இந்தக் கட்டுரையை எழுதியவர்கள் மூன்று தோழர்கள். தோழர் திராவிடன் மருத்துவக் கல்லூரி மாணவர். தோழர்கள் ஜாக்குலின், ஜவஹர் இருவரும் வளர்இளம் பருவ மாணவர்களுக்குப் பள்ளியிலும் வீட்டிலும் பாடம் நடத்துபவர்கள். ஏறத்தாழ 30 ஆண்டுகளாகச் சமூகக் களத்திற்கு, மாணவ, மாணவியரைத் தயாரித்து அனுப்புவர்கள். பல தலை முறை வளர்இளம் பருவத்தினரோடு உரையாடும் வாய்ப்புப் பெற்றவர்கள் என்பதால் இம்முவரும் இணைந்து இக்கட்டுரையை எழுதக் கேட்டிருந்தோம். விருப்பு, வெறுப்பு, சார்பு இல்லாமல் காதலை அணுகியுள்ளது இக்கட்டுரை.

‘காதல்’ இந்த வார்த்தையை வயதானவர்கள் கேட்டாலும் ‘இளமை திரும்புதே’ எனும் பாடல் இரகசியமாகச் செவிகளில் ஒலிக்கும். அட எந்த வயதினராயினும் ‘காதல்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சின்னப்புன்னகை இதழோரம் வந்து போகும். அப்படியானால் காதல் ஒரு அதீத சக்தி வாய்ந்த, புனிதமான, மந்திரத்தன்மையுள்ள வார்த்தையா? இயற்கைக்கு மாறாக ஒரு முறைதான் காதல் வருமா? அல்லது ஒரே ஒருவரை மட்டும்தான் காதலிக்க வேண்டுமா?

lovers day 640இல்லை என்பதே உண்மை. பெண்ணைப் பார்த்தவுடன் ஆணுக்கும், ஆணைப் பார்த்தவுடன் பெண்ணுக்கும் ஏற்படும் எதிர்பால் ஈர்ப்பு உணர்ச்சி என்பது இயற்கையானது. அதுவும் பெண்ணையும் ஆணையும் சமமாக வைக்காத நம் சமூகத்தில் அதுவும் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவைகளோடு வெட்கி நாணி பெரும்பாலும் ஆண்களிடம் விலகி நிற்பதாலும் இந்த ஈர்ப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்த ஈர்ப்புக்கு ஒரு சமூக வரையறை வைக்கும்போதுதான் காதல் எனும் விசயம் வருகிறது. சரி இந்த ஈர்ப்பு உயிரினங்களின் தேவையா? என்பதை சற்று பார்ப்போம்

முட்டையிலிருந்து கோழியா? கோழி யிலிருந்து முட்டையா? என்ற கேள்வியை நாம் கேட்டிருப்போம். இக்கேள்விக்கு கோழியிலிருந்தே விடை காண முயற்சி செய்து பதில் கிடைக்காமல் இருப்போம். ஆனால் அறிவியல் இதற்கான பதிலை ஏற்கனவே தந்தது மட்டுமல்லாமல் அந்தப் பதிலில் தான் பரிணாம வளர்ச்சியையும் விளக்கியிருக்கும். அதாவது முட்டையிலிருந்துதான் எல்லா உயிரினங்களும் உருவானது. அந்த முட்டையும் பெண்தான்.

முதன் முதலாக, பரிணாம வளர்ச்சியில் பெண் எனும் பாலினம் மட்டுமே இருந்தது. அதிலிருந்தே இனப்பெருக்கம் செய்து கொண்டது. இரண்டாகப் பிரிதல் என்பதற்கான உதாரணம் அமீபா இரண்டாகப் பிரிதல் போன்று. அமீபாவாகவே உயிரினங்களைக் கற்பனை செய்யக்கூடாது.

அதனை அடுத்து பல கட்டப் பரிணாம வளர்ச்சி அடைந்த உயிரினங்களிலும் இது நடந்தது. அதற்கு இன்னொரு இணை தேவையில்லை. இதன் காரணமாக எல்லா உயிரினங்களிலும் ஒரே மாதிரியான குரோம்சோம்கள் அதாவது தாயைப் போன்ற குரோம்சோம்கள் இருக்கும், குட்டியும் தாயைப் போன்றே இருக்கும். இதன் காரணமாக ஒரு கிருமி தாயைத் தாக்குவதும் அதன் பிறகு குட்டிகளைத் தாக்குவதும் அக்கிருமிக்கு எளிதாக இருந்தது. இனங்கள் அழியும் நிலைக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகரித்தன.

இதைத் தவிர்க்க ஆண் உயிரினம் எனும் பாலினத்தேவையை அதாவது மாறுபட்ட குரோமொசோம்களுடைய அல்லது ஜீன்களுடைய ஆண் எனும் பாலினம் பரிணாம வளர்ச்சியில் தேவை கருதி உருவானது. அதாவது ஆண் உயிரினம் எனும் பாலினம் உருவானதே ஒரு குறிப்பிட்ட வகையான ஜீனை கிருமிகளிடமிருந்து ஒளித்து வைக்க ஏற்படுத்திக்கொண்ட பரிணாம வளர்ச்சியின் முக்கிய கட்டம். இதையும் செய்ததே பெண் உயிரினம்தான்.

Sexual Reproduction ன் போது அந்த ஒளித்து வைத்த ஜீனை ஆண் உயிரினத்தின் இனப்பெருக்க Fluid (மனித இனத்தில் Sperm போல) மூலம் எடுத்துக் கொள்வதே பெண் பாலினத்தின் வேலை. இப்படி பல்வேறு வகையான ஜீன்கள் உருவாகும் நிகழ் தகவினால் உயிரினங்களின் பண்புகள் பல்வேறாகி உயிரினங்கள் காக்கப்பட்டன. உயிரினங்கள் இதுபோன்ற இனப்பெருக்கத்தால் தம்மைக் காத்துக் கொண்டன.

காதலுக்கு அடிப்படை

இந்த இனப்பெருக்கம், இனப்பாதுகாப்பு எனும் அடிப்படையில்தான் பெண் ஆணைத் தேர்ந்தெடுப்பதும், ஆண் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதும். பெண் பிள்ளைப்பேறு, நிர்வாகம் என்றிருந்ததால் ஆணுக்கு வேட்டையாடுதல், உணவு தேடுதல் என்பது ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படை யிலேயே பெண் ஆணை வலிமையானவனாகத் தேர்ந்தெடுத்தாள். இதன் இன்னொரு அடிப்படை வலிமையானவனிடமே வலிமையான ஜீன் இருக்கும் என்பது.

இதில் ஆண் தன்னை பெண்ணிடம் வலிமை யானவனாக நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததாலேயே உடல் வலிமையைக் காட்டும் கலைகள் பிறந்தன. எதிர்ப் பாலினம் இல்லாத உலகத்தில் கலைகள் இருக்க வேண்டிய தேவை இல்லை. அதாவது இனப்பெருக்கத் தேவை இல்லாத உலகில் கலைகள் இருக்காது. எனவே எதிர்ப்பாலின ஈர்ப்பு என்பது இயற்கையானதே. இந்த ஈர்ப்பே காதல் எனும் காவிய வார்த்தைக்கு அடிப்படை.

சரி ஒரு இயற்கையான விசயம் இயல்பாக அல்லது இயற்கையாகத்தான் நம்மிடம் வந்தடைகிறதா? அல்லது நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ திணிக்கப்படுகிறதா? அது எப்படி ஒரு இயற்கையான விசயம் திணிக்கப்பட முடியும்? அதற்கு முன் சில விசயங்களைத் தெரிந்து கொள்வோம். ‘காதல்’ எனும் வார்த்தை நம் குழந்தைகளின் காதுகளில் எந்த வயதில் அல்லது எந்த வகுப்புப் படிக்கும்போது விழுகிறது? எந்த வயதில் ‘காதல்’ என்ற சொல்லின் ஆதிக்கம் பெருகுகிறது? அதன் விளைவுகள் என்ன? என்பதைப் பார்ப்போம்.

கல்விக்குக் கேடாகும் காதல்

நாம் கேட்டவரையில் ’காதல்’ எனும் சொல் அதன் பொருளிலேயே அதாவது கற்புள்ள எனும் பொருளிலேயே 4 ஆம் வகுப்பிலேயே தெரிந்து விடுகிறது. அதாவது 7 வயதிலிருந்து 8 வயதுக்குள். காதலை உணரத்தலைப்படும் வயது 11 அல்லது 12 அதாவது 7ஆம் வகுப்பு படிக்கும்போதே. தனது 13 அல்லது 14 வயதிலேயே காதலிக்கத் தலைப் படுகின்றனர். அதாவது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு படிக்கும்போது. +1, +2 மாணவர்களில் 40ரூ பேருக்கு இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு கெளரவப் பிரச்சனை யாகவே உள்ளது.

இதில் மோசமான விசயம் என்னவென்றால் இது ஏதோ சைட் அடித்தான்(ள்) சென்றான்(ள்) என்கிற வகையில் இல்லாமல் இவர்கள் சொல்லும் காதல் ஒரு பாரம்பரிய, அதாவது ஆணுக்குக் கட்டுப்பட்ட காதல் என்பதாகவே உள்ளது. அதுவும் 9, 10 படிக்கும் மாணவரிடையே.

இவர்களிடம் இந்தக் காதல் உணர்ச்சி தங்களது படிப்புக்கு இடைஞ்சலாக உள்ளதா என்ற கேள்விக்கு மிகப் பெரும்பான்மையான மாணவர் களின் பதில் “ஆம்” என்பதே. இந்தக் காதலை எதன் வழியாக அறிந்து கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலும் சினிமாக்களாலும் பின் வீட்டில் பார்க்கப்படும் டி.வி.சீரியல்களாலும் அறிந்து கொண்டதாகக் கூறுகின்றனர்.

இது அல்லாமல் பெண் குழந்தைகளுக்கு காதல் மீது ஈர்ப்பு வருவதன் அடிப்படை பெண் பருவமடைந்த பின் ‘பூப்புனித நன்னீராட்டு விழா’ என்ற பெயரில் வைக்கப் படும் விழாவும்தான். இவ்விழாவிற்குப் பின் பெரும்பாலான கிராமத்து, சிறு நகரத்துக் குழந்தைகளுக்கு தாம் ஒரு பெண்ணாகிவிட்ட மன நிலைக்கு உள்ளாகின்றனர்.

இவர்கள் இதற்குப் பிறகு ‘காதல்’ என்பதில் அதிகம் வீழ்கின்றனர். இது மிகப் பெரும்பாலும் கிராமத்துக் குழந்தைகளின் வாழ்வில், கல்வியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. இந்தக் கிராமத்துக் குழந்தைகளில் மிகப் பெரும்பாலான குழந்தைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டக் குழந்தைகளே என்பது சமூக சிந்தனை உள்ள நமக்கு மிக வேதனையான ஒன்று.

இந்த சினிமாத்தனமான, பிற்போக்குத் தனமான, நட்பில்லாத காதலை நம் குழந்தைகள் அறியும்போது உண்மையில் குழப்பமடைகின்றனர். தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றனர். கவனச் சிதறலுக்கு உள்ளாகின்றனர். அதிலும் பெண் குழந்தைகளுக்கு அழகுணர்ச்சி, “அடியே... அவன் உன்னைத்தான் பார்க்கிறான்” போன்ற விசயங்கள் கல்வியில் கவனம் செலுத்த இயலாமல் போகின்றது. அதே சமயம், இதே காதல் என்கிற விசயத்தில் நன்றாகப் படிக்கும் என்றழைக்கப்படும் மாணவர்களும் வீழ்கின்றனர். ஆனால் அவர்களிடம் கேட்கும்போது அவர்களின் முதல் சாய்ஸ் படிப்பாகவே உள்ளது.

கல்லூரி மாணவர்களிடையே இரு வகையான மாணவர்கள். ஒன்று Goal Oriented மாணவர்கள். இவர்கள் தங்களது தனித்தகுதியை வளர்த்துக் கொண்டுதான் இந்தச் சமூகத்தில் யார் என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அறிவித்துவிட்டு காதலை இரண்டாமிடத்தில் வைப்பவர்கள். இதுபோன்ற மாணவர்கள் நம் சமூகத்தில் குறைவாகவும் பார்ப்பன சமூகத்தில் அதிகமாகவும் உள்ளனர்.

இவர்கள் காதல் முறிந்தாலும் நட்பாகவே தொடர்கின்றனர். இரண்டாவது +2 முடித்து வந்தவுடன் அதாவது பள்ளி வாழ்க்கையிலிருந்த கட்டுப்பாடுகள் தளர்ந்தவுடன் காதல் வயப்படும் மாணவர்கள் சற்று நிலை தடுமாறி, படிப்பில் கவனம் சிதறுகின்றனர். (இதில் விதி விலக்காக சில மாணவர்கள் தங்களது எதிர்காலத் துணையின் துணையோடு கல்வியை ஒழுங்காகக் கற்கின்றனர்).

சரி, அப்படியானால் காதல் என்பது தற்போது மாணவர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்து கிறது என்றால் அந்தக் காதல் தேவையா எனும் கேள்வி எழும். இதுவரையில் சொல்லப்பட்டது என்பது காதல் எனப்படுவது புனிதமான ஒன்றல்ல அது இயற்கையின் தேவையால் ஏற்பட்ட ஒன்று. மேலும் இந்தப் புனிதம் போர்த்தப்பட்ட அறிவுக்குப் பொருந்தாத சினிமாத்தனமான காதலால் நம் சமூகக் குழந்தைகளை எப்படி பாதித்துள்ளது என்றுதான் பார்த்தோம்.

காதலின் பகுத்தறிவின்மை - தோழர் பெரியார்

“காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல. அன்பு, நேசம், காமம், மோகம் என்பவை வேறு, காதல் வேறு என்றும் - அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும். “அக்காதலுக்கு இணையானது உலகத் தில் வேறு ஒன்றுமேயில்லை” என்றும் -

“அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்; அந்தப்படி ஒருவரிடம் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது” என்றும் -

பிறகு “வேறு ஒருவர் இடமும் அந்தக் காதல் ஏற்படாது. அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபசாரம் என்று தான் சொல்லவேண்டுமே ஒழிய அது ஒருக்காலும் காதலாகாது” என்றும் -

“ஒரு இடத்தில் உண்மை காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது” என்று சொல்லப் படுகின்றது. - தோழர் பெரியார், குடி அரசு - 18.01.1931, பெண் ஏன் அடிமையானாள்? நூல்

நாம் அறிந்தவரை இன்றளவும் காதலைப் பற்றிய பெரும்பாலான மாணவர்களின் கருத்து இதுவாகவே உள்ளது. அதுவும் கல்லூரி மாணவர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கிராம, சிறு நகர உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களே. இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களே!

இப்படிப்பட்ட சிந்தனை உள்ளவர்களைப் பற்றித் தோழர் பெரியார் அதே கட்டுரையில் தொர்ந்து எழுதுகிறார். படியுங்கள்.

இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபவமும் மக்களின் அனுபவ அறிவும் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கையையும், உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டு மென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருதவேண்டி இருக்கின்றது.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தை - திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும் காதலர்கள் என்பவர்களின் மனோ பாவத்தைக் கவனித்தால் விளங்கும்.

காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப் பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சகாலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம் நிலைமை லட்சியம் மாறலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்துக் கொண்டு சதா அதிர்ப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியது தானா?

ஆசையைவிட, அன்பை விட, நட்பைவிட, காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள்கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல் தானே ஒழிய வேறில்லையென்றும், அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவ தென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும், மாற கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம். - தோழர் பெரியார், குடி அரசு - 18.01.1931, பெண் ஏன் அடிமையானாள்? நூல்

பாலியல் கல்வியின் தேவை

தோழர் பெரியார் காதலை வெளிப்படையாகப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்து விட்டார். இவ்வளவு தான் காதல். ஆனால் நாம் அதைப் புனிதமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலைக்கான அடிப்படைக் காரணம் பெண், ஆண் சமத்துவமுள்ள பாலியல் கல்வியை வயதுக்கேற்றவாறு பள்ளிகளில் வைக்காததும், பெற்றோருக்கும் பாலியல் புரிதலுக்கான ஏற்பாடு எதுவும் இல்லாமையும் ஆகும். மாறாக இதுபோன்ற கல்வியை குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

கோ எஜுகேசன் எனப்படும் இருபாலர் கல்வி நிலையங்கள் மட்டுமே இருக்க வேண்டும். கல்வி நிலையங்கள் ஒன்றும் தனித்தீவில் இல்லை. நம் சமூகத்துக்குள்தான் உள்ளது. எனவே எல்லா வயதினருக்கும் பாலியல் கல்வியை அரசு கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் குாந்தை களுக்கும் அறிவுரீதியான பாலியல் கல்வியாகப் போய்ச் சென்றடையும்.

மேலும் சினிமா, சீரியல்களில் காட்டப்படும் புனிதக் காதல் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சினிமாவின் மூலம் சிவப்புத் தோல் கவர்ச்சி, கொடியிடைக் கவர்ச்சிகளை நம்முடைய சினிமா கதாநாயகர்கள் பரப்பிக்கொண்டே இருப்பர். அது சாக்கடையைச் சுத்தம் செய்யாமல் மருந்தடிப்பது போன்றது.

உணர்ச்சிகளால் உந்தப்படும் காதலை மறுக்கும் தோழர் பெரியார், அறிவார்ந்த புரிதலோடுக் கூடிய காதலை வரவேற்கிறார்.

“உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்!” - குடிஅரசு 21.07.1945

“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல்-ஆசை-இஷ்டம்.” - விடுதலை 24.05.1947

காதலர் தினங்கள் அறிவார்ந்த காதலைப் பரப்புகின்றனவா?

இல்லை. மனப்பக்குவம் மற்றும் உடல் பக்குவமற்ற வயதுள்ளவர்களுக்கு இந்தச் சமூகம் கற்பு, புனிதம் என்ற பகுத்தறிவுக்கு முரணான நட்பாக இல்லாத காதலையே கொண்டு சேர்க்கிறது. இந்த அறிவுக்குப் பொருத்தமில்லாததையே கண்டிக்கின்றோம். இதனாலேயே ஒட்டு மொத்தமாக வயது பக்குவமடைந்தோரிடையே ஏற்படும் காதலை மறுப்பதாக ஆகிவிடாது. காதல் சமுதாயத்தில் எப்படி உள்ளது என்று சார்பற்றநிலையில்தான் பார்த்தோம். அதே சமயம் இந்தக் காதலால் ஏற்படும் வேறு விளைவுகளையும் பார்ப்போம்.

சாதி, மதம் இரண்டும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளுமிடம் சமுதாயத்தில் முதலில் திருமணமும் அதன் பின்னர் சடங்குகளுமே! இந்தக் கட்டுமானம் உடையாமல் இருந்தால்தான் பார்ப்பன ஆதிக்கமும், பார்ப்பனரை அனுசரித்து கொள்ளை அடிக்கும் பணக்காரர்களின் வாழ்வும் நிலைக்கும். மனிதனை மனிதனாகப் பார்க்க விடாத சாதியம், உரிமையற்ற, சமத்துவமற்ற சமூகத்தைக் கட்டிக்காக்கும் சாதியம் வாழ்வதே, அகமண முறையில்தான். அதாவது சாதிக்குள் மட்டுமே நடக்கும் திருமணம்.

உற்பத்தியில் சாதி, நுகர்வதில் சாதி என சமூகத்தைப் பூணூலால் பிரித்துப் பிரித்து வைத்திருக்கும் இந்தச் சாதிய முறைக்கு வேட்டு வைக்க வேண்டுமென்றால் சாதி மறுப்புத் திருமணங்கள்தான் நடக்க வேண்டும். அதை நடத்த சாதி கடந்து இணைய வைக்க இந்தக் காதலால் சாத்தியம் ஆகிறது எனும்போது, இந்தக் கருவிதான் இந்த விஷ விருட்சத்தை வேரோடு மண்ணாக சாய்க்க பயன்படுகிறது எனும் காரணத்தாலேயே இந்தக் காதலைக் கொண்டாடுகிறோம்.

பொது உரிமையுள்ள பொது உடமை வந்தால் மகிழ்ச்சி. அதற்காகத்தான் இயக்கமாய் வாழ்கிறோம், போராடுகிறோம். அதே சமயம் இடஒதுக்கீட்டு உரிமை என்பது இதே அமைப்புக்குள் சமூகநீதிக்கு அடிப்படை மேலும் அதுதான் முதற்படி என்பதால் அதைத்தானே கொண்டாடுகிறோம்!

அடுத்ததாக, மரபணு வழியாக ஏற்படக்கூடிய 3000 வகையிலான நிரந்தர ஊனங்கள் உறவு முறையில் திருமணம் செய்வதால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த உறவுக்குள் திருமணம் என்பதே சாதி, மதத்துக்குள் நடைபெறும் அகமண முறையாகும். ஆக ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகம் படைக்க வேண்டுமென்றால் இந்தக் காதல்தானே கருவியாக உள்ளது? அதைக் கொண்டாட வேண்டியது நம் கடமையில்லையா? ஒரு பாலினமாக இருந்து இரு பாலினமாக மாறியதே இது போன்ற நோய்கள் வரக்கூடாது என்பதற்காகத்தானே?

சாதியற்ற, மதமற்ற மனித சமூகமாக மாற அறிவார்ந்த காதல் உருவாக பாலியல் மற்றும் பெண், ஆண் சமத்துவத்தைப் பரப்புவோம். அதுவரையில் சா’தீ’க்குத் ‘தீ’ வைக்கும் இந்தக் காதலர் தினத்தைக் கொண்டாடுவோம்.