கூட்டுச் செயல்பாடுகளுக்கு, சிறியதாக இருந்தாலும் மக்கள் உணர்வு இணைந்து வெளிப்படும்போது, குரல் கூட்டாக ஒலிக்கும்போது பலன் இருக்கும் என்பது அவ்வப்போது நிரூபணமாகி வருகிறது. ஏற்கெனவே, கடலோர ஒழுங்காற்று மண்டலச் சட்டம் கைவிடப்பட்டதை கடந்த மாதம் பார்த்தோம். வளர்ச்சி, மேம்பாடு என்ற பெயரில் அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் மக்கள் உணர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாத நிலையில், அவை ஒரு பக்கச் சார்பானதாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. மேலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு வளர்ச்சி நடவடிக்கையும் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கே பணத்தை கொண்டு சேர்க்கும். இன்றைய நகர்ப்புற, படித்த, நடுத்தர வர்க்கத்தினரிடம் நாகரிகம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், அறிவியல்-தொழில்நுட்ப வசதிகள் வாழ்க்கையை எளிமையாக மாற்றிவிட்டதாகவும் ஒரு பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சி சீரான ஒன்றாக, அனைவருக்கும் பலன் தருவதாக இருக்கின்றனவா என்ற கேள்விக்கு, பெரும்பாலும் "இல்லை" என்ற பதிலே கிடைக்கிறது. அந்த வகையில் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சட்டங்கள், அரசு நடவடிக்கைகள், தனியார் திட்டங்கள் பின்வாங்குவது இயல்பே. சமீபத்தில், இது போன்று மூன்று நிகழ்வுகள் நடந்துள்ளன.

முதலாவதாக, தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட "அக்ரி கவுன்சில் ஆக்ட்" சட்டப்படி, வேளாண்மையை பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே விவசாயிகளுக்கு பயிற்சி தர முடியும். காலங்காலமாக அனுபவப் பாடம் படித்து மெருகேறிய விவசாயிகள், மற்றவர்களுக்கு பயிற்சி தருவது குற்றம். இந்தச் சட்டத்தை மீறி அவர்கள் பயிற்சியளித்தால் ரூ. 5,000 அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் மிரட்டியது. உத்வேகம் பெற்று வரும் இயற்கை வேளாண் இயக்கத்தின் செயல்பாடுகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்கும் நோக்கத்துடன் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது போலத் தெரிந்தது. ஆனால் தமிழகம் முழுக்க உள்ள வேளாண் அமைப்புகள், சுற்றுச்சூழல் இயக்கங்கள், பல்வேறு தரப்பிலுள்ள ஆர்வலர்கள் இணைந்து குரல் கொடுத்ததாலும், சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாலும் இந்தச் சட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கடந்த இதழில் சுந்தரராஜன் எழுதிய கட்டுரையில் விரிவான விவரங்கள் இருக்கின்றன.

சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து கொட்டிவாக்கம் வரை கடலோரமாக அமைக்கப்பட இருந்த சாலை மேம்பாலத் திட்டமும் சில காலமாக நீடித்து வந்த போராட்டத்துக்குப் பின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருக்கிறது. இந்தப் பாலம் பல மீனவ குடியிருப்புகளை முற்றிலும் அழித்தும், கடலோர வளங்களை அழித்தும் உருவாக்கப்பட இருந்தது. இது தொடர்பான தகவல் அறிந்தது முதல் மீனவர் இயக்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். அவர்களது கூட்டு முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது தொடர்பாக "பூவுலகு" முதல் இதழில் அந்த இயக்கத்தில் பங்கேற்ற கடல் ஆமைகள் பாதுகாப்பு மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான அருண் எழுதிய கட்டுரை அலசியிருந்தது.

ஜிண்டால் நிறுவனத்தின் இரும்பு ஆலைகளுக்காக திருவண்ணாமலை மாவட்டம் கவுத்தி-வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது வெட்டியெடுக்கப்படும் திட்டமும் கைவிடப் பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. ஏற்கெனவே சேலத்தின் கஞ்சமலை பகுதியில் இரும்புத்தாது எடுக்க மேற்கொள்ளப்பட்ட திட்டத்துக்கு உருவான எதிர்ப்புக்குப் பிறகு கவுத்தி-வேடியப்பன் மலைகளின் மீது ஜிண்டால் கண் பதித்தது. ஏற்கெனவே, இந்தியாவின் தேவைக்கு அதிகமாக இரும்பு உற்பத்தி இருக்கும்போது, இயற்கை வளத்தை அழித்து டாலர்களை குவிக்க ஜிண்டால் நிறுவனம் இட்ட திட்டம் இது. ஆனால் இந்தத் திட்டம் பற்றிய விவரங்களை பல்வேறு வழிகளில் மக்களுக்கு எடுத்துச் சென்று தொடர்ச்சியான போராட்டத்தை கவுத்தி வேடியப்பன் மலைகள் பாதுகாப்பு இயக்கமும் குக்கூ அறிவியக்கமும் நடத்தின. பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த கிராம மக்களும் தங்கள் பாரம்பரிய உடைமைகளை பாதுகாக்க கைகோர்த்தனர். இன்று அந்தத் திட்டம் கைவிடப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக "பூவுலகு" முதல் இதழில் நன்னிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நக்கீரன் எழுதிய அட்டைப்படக் கட்டுரை, சுந்தரராஜன் அம்பலப்படுத்திய ஊழல்கள் ஆகிய இரண்டும் விரிவாக ஆராய்ந்து இருந்தன. இந்தப் பிரச்சினைகள் சார்ந்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் "பூவுலகு" இதழின் பங்கும் இருந்தது என்பது, "பூவுலகு" குழுவினருக்கு மனதிருப்தியை அளிக்கிறது.

அக்டோபர் 2-8 ஆம் தேதி வரை "தேசிய காட்டுயிர் வாரம்" அனுசரிக்கப்படுகிறது. அதையட்டியும் களப் பிரச்சினைகள் சார்ந்தும் இந்த இதழில் காட்டுயிர்கள், காடுகள் பற்றி சில கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. காடுகள்-காட்டுயிர்கள்-தாவரங்களை பாதுகாப்பது அத்தியாவசியம் என்று ஒரு தரப்பும், மனிதன் வாழ்வதற்காக அவற்றை அழிப்பதில் தப்பில்லை என்று மற்றொரு தரப்பும் நீண்டகாலமாக விவாதித்து வருகின்றன. இந்தப் பிரச்சினை சார்ந்தும் ஒரு விவாதப் பகுதி இந்த இதழில் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு இதழ் வெளியான பிறகும் "பூவுலகு" இதழின் வாசகர் பரப்பு அதிகரித்து வருகிறது. பலரும் பேசி வழியாகவும், கடிதங்கள், மின்னஞ்சல் மூலமாகவும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதழை படிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தெரிவிக்கும் கருத்துகள் எங்களை மேம்படுத்தும், சீர்படுத்தும். தொடர்ந்து கருத்துகளை தெரியப்படுத்துங்கள். பாக்ஸ்: சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி அடுத்த இதழ் டிசம்பர்-ஜனவரியில் அதிக பக்கங்களுடன் சிறப்பு மலராக வெளியாக இருக்கிறது. தமிழக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து விரிவான கட்டுரைகள் இடம்பெறும். 

- பூவுலகு ஆசிரியர் குழு

Pin It