kerala water“நிலப்படிக்கை மேல் நிமிர்ந்து, வானத்தின் நீலத்தை வாரிய முகத்தோடு, முகடுகளை மோதிப் பள்ளங்களில் விழுந்து பல மடங்கு பெருகி, பெரும் பலத்தோடு அணிதிரண்டு அக்னியின் பரிட்சைக்கு ஆவியாய் மேலெழுந்து மேகத்தை முட்டி முரசை அதிரவிட்டுப் புள்ளியாய் பூப்பூக்கும் ...” என்பதற்குள் நாவறண்டது… தண்ணீர்.

“ஒரு சொட்டு நீரில் பெருங்கடல்களின் அனைத்து ரகசியங்களும் காணப்படுகின்றன” கலீல் ஜிப்ரானின் இந்த வரிகள் தண்ணீரின் மிகப் பெரிய ரகசியத்தைத் தெரிவிக்கிறது.

நீர் ஹைட்ரஜன் அணுவும் ஆக்சிகன் அணுவும் சேர்ந்து நிறமும், உருவமும் அற்ற திரவநிலை கொண்ட ஒரு பொருள் எங்கு விழுந்தாலும் அதன் வடிவத்தை உருவேற்றுப் பயன்படுகிறது. மனிதனின் உடலில் எழுபது சகவிகிதம் நிறைந்திருக்கும் இந்த நீர், மனிதன் உண்பதில் இருந்து வெளியேற்றுவது வரை உடன் பயணிக்கும் அருமருந்து. குடிப்பதிலிருந்துக் குடம் உடைந்து வெளியே மனிதன் ஜனிக்கும் வரை தண்ணீர் தன்னை மாய்த்துக் கொள்கிறது.

‘மேற்பரப்பு இழுவிசையால்’ குமிழாகவும், வட்ட வடிவமும் இந்த உலகில் நீர் மட்டுமே எடுக்க முடியும். தண்ணீரில் தான் இந்த உலகில் தோன்றிய முதல் உயிரினமான ‘பாக்டீரியா’ கண்டெடுக்கப்பட்டது. தண்ணீரால் ஒரு திட நிலைக்கும், ஆவி நிலைக்கும் மாறிக் கொள்ளமுடியும்.

சமூகப் பின்னணியில் இப்பொது இயங்கி கொண்டிருக்கிறது இந்த நீர். சுவர்களை எழுப்பி சொந்தம் கொண்டாடுவது, குடுவைக்குள் அடக்கி வியாபாரமாக்குவது, கழிவுகளை இறைத்து நீர் நிலைகளை அழிப்பது, மரங்களை வெட்டி நீர் சுழற்சியை தடுப்பது. இப்படி வக்கிரங்களைத் தாளாமல் சுனாமியாய் போனதை வரலாறு மறவாது.

மருத்துவர் சாமுவேல் ஹானிமன் கண்டெடுத்த ‘ஹோமியோபதி’ மருத்துவத்தில் 12 ‘சி’க்கு (மருந்தின் செறிவு )பிறகு கொடுக்கப்படும் 30 சி, 200 சி (அதிக நீர்த்தல்) போன்ற ஆற்றலில் மருந்தின் அணுக் காணப்படுவதில்லை என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

ஆனால் அதே ஆராய்ச்சி அந்த மருத்துவம் நோய் தீர்க்கிறது என்றும் கூறுகிறது. அதெப்படி ஒரு மருந்து கரைக்கப்படும் போது சுவடே இல்லாத நிலையில் எப்படி மருந்தாகும்? காரணம் அது தண்ணிரில் கடைசிநிலை வரை கரைக்கும் போதும் அந்த மருந்தின் தன்மையைக் கரைக்கப்பட்ட தண்ணீர் கிரகித்து கொண்டு மருந்தின் ஆற்றலைக் கூட்டுகிறது.

தண்ணீரின் ஆற்றலை ‘மாசறு இமொட்டோ’ என்பவர் புகைப்பட தொழிற்நுட்பத்தைக் கொண்டு ‘தண்ணீர் நம் எண்ணத்திற் கேற்று மூலக்கூறு நிலைகளை மாற்றிக் கொள்கிறது’ என்று நிரூபித்துள்ளார்.

‘ஹைட்ரோ நியூமேடிக்ஸ்’ என்ற தொழிற்நுட்பத் துறையில் தண்ணீர் மிக ஆழமாக தன்னை ஊன்றிக் கொண்டது .

நீர் மனிதர்களில் கவிஞர்களை காண்பித்தது.

"மனிதர்கள் வருவார்கள் போவார்கள்

நான் போய்க் கொண்டே இருப்பேன் "

என்று ஒரு சிறிய நீரோடையை ‘ஆல்பிரடு டென்னிசன்’ தன் கவிதை வரிகளில் அழகாக சித்தரிக்கிறார் .

“தண்ணீரை பார்ப்பதனால் மட்டும் நீ

அதை கடந்துவிட முடியாது”

என்று தண்ணீரைக் கொண்டு மனிதனுக்கு முயற்சியை கற்பிக்கிறார் தாகூர்.

மனிதனால் ஆன பல சுமைகளை சுமந்திருந்தாலும் புவித் தட்டுகளால் பிரிக்கப்பட்டக் கண்டங்களை ஒன்றுசேர்த்து மனிதனை இணைகிறது.

சூரியனின் எச்சத்தில் உயிர் பிடித்துக் கொண்ட நீர், இந்த பூமிக்கு உயிரோட்டம் கொடுத்தது. விவசாயத்தின் உயிர் நாடி இன்றளவில் மழையாய் பொய்த்து போனது. விவசாயி உயிரை கயிற்றில் மாய்த்துக் கொள்வதற்கு மழை பொறுப் பேற்காது.

மனிதன், தான் வளர்த்துக் கொண்ட விஞ்ஞானத்தால் பேரிழப்பை சந்திக்கத் தயாராகிறான், மழை புணர்ச்சி கொள்ளும் மரங்களை இன்னும் வெட்டிக் கொண்டுதான் இருக்கிறான். இந்தியா 2030 இல் ஐம்பத்து சகவிகிதத்துக்கு மேல் நீர் நிலைகளை இழக்கப் போவதாக உலக வள நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவனின் கூற்று பொய்ப்பதில்லை.

தண்ணீர் மிகப்பெரிய சுமையை உள்ளடக்கி சமூக சேவகனாய் வலம் வரும்போது வழிவிடுங்கள், அவை பாயட்டும்…

- சன்மது

Pin It