கையோடு போட்டியிட்டு இன்று வரையில் நம்மால் தாய்ப்பாலை அப்படியே வடிவமைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை!

- ப.வைத்திலிங்கம், குழந்தை நல மருத்துவர்.

Pin It