எழுத்தாளர் அராத்து அவர்களின் ‘உண்மையான காதல்’ புத்தகத்தை கிண்டிலில் வாசித்தேன். 1981 இல் வெளியான Raymond Carver என்னும் அமெரிக்க எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பான “What we talk about when we talk about love?” என்னும் புத்தகத்தில் அதே தலைப்பிலான ஒரு சிறுகதையை மூலக்கதை என்று கூறித் தொடங்குகிறார் அராத்து. ஆகையால் அந்த சிறுகதையை மட்டும் வாசிக்கலாம் என நினைத்து முழு தொகுப்பையும் வாசித்து முடித்தேன். ‘உண்மையான காதல்’ உருவாகக் காரணமாக ஒரு குறும்பட இயக்குனர் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அவருக்கு என் சார்பிலும் நன்றி சொல்லிவிட்டு நூல் அறிமுகத்தைத் தொடங்குகிறேன்.

இரு ஜோடிகள், “Mel–Terri, Nick – Laura” ஆகியோரைக் கதை மாந்தர்களாகக் கொண்டு காதல் பற்றிய realistic உரையாடலை Raymond carver இன் சிறுகதை நிகழ்த்தும். அஸ்வத் –ப்ரியவதனா, ஹர்ஷினி – ரூபன், நரேன், சிந்து என பல கதை மாந்தர்களைக் கொண்டு தமிழ் சமூகத்திற்கு ஏற்றார் போல காதல் பற்றிய realistic உரையாடலை நிகழ்த்துகிறது அராத்துவின் நூல்! அராத்துவின் நூலுக்கும் Raymond Carver இன் சிறுகதைக்கும் என்னென்ன பொருத்தப்பாடுகள்? என்னென்ன வேறுபாடுகள்? என்பதை ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதலாம்! A lot of similarities and undeniably more novelty! ஆனால் spoiler மாதிரி ஆகி விடுமோ என்பதால் அதை விடுத்து நூல் அறிமுகம் போலவே எழுதியுள்ளேன். அப்படியாவது பலர் வாசிப்பார்கள் என்ற நம்பிக்கையில்..

ஜாதி, மதம், கற்பு என பல காரணங்களினால் ஆண்களும் பெண்களும் பழகி ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதையே பெருங்குற்றம் எனக் கருதும் தமிழ் சமூகத்தில், ஆண்-பெண் உறவை மேலும் கெடுக்கும் விதமாகப் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் கண்டவுடன் காதல், பார்க்காமலே காதல், stalking, abuse என்று எதை எதையோ காதல் என்ற பெயரில் உலறித்தள்ளி தமிழ் சமூகத்தை அறிவற்ற சமூகமாகவே வைத்துக் கொள்ளப் பெரும்பாடுபடுகிறது.

araathu book on true loveபாலின சமத்துவம் ஓரளவிற்கு சாத்தியப்பட்டுள்ள மேற்கத்திய நாடுகளில் civil partnership, open relationship, polyamorous relationship, commune life என ஆண்களும் பெண்களும் மாற்றுப் பாலினத்தவர்களும் கூடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே காலக்கட்டத்தில், நம் தமிழ் சமூகத்திற்குக் காதல் என்றால் என்னவென்றே தெரியவில்லை என நினைக்கும் போதும், நிகழ்ந்து கொண்டிருக்கும் பாலியல் குற்றங்களையும் கொலைகளையும் கவனிக்கும் போதும், அறிவு வளர்ச்சியில் நாம் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்பது புரியும். அப்படியான ஒரு நாட்டில் காதல் பற்றிய sensible and realistic உரையாடலை நிகழ்த்த உதவும் எழுத்தாளர் ஆராத்துவின் "உண்மையான காதல்" புத்தகம் மிக மிக முக்கியமானது. Hats off Araathu! 

"காதல் என்றால் என்ன? உண்மையான காதல் என்றொன்று உண்மையாகவே உள்ளதா? யார் மோசமான fascist? hitler ஆ? புனிதமான காதலில் இருக்கிறோம் என்று நம்புபவர்களா? தாலி கட்டினாலே அவ்வுறவிற்கு மரியாதை வந்து விடுகிறதா? பல ஆண்டுகள் திருமண வாழ்வில் / ரிலேஷன்ஷிப்-இல் இருக்கும் அனைவரும் உண்மையிலேயே உருப்படியான, மகிழ்வான உறவில் தான் உள்ளார்களா? நாம் ஏன் true love பற்றியே பேசுகிறோம்? உண்மையான/உருப்படியான செக்ஸ் எப்படி இருக்கும் என்றெல்லாம் ஏன் பேசுவதில்லை? Sex life இல் transparency தேவையா? அதன் மூலம் இந்த மனித இனம் என்ன தான் எதிர்பார்த்துத் தொலைகிறது? காதல் இல்லாமல் sex சாத்தியமா? காதலைப் புனிதப்படுத்தியும் செக்ஸை சிறுமைப்படுத்தியும் வைத்திருக்கிறோமா? "

என அனைத்தையும் அராத்துவின் "உண்மையான காதல்" புத்தகம் வாசித்து நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் காதலி / காதலருக்கு அன்பளிப்பாகவும் வழங்கி உரையாடலாம்! உண்மையான காதல் என்ன என்ற ஆராய்சியில் ஈடுபட்டு, சமூகக் கற்பிதங்களைக் காக்க தன் வாழ்க்கையை வாழாமலே செத்துக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த நூலை வாசித்தால் காதல் பற்றி உருப்படியாக எதையாவது தெரிந்து கொண்டு வாழ்க்கையை வாழலாம்.

புத்தகம் முழுக்கவே reality யோடும், மகிழ்விக்கும் மதுவோடும் இருந்ததென்றாலும், குறிப்பிடத்தக்க, என் மனதைக் கவர்ந்த, சிந்திக்கத் தூண்டும் சில பகுதிகளைக் காணலாம். முதலாவதாக நான் குறிப்பிட்டுக் கூற விரும்புவது, பெரியாரின் காதல் பற்றிய சிந்தனைகளுக்கு இணையாக இருந்தது அராத்துவின் புத்தகம் என்றால் அது மிகையல்ல! "உண்மையான காதல், காமம் இல்லாப் புனிதமான காதல்" எனப் பெரும்பான்மை சமூகம் பேசிக் கொண்டிருக்கையில், பெரியார் ஒருவரின் மொழி மட்டுமே காதல் பற்றிய தெளிவை எனக்கு அளித்திருந்தது! காதல் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் எல்லாப் புனிதங்களையும் சுக்குநூறாக உடைத்து, ‘உண்மைக் காதல்’ என்ற தத்தவத்தையும் மனதில் இருந்து துடைத்தெறிய பேருதவி புரிந்தன பெரியாரின் காதல் பற்றிய எழுத்துக்கள்!

“காதலில் இரண்டு விதமாம். ஒன்று உண்மைக் காதலாம்! மற்றொன்று வெறும் காதலாம்! இல்லாத வஸ்துவிற்கு இரண்டு பெயர்கள் இருந்தால் என்ன? நூறு பெயர்கள் இருந்தால் என்ன?" என்று 1943 ஆம் ஆண்டிலேயும், “காதலும் கடவுளும் ஒன்று என்றால் - காதலும் பொய், கடவுளும் பொய் என்று தான் அர்த்தம்” என்று 1947 ஆம் ஆண்டிலேயும் பெரியார் எழுதிய சிந்தனைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஏனெனில், பொதுவாக நாம் நம்பி romanticize செய்யும் உண்மையான காதலைப் பகடி செய்து எனக்குள் காதல் பற்றிய தெளிவை அவை ஏற்படுத்தியிருந்தன. காதல் பற்றிய பெரியார் மொழிக்கு இணையாக இருந்தது புத்தகத்திலுள்ள பின்வரும் அராத்து மொழி:-

“ட்ரூ லவ்வுன்னுல்லாம் ஒண்ணுமே கெடையாது.. அவ்ளோ ஏன்.. லவ்வுன்னே தனியா ஒண்ணு கெடையாது. செக்ஸ்னு சொல்ல கூச்சப்பட்டுகிட்டு, அது மேல லவ்வுன்னு முலாம் பூசிகிட்டு இருக்கோம். ஆனா செக்ஸ்க்கு லவ் தேவை .. அதும் ஏன்னா லவ் இருந்தா செக்ஸ் இன்னும் நல்லா இருக்கும். அவ்ளோ தான் லவ்வுக்கு வேல்யூ. Love is a sex enhancement tool”.

உண்மையிலேயே, அராத்து கூறுவது asexual மனிதர்களைத் தவிர அனைவருக்கும் பொருந்தும். ஆனால் இதை எல்லாம் என்றைக்கு இந்த தமிழ் சமூகம் புரிந்து கொள்ளும் என்று மட்டும் எனக்குத் தெரியவில்லை. Sex-ஏ இல்லாமல், அந்த வார்த்தையைக் கூட உச்சரிக்காமல், தொடாமல் செய்வது தான் தெய்வகீக் காதல் என்றும் "கல்யாணம் தான் sex-க்கு லைசென்ஸ்" என்றும் கேனைத்தனமாக பேசிக் கொண்டு திரிபவர்கள் இந்த புத்தகத்தை வாசித்துத் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து பார்த்தால் நல்லது!

இரண்டாவதாக, எனக்கு மிகவும் பிடித்தது, மாடர்ன் நளாயினிகளை அம்பலப்படுத்திய விதம். Araathu deserves a huge appreciation for that! ஒரு பெண்ணாக, நான் நிறைய மாடர்ன் நளாயினிகளோடு பழகியுள்ளேன். எந்த நூற்றாண்டில் தான் அறிவும் சுயமரியாதையும் இந்த பெண்ணினத்திற்கு வரும்? என்று என்னை மாதிரியே நீங்களும் நினைத்துப் பார்த்திருந்தால் உங்களுக்கும் இந்த நூல் பிடிக்கும் தான்! கற்பை வெளிப்படையாக practical-ஆக கேள்விக்குட்படுத்தும் தமிழ்ப்பெண்கள் ஒரு சிலர் மட்டுமே! அவர்களையும் அசிங்கப்படுத்துவதில் அவர்களின் சக பெண் தோழிகளான மாடர்ன் நளாயினிகள் தான் முதல் வரிசையில் நிற்பார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை! இதைத் தன் ‘உயிர்மெய் 2’ புத்தகத்தில் அராத்துவும் ஓரிடத்தில் சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனியாகப் போராடித் தான் ஒரு பெண் கற்புக் கோட்பாட்டை அழிக்க முடிகிறது! அதனால் தான் பெண்கள் பலரும் நளாயினிகளாக, வாழாமல் சாகவே விரும்புகிறார்களோ என்னவோ? அது மட்டுமன்றி, மாடர்ன் நளாயினிகளை விரும்பித் தொலைக்கும் தமிழ் ஆண்கள் தான் பெரும்பான்மையினர் என்பதையும் தொட்டுக் காட்டியிருக்கலாம் அராத்து. ஏனெனில் கற்பு என்ற அடிமைத் தத்துவம் பெண்கள் மேல் தணிக்கப்பட்டிருந்தாலும், அதைத் தமிழ் ஆண்களும் தங்கள் உயிரெனப் பாதுகாக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாதல்லவா? தமிழ் சமூகத்தில் இது தான் கற்பின் தற்போதைய நிலை!

மூன்றாவதாக, எழுதி எழுதியே பல விஷயங்களைக் கடக்கும் கதை மாந்தரான , எனக்கு மிகவும் பிடித்த அஸ்வத் பற்றிய சிறப்பம்சங்களைக் கூறலாம் என நினைக்கிறேன். என் முதல் காரணத்தில் அராத்து மொழி என்று நான் குறிப்பிட்டிருந்ததை கூறுபவர் அஸ்வத் தான்! படுபயங்கரமான கரணங்களுக்காக மட்டுமே divorce நடக்கும் ஒரு நாட்டில், divorce செய்தாலே ஆணும் பெண்ணும் எதிரிகள் போல் வாழும் ஒரு நாட்டில் தன் முன்னாள் மனைவியின் தற்போதைய கணவருக்கு tips வழங்குகிறார் அஸ்வத். தான் இன்னொரு காதலுறவில் இருப்பதாகத் தெரிந்த தன் மற்றொரு காதலுறவு தனக்கு அனுப்பிய messageஇல் இன்னொரு ஆணைப் பற்றி அனுப்பியதை மற்ற பெண்களுக்கும் share செய்ய சொல்கிறார் அஸ்வத்! இதையெல்லாம் இந்த தமிழ் மா(ம)க்கள் வாசித்தாவது எதையாவது புரிந்து கொள்ளட்டும்.

Raymond carver இன் சிறுகதை தான் மூலக் கதை என்பதால் ஒரு powerful பெண் கேரக்டரும் ஆராத்துவின் புத்தகத்திலும் இல்லை! அனைத்துமே அவர் மொழியில் மாடர்ன் நாளாயினிகள் தான்! ‘இதற்குத் தான் நிறைய பெண் எழுத்தாளர்கள் வர வேண்டும்’ என்று அராத்துவே ஓரிடத்தில் இதனால் தான் கூறுகிறார் போல. I’ll also spread the word Araathu! ஆனாலும் முலையைப் பற்றி எழுதிய கவிஞர்/எழுத்தாளரைப் பார்த்துப் பரிதாபப்படாமல் இருந்திருக்கலாம் அஸ்வத்.

காதல் பற்றிய கலந்துரையாடல் பாணியிலான ஒரு புத்தகத்தைத் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியதற்காக அராத்துவிற்கு வாழ்த்துகள். உரையாடல்கள் நம் வாழ்வை செழுமைப்படுத்தும்! மகிழ்வாக்கும்! அறிவை விரிவாக்கும்! ஆனால் தமிழ் மக்களாகிய நாம் எதைத் தான் ஆராமர உட்கார்ந்து, புத்தகத்தில் உள்ளவாறு மதுவோடோ, அல்லது மது இல்லாமலோ பேசி விடுகிறோம். அப்படிப்பட்ட effective and meaningful conversations இல்லாததாலேயே மந்தை மனப்பான்மையோடு மற்றவர் வாழ்க்கையைப் பார்த்து பார்த்து காப்பி அடித்தே நம் வாழ்க்கையையும் ஓட்டிக் கொண்டு திரிகிறோம். பகுத்தறிவாளர்கள் (பெரும்பான்மை) என்று கூறிக் கொள்பவர்களும் இதற்கு விதி விலக்கல்ல என்பது கசப்பான உண்மை!

"உண்மையான காதல்" புத்தகத்தை "fictional conversation" எனச் சொல்லலாமா? என்று யோசிப்பதாகக் கூறுகிறார் அராத்து. எப்படி வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும்! Dirty realism பேசும் Raymond carver இன் "What we talk about love When we talk about love" சிறுகதையையும், அராத்துவின் "உண்மையான காதல்" புத்தகத்தையும் மிகவும் ரசித்தே வாசித்தேன். அதனால் எப்படிக் கூறிக் கொண்டாலும் அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ‘A disturbing conversation’ என்று அட்டைப்படம் கூறினாலும் ஆண்-பெண் காதல் பற்றிய ஒரு ‘realistic conversation’ தான் “உண்மையான காதல்”. இந்த புத்தகத்தையும் Raymond Carver இன் சிறுகதையையும் அவசியம் ஒரு முறையேனும் வாசியுங்கள் ! Realistic ஆக காதல் பற்றி உரையாடுங்கள்!

உண்மையான காதலைப் பற்றிப் பேசுவதற்கு சியர்ஸ்! – அஸ்வத்

A toast to love! True love! - Mel

[பி.கு : அராத்துவின் ‘உண்மையான காதல்’ புத்தகத்தையும், Raymond Carver இன் ‘What we talk about when we talk about love?’ புத்தகத்தையும் Amazon kindle-இல் வாசிக்கலாம்.]

- யாழ்மொழி