தோழர் நிர்மல். இவரது பெரியாரியல் பயணம் கடவுள் மறுப்பில் தான் தொடங்கியது. இன்று கடவுள் மறுப்புக்குக் காரணமான ஜாதி, மதம், பண்பாடுகளிலிருந்து வெளியேறுவதன் தொடக்கமாக - ஜாதி மறுப்புத் திருமண வாழ்வைத் தேர்ந்தெடுத்துள்ளார். தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட சமுதாயங் களின் இணைவை வலியுறுத்தும் இவரது திருமணம், வெறும் காதல் திருமணம் மட்டுமல்ல; ஜாதி ஒழிப்புக்காகத் திட்டமிடப்பட்ட காதல்மணம்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் இதைப்போல ஏராளமான தோழர்களுக்குத் தானே ஏற்பாடு செய்து ஜாதி மறுப்பு மணங்களை நடத்தி யுள்ளார். அவரைப் போலவே திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் இந்துமதி - நிர்மல் திருமணத்தைத் தானே முன்னின்று பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இந்த ஜாதி கடந்த காதலர்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்துள்ளார். கொள்கைகளைப் பேசுவதோடு நிற்காமல், தானும் பின்பற்றி, தனது தோழர் களையும் பின்பற்றச் செய்யும் பெரியாரின் - திராவிடர் இயக்கத் தலைமைகளின் தனித்தன்மை இதுதான்.
தோழர் இந்துமதி
என்னுடைய பெயர் இந்துமதி. நான் கோயம் புத்தூர் பகுதியில் உள்ள உக்கடத்தில் வசிக்கிறேன். அப்பா வீராசாமி, அம்மா சாந்தி. நான் படித்தது இசை. இப்போது ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.
நிர்மலுடைய அறிமுகம் எப்போது கிடைத்தது?
என்னுடைய அக்கா காதல் திருமணம் செய்து கொண்டதால் எனக்கு, சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டும் என்று மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அப்போது தான் என்னுடைய மாமா கிருஷ்ணன் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இருந்தார். அவர் நீ வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்தால் சுதந்திர மாக இருக்க முடியாது. என்னுடைய இயக்கத்தைச் சார்ந்த ஒருத்தரைத் திருமணம் செய்து கொண்டால் உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றார். அடிமைத்தனம் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்றார். முதன்முதலாக என்னுடைய மாமா ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துக் கொண்டு போனார். அப்போது என்னுடைய மாமா, நிர்மலை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
முதலில் உங்களுடைய காதலை வெளிப்படுத்தியது யார்?
நிர்மலைப் பற்றி எங்க மாமா நிறைய சொல்லி இருக்கிறார். கிணத்துக்கடவு பகுதியில் இருக்கிறார். மிகவும் சாதிவெறி பிடித்த ஊர். அந்த ஊரில் இருந்து கொண்டு சாதி ஒழிப்புக்காக மிகவும் பாடுபடுகிற தோழர். நேர்மையான தோழர் என்று சொன்னார். இப்படி சொல்லும் போது எனக்கு அவர் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதன் பிறகு என்னுடைய மாமா வீட்டிற்கு நிர்மல் வரும்போது அவருடைய போன் நம்பரை கேட்டு வாங்கிக் கொண்டேன். நான் தான் முதலில் சொன்னேன். காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை. உங்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன்.
உங்களுடைய பெற்றோர் காதலை எப்படி எடுத்துக் கொண்டார்கள்?
நான் வீட்டில் முதலில் அம்மாவிடம் தான் சொன்னேன். சொல்லும் போது பயந்தார்கள். “நம்மளுடைய சாதியில் திருமணம் செய்தால் ஏதாவது பிரச்சனை என்றால் தட்டிக் கேட்கலாம். வேற சாதி என்கிற பொழுது நம்மளையே அவர்கள் முதலில் ஏற்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது உன்னை எப்படி ஒரு மருமகளாக ஏற்பார்கள்” என்று என்னுடைய அப்பா கேட்டார்.
“இல்லை அப்பா அவர் நம்மளுடைய சாதியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்” என்று சொன்னேன். எங்களுடைய வீட்டிற்கு நிர்மலை வரச் சொன்னேன். முதலில் என்னுடைய அம்மாவிடம் பேசினார். அதன்பிறகு என்னுடைய அப்பாவிடம் பேசினார். எங்களுடைய வீட்டிலும் ஏற்றுக்கொண்டார்கள்.
சரி தி.க கட்சி என்கிறார்கள், உங்களுடைய திருமணம் எப்படி நடக்கும் ? மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரும் வந்து நம்முடைய வீட்டில் பேசுவார்களா ? என்றார்கள். அதற்கு நான் அவர்கள் யாரும் பேச வரமாட்டார்கள். அவருடைய வீட்டில் இருந்து எங்களுடைய திருமணத்திற்கு யாரும் வரமாட்டார்கள். அவர் சார்பில் கொளத்தூர் மணி அண்ணன் வந்து நம்முடைய வீட்டில் பேசுவார் என்று சொன்னேன். மணி அண்ணனும் வந்து பேசினார். அப்போது அண்ணனிடம் என்னுடைய அப்பா “இவர்கள் தாலியும் கட்டாமல் எந்த ஒரு சடங்கும் இல்லாமல் திருமணம் செய்வோம் என்கிறார்கள், இது எப்படி நடை முறைக்கு ஒத்துவரும் ?” என்றார்.
நாங்கள் `சாதி இல்லை` என்கிற ஒரு அமைப்பில் இருந்து கொண்டு கண்டிப்பாக தாலி எல்லாம் கட்டாமல்தான் திருமணம் செய்வோம். இவர்களது திருமணத்தை Register செய்து விடலாம். அந்த மாதிரியான திருமணம்தான் சட்ட ரீதியாகச் சரியானதாக இருக்கும் என்றார் தலைவர். அதன் பிறகு எனக்கும் என்னுடைய அப்பாவுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியாவது நடத்தவேண்டும் என்று சொன்னார். அதை நான் நிர்மலிடம் சொல்லும்போது அது வீண்செலவு அது தேவையில்லாத ஒன்று என்று சொன்னார். அதனால் நான் வரவேற்பு நிகழ்ச்சியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
உங்களுடைய திருமணம் எப்போது நடந்தது?
தி.வி.க தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் 17.05.2015 இல் நிர்மல் ஆசைப்பட்ட மாதிரி கிணத்துக்கடவு பகுதியில் பொதுக்கூட்டத்தில் `தாலி, சாதி, சடங்கு` மறுத்து நடந்தது.
உங்களுடைய திருமணத்தை உங்கள் உறவினர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள்?
என்னுடைய திருமணத்திற்கு என்னுடைய உறவினர்களுக்குப் பத்திரிக்கை கொடுத்தோம். ஆனால், யாரும் திருமணத்திற்கு வரவில்லை. என்னுடைய சித்தி மட்டும் என்னிடம் வந்து ஒரு மூன்று நாட்களுக்கு மட்டும் தாலி கட்டிக்கோ அதுக்கு பிறகு நீயே அதை கழட்டி வீசிரு என்று சொன்னார்கள். 3 நாள் கழித்து கழட்டி வீசிருன்னு நீங்களே சொல்லும்போது தாலி வேண்டாத ஒண்ணு. அதை எதுக்கு நான் கட்டணும். நாங்கள் இருவரும் ஒப்பந்தம் போட்டுத் திருமணம் செய்கிறோம். இதில் தாலி எதற்கு? என்று நான் மறுத்துவிட்டேன்.
பெரியாரியல் கொள்கையை ஏற்க காரணம் என்ன?
பெரியாரியல் கொள்கையை ஏற்க முதல் காரணம் என்னுடைய மாமா தான். அவருடைய வழி காட்டிதலில் பேரில்தான் நான் பெரியாரியல் கொள்கையை ஏற்றேன். பெண்விடுதலை, சாதி ஒழிப்பு இவைகள் எனக்கு பிடிக்கும். இதில் முக்கியமாக சாதி ஒழிப்பு எனக்கு மிகவும் பிடித்த மானது. பெரியாரியலை ஏற்றுக்கொண்டு வாழ்கிற ஒருவரைத் திருமணம் செய்தால் என்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதற்குப் பெரியாரியல் வாழ்வுதான் சரியானதாக இருக்கும். என்று நினைத்தேன். நான் நகரத்திலேயே வளர்ந்ததால் எனக்கு சாதிக்கொடுமைகளைப் பற்றி தெரியாது. என்னுடைய மாமா நிர்மலை அறிமுகப் படுத்தும்போது அவருடைய ஊரையும், அங்குள்ள சாதிக் கொடுமைகளையும்பற்றிச் சொன்னார். அப்போதுதான் எனக்குத் தெரிந்து இப்படியும் மக்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். எந்த சாதியை வீட்டிற்கு வரக்கூடாது என்று நினைத் தார்களோ அந்த வீட்டில் என்னை அழைத்துக் கொண்டு போனார். அது அவருடைய வெற்றி.
திருமணத்திற்குப் பிறகு உங்களுடைய மாமியார் வீட்டில் உங்களை ஏற்றுக்கொண்டார்களா?
எங்களுடைய திருமணத்திற்குப் பிறகு நான் ஆறு மாதம் மாமியார் வீட்டிற்கு போகவில்லை. ஆனால் போனில் மட்டும் என்னிடம் பேசுவார்கள். மாமியார் என்னைப் பார்ப்பதற்கு இங்கே வருவாங்க. நிர்மலுடைய அண்ணனும் வருவார்கள். ஆனால் நான் போகவில்லை.
எங்களுடைய வீட்டிலும் என்னை மாமியார் வீட்டிற்குப் போக அனுமதிக்கவில்லை. இப்போ தைக்கி நீ அங்கே போக வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். “அங்கே போனால் உன்னை விஷம் வைத்தோ அல்லது வெட்டிக்கொன்றுவிட்டாலோ என்ன செய்வது?” என்று என்னை அங்கே அனுப்பப் பயந்தார்கள். என்னுடைய மாமியாரும் என்னை வீட்டிற்கு வா என்று கூப்பிடவும் இல்லை. அதனால் நான் போகாமல் இருந்தேன்.
நிர்மலுடைய அண்ணனுக்கு நடந்த திருமணத்தில்தான் முதன் முறையாக நிர்மலின் வீட்டுக்குப் போனேன். நான் நிர்மலின் வீட்டிற்குப் போவதற்கு முன்பே நிர்மலின் அம்மா என்னிடம் நன்றாகப் பேசுவார்கள். நான் வீட்டிற்குப் போனதற்குப் பிறகு நான் சமைத்துக் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள், பாராட்டுவார்கள். என்னுடைய மனது நோகும்படி எந்த ஒரு வார்த்தைகளையும் சொல்ல மாட்டார்கள். என்னை ஒரு மகளைப் போல நடத்தினார்கள். என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். நிர்மல் என்னை ஏதாவது சொன்னாலும் கூட என்னுடைய மாமியார் மதியை எதுவும் சொல்லாத திட்டாதன்னு சொல்வாங்க. நிர்மல் ஏதாவது சொன்னால் என்னிடம் சொல்லு மதி என்று சொல்வார்கள்.
பெரியாரியல் கொள்கைகளைப் பரப்புவதற்கு உங்களுடைய பங்களிப்பு என்ன?
என்னுடைய வேலையின் காரணமாக சரியாக இயக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் நிர்மல் முழுநேரப் பணி யாளராக இருப்பார் என்று திண்டுக்கல் காதலர் தின நிகழ்ச்சியில் சொன்னேன். அதே மாதிரிதான் இப்போது நிர்மல் முழுநேரப் பணியாளராக இருக்கிறார்.
இருவரிடமும்
உங்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றி சொல்லுங்கள்?
நாங்கள் இருவரும் எங்களுடைய வீட்டையும், நிர்மலின் வீட்டையும் சாராமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். தனியாக, சுயமாக சம்பாதித்து வாழ்கிறோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் இருக்கிறோம். திருமணத்துக்கு முன்பே எனக்கு வேலை கிடைத்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லை. வேலை எனக்கு நிரந்தரமாக கிடைத்ததற்குப் பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது தான் குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தேன்.
ஏன்னா பெரியாரியல் வாழ்வியலில் இருந்து கொண்டு, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நாம் ஒரு வறுமையில் இருந்தாலும் கூட, பார்க்கிறவர்களுக்கு இது கடவுள் கொடுத்த தண்டனை என்று சொல்வார்கள். அப்படி யாரும் சொல்லிவிடக்கூடாது என்று நினைத்தோம். நாங்கள் கஷ்டப்பட்டு முன்னேறனும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறோம். என்னுடைய வாழ்க்கையில் வீட்டு வேலைகளில் அனைத்திலும் நிர்மல் சரிசமமாக பங்கெடுத்துக்கொள்கிறார். இதனால் நான் வேலைக்குச் செல்லுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
தோழர் நிர்மல்
என்னுடைய பெயர் நிர்மல். என்னுடைய அப்பா பெயர் வேலுச்சாமி, அம்மா நாகரத்தினம், அண்ணன் மாணிக்கவாசகர். என்னுடைய ஊர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகில் உள்ள வடபுதூர். என்னுடைய தொழில் ஃபோட்டோ கிராபர். அது போக மீதி நேரங்களில் முழு நேரமும் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இயக்கப் பணி களைச் செய்கிறேன்.
நீங்கள் பெரியார் இயக்கத்தில் எப்படி அறிமுகம் ஆனீர்கள்?
என்னுடைய 20 வயதில் சுந்தராபுரம் பகுதியில் சிட்கோவிற்கு வேலைக்கு சென்றேன். அந்தப் பகுதிக்குப் போகும்போது பெரியார் இயக்க நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுண்டு. எங்க ஊரில் தி.மு.க வுடைய தீவிரப் பற்றுக் கொண்ட ஒருவர் இருந்தார். உங்கா ரங்கசாமி என்று ஒருவர் இருந்தார். அவருடன் அதிக நேரம் பெரியாரைப் பற்றியும், தி.மு.க. வைப் பற்றியும் கலந்துரையாடினேன். எங்க அப்பாவும் தி.மு.க. காரர் என்பதால் அவரைச் சந்திக்க ரங்கசாமி அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார். அவரின் பெரியார் நாத்திகக் கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் பெரியார் இயக்கத்துக்கு வருவதற்கு இருவரும் ஒரு காரணம். எங்க ஊருல கடவுள் நம்பிக்கையைப் பரப்பும் விதமாக சாமியார்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் காரியங்களை நான் பார்த்து விமர்சிப்பேன். அவர்கள் செய்யும் மூடநம்பிக்கை எல்லாம் இளைஞர்களிடம் எடுத்து சொல்லுவேன். அங்கே எல்லாரும் என்னைப் பார்த்து பெரியார் மாதிரி பேசிட்டு இருக்கிற என்பார்கள். அப்ப இருந்து பெரியாரைப் பற்றி அதிகமாத் தெரிஞ்சுக்கோணும் என்று எண்ணி, எங்க அப்பாவிடம் கேட்டேன். அதற்கு அவர் சொல்லுவார் நமக்குக் கலைஞர் பிடிக்குமல்ல. அந்தக் கலைஞரையே முதலமைச்சர் ஆக்கியது பெரியாரும், அவருடைய கொள்கையும் தான். பெரியார் ரொம்ப நல்லவர் பெரிய தலைவர் என்று அப்பா சொன்னார். அன்று முதல் நாத்திக கொள்கையை நான் எங்கள் ஊரில் அதிகமாக பேசப் ஆரம்பித்தேன்.
இதற்கு முன்பு நான் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சாஹா பயிற்சி வகுப்பு களில் கலந்து கொண்டு அவர்கள் சொல்வதை விட நான் ஒரு படி அதிகமாக செயல்படுவேன். ஆனால் சாமியார் செய்யும் தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டுவேன். அதனால் ஊர்மக்கள், ஊர்த் தலைவர்கள் வெறுப்பைக் காட்டினார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்தேன் என்று சொல்கிறீர்கள். எந்த வயதில் இருந்தீர்கள்? அதை விட்டு ஏன் வெளியே வந்தீர்கள் அதைப்பற்றிச் சொல்லுங்க?
எனக்கு 13 வயது இருக்கும். எங்கள் ஊர்ப் பகுதியில் ரவி ஜீ என்று ஒருவர் இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.காரர் அவர் தான் உடற்பயிற்சி (சாஹா)சொல்லித்தருவார்.என்னுடன் சிறுவர்களை யெல்லாம் அழைத்துச் சென்று பொது இடத்தில் பயிற்சி கொடுப்பார். அப்பொழுது நான் ரஜினி ரசிகனாக இருக்கிறேன். ரஜினி எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். நமது ஆர்.எஸ்.எஸ். செயல் பாடுகள் ரஜினிக்கும் பிடிக்கும் என்று ரவி ஜீ சொல்லுவார் .
எனக்குக் கூட்டமாக இருப்பது ரொம்பப் பிடிக்கும். “ஓம் காளி” “ஜெய் காளி” என்று (சத்தம்) கோசம் விடுவது எல்லாம் எனக்கு ஒரு விதமான உற்சாகமாக இருக்கும். இதை எல்லாம் விளை யாட்டுத்தனமாக எடுத்து கொண்டேன். ஒவ்வொரு கட்சிக் கொள்கை பற்றியும் தெரியாத வயதில் இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் செய்து கொண்டு இருந்தேன். ஆனால் எனக்குப் பெரியார் இயக்கத்தைப் பற்றி முழுமையாகத் தெரிய வந்தது என்னுடைய 20 வயதில் தான். சுந்தராபுரம் செந்தில்நாதன் அவர்களின் தொடர்பு மூலமாகப் பெரியார் நற்பணி மன்றம் என்ற பெயரில், தெரு முனைக் கூட்டங்களை நடத்தினேன். நான் நடத்திய முதல் கூட்டம் காமராசர் பிறந்தநாள் கூட்டம்.
நீங்கள் பெரியார் இயக்கத்திற்குள் வரும்போது நாத்திகம், சாதி ஒழிப்பு பற்றி எல்லாம் தெரிந்து வந்தீர்களா?
நான் முதலில் நாத்திகக் கொள்கை பற்றிப் பேசித்தான் இயக்கத்திற்குள் வந்தேன். சாதி ஒழிப்புப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் நான் ஆரம்பத்தில் சாதி ஒழிப்பை விரும்பாதவன். சில பயிற்சி வகுப்புகளிலும் பெரியாரியல் புத்தகங் களைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான் பெரியாருடைய முதன்மையான பணி சாதி ஒழிப்பு தான் என்று உணர்ந்தேன். அன்று முதல் நான் சாதி ஒழிப்பை முதன்மைப் பணியாகச் செய்ய வேண்டும். சாதி ஒழிய வேண்டும் என்று உணர்ந்தேன். அதை எங்கள் வீட்டில் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். எங்கள் வீட்டில் வேலை பார்க்க வருபவர்களிடம் சாதி வித்தியாசம் பார்க்க வேண்டாம் என்று பேசுவேன். மிகவும் கீழ்த்தரமான வேலைகளை அவர்களுக்கு சொல்ல வேண்டாம் என்று அந்த வேலைகளையெல்லாம் நானே செய்கிறேன் என்று நானே வாசல் எல்லாம் சுத்தம் செய்தேன்.
அப்போழுது நான் நினைத்தேன் இதை செய்தால் மட்டும் போதாது இந்த சாதியில் யார் கீழானவர்கள் என்று சொல்லப்படுகிறார்களோ, அவர்களின் வீட்டில் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது தான் பெரியாரின் கொள்கையின் அடிப்படையில் நான் பூர்த்தி செய்ததாக இருக்கும் என்று எண்ணினேன். நான் அப்போது எங்கள் வீட்டில் நடக்கும் அனைத்தையும் கவனித்து வருவேன்.
என்னுடைய அம்மாவிற்கு உடல் நிலை சரி யில்லை என்றால் உறவுக்காரர்கள் பார்க்கிறார் களோ இல்லையோ அங்கு வேலைக்கு வரும் பெண்கள் என்ன ஆச்சுங்க சாமி என்று கேட் பார்கள். எங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருவார்கள். அவர்களை எங்கள் வீட்டில் இருப்பவர்கள் தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்ப் பார்கள். அப்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும்.. அப்போது நான் எண்ணினேன். எந்தச் சாதியை விலக்கி வைத்துப் பார்த்தார்களோ அந்தச் சாதிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்.
காதலிக்கும் போது நீங்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்கள்?
திண்டுக்கல்லில் 2015- பிப்ரவரி 14-ல் காதலர் தின விழா கொண்டாட்டத்தில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டோம். எங்கள் இருவரையும் தலைவர் கொளத்தூர் மணி அண்ணன் காதலர்களாக எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். அதன் பின்பு நாங்கள் இருவரும் பொள்ளாச்சி, கோவையில் நடக்கும் அனைத்துக் கூட்டங்களுக்கும் மதியை அழைத்துக் கொண்டு போனேன். முழுமை யாகப் பெரியாரியலைப் பற்றித் தெரியத் தயார் படுத்தினேன்.
உங்களுடைய வீட்டில் உங்களுடைய காதலைச் சொல்லும்போது எந்த மாதிரியான எதிர்ப்பு இருந்தது?
நம்ம சாதியில் பண்ண வேண்டும் இல்லை யின்னா... கேரளாப் பொண்ணையாவது பண்ணிக்கோ தாழ்த்தப்பட்ட (சக்கிலியர்) பெண் மட்டும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். நம்மளோட பொழங்கர சாதியைப் பண்ணு என்று சொன்னார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்தால் நாங்கள் மூன்று பேரும் இறந்து விடுவோம் என்று என்னுடைய அம்மா சொன்னாங்க. அந்தப் பொண்ணு ஏதாவது மோச மான ஆளு, திருடியிருக்கிறது அந்த மாதிரி ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்க. நான் வேனா அந்தப் பொண்ணை வேணாம்ன்னு சொல்லி விடுகிறேன். சாதிதான் காரணம் என்று சொன்னால் நான் அந்தச் சாதியில்தான் கல்யாணம் பண்ணுவேன். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று சொல்லிவிட்டேன்.
பொதுமேடையில் நடந்த திருமண நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் இந்தத் திருமணத்தைப் பொது மேடையில் வைத்து நடத்துவதற்கு முழுக்காரணமே 1957 ஆம் வருடத்தில் நடந்த சட்டஎரிப்புப் போராளி களின் `உறுதிமொழி’ தான். அதனை நினைவு படுத்தும் விதமாக ஆனைமலைத் தோழர் ஏ.கே. ஆறுமுகம் முன்னிலையிலும், கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் தான் நடத்த வேண்டும் என்று உறுதியுடன் இருந்தேன். அதற்கு உதவியாகத் தோழர் பொள்ளாச்சி விஜயராகவனும் என்னுடன் இணைந்து செயல்பட்டார்.
நாங்கள் திருமணம் மே 17 அன்று உறுதி செய்தவுடன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஏப்ரல் 14 அன்றே அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தோம். 15 நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் இல்லாததால் நாங்கள் காவல் நிலையம் சென்று கேட்டோம். டி.எஸ்.பி. அலுவலகத்திற்குச் சென்று பாருங்கள் என்று கூறிவிட்டார்கள். அங்கே சென்ற போது இரண்டு நாட்களில் உங்கள் காவல் நிலையத்தில் இருந்து உங்களை அழைப்பார்கள் என்று சொல்லி விட்டார்கள். இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் அழைக்கவில்லை. மீண்டும் நாங்களே சென்றோம்.
“திருமணம் பொதுமேடையில் வைத்து நடத்தக்கூடாது. பொதுமேடை திருமணத்திற்கு நாங்கள் அனுமதி தர மாட்டோம்” என்று கூறினார்கள். நாங்கள் அதை கடிதம் மூலம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் அவர்கள் எழுதித்தர மறுத்து விட்டார்கள். இது குறித்து கொளத்தூர் மணி அண்ணனிடம் சொன்னோம். அவர் திருமணத்தை நாம் நடத்தி காட்டலாம். உங்களிடம் இருக்கும் திருமண அழைப்பிதழ் மற்றும் அனைத்து விண்ணப்பங்களையும் சென்னையில் உள்ள தோழர் வழக்கறிஞர் திருமூர்த்திக்கு அனுப்பி விடுங்கள் என்றார். நாங்களும் அனுப்பிவிட்டோம்.
பொதுமேடையில் திருமணம் நடத்துவதற்கு காவலர்கள் தடை விதித்ததற்குக் காரணம் என்ன வென்றால் ஏப்ரல் மாதத்தில் நடந்த திராவிடர் கழகம் சார்பில் நடத்திய `தாலி அகற்றும் விழா` வும் மற்றும் புதிய தலைமுறை தாலி அகற்றுவதைப் பற்றிய செய்தி வந்ததும் புதிய தலைமுறை தாக்கப்பட்டது. அன்றைய பரபரப்புச் செய்தியாக இருந்தது. எங்களுடைய திருமண அழைப்பிதழ் `தாலி, சாதி, சடங்கு மறுப்புத் திருமணம்’ என்று பதிவிட்டிருந்தோம். அதனால் பொதுமேடைத் திருமணத்திற்குக் காவல்துறை மறுத்தது.
ஆனால் எங்களுக்கு வழக்கறிஞர் திருமூர்த்தி அனுமதி பெற்றுத் தந்தார். கடைசி இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் அனுமதியே கிடைத்தது. எல்லோரும் கூறினார்கள் அனுமதி கிடைக்கா விட்டால் என்ன செய்வது ? மண்டபத்தில் நடத்தி விட்டு போகலாம் என்றார்கள். ஆனால் நான் பொதுமேடையில் தான் திருமணம் நடத்துவது என்று உறுதியாக இருந்தேன். அனுமதி கிடைக்காத பட்சத்தில் கோவையில் இருக்கும் பெரியார் சிலை முன்பாவது சென்று நாங்கள் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு இணைந்து வாழ்வோம் என்று கூறினேன். என்னுடைய கொள்கை மிகவும் உயர்ந்த கொள்கை, நான் செய்கிற சாதி மறுப்புத் திருமணத்தை நான் ஏன் மறை முகமாக நடத்த வேண்டும். ஒருபோதும் மண்டபத்தில் திருமணத்தை நடத்த மாட்டேன் என்று உறுதிபட கூறி விட்டேன்.
எந்த விதமான சடங்குகளும், செலவுமின்றி தோழர் கொளத்தூர் மணி அண்ணன் மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் 17.05.2015 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு கிணத்துக்கடவு பகுதியில் பொதுக்கூட்ட மேடையில் ‘சாதி, தாலி, சடங்கு மறுப்புத் திருமணம்’ சிறப்பாக நடைபெற்றது.
உங்களுடைய திருமணத்திற்கு உங்களுடைய வீட்டில் இருந்தும், இந்துமதியின் வீட்டில் இருந்தும் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்?
இந்துமதியின் வீட்டில் மதியின் அப்பா, அம்மா வந்திருந்தார்கள். எங்கள் வீட்டில் அம்மா வரவில்லை. அவர்கள் மிகவும் கவலையாகப் படுத்துக்கொண்டார்கள். என்னுடைய அண்ணன் வெளியூருக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் என்னுடைய அப்பா மட்டும் சீக்கிரமாக போய் திருமணத்தை முடித்து விடு. மழைக்காலம் வேற மழையின் காரணமாக திருமணம் நின்று விடப் போகிறது என்று நான் வீட்டை விட்டுக் கிளம்பும் போது சொன்னார். என்னுடைய திருமணம் முடிந்த பிறகு 10 மணிக்கு அப்பாவுக்கு போன் பண்ணி என்னுடைய திருமணம் நல்லபடியாக முடிந்தது என்று சொன்னேன். அதற்கு அப்பா சொன்னார், “ஆமாம் நானும் பார்த்தேன். மிகவும் சிறப்பாக நடந்தது” என்று. அப்போது தான் என்னுடைய அப்பா கூட்டத்தில் ஒருவராகத் திருமணத்தில் பங்கேற்றார் என்பது எனக்குத் தெரிந்தது.