செட்டில் ஆகி விட்டு தான் திருமணம் செய்வேன் என்று யோசிக்காதீர்கள். வாழ்வில் செட்டில் என்று ஒன்று கிடையாது. ஆசைகள் தான். அது ஒன்றிலிருந்து ஒன்று தாவிக்கொண்டே இருக்கும் இயல்புடையது. போகிற போக்கில் வாழ்க்கை என்னவென்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதன் போக்கில் வாழ்ந்து விடவும் வேண்டும். முப்பது வயதுக்குள் பிறக்க வேண்டிய பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அது தான்.... வளர்ந்து அது பெரிதாவதற்கும் பெரிதாக இருக்கும் பெருசுகள் கிழடாவதற்குமான சமநிலை.

மாப்பிள்ளை அமைய மாட்டேங்குது.. பொண்ணு கிடைக்க மாட்டேங்குது.. என்பதெல்லாம் உள்ளே இருக்கும் பேராசைக்கு தீனி கிடைக்காமல் போட்டுக்கொள்ளும் முகமூடி. பெற்றோர்களை சொந்தக்காரர்களுக்கு முன் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பிச்சை எடுக்க விட்டு விடக்கூடாது. யாரைப் பார்த்தாலும்... பையனுக்கு பொண்ணு வேணும்... பொண்ணுக்கு பையன் வேணும் என்று கேட்க செய்தல் பரிதாபமான செயல். பல பெற்றோர்கள் மற்ற திருமணங்களுக்கு செல்வதே தங்கள் பிள்ளைக்கு வரன் பார்க்க தான் என்பது கசந்தாலும் உண்மை.married couple 466சொந்தத்துல அப்படியே வெறி கொண்டு தேடுவது... நண்பனுடைய நண்பன் அதுவும் நம்ம சனங்களா பார்த்து பார்த்து பொறி வைப்பது எல்லாமே மசாலா படங்களுக்கான ஸ்கிரிப்ட் மாதிரியே இருக்கிறது. அடுத்து அந்த மோனி இந்த மோனி என்று பல மோனிகளில் பெயர்களை பதிந்து விட்டு விலை போகாத பாவனைகளோடு பரிதாபமாக காத்துக் கொண்டிருப்பது.... ஐயோ பாவம் எனத் தோன்ற செய்யும் வாழ்க்கை முறை. அங்கு சரியான ஆள் கிடைத்து விட்டால் பரவாயில்லை. இல்லை என்றால் அப்படி கிடைக்காத ஆட்களின் மன உளைச்சலை அறிவோம்.

ஜோஸ்யகாரரிடம் சென்று தன் பிள்ளைக்கு தானே ஆப்பு வைத்த பெற்றோர்களை அறிவோம். 50 வயது முறுக்கில் நான் சொல்றது தான் சட்டம் என்று எகிறி விட்டு 65 வயது தளர்ச்சியில் புள்ள பேச்சை கேக்காம போய்ட்டமே என்று வருந்தி விட்டு ஒதுங்கி கொள்வார்கள். ஒத்தை வாழ்க்கை சோலி முடிஞ்சு சொட்டையாகி செல்போன் நோண்டிகிட்டே இருக்க வேண்டியது தான்... பையன். புள்ள நிலைமை இன்னும் மோசமாகி ஏற்கனவே இங்க இருக்கற தனி மனுஷி பிரச்சனையில்.. இதுவும் சேர்ந்து மன உளைச்சல் போட்டுத் தாக்கும். தனக்கு கிடைத்த ஒரே ஒரு வாழ்வை தான் முடிவு செய்யாமல் யாரையோ செய்ய விட்டு வேடிக்கை பொருளாய் சர்க்கஸ் கோமாளி போல நிற்பதெல்லாம் படித்தவர் செய்யும் காரியமா. இதற்கு படிப்பறிவே இல்லாத நண்பர்கள் கூட இதயம் காட்டும் வழியில் சென்று மனதுக்கு பிடித்த வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள். இத்தனை படித்தது ஈகோ மனிதராய் ஆவதற்குதான் என்றால் அந்த படிப்பை அரைகுறையாக கொண்டதாகத் தானே அர்த்தம். அரைகுறை எதற்கும் உதவாது. திருமணத்துக்கும் உதவாது. (சரியான வயதில் வீட்டில் பார்த்து- பெண்/ மாப்பிள்ளை - உங்களுக்கும் பிடித்து விட்டால்.. இந்தக் கட்டுரைக்கு அவசியமே இல்லை.)

சொந்தக்காரர்களிடம்... தெரிந்தவர்களிடம்... ஊர்க்காரர்களிடம் வரன் பிச்சை எடுக்க வைப்பது போல இயலாமை ஒன்றுண்டோ. ஏழரை கழுதை வயசு ஆச்சு. தனக்கான துணையை தேர்ந்தெடுக்க முடியல... தெரியலனா... என்னதான் புரிஞ்சுது இந்த வாழ்க்கைல. காக்கா குருவி நாய் கூட தன் ஜோடியா சரியா தேர்ந்தெடுக்குது. இங்க மனுஷன்... எங்க அக்காவுக்கு பிடிக்கல.. ஆயாவுக்கு பிடிக்கல... ஒன்னு விட்ட பெரியம்மாவுக்கு பிடிக்கல.. ஏன் எங்கம்மாவுக்கே பிடிக்கலனு மொட்டை மரமாவே நின்னுகிட்டு இருக்கான்.

அப்பா அம்மா தெய்வங்கள் தான். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் திருமணம் என்பது தனி மனித அணுகுமுறை... தான் என்ற உணருதல் சார்ந்தது. அதில் யாருக்கும் பங்கில்லை. குடும்பத்தையும்... திருமண வாழ்வையும் போட்டு குழப்பிக் கொள்ளும் குளறுபடி இது. அண்ணனுக்கு நடந்தால் தான் நான் செஞ்சுக்குவேன்னு தம்பி காத்திருத்தல் அன்பு பாசம் விட்டுக்கொடுக்காத உறவு... எல்லாம் சரி. ஆனால் அண்ணன் செட்டில் ஆகிட்டு தான் பண்ணுவேன்னு 38 வயசுல இருந்தா.. செட்டில் ஆன 30 வயசு தம்பி என்ன பண்றது. திருமணம் என்பது தனிமனித மனசு சார்ந்த கட்டமைப்பு. அதன் மூலமாக இரு குடும்பங்கள் இணைகிறது எல்லாம் சரி தான். ஆனால் தினமும் ரத்தமும் சதையுமாக இருக்க போவது அந்த இரண்டு பேர் மட்டுமே. ஆக அதற்கு தான் முன்னுரிமை. மற்றவைகள் இணைப்புகள் தானே தவிர என்ஜின் கிடையாது.

ஆக... கல்யாண ஆசை / தேவை இருப்பவர்கள்... சரியான வயதுக்குள் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். காரண காரியங்களுக்கு காத்திருக்க தேவையில்லை. கஷ்டம் யாருக்கு தான் இல்லை. அதை கல்யாணத்தோடு ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும். ஊருக்கே சோறு போட்டு கல்யாணத்தை நிரூபிக்க... பணம் இருந்தால் சரி. இல்லாதவர்கள்.. நாலு நண்பர்களோடு... நெருங்கிய சொந்தங்களோடு... எந்த சாமி முன்னும் பண்ணிக்கொள்ளலாம். எந்தக் குறையும் இல்லை. எந்த தலை குனிவும் இல்லை. எப்படி பார்த்தாலும் அவரவர் வாழ்வு தான் அவரவர்க்கானது. மற்றவர் போல இருக்க இன்னொருவருக்கு தேவை இல்லை.

மீண்டும் சொல்வது...செட்டில் என்று ஒன்று கிடையாது. சாவதைத் தவிர. பெண் கிடைக்கவில்லை மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டு.. தனக்கான ஆளை கண்டு பிடியுங்கள். காதலியுங்கள். அது ஆதி முறை. இன்றைய கால அறிவுக்கு ஏற்று... தனக்கான சரியான ஆளை... மூளை கொண்டு கண்டடையுங்கள். பிறகு இதயம் தன் வேலையைச் செய்யும்.

காதல்னு ஒன்னு கிடையாது. எல்லாமே இரு பக்க தேவை தான் என்ற அறிவியலின் கூற்றுப்படியும்... தன் உள்ள தேவைக்கு பொருத்தமான ஆளை... தன் உடலுக்கு இணையான ஆளை... தன் ரசனைக்குத் தக்க ஆளை... தன் நோக்கத்துக்கு பலமான ஆளை தேர்ந்தெடுப்பது... அதன் பிறகு பேசி பழகி அன்பை வளர்த்துக் கொள்வது.. பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது... பிடியை இறுக்கிக் கொள்வது... உயிரை பரிமாறிக்கொள்வது... அது காதலாய் ஊற்றெடுக்க அனுமதிப்பது... அதன் பிறகான உறவில் பிறகு விரிசல் விழ வாய்ப்பில்லை. ஈகோ விட்டொழிய... இதயங்கள் பேசும்.

இத்தனை வருட வாழ்க்கையில ஒருத்தி கூடவா ஒருத்தன் கூடவா தன்னை புரிஞ்சுக்காம இருப்பான். எத்தனை நண்பர்கள் இருந்திருப்பார்கள். அதில் ஒருவர் கூடவா தனக்கான ஆளாய் இருக்க மாட்டார்கள். ஆக... காதலை கொள்ளாமல் இருக்க... என்னவோ தடுக்கிறது. அது ஸ்டேட்டஸ் ஆக இருக்கலாம். சாதியாக... மாதமாக இருக்கலாம். வீட்டுக்கு பிடிக்காது என்ற முரட்டு பிடிவாதமாக இருக்கலாம். மேற்சொன்ன எதுவுமே 50 வருட காலம் கூட வரும் இணைக்கு கேரண்டி தராது. மனதுக்கு பிடித்த... இதயம் ஒப்புக்கொண்ட... மூளை வாங்கி கொண்ட துணையே துணை. அதற்கு காதலிப்போம்.

திருமணம் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை இல்லை. அதே போல கசப்பதற்கு காதல் திருமணமோ.. கட்டாயத் திருமணமோ... கலந்து பேசிய திருமணமோ... எல்லாம் ஒன்றுதான். கசப்படிக்காமல் இருக்க கற்றுக் கொள்ள காதலே சிறந்த வழி. அது எந்த கல்யாணத்துக்கும் பொருந்தும். பிள்ளைங்க நல்லதுக்குதான்னு சொல்லியே அவர்களின் வயதை ஓட்டி விட்ட குடும்பங்களையும் அறிவோம். பெற்றோர்களை சங்கடப்படுத்தி இங்கு ஒன்றும் இல்லை. ஆனால் அவர்களின் அறியாமையை சுட்டிக்காட்டும் பொறுப்பு பிள்ளைகளுக்கு இருக்கிறது.

- கவிஜி