பெற்றோர்களுக்கெல்லாம் மார்ச் மாதம் பிறந்ததும் தங்கள் குழந்தைகளைப் பள்ளியின் முழுஆண்டுத் தேர்வுக்குத் தயார் செய்வது என்பது கிட்டத்தட்ட போர்வீரர்களைப் போருக்குத் தயார் செய்வதற்கு ஒப்பாக இருக்கிறது, இன்றைய போட்டிகள் நிறைந்த உலகத்தில். அதிலும் குறிப்பாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் என்றால் அந்தப் பெற்றோர்களின் நிலை இன்னும் மோசம். அவர்களும் சேர்ந்தே தேர்வுக்கு தயாராகிறார்கள். இதற்கெல்லாம் பெற்றோர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் குழந்தைகள் நன்றாகப் படித்தால்தான் யாரும் இவர்களை ஏமாற்ற முடியாது, நல்ல வாழ்கை அமையும், நல்ல வசதியோடு வாழ்வார்கள் என பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகள் பிறரிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் தன் குழந்தை பிறரையும் ஏமாற்றாமல் இருக்கவேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் மனிதர்கள் எப்பொழுதும் இரண்டு பக்கம் கொண்ட நாணயங்கள் போன்றவர்கள் அவர்களின் ஒரு பக்கத்தை மட்டும் சரி செய்துவிட்டு மறு பக்கத்தை கண்டு கொள்ளாமலும் சரி செய்யாமலும் விட்டுவிட்டால் அவர்கள் செல்லாக் காசாகிப் போவார்கள். ஆகவே பிள்ளைகளை படிப்போடு, விளையாட்டு, ஒழுக்கம் என நற்பண்புகளையும் ஊட்டி வளர்ப்போம். குழந்தைகள் யார் தம்மை ஏமாற்றினாலும் அதைக் கண்டு பிடிக்கவும் தான் ஏமாறாமல் இருக்கவும் நமது குழந்தைகள் விளையாட்டின் வாயிலாகக் கற்றுக்கொள்கிறார்கள். அது என்ன விளையாட்டு என்று தெரிந்துகொள்வதற்கு நீங்கள் ஆர்வமாக இருப்பது தெரிகிறது. அதுதான் குலை குலையா முந்திரிக்கா அல்லது குலையா குலையா முந்திரிக்காய் என்னும் சிறுவர்கள் விளையாட்டு. இனி அந்த விளையாட்டை எப்படி விளையாடுவது? அது எப்படி பிள்ளைகளுக்கு படிப்பினையைத் தருகிறது என்று பார்ப்போம்.

kulai kulaiya munthirikkaஇந்த விளையாட்டைக் குறைந்தது ஐந்து முதல் எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். அதிகமான பிள்ளைகள் இருந்தால் ஆட்டம் சற்று சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாகவும் இருக்கும். ஐந்திலிருந்து பத்து வயது வரையுள்ள குழந்தைகள் ஒரு குழுவாகச் சேர்ந்து கொண்டு, விளையாடுவோர்கள் எல்லாம் சாட் பூட்டு திரி போட்டு ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் வட்டமாக உட்கார்ந்து கொள்வார்கள். ஒருவர் மட்டும் துண்டு அல்லது தனது சட்டை அல்லது வேறு ஏதாவது துணியை திரிமாதிரி முறுக்கி யாருக்கும் தெரியாதவாறு தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே அவர்களைச் சுற்றிவருவார். அப்போது வெளியே சுற்றுபவர் “குலையா குலையா முந்திரிக்காய்” என்று பாடுவார். அதற்கு அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து குழுவாக “நரியே நரியே சுற்றி வா” என்று பாடுவார்கள். பின்பு “கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்” என்று சுற்றுபவர் பாட “கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி” என்று அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பாடுவார்கள். இப்படி இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே வருவார். அப்பொழுது அமர்ந்திருப்போரில் ஒருவருக்குப் பின்னால் அவருக்குத் தெரியாமல் துணித்திரியை வைத்துவிட்டு மீண்டும் தன் கையில் துணி இருப்பது போல் பாவனை காட்டிக்கொண்டு பாடிக்கொண்டே வருவார்.

தனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியவந்தால் அவர் அதனை எடுத்துக்கொண்டு ஓடி வந்தவரைப் பின் தொடர்ந்து அவர் முதுகில் அந்தத் துணியால் ஓங்கி அடித்துக்கொண்டே வருவார். அவர் அடியில் சிக்காமல் துரத்திக்கொண்டு வருபவர் இடத்துக்கு வந்ததும் அவர் இடத்தில் தான் அமர்ந்துகொள்வார். பின் கையில் துணி உள்ளவர் அதே பாடலை பாடிவர ஆட்டம் தொடரும்.

தனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியாமல் ஒருவர் அமர்ந்திருந்தால், ஒரு சுற்று வந்ததும் தான் வைத்த திரியை எடுத்து அவர் முதுகில் அடித்துக்கொண்டு துரத்துவார். அவர் அடி பட்டுக்கொண்டே ஒரு சுற்று வந்து தான் இருந்த இடத்திலேயே அமர்ந்துகொள்வார். இதுதான் விளையாட்டு.இந்த விளையாட்டை மேலை நாடுகளில் “டிராப் த ஹேண்ட்கர்ச்சீஃப்” என்ற பெயரில் விளையாடுகின்றனர். மேலும் இந்த விளையாட்டு அமெரிக்கா, ஜப்பான், ஆப்பிரிக்க மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஒருசில மாற்றத்துடன் விளையாடப்படுகிறது. உதாரணமாக பிரான்ஸ்சில் இந்த விளையாட்டு போஸ்ட்மேன் அல்லது மெயில் மேன் என்ற பெயரில் போஸ்ட் மேன் தபால் டெலிவரி செய்வதுபோல விளையாடப்படுகிறது. தந்திரமாக வைப்பது, அடிப்பது, அடிபடுவது, மற்றவர் பார்த்து மகிழ்வது போன்ற நிகழ்வுகள் இந்த விளையாட்டில் உண்டு.

இன்னும் சில ஊர்களில் வேறு பாடலையும் பாடுவது உண்டு.

“திரி திரி பந்தம்

திருமால் தந்தம்

திரும்பிப் பார்த்தால் ஒருமொட்டு”

என்று சுற்றிவருபவர் மட்டும் பாடிக்கொண்டே, தனக்குப் பின்னால் திரி வைக்கிறாரா என்று திரும்பிப் பார்ப்பவரையும் தலையில் ஒரு குட்டு போடுவார். ஓடியாடி கூடி விளையாடும் இதுபோன்ற பாரம்பரியக் குழு விளையாட்டுகள் பிள்ளைகளின் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மை போன்ற நற்பண்புகளைச் சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும்.

இந்த விளையாட்டு நமது குழந்தைக்கு எந்த மாதிரியான வாழ்வியல் நற்குணங்களைச் சொல்லித் தருகிறது என பார்போம். ஆ.வி.பெர்ரோவஸ்கி என்னும் ஆய்வாளர் “விளையாட்டில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் கூட்டத்தை ஒருவித சமூக உறவுப்பள்ளியாகப் புரிந்துகொள்ளலாம். இப்பள்ளி நடத்தையின் சமூக வடிவங்கள் இடையறாமல் உருவாக்கப்பட்டு வலுப்படுத்தப்படுகின்றன. விளையாடுவதன் மூலம் குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் ஒத்துழைத்துச் செயல்படும் மானுடத் திறமையைக் கற்கின்றனர்” என்று கூறுவது தமிழர்களின் கிராமிய விளையாட்டுக்கு முற்றிலும் பொருந்தும். அதாவது சிறுவர்கள் விளையாட்டின் வாயிலாக சில திறன்களை பயில்கிறார்கள். இவ்வாறு பயில்கின்ற திறன்களைப் பயில் திறன்கள் என்கிறோம். குறிப்பாக கிராமத்தில ஒரு பழமொழி சொல்லுவாங்க “கண்ணு பார்த்தா கை செய்யுது”, அதுக்கு என்ன அர்த்தம் என்றால் பிறர் செய்வதைப் பார்த்தே பிள்ளைகள் சில உடல் மற்றும் மனத் திறமைகளைக் கற்றுக்கொள்ளலாம் என்பதுதான். அவ்வாறு கற்ற திறனை பிறகு உடல் உறுப்புகளில் நிகழும் இயக்கங்களின் மூலம் விளையாட்டிலோ அல்லது வாழ்க்கையிலோ வெளிப்படுத்துகிறார்கள்.

குறிப்பாக குலை குலையா முந்திரிக்கா என்னும் விளையாட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவெனில் ஓடுதல் மற்றும் தொடுதல்தான் இந்த விளையாட்டில் நிகழும் உடல் இயக்கமாகும். அதனால் கால்கள் மற்றும் மூச்சு மண்டலமான நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் வலுவடைகின்றன. ஓடுதலும் தொடுதலும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழும்போது அது திறனாக மாறுகிறது. அந்த திறன் மதிக்கப்படுகிறது. ஓடுதல் தொடுதலோடு பாடுதல் திறனும் இந்த விளையாட்டால் விளையும் நன்மையாகும்.

இந்த விளையாட்டில் ஓடுபவர்களைக் காட்டிலும் தொடுபவர் மிக விரைவாகச் செயல்பட்டு, அவர்களைத் தொடும்போழுதுதான் தொடுபவர்க்கு வெற்றி கிடைக்கிறது. அவரின் உடல் திறனும் வெளிப்படுகிறது. அதேபோல், ஓடுபவர் தொடுபவரைக் காட்டிலும் மிக வேகமாக ஓடி தொடுபவர் கையில் சிக்காத போதுதான் அவருக்கு வெற்றிகிடைக்கிறது. அவரின் உடல் திறனும் வெளிப்படுகிறது. ஓடுதலும் தொடுதலும் விரைவாக நிகழும்போதுதான் அது அவர்களின் திறனாக மாற்றம் பெறுகிறது.

இந்த விளையாட்டு அமர்ந்திருப்போருக்கு ஏமாற்றுக்காரர்களிடம் எப்படி கவனமாக இருக்க வேண்டும், மற்றவர்கள் நம் முதுகுக்குப் பின்னால் நிகழ்த்தும் செயல்களை எப்படி அவர்களுக்கும் தெரியாமல் கவனிக்க வேண்டும் என்பதையும், சுற்றி வருபவர்க்கு மற்றவர்கள் கவனிக்காதபோது எப்படி மற்றவரை ஏமாற்றுவது என்பதையும் அழகாகச் சொல்லிக்கொடுக்கிறது. தனக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை எப்போதும் விழிப்புடன் கவனிக்கும் பழக்கத்தை இந்த விளையாட்டைவிட யாரும் எளிமையாகச் சொல்லிக்கொடுக்க முடியாது.

இந்த விளையாட்டு ஒரு நல்ல உடற்பயிற்சியாகும். இதனால் கால்களும் தசைகளும் வலுவடைவதோடு மட்டுமல்லாமல் இரத்த ஓட்டமும் சீர்ப்படுதப்படுகிறது.

பெற்றோர்களே, விளையாட்டு என்பது உலகம் முழுக்கக் குழந்தைகளுக்குச் சொந்தமாக உள்ளது. அதை நமது குழந்தைகளுக்கும் சொந்தமாக்குவோம். ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்.

- இன்னும் விளையாடலாம்

Pin It