இயற்கைப் பேரிடர்களில் மாற்றுத்திறனாளிகள் வழக்கமாகப் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும் அரசுகள் இவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுப்பதில்லை என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஒருசில உலக நாடுகள் மட்டுமே பேரிடர்கள் நிகழ்ந்தால் அதைத் தடுக்கும் வழிமுறைகளுக்கான கொள்கை வகுப்பதிலும், தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளிலும் இவர்களை இணைத்துக் கொள்கின்றன.

wheel chair 500சூழல் மோசமாகப் பாதிக்கப்படும்போது இத்தகையவர்களுக்கு அளிக்கப்படும் மறுவாழ்வுப் பணிகளில் எந்த அரசும் இவர்களுக்கென்று சிறப்புத் திட்டங்கள் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. பசுமைக்குடில் வாயு உமிழ்வுக் குறைப்பு போன்ற எந்தச் சூழல் செயல்பாட்டிலும் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை என்று இது பற்றி முதல்முறையாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

காலநிலைப் பேரிடர் தடுப்புத் திட்டங்கள் இவர்களுக்காக உருவாக்கப்படுவதில்லை என்பதை அறியும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது என்று இந்த ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும், கனடாவின் மெக்கில் (McGill) பல்கலைக்கழகப் பேராசிரியருமான செபாஸ்டியன் ஜோடைன் (Sébastien Jodoin) கூறுகிறார். “தேசிய காலநிலைச் சீரழிவுகளில் மாற்றுத்திறனாளிகளை உட்படுத்துதல்” (Disability inclusion in National climate commitments & policies) என்ற தலைப்பில் இந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

சூழல் தடுப்புத் திட்டங்கள் மற்றும் இதர பணிகளில் இவர்கள் இணைக்கப்பட வேண்டும். பல அரசுகளும் இதைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. இவர்கள் சாதாரண இடர்கள் நிகழும்போதே அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள். என்றாலும் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஊனத்தின் மூலம் ஏற்படும் இயலாமையினால் இவர்கள் பலவீனமடைகின்றனர். சமூக இடர்பாடுகளும் இவர்களின் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.

இந்த ஆய்வுகள் இத்தகையவர்களின் சமூக நிலை பற்றியும் பல நாடுகளில் ஆய்வுகளை நடத்தின. பெரும்பாலோர் ஏழைகள்; படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள். 2005-இல் 'கத்ரீனா' சூறாவளி (Hurricane Katrina) அமெரிக்காவைத் தாக்கியபோது சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள் பலர் திகைத்துப் போய் நின்றனர். இவர்களின் மீட்பிற்காக எந்தத் திட்டமும் வகுக்கப்படவில்லை. புதிய வாகனங்களை இவர்களால் பயன்படுத்த இயலவில்லை. புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 34 பேர் மரணமடைந்தனர்.

கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்கப்படவில்லை. 2012-இல் 'சாண்டி' சூறாவளி தாக்கியபோதும் நிலைமையில் மாற்றமில்லை. இந்தப் போக்கிற்கு எதிராக இவர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதன் பலனாகப் புயல் காப்பகங்களில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களும் சுலபமாகச் செல்லக்கூடிய வழிகள் மாற்றியமைக்கப்பட்டன.

பாரிஸ் உடன்படிக்கை வாக்குறுதிகள்

ஆய்வாளர்கள் சூழல் தடுப்பிற்காக ஒவ்வொரு நாடும் 2015 பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் வாக்குறுதி அளித்துள்ள தேசிய பங்களிப்புத் திட்டங்களை (NDCs) ஆராய்ந்தனர். மாற்றுத்திறனாளிகள் காலநிலை தொடர்பான அனைத்திலும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த உடன்படிக்கை வலியுறுத்துகிறது. ஆய்வுக்குழு நாடுகளின் உள்நாட்டுத் திட்டங்களையும் ஆராய்ந்தது.

பாரிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள 192 உலக நாடுகளில் 35 நாடுகள் மட்டுமே தங்கள் தேசிய பங்களிப்புத் திட்டங்களில் இத்தகையவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. 45 நாடுகள் மட்டுமே அந்தந்த நாட்டின் தேசிய திட்டத்திலும் இவர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. யு.எஸ், யு.கே, ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகள் இது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் தென்கொரியா மாற்றுத்திறனாளிகள் பற்றிய திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றன.

ஜிம்பாப்வே, மெக்சிகோ, பனாமா ஆகியவை இதில் சிறந்து விளங்குகின்றன. இது பற்றி நடவடிக்கை எடுத்துள்ள வேறு சில நாடுகள் பெயரளவிற்கு மட்டுமே இதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளன. இவர்களின் உரிமைகள், இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சாமானிய மரியாதை போன்றவை பெரும்பாலான நாடுகளில் மறுக்கப்படுகின்றன. வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகள் இதில் நன்றாகச் செயல்படுகின்றன.

தேசிய பங்களிப்புத் திட்டங்களைக் கொண்டுள்ள 35 நாடுகளில் கனடா மட்டுமே வளர்ச்சியடைந்த நாடு. பணக்கார நாடுகள் உறுதியளித்த நிதியுதவியை ஏழை நாடுகளுக்கு அளிக்காததும் நிலைமை மோசமாக மாறக் காரணம் என்று ஆய்வு கூறுகிறது. இதனால் வருமானம் குறைந்த நாடுகள் காலநிலைப் பேரிடர்கள் ஏற்படும்போது போதிய நிதி இல்லாததால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.

சமூகத்தில் பலவீனமான குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்போது, புறக்கணிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளே அதிக துயரங்களை அனுபவிக்க நேரிடுகிறது. சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள், காது கேளாதோர், நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போன்றோர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள். இத்தகையவர்களே மற்றவர்களை விட வெப்ப அலைத் தாக்குதல் நிகழ்வுகளில் 50% கூடுதலாக மரணமடைகின்றனர்.

சூழல் சீரழிவுகளில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய இந்த ஆய்வுக்கட்டுரை ஆட்சியாளர்களின் போக்கை இனியேனும் மாற்றியமைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.