தீபாவளி வந்து விட்டதால் வீடு ரெண்டு படும். நிற்க நேரமில்லை செய்ய வேலை இல்லை போல அங்கும் இங்கும் நடைபோடும் வீட்டுப் பெண்கள் கண்களில் ஒளியும் ஒய்யாரமும்.
தீபாவளி என்றாலே இந்த பலகாரம் இனிப்பு செய்கைகள்... ஒரு தொன்றுதொட்ட தோகை விரிப்பு என்றாலும்... நவீனத்தில் அதுக்கெல்லாம் நேரம் எதுக்கு. போனோமா... கடையில் அதுல ஒரு கிலோ இதுல ஒரு கிலோ வாங்கினோமா... வேலை முடிந்தது என்று ஒரு போக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும்.. வம்படியாக இன்னும் அந்த பழைய நினைப்பை பிடித்துக் கொண்டு அடுப்படியில் நம் அழகிகள் அட்றாசிட்டி செய்வது அழகு தான்.வடை மிக இயல்பாகவே அடிக்கடி சமையலில் இருப்பதால்... நோம்பிக்கு அதற்கு பெரிதாக இடமில்லை. பெரும்பாலும் முறுக்கு சுடுவதை அதிகமாக பார்க்கிறேன். லட்டு செய்வதைக் காண முடிகிறது. குலோப்ஜாம் செய்கிறேன் என்று இனிப்பு கட்டி செய்து விட்டு அதை இறுதி வரை குலோப்ஜாம் என்றே நம்பும் சிக்கலும் இருக்கிறது....சீவி சிங்காரித்த வீட்டு லட்டுகளுக்கு.
கடையில் எத்தனை புதிதான ஐட்டங்களை வாங்கி வந்தாலும்... வீட்டில் கைப்பட செய்யும் இனிப்பும் காரமும் கொஞ்சம் ஸ்பெஷல் தான். நாங்க இந்த தீபாவளிக்கு இத செஞ்சோம்.. அத செஞ்சோம் என்று பக்கத்து வீட்டுக்கு கொடுத்து பெருமை அடித்துக் கொள்வதில் அப்படி ஒரு அலாதி பிரியம். சில வீட்டில் இருந்து வரும் பலகாரங்கள்... நம்மை சோதிக்க தான் செய்யும். ஆனாலும் அதில் இருக்கும் சந்தோஷங்களை உணராமல் இருக்க முடியாது. சின்ன சின்ன விஷயங்களின் வழியே இன்பத்தை கண்டடைய இந்த மாதிரி விஷேச நாட்களின்... உணவு பதார்த்தங்களுக்கு முக்கிய பங்குண்டு.
வடை முறுக்கு.. லட்டு... என சுடுவது என்றிருந்தாலும்.. கச்சாயம் என்றொரு இனிப்பனை பற்றித்தான் இந்த நினைவு.
கச்சாயம்..... அதன் வடிவமே வினோதமாக இருக்கும். வட்டத்தில் இருந்தாலும்.. வயிறு உப்பி பொன்னிறத்தில் புசுபுசுவென இருக்கும். சுற்றிலும் வட்டம் சுருங்கிய ஏறி இறங்கும் சிறு சிறு கோடுகளால்...- எண்ணையில் உடல் சுருங்குகையில் ஏற்படும் சமநிலை அது- சப்பலிந்த பந்து போல அப்படி ஒரு உள் கனம் அது. உள்ளங்கையில் பொது பொதுவென கிடக்கும் இனிப்பு கிடங்கு எனலாம். எள் தூவிக் கிடக்கும்... அடுத்த மெல்லுக்கு ஆவி பறக்கும். கையில் ஒட்டும் எண்ணெய் பிசுக்கே... கச்சாயம் தின்றதற்கான சாட்சி. பொன்னிறத்தில் பொரிந்து போண்டாவுக்கும் வடைக்கும் இடையே ஏலியன் தட்டு போல வந்து விழும். கனமற்ற சுற்று. நடுவே கனம் பூத்த முத்து.
மைதாவில் பழம் சேர்த்து சர்க்கரை கலந்து முட்டை ஊற்றி ஏலக்காய் போட்டு கொஞ்சமாக நீர் விட்டு... கெட்டியாகவும் இல்லாமல்... தண்ணியாகவும் இல்லாமல் பிசைந்து... எடுத்து எண்ணைக்குள் போட்டால் வழுக்கிக் கொண்டும் போக கூடாது. போக அடமும் பிடிக்க கூடாது. மெல்ல மெல்ல வழிந்து கொண்டே விடுபட வேண்டும். அப்படி ஒரு பதமே அதன் பொறிதலுக்கான புரிதல்.
கிட்டத்தட்ட வடையை எண்ணைக்குள் விடும் லாவகம் தான். இதில் இனிப்பு இருப்பதால் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் இருக்கும். அந்தப் பதத்தின் தீர்வு எண்ணைக்குள் பொறிபட்டு எழும்புகையில்.... சுற்றிலும் மொறு மொறு சிறு சிறு புள்ளி கோடுகளுமாக... நடுவே உப்பி... பொது பொது மேடுமாக... உள்ளே லேயர் லேயராக பார்ம் ஆவது தான் அதன் அற்புத வெளிப்பாடு. அது அதுவாகவே நிகழ... மாவு பிசைதலில் இருக்கும் வேலைப்பாடு மிக முக்கியம். சப்பாத்திக்கு சாத்துவது போல கூடாது. சாஃப்டாக நீரை சலிப்பது போல இருக்கட்டும். எண்ணைக்குள் சங்கு சக்கரம் சுழல்வது போல ஒரு காட்சி மயக்கம் வருவதை கவிதைக்காரன்கள் கண்டு பிடிப்பான்கள்.
கவிக்குயிலுக்கு கச்சாய பாப்பா என்றொரு பேரே அவர்கள் வீட்டில் இருக்கிறது. அத்தனை பிடித்த இனிப்பு அது.
நானும் சிறுவயதில் பாட்டி சுடும் கச்சாயத்தை சுட சுடவே சூடு பறக்க தின்றிருக்கிறேன். காலத்தின் ஓட்டத்தில் இனிப்பில் நாட்டம் இல்லாமல் போனதால் பெரிதாக ஈர்ப்பு இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் சுவை அடிநாக்கில் இருப்பதை எண்ணுகையில் உள்ளிருக்கும் சிறுவன் சமையலறைக்குள் எட்டி எட்டி பார்க்கிறான். இந்த மாதிரி இனிப்போ பலகாரமோ செய்கையில் சமையலறைக்குள் எட்டி எட்டி பார்ப்பது... சும்மா சும்மா போயி வருவது என... அது ஒரு பிடிபடாத பண்டிகை நாள் பரபர. இது ஒரு இனிப்பு வெடி.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
- கவிஜி