எது தேவையோ அவைகளைத் தேடிப் பிடித்து வாங்கலாம். அது தேவை என்ற கனத்தின் அடிப்படையில் அதன் கண்டடைவு அழகாய் மாறும். எந்தப் பொருள் உபயோகமற்று இருக்கிறதோ.. அந்தப் பொருள் ஒரு முடக்கத்தை கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனுள் உழைப்போ... அதன் தொழில் நுட்பமோ.. பணமோ முடங்கி இருக்கிறது. யாருக்கோ இயல்பாய் கிடைக்க வேண்டிய ஒரு பொருளை அதீத ஆசை கொண்ட இன்னொருவர் கிட்டத்தட்ட பதுக்கி வைத்தல் தான் அது.
வாங்கும் சக்தி இருக்கிறது என்பதற்காக... தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பது பகட்டுக்கும்... பக்கத்து வீட்டுக்குமான பொருத்தனை. அது நமக்கான தேவைக்கு ஒரு பொருட்டும் ஆகாது.
ஒரு பாட்டு கூட இருக்கும். "யானையைப் போல பூனையும் தின்னால் ஜீரணம் ஆகாது..." என்று. அப்படி யாருக்கு என்ன வேண்டுமோ அவருக்கு தான் அது நிறைவு. மற்றபடி காசு விரயம். இடத்தை அடைத்துக் கொள்ளும் சிக்கல் இருக்கிறது. ஒரு பொருளை வாங்கினால் அதை உபயோகப்படுத்தும் நோக்கில் அதன் உற்பத்தி திறனைக் கையாள வேண்டும். ரெண்டு வருஷம் கழித்து உபயோகம் ஆகும் என்று இப்போது வாங்கி வைப்பது வடிகட்டிய பேராசைத்தனம். மேலும் செயல்படாத தொழில்நுட்பம் தன் கால திறனை இழக்கிறது.
மேலாண்மையில் JIT (Just In Time) என்று ஒரு நுட்பம் படித்திருக்கிறோம். எப்போது எது தேவையோ அதற்கு அப்போது ஆர்டர் போட்டு வாங்குவது. சீமையில் கிடைக்காத கடைச்சரக்கு என்று ஒன்று இந்த காலத்தில் இல்லையே. இந்தக் கடையில் இல்லை என்றால் அந்தக் கடையில் கண்டிப்பாக இருக்கும். தேவைக்கு தேடலாம். ஆசைக்கு தேக்கி வைத்தல்... பண முடக்கம். கூட இட முடக்கம். முடை நாற்றம் வீட்டுக்குள் அடித்தால்... காரணம் இப்படி சேர்ந்து கொண்ட பொருள் குப்பைகள் தான். வீடென்பது விசாலமாக இருக்க இருப்பது. மூலை மூலைக்கு அட்டைப் பெட்டிகளை அடுக்குவது... மூட்டை முடிச்சுகளை கழிப்பது என்று இல்லை. பல சமையலறைகள்... பாத்திர குடோன்களாக இருக்க காரணம் எது. ரெண்டு பேர் சாப்பிட எட்டு பாத்திரங்கள் முன்னே கடை பரப்பி இருக்கும். சமையல் பற்றிய மேலாண்மை தெரியவில்லை என்று தான் பொருள்.
இன்னும் பல வீடுகளில் ஒரு கூத்து நடக்கும். எந்தப் பொருள் வாங்கி வந்தாலும்.. அதன் அட்டைப்பெட்டியை அதாவது கவரை வெளியே வீச மாட்டார்கள். செருப்பு வாங்கி வந்த அட்டைப்பெட்டியை அடுக்கி வைத்து அழகு பார்ப்பார்கள். பொக்கிஷம் போல கட்டிலுக்கடியே... பீரோ சந்தில்... வராண்டா இடுக்கில் என்று சொருகி வைக்க... சும்மா போட்டு வைக்க... அது ஒரு வியாதி என்றே தெரியாமல் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். அது சிறுக சிறுக சேர்ந்து குப்பைக்கு பொக்கே வைத்தது போல ஒரு கட்டத்தில் தூசுப்படலமாய் சேர்ந்து ஒரு தீபாவளி... அல்லது போகி பொங்கல் என்று நாலு நாள் வேலையாகிப் போகும். வீட்டில் கூர்ந்து கவனித்தால்... தேவையான பொருட்களை விட தேவையில்லாத பொருள்களே அதிகம் அடைத்துக் கொண்டிருப்பதை கவனிக்கலாம். கரப்பானுக்கு கூடு கட்ட.. கரையானுக்கு வீடு கட்ட... சிறு சிறு பூச்சிகளின் சித்திரக்கூடுகளாய் அவைகள் மாறி இருக்க... இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் சேர்ந்து கொல்வதை... பெரும்பாலும் சந்தித்தே இருப்போம்.
இதெல்லாம் எனக்கு பிடிச்ச ட்ரெஸ் என்று சொல்லுபவர்களை ஆச்சரியமாய் பார்க்கத் தோன்றும். பிடிக்காமல் ஒரு ட்ரெஸ்ஸை எப்படி வாங்கி இருக்க முடியும். வேண்டாத ஆடைகளை கழித்து விட மனம் வரவே வராது. அது பீரோவில் இடத்தை அடைகாத்துக் கொண்டிருக்கும். அதற்கான உபயோகம் இல்லாமல் போய்... வெகு நாட்களாகி இருக்கும். ஆனாலும் அதன் மீது கொண்ட ஆசை... இதயத்தை சுருக்கி பீரோ மூளைக்குள் கொண்டிருக்கும். ரிசல்ட்... இடப்பற்றாக்குறை.
புதிய டிஸ் - ஐ மாற்றி விட்டு... பழைய டிஸ் -ஐ அவனிடமே தருவதற்கு மனது வராது. அது அப்படியே ஒரு மூலையில் கிடந்து மழைக்கும் வெயிலுக்கும் மன்றாடி... பாசத்திற்கும் வெயில் வாசத்துக்கும் இடையே ஒரு கனத்த சுமையாக கிடக்கும். அதனடியே சிறு சிறு பூச்சிகளின் கூடாரம் அமைந்து விட வழி கொடுக்கும்.
பழைய ஒயர்களை வீச மனம் வராது. பழைய செருப்புகளை கழற்றி விட மனம் வராது. கலைச்சேகரிப்பு வேறு. களைகளை சேகரித்துக் கொண்டிருத்தல் வெற்று. வீட்டில் எங்கு சந்து இருக்கிறதோ அங்கு ஒரு பொருள் அடைத்துக் கொண்டிருக்கும். ஜன்னல் கம்பிகளுக்கிடையே செருகி வைக்காத பாலிதீன்கள் உண்டா. மரச்சாமான்கள் இருந்தால் அங்கே மறதி சாமான்கள் இருக்கும் என்று பொருள்.
பூந்தொட்டிகள் வளர்ப்பது கலை. ஆனால் வெறும் தொட்டிகளை வாசலில் கிடத்தி விட்டு அதை அப்படியே விட்டு விடுவது கொலை. நம்மால் முடிந்தால் ஒன்றைச் செய்ய முயல வேண்டும். ஆசைக்கு ஆரம்பித்து விட்டு பிறகு அம்போவென விட்டு அதையும் குப்பையாக்கும் வல்லமை வாழ்க்கைக்கு ஆகாது. வேஸ்டுகளில் கலைப்பொருட்கள் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அதற்கு கற்பனை பெருக்கெடுக்க வேண்டும். சராசரி வாழ்க்கைக்குள் இருப்போர்.. வேஸ்டுகளை சேகரித்து வைத்து வீட்டை பெருக்கியே தீர்ந்து விடக் கூடாது.
நாள்பட்ட செய்தித்தாள்களை சேகரித்து வைக்கும் நோக்கம் என்னவாக இருக்கும். அது பழுப்பு நிறமாகி... பேப்பர் பூச்சிகள் ஊர்ந்து... தூசுப்படலம் சேர்ந்து... சுவாச அலர்ஜிக்கு கொண்டு போய் விட்டாலும்... அதில் ஒரு தேர்ந்த சேகரிப்பு நடந்தபடியே இருக்கும்.
சின்ன சின்ன பொருட்களை கூட உபயோகம் இல்லை என்றாலும் வெளியே கொடுக்க... வீசி எறிய மனம் வராத போக்கை எப்படி அணுகுவது. சரி எல்லாமே காசு தான். அதற்கு பொருட்களை வீட்டுக்குள் அடைத்து விட்டு மனிதர்களை ஹாலில் போடும் தத்துவம் என்ன வகை வீட்டு மேம்பாட்டு திட்டம்.
- கவிஜி