வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துப் போவது என்பதால் பிரச்சினைத் தீராது; சகித்துக் கொள்ளும் மனப்பான்மையில் தான் வாழ்க்கையின் வெற்றியே அடங்கியிருக்கிறது என்பதே உளவியல் ஆய்வாளர்களின் முடிவு என்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காதலர் நாள் (பிப். 14, 2022) விழாவில் மருத்துவர் சிவபாலன் விளக்கினார்.

வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணங்களைவிட, காதல் திருமணங்களில் ஏன் அதிக சிக்கல்கள் வருகிறது? ஏன் காதலித்து திருமணம் செய்தவர்கள் நீதிமன்றங்களில் அதிகமாக விவாகரத்திற்கு வருகிறார்கள்? வீட்டில் ஏற்பாடு செய்த திருமணங்களில் பிரச்சனை என்றால், பெற்றோர்கள் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள். “நாங்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தது தானே, கல்லானாலும் கணவன் தானே சகித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்து” என்று பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், காதல் திருமணங்களில் பிரச்சனை வந்தால், ‘நீ பார்த்து தேடிய மாப்பிள்ளை தானே, நீ தானே எங்களை எதிர்த்து திருமணம் செய்தாய், நீயே பார்த்துக் கொள்’ என்று கூறிவிடுவார்கள். எனவே பெற்றோர்களிடம் ஆதரவு இல்லை. கணவரிடமும் முரண்பாடு, ஆதலால் ஒரு ஏமாற்றம் ஏற்படுகிறது. விவாகரத்தும் அதிகமாகிறது. விவாகரத்திற்கு வருகிறவர்கள் கூறுவார்கள், ‘காதலிக்கும் போது பேசிக் கொண்டே இருப்பான். ஆனால் இப்போது பேசுவதே இல்லை. பத்து நிமிடம் பேச கூட நேரமில்லை’ என்று கூறுவார்கள். எனவே ஒரு முன் முடிவோடு திருமண வாழ்க்கையில் ஈடுபடுவதால் அதிகமான ஏமாற்றங்கள் ஏற்படுகிறது.

காதலிக்கும் போது இருந்தவைகளை, திருமணத்திற்குப் பிறகும் எதிர்பார்ப்பது தவறு. திருமணத்திற்குப் பின் அதிக பொறுப்புகள் உண்டாகும். அந்த குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தை இருந்தால் குழந்தையை வளர்க்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பது தான் மிக முக்கியமான விடயம். இவ்வளவு சிக்கல்களுக்கிடையில் நீங்கள் காதலிக்கும்போது எப்படி இருந்தீர்களோ அப்படியே இருக்க முடியாது. எனவே காதல் திருமணங்களில், ‘அதிக எதிர்பார்ப்புகளோடு திருமண வாழ்வில் ஈடுபடுவது ஒன்று, மற்றொன்று வெளியில் இருந்து அதாவது பெற்றோரின் ஆதரவு இல்லாமல் இருப்பது’ இவைகள் தான் காதல் திருமணங்களில் விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கிறது.

எனவே, திருமணம் என்றாலே சிக்கல்கள் வரத்தான் செய்யும். என்னிடம் வருபவர்கள் கேட்பார்கள், பிரச்சனையே இல்லாமல் வாழனும் என்று, அதற்கு இறந்தால் தான் முடியும் என்பேன். வேறு வழி இல்லை. பிரச்சனைகள் வரத்தான் செய்யும், அதை எப்படி சமாளிக்கிறோம், அதை எப்படி அணுகுகிறோம், அந்த பிரச்சனையை சமாளிக்க எந்த அளவிற்கு தயாராகிறோம், அந்த பிரச்சனைக்கு எந்த அளவிற்கு நீ தான் காரணம் என்பதை உணருகிறாய் என்பது தான் முக்கியம். இதை பெரும்பாலும் செய்வதே இல்லை. ஒரு பிரச்சனை வந்தது என்றால் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளோடு பூசி மொழுகி விடுகிறோம். மற்றவர் மீது குற்றச்சாட்டை சுமத்தி, குற்றச்சாட்டுகளின் வழியாகவே அணுக பார்க்கிறோம். ஒரு பிரச்சனை வருகிறது என்றால் அதற்கு நான் எப்படி பொறுப்பு என்பதை உணர வேண்டும். ஒரு பிரச்சனையை நாம் நம்மிடமிருந்து தான் அணுக வேண்டும். அப்போதுதான் அதை தீர்க்க முடியும். இவைகள் தான் காதல் திருமணங்களில் வரும் சிக்கல்கள்.

பிரச்சினைகளோடு எங்களிடம் வரும் இணையர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது வழக்கம். இதில் யார் பக்கம் தவறு இருக்கிறது என்று ஆராய்வதில் எந்தப் பயனும் இல்லை; பிரச்சினை அவர்களிடம் இல்லை; அவர்களின் உறவுகளில் இருக்கிறது; எனவே அதைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

நாம் என்ன உணர வேண்டும் என்றால், நாம் காதலித்தோம் தான். அந்த காதல் என்பதே பெரியதாக ஒன்றும் இல்லை. அதுவே ஒரு கட்டுக்கதை தான். அது எந்த வகையிலும் நாம் தற்போது வாழும் வாழ்க்கைக்கு உபயோகரமானதாக இருக்காது. அதை நினைத்தோமென்றால் தற்போது வாழும் வாழ்க்கையை மேலும் சிக்கலாகத்தான் மாற்றும் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இது முழுவதும் என்னோட பொறுப்பில் நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை, இதில் வரும் ஒவ்வொரு சிக்கலையும் நானாகத் தான் தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து யாரிடமும் ஆதரவு கேட்கக் கூடாது என்றால், ஒவ்வொரு காரியத்தையும் பொறுப்புடனும், ஆராய்ந்தும் செய்ய வேண்டும். ஒவ்வொன்றி லும் நமது பக்கம் என்ன தவறு உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். இதில் உறவுமுறை தான் மிக முக்கியமான ஒன்று. இதற்காக நாம் சில விடயங்களை செய்தாக வேண்டும். அது சினிமாவில் கூறுவது போல விட்டுக் கொடுப்பது அல்ல. சகித்துக் கொள்ள வேண்டும். சகிப்புத் தன்மை தான் மன வாழ்க்கையில் மிக முக்கியமான விடயம். உலகில் உள்ள அனைத்து ஆய்வுகளின்படி, திருமண வாழ்க்கையின் வெற்றி சகிப்புத் தன்மை தான் என்று கூறுகிறது. “எங்கேயும் விட்டுக் கொடுப்பதால்” என்று கூறவில்லை.

எனவே உறவு வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை வேண்டும். சகிப்புத் தன்மைக்கு புரிதல் மிக முக்கியமான ஒன்று. என்ன புரிதல் வேண்டும்? உள்ளதை உள்ளபடியாக புரிந்து கொள்வது. எடுத்துக்காட்டிற்கு, ஒருவரை நாம் எப்படி எதிர்பார்க்கிறோமோ அப்படியே நாம் கற்பனை செய்து கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவர் அப்படி இல்லை யென்றாலும், நாம் ஏற்றுக்கொள்ளாமல் நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண் டோம் என்றால் அது சரியான புரிதலாக இருக்காது. அவர் எப்படி இருக்கிறாரோ அப்படிப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரிடம் சில பலமும் இருக்கும், பலவீனமும் இருக்கும். பலவீனம் இருப்பதால் தூக்கி எறிந்து விடக்கூடாது. அவரிடமிருந்து அந்த பலங்கள் (Positives) வேண்டுமென்றல், பலவீனங்களை (negatives) ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு பலவீனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் இதை நீ மாற்றிக் கொள் என்று இறுதி வரை கூறிக்கொண்டே இருக்கக் கூடாது. காதலிக்கும் போது அப்படி இல்லையே, திருமணத்திற்குப் பிறகு தான் இப்படி என்று எண்ணினால் இது தவறு. காதலிக்கும் போது நடித்துள்ளார்கள். திருமணத்திற்குப் பிறகு தான் உண்மை புரிந்துள்ளது. எனவே முதலில் புரிந்து கொள்ள வேண்டும், இரண்டாவது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், மூன்றாவது சகித்துக் கொள்ள வேண்டும். இதை நான். எளிமையாக கூறிவிட்டேன். செய்வது கடினம் தான்.

இவையெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் Intellectual (அறிவாளியாக) ஆக இருக்க வேண்டும். உணர்ச்சிப் பூர்வமாக (emotional) அணுகக் கூடாது. உணர்வுப்பூர்வமாக எந்த ஒரு விடயத்தைப் பார்த்தாலும் அதனால் நிறைய ஏமாற்றங்கள் தான் ஏற்படும். எனவே பிரச்சனைகளை அறிவுப் பூர்வமாக உள்ளதை உள்ளபடியே உணர்ந்து, புரிந்து, ஏற்றுக் கொண்டு, சகித்துக் கொண்டு இருக்க முடியுமென்றால் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். அப்படி வாழ்ந்தால் மிகச் சிறந்த தம்பதிகளாக இருக்க முடியும்.

ஆனால் அந்த புரிதலுக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பது தான் கேள்வி ? இதில் எந்த புனிதப் படுத்துதலும் வரக்கூடாது. எங்களை போல உலகத்தில் யாருமே இல்லையென்று கூறவும் கூடாது. அது பொய் என்று உங்களுக்கே தெரியும். இப்படி எல்லாம் இல்லாமல், உணர்ச்சிவசப்படாமல், புனிதப் படுத்தாமல் அறிவுப் பூர்வமாக ஒரு உறவை அணுகுவதால் பக்குவப்பட்ட, முதிர்ச்சியான உறவாக, ஒரு உறவை நீடித்து வைத்திருக்க முடியும் என்றார், சிவபாலன்.

நிறைவாக சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

(நிறைவு)