நகர்ப்புறத்தில் வாழ்ந்த கைவினைஞர்களின் வேலைவாய்ப்பும் நெசவாளர்களின் வேலைவாய்ப்பும் குறையத் தொடங்கியதால் 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் 55 விழுக்காடு விவசாயத்தை நம்பியிருந்த சூழல் மாறி, 1901ஆம் ஆண்டில் 68 விழுக்காடாக உயர்ந்ததும் 1931ஆம் ஆண்டு 72 விழுக்காடாக எட்டியதும் வரலாற்று உண்மையாகும். 2001 ஆம் ஆண்டு வரை இதே நிலை நீடித்தது.

2011ஆம் ஆண்டு இது 42 விழுக்காடாகக் குறைந்தது. பருத்தி சணல் கரும்பு நிலக்கடலை போன்ற பண விவசாயப் பொருட்கள் பிரித்தானிய நாட்டிற்குக் கச்சாப் பொருட்களாகத் தேவைப்பட்டன. 1765க்கும் 1858கும் இடையில் 12 பஞ்சங்களும் 4 மடங்கு பெருமளவில் பற்றாக்குறையும் ஏற்பட்டன. இங்கிலாந்து அரசு நேரடியான ஆட்சியை இந்தியாவில் கொண்டு வந்த பிறகும்  1860லிருந்து  1908 வரை   20 பஞ்சங்கள் தோன்றின.

அதன் பிறகு 1943இல் வங்கத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து சிறு விவ சாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் வறுமையிலும் ஏழ்மையிலும்தான் வாழ்ந்து வந்துள்ளனர்.  ‘இந்திய விவசாயி கடனில் பிறக்கிறான் கடனில் வாழ்கிறான் கடனிலேயே இறக்கிறான் கடனையே அடுத்த தலைமுறையினர்க்கும் கொடுக்கிறான் ( Indianfarmer born in debt; lives in debt; dies in debt; bequeaths the debt )’ என்று வேளாண் பொருளாதாரப் பாடங்களில் இந்நிலையைச் சுட்டுவார்கள்.

இந்திய விடுதலைக்குப்பின்  விவசாயிகளின் அவலநிலை தொடரும் போக்கு

இந்திய விடுதலைக்குப் பிறகும் வேளாண் தொழி லாளர்களும் சிறு குறு விவசாயிகளும் வாழ்வுரிமை பெறுவதற்கான ஆக்கப்புர்வமான திட்டங்களை அரசு முன்வைக்கவில்லை. காங்கிரசுக் கட்சி தொடக்க காலங்களில் நிலச்சீர்த்திருத்தம்  முதன்மையானது என்பதை வலியுறுத்தி வந்தது. 1927லிருந்து 1947வரை காங்கிரசுக் கட்சியில் பல மாற்றங்கள் தொடங்கின. 1937இல் காங்கிரசு பல மாகாணங்களில் ஆட்சியமைத்தது. இதை முற்போக்கு எண்ணம் கொண்ட பல காங்கிரசுத் தலைவர்கள் கடுமையான முறையில் எதிர்த்தனர். 1939ஆம் ஆண்டு  காந்தியின் தலைமைக்கு எதிராக நேதாஜி சுபாஷ்சந்திர போசு காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளைஞர்கள் இந்தியா முழுமையும் எழுச்சி பெற்றனர். காந்தியார்  முற்போக்கான இளைஞர்களிடம் காங்கிரசுத் தலைமை சென்றுவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தார். இதன் காரணமாகவே நேதாஜி காங்கிரசை விட்டு விலகியபிறகு நேருவை முன்னிறுத்தினார். இந்தியாவின் வரலாற்றை  பர்ட்டன் ஸ்டீன் (Burton Stein) என்கிற ஆய்வாளர் நிலம் சீர்த்திருத்தம் உட்பட காங்கிரசு முற்போக்கான பொருளாதாரக் கருத்துகளை முன்வைக்க விரும்பவில்லை  என்று குறிப்பிட்டுள்ளார். 

குறைந்து வரும் பொதுநிதி ஒதுக்கீடு

மேலும் வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிப்பதில் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் தேவையான முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதும் உண்மையாகும். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்ட ஒதுக்கீடு 1960 கோடியாக அமைந்தது. அதில் விவசாயத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மின்சாரத்திற்கு 260 கோடியும் போக்குவத்து மற்றும் தகவல் தொடர்புக்கு 520 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஒட்டு மொத்தத் தொகையில் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு 30.6 விழுக்காடு வழங்கப்பட்டது.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் - 4500 கோடி மொத்த ஒதுக்கீட்டில் விவசாயம் நீர்ப்பாசனத் துறை களுக்கு நிதி போதிய அளவிற்கு உயர்த்தப்படவில்லை. ஒட்டு மொத்த ஒதுக்கீட்டில் 20 விழுக்காடுதான் வேளாண்மைக்கு வழங்கப்பட்டது. ஏறக்குறைய இந்த 20 விழுக்காட்டு அளவிற்குத்தான் நிதி ஒதுக்கீடு  12ஆம் ஐந்தாண்டுத் திட்டம் வரை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியத் தேசிய வருமானத்தில் 15 விழுக்காடு  விவசாயத்தினுடைய பங்காகக் கருதப்பட்டாலும்  50 விழுக்காட்டு மக்களுக்கு மேல் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களையே நம்பி வாழ் கின்றனர். 2010-11 ஆம் ஆண்டு நடுவண் அரசின் விவசாயக் கணக்கீட்டின்படி (Agricultural Census 2010-11) குறு விவசாயிகளிடம் 1.25 முதல் 2.5 ஏக்கரும், சிறிய விவசாயிகளிடம் 2.5 முதல் 5 ஏக்கரும், சிறு - நடுத்தர விவசாயிகளிடம் 5 முதல் 10 ஏக்கரும், நடுத்தர விவசாயிகளிடம் 10 ஏக்கர்  முதல் 25 ஏக்கரும், பெரும் விவசாயிகள் 25 ஏக்கர் முதல் 50 அதற்கும் மேற்பட்ட ஏக்கர் அளவுக்கு நிலம் வைத்துள்ளனர்.

இப்புள்ளிவிவரத்தை ஆய்வு செய்து பார்க்கும் போது 67 விழுக்காடு குறுவிவசாயிகளிடம் ஒட்டு மொத்த வேளாண் நிலத்தில் 22.50 விழுக்காடும், 18 விழுக்காடு சிறு விவசாயிகளிடம் 22.10 விழுக்காடும், 10 விழுக்காடு சிறு நடுத்தர விவசாயிகளிடம் 23.70 விழுக்காடும் 4.2  விழுக்காடு நடுத்தர விவசாயிகளிடம் 21.20 விழுக்காடும் மீதமுள்ள 0.7 விழுக்காடு பெரு விவசாயிகளிடம் 10.50 விழுக்காடும் உள்ளது. நிலம் இன்றும் பெரும் நிலக்கிழார்களிடம்தான் உள்ளது என்பதை இவ்விவரம் மெய்ப்பிக்கிறது.

நடுவண் அரசின் அறிக்கை தரும் தகவல்கள்

மேலும்  2008இல் நக்சல்பாரி இயக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி அறைகூவல்கள் ( Development Challenges in Extremist Affected Areas – Report of the Expert Group to Planning Commission, GOI,2008 ) என்ற தலைப்பில்  ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய உழைக் கும் மக்களில் 58 விழுக்காடு வேளாண் தொழிலையும் அதனைச் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வரு கிறார்கள். விடுதலைக்குப் பின்பு நிலச்சீர்த்திருத்தம் ஒரு முக்கியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் காலப்போக்கில் நிலச்சீர்த்திருத்தம் பலவீனப்படுத் தப்பட்டு ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படாத திட்டமாக மாறிவிட்டது (பக்.1).நக்சல் இயக்கத்திற்கு முதன்மையான ஆதரவு தலித்துகளிடமிருந்தும் மலைவாழ் மக்களிடமிருந்தும்தான் கிடைக்கிறது ( The main support for the Naxalite movement comes from Dalits and Adivasis ). இந்த இரு பிரிவினரும் இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு உள்ளனர். தலித் பிரிவினர் 16 விழுக்காடும் பழங்குடியின மக்கள் 8 விழுக்காடும் உள்ளனர்.

இவர்களில் 80 விழுக்காடு தலித் மக்களும் 92 விழுக்காடு பழங்குடியின மக்களும் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர். பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக ஊரக வறுமை உள்ளது. இவ்வறுமைப் பிடியில் இருப்பவர்களில் பெரும்பாலனோர் மேற்குறிப்பிட்ட இரு பிரிவினரைச் சார்ந்தவர்களே ஆவர். குறிப்பாக 60 விழுக்காடு பழங்குடியினர் இந்த 5 மாநிலங்களில் உள்ளனர்.

63 விழுக்காடு ஏழைப் பழங்குடியின மக்களும் இங்குதான் வாழ்கின்றனர். தலித் பிரிவினர்க்கு இந்தியாவில் நீதி புறக்கணிக்கப்படுவதோடு அல்லாமல் அவர்கள் மீது வன்கொடுமை பாய்ச்சப்படுகிறது. மேலும் கல்வி வேலை வாய்ப்புகளில் அரசியல் பங்கெடுப்புகளில் அவர்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், போதிய சுகாதார வசதி இவர்களுக்கு வழங்கப்படவில்லை (பக்.4-5).

11 மாநிலங்களில் 565 ஊர்ப்புறங்களில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகளில் 63 வகையான தீண்டாமை நடைமுறையில் உள்ளது. மனித உரிமை மீறல்கள் எல்லை மீறிச் செல்கின்றன (பக்.6). சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துவதனால் நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது (பக்.12).

நிலம் செழுமையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடியானவர்களுக்கும் ஊர்ப்புற மக்களுக்கும் நேரடி யாகவோ மறைமுகமாகவோ நிலம் ஒரு அடிப்படை வாழ்வாதாரமாக அமைகிறது (பக்.12). பெரிய திட்டங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துவதனால் ஏற்படுகின்ற விளைவுகளைப் பற்றி டாக்டர் வால்டர் பொனான்டஸ் என்பவர் சில புள்ளிவிவரங்களை எடுத்துள்ளார்.

1947லிருந்து 2004 வரை 6 கோடி மக்கள் தங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டதால் இடம் பெயர்ந்துள்ள னர். இவர்களிடமிருந்து 6.25 கோடி ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 60 இலட்சம் ஏக்கர் வனப்பகுதிகளாகும். இவற்றில் 40 விழுக்காடு பழங்குடியினரும் 20 விழுக்காடு தலித் மக்களும் 20 விழுக்காடு பின்தங்கிய மக்களும்  அடங்குவர்.

ஆனால் இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய அரசு திட்டங்கள் ஏமாற்றத்தை அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்க்குத்தான் மறுவாழ்வுத் திட்டங்கள் பயனளித்திருக்கின்றன (பக்.15).

80 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மிக முக்கியமானது நில உச்சவரம்புச் சட்டங்களை இயற்ற வேண்டும். இந்தப் பிரிவினருக்கு உரிய சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பி னை அளிக்க வேண்டும்  போன்ற பல முற்போக்கான திட்டங்கள் பரிந்துரைகளாக வழங்கப்பட்டுள்ளன.

2013 நிலம் கையகப்படுத்தும் சட்டம்

இத்தகையப் பின்னணியில்தான் 2013இல் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் மறுவாழ்வளித் தல் மீள்குடியமர்த்தல் சட்டம் 2013 (Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013 ) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்ககேற்ற இக்கூட்டத்தில் இந்த விவாதம் 15 மணி நேரம் நடைபெற்றது. இரு முறை அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூடித் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மேற்குவங்க மாநிலங்கள் நடுவண் அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி நிலம் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் கையகப்படுத்துதல் தொடர்பான கோரிக்கைகள் பற்றி சட்டங்களை இயற்றுவது பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே நிலம் கையகப்படுத்துவதனால் வெளியேற்றப்படுபவர்களுக்கு உரிய மறுவாழ்வு, மீள் குடியமர்த்தல் எந்த விதிகளிலும் எந்தப்பட்டியலி லும் சொல்லப்படாததால் நடுவண் அரசு எஞ்சிய அதிகாரத்தின்படி (Residual Power) இந்தச் சட்டத்தை இயற்றியது. 

மோடி அரசு 2014இல் நடுவண்அரசில் பொறுப்பேற்பதற்கு முன்பாக 24 ஆண்டுகளாக மாநிலக் கட்சிகள் இடம் பெற்ற கூட்டணி அரசுதான் டெல்லியில் நடைபெற்றது. ஆனால் ஏராளமான மாநில உரிமை களைப் பறிக்கின்ற சட்டங்களும் இக்காலத்தில்தான் இயற்றப்பட்டன.

குறிப்பாக, பல ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டு தோறும்  ஈட்டி வரும் சேவை வரி  1999ஆம் ஆண்டிற்குப் பிறகு எஞ்சிய அதிகாரத்தின்படி மாநில அரசுகளைக் கேட்காமலேயே  நடுவண் அரசு சட்டம் இயற்றி மாநிலங்களுக்கே உரித்தான வரிவருவாயைத் தட்டிப்பறித்துக் கொண்டது. 1976ஆம் ஆண்டு கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிறகு  நடுவண் அரசினுடைய  பாடத்திட்டத்தின்படி இயங்கும் பல நடுவண் அரசின் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் பெருகி வருகின்றன. 

மாநில மொழிகளைப் புறந்தள்ளிவிட்டு  இந்தி, சமஸ்கிருத மொழிகள்  இப்பள்ளிகளில் திணிக் கப்படுகின்றன. நடுவண் அரசின் 2009ஆம் ஆண்டின் கல்வியைக் கட்டாயப்படுத்தும் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இப்பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு இன்றளவும் அளிக்கப்பட வில்லை. மாநில அரசுகளும் இதனைக்கண்டு கொள்ளவே இல்லை.

வாட் வரியை மாநில உரிமையிலிருந்து பறித்துக் கொண்டு இப்போது பொது விற்பனை வரியை நடுவண் அரசிற்கு மாற்றும் முயற்சிகள் விரைந்து எடுக்கப்படுகின்றன. ஓரிடத்தில் அதிகாரக் குவியல்   முதலாளித்துவம் வளருகின்ற போது ஏற்படும் என்று காரல் மார்க்சு மூலதன நூலில் இயல் 28லிருந்து 32வரை அழகாக விளக்கியுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013

2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பு சமூகத் தாக்கம் தொடர்பாக  மதிப்பீடு (Social Impact Assessment) பொதுமக்களிடம் ஆலோசனையும் கருத்தும் கேட்பது (Consultation and Public hearing) போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பின்பு  உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் வல்லுநர்கள்  மறுவாழ்வுத் திட்ட வல்லுநர்கள் சமூகவியல் அறி ஞர்கள் ஆகியோரைக் கொண்ட சீராய்வுக் குழு சீராய்வு செய்யும். தேசியப் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் கட்டமைப்பு அமைப்புகள் வேளாண்மை குடிநீர் மற்றும் கழிவு நீர்த்திட்டங்கள் கல்வித் திட்டங்கள் போக்குவரத்து விளையாட்டு சுற்றுலாத் திட்டங்கள் வீட்டு வசதித் திட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு நிலம் கையகப் படுத்துவது பற்றி இந்தச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

1.  ஒப்புதல் அளித்தல் (Consent) - தனியார் நிறு வனங்களுக்காக நிலம் கையகப்படுத்தினால்  80 விழுக்காடு விவசாயிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

2.  அரசு  தனியார் துறை பங்களிப்போடு நிறை வேற்றப்படும் திட்டமாயிருந்தால் 70 விழுக்காடு விவசாயிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்

3. அரசு பொதுநல திட்டத்திற்குத் தேவையான நிலங்களை விவசாயிகளிடமிருந்து ஒப்புதல் இல்லா மலேயே பெறலாம். இவ்வாறு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பல பாதுகாப்புப் பிரிவுகள் இருந்தாலும் இழப்பீடு (Compensation) சம்மந்தமாகப் பல பாதுகாப்பு வாக்குறுதிகளும் விதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களிடம் நிலம் கொடுத்தவர்களுக்கு மறு வாழ்வு மீள் குடியமர்த்தல் தொடர்பாக  ஆலோசனை கேட்ட போது இத்தகையோர்க்கு நிலம் அளிப்பதற்குத் தங்களிடம் போதுமான நிலம் இல்லை என்று அரசுகள் குறிப்பிட்டன.

மேலும் இச்சட்டத்தில் நிலமிழந்தோர்க்கு மீண்டும் அவர்களுக்கு வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் ஏற் கெனவே கையகப்படுத்திய நிலங்களுக்குரிய இழப்பீடு மறுவாழ்வு மீள்குடியமர்த்தல் தொடர்பாகப் பாதிக்கப் பட்டவர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது (Retrospective Operation). அவசரத் தேவைகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் மூன்று காரணிகள் ( Three Cases of Urgency ) குறிப்பிடப்பட்டுள்ளன. 1.குறைந்த அளவு நிலம் தேசியப் பாதுகாப்பிற்கும் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் 2. இயற்கை சீரழிவுகளால் ஏற்படும் பாதிப்பிற்கும் 3. நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு அவசர நடவடிக்கைகளுக்கும் நிலம் கையகப்படுத் தப்படும். 

சிறப்பு விதிகளின்படி தலித் மக்களுக்கும் பழங்குடி யினர்க்கும் பாதுகாப்பு வழங்கப்படும். இந்த நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை  நடைமுறைப்படுத்த மறுவாழ்வு மீள் குடியமர்த்தலுக்கு ஒரு அதிகார மையம் உருவாக்கப்படும். மாவட்ட அளவிலான நீதிபதியோ அல்லது 7 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சிறந்த வழக்கறிஞரோ இந்த மையத்திற்குத் தலைவராக நியமிக்கப்படுவார். குடிமை நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்கள் எல்லாம் இம்மையத்திற்கு வழங்கப்படும். இதர பிரிவுகள் என்ற பகுதியில் தனியார்க்கு நிலம் கையகப்படுத்தும் முறை மாநில அரசுகள் கடைப் பிடிக்கும் நடைமுறை வரிதொடர்பான சட்டங்கள் பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக, இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மேற் கூறிய பல கருத்துகளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் நடுவண் அரசால் ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டங்கள் எவ்வாறு மக்களுக்குப் பயனை அளிக்க வில்லையோ அதே போன்றுதான் இச்சட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்போது பல பிரிவுகள் தலித்து களுக்கும் பழங்குடியினருக்கும் ஏழை மக்களுக்கும் உரிய நீதியை அளிக்க முடியாது என்று நம்புகிறேன்.

சான்றாக நடுவண் அரசு 2009ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட  கல்வி உரிமைச் சட்டம் ( Rights of Children to Free and Compulsory Education Act, 2009 ) தமிழ்நாட்டில் எவ்வாறு இயங்குகிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இத்தகைய பின்னடை வுகள் உள்ள 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்  மேலும் மோடி அரசு அவசரச் சட்டத்தின் வழியாகப் பல மோசமான சட்டப்பிரிவுகளை இணைத்துள்ளது.

மோடி அரசின் சட்டத்தில் காணப்படும் மோசடிகள்

2015இல் மோடி அரசு சிறப்புத் திட்டங்கள்; ( Spceial Category of Projects – Sec 10(A)) என்ற பெயரில் சமுதாயத் தாக்க மதிப்பீடு வல்லுநர்குழு சீராய்வு நீக்கப்படுகிறது பல்வகை பயிர்களை விளைவிக்கும் நிலங்களுக்கு விதிவிலக்கு இல்லை. தொழில் கூடங்கள் கட்டமைப்புப் பணிகள் சமூகக் கட்டமைப்புப் பணிகள் பொதுத்துறை தனியார் துறை பங்களிப்புடன் நிறைவேற்றும் திட்டங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு அம்சங்கள் 2013 சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன.

பிரிவு 24(2)  நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பு தொடரப்பட்ட வழக்குகள் இழப்பீடு தருவது ஆகியன நீக்கப்படுகின்றன. 2013 சட்டத்தில் இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகையை எந்த ஒரு கணக்கிலும் செலுத்தலாம் என்ற  அதிகாரம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அரசு அதிகாரி தவறு செய்தால் தண்டிப்பதற்கு வழி வகைகள் 2013 சட்டத்தில் செய்யப்பட்டிருந்தன. 2015 அவசர சட்டத்தில் அரசு அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு முன்பு அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்படாத நிலங்கள் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற பிரிவும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. 2013 சட்டத்தில் 5 ஆண்டுகளுக்குள் அரசுக் கையகப்படுத்திய நிலத்தைப் பயன்படுத்தத் தவறினால் மீண்டும் நில உரிமையாளருக்கே அளிக்க வேண்டும் என்ற பிரிவு இருந்தது. தற்போது தொழிற்சாலையோ அல்லது மற்ற பணிகளை மேற்கொள்வதற்காக கால அவகாசத்தைப் பெறலாம் என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நீண்ட காலத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். இது ஊக வாணிகத் திற்கு வழி வகுக்கும்.

சான்றாக கையகப்படுத்திய நிலத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் இரண்டாண்டிற்குள் உரிய நட வடிக்கை எடுக்கலாம் என்பதற்குப் பதிலாக கால அவகாசம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது தனியார் அமைப்பு  (Private Entity) என்பதற்காகத் தரப்பட்டுள்ள விளக்கத்தில் தனியார் முதலாளிகள் குழுமங்கள் நிறுவனங்கள் லாபம் சாராத் தொழில்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மோடி அரசு காட்டும் அவசரம் தனியார் துறைக்கு மட்டுமே பயன்படுவதாக அமையும் என்ற ஐயப்பாடு வலுப்பெறுகிறது. 1894இல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்ட போது இன்றைக்குத் தனியாக உள்ள பல நாடுகள் இணைந்த பிரித்தானிய இந்தியா என்பதும், தற்போது இந்தியா என்ற நில அமைப்பில் 2011 புள்ளிவிவரப்படி 120 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும். இதில் 40 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் கடந்த 20 ஆண்டு களாக ஏற்றத்தாழ்வு பெருகி வருகிறது என்பதைப்  பல புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.

2012இல் அரசியல் பொருளாதார இதழில் (Economic and Political Weekly,Oct.6, 2012) வெளி வந்த கட்டுரையில் ஆய்வாளர்கள் அதிதி காந்தி, மைக்கேல் வால்டன் ஆகியோர் இக்காலக்கட்டத்தில் இந்தியாவில் வளர்ந்த பெரு முதலாளிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியப் பெரு முதலாளிகள் எங்கிருந்து செல்வத்தை எடுக்கிறார்கள் ( Where do India’s Bi llionaries Get Their Wealth?) என்ற தலைப்பில் புதியப் பொருளாதாரக் கொள்கையின் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 1991இல் இக்கொள்கை தொடங்கியபோது இரண்டு பெரும் பண முதலாளிகள் இருந்தனர். அந்த இருவரின் சொத்து மதிப்பு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கோடியாக இருந்தது. 2012இல் பெரும் பண முதலாளிகளின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களது சொத்து மதிப்பு 60 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆறாண்டுகளாகத் தொடர்ந்து இந்தியாவி னுடைய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் முகேஷ் அம்பானி 9 இலட்சம் கோடியைத் தன் கைவசத்தில் வைத்துள்ளார். இந்த ஆய்வாளர்கள் எந்தெந்தத் துறைகளில் இந்த முதலாளிகள் இலாபத்தை ஈட்டினார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். நகர்ப்புற நில விற்பனை கட்டடத்தொழில் கட்டமைப்புத் துறை, விமானம், துறைமுகத் துறைகள், சுரங்கத் தொழில், சிமென்ட், ஊடகம் போன்ற துறைகளில்தான் மிக அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளனர்.

இதற்கு அடுத்த நிலையில்  மென்பொருள், மருந்து உற்பத்தி, விற்பனை உயிர் தொழில்நுட்பம், மது உற்பத்தி விற்பனை, நான்கு இரண்டு சக்கரவாகன உற்பத்தித் தொழில்களில் இலாபத்தை ஈட்டியுள்ளனர். மேற்கூறிய துறைகளால் இந்தியாவின் ஒட்டு மொத்தப் பொருள் உற்பத்திக்கு ஆக்கப்பூர்வமான பயன் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள துறைகள் நீர் நிலம் கனிமம் போன்ற இயற்கை வளங்கள் பெருமளவிற்குக் கொள்ளையடிக் கப்பட்டு இலாபமாக ஈட்டப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் வாழும் ஏழை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  கடந்த 10 ஆண்டுகளாக (2000-2010) உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 25 விழுக்காட்டுப் பங்கினை வகித்த இந்தத் தனியார் நிறுவனங்களின் பங்கு 2010இல் 35 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

மேற்கூறிய துறைகளில் மருந்து, சிமென்ட் உற்பத்தியைத் தவிர மற்ற துறைகள் எல்லாம் பெரும்பான்மையான மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இயங்கும் தொழில்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது (நீதியா? நியாயமா?  அரசியல் சமூக பொருளாதாரக் கட்டுரைகள் பேராசிரியர் மு.நாகநாதன் பக்.159-160 2013).

குறிப்பாக வளர்கின்ற நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகள்  இயற்கை வளங்களைச் சுரண்டுவதால் சுற்றுச்சூழலும் வளர்கின்ற நாடுகளின் மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார்.  குறிப்பாக வால்மார்ட் நிறுவனத்தைப் பற்றி °டிக்லிசுக் குறிப்பிடுவது பெரிதும் அச்சம் தரக்கூடியதாக அமைந் துள்ளது. உலகமயாதல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற தனது நூலில் பன்னாட்டு நிறுவனங்களுடைய அமைப்பையும் செயல்பாட்டையும் விளக்கியுள்ளார்.

2004ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பன்னாட்டு கார் நிறுவனத்தின் வருமானம் 191.4 பில்லியன் டாலர் மதிப்பாகும். இது 148 நாடுகளின் உள்நாட்டு ஒட்டு மொத்த உற்பத்தியைவிட அதிகமானது. 2005இல் வால்மாட் நிறுவனத்தின் வருமானம் 285 பில்லியன் டாலர் ஆகும். இது ஆப்பிரிக்க சகாரா நாடுகளின் உள்நாட்டு மொத்த உற்பத்தியைவிட அதிகமாகும். 

இந்தப் பன்னாட்டு அமைப்புகள் பணக்கார அமைப்புகள் மட்டுமல்ல. அரசியலில்  சக்தி வாய்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசுகள் இந்த நிறுவனங்களின் மீது வரியையோ கட்டுப்பாட்டையோ விதிப்பதை விரும்புவ தில்லை. வேறு நாடுகளுக்குச் சென்று விடுவோம் என்று பயமுறுத்தவும் செய்வார்கள். இலாபத்திற்காக வணிகம். பணம் ஈட்டுவதே முதல் கொள்கை ஆகும். ( In 2004, the revenue of US car company General Motors was $191.4 billion, greater than GDP of more than 148 countries. In its fiscal year ending 2005, the US retailer Wal-Mart’s revenues were $285.5 billion, larger than the combined GDP of sub-saharan Africa. These corporations are not only rich but politically powerful. If governments decide to tax or regulate them in ways they don’t like, they threaten to move elsewhere. There is always another country that they will welcome their tax revenues, jobs and foreign investment, Business purse profits, and that means making money is their first priority-“Making Globalization Work” p.187-88, 2006). 

அறிஞர்  ஜோசப் °டிக்லி` 2011இல் வெளியிட்ட தனது  தடையற்ற வீழ்ச்சி  (Free Fall, 2011)) என்ற நூலில் வா`ங்டன் கொள்கைத் திட்டமும் அதன் தொடர்பான அதிதீவிர சந்தைப் பொருளாதாரமும் இறந்துவிட்டன. இதற்கு முன்பு வளர்ந்த நாடுகளுக்கும் வளர்கின்ற நாடுகளுக்கும் சரிசமமான போட்டி போன்ற கருத்து விவாதம் முற்றுப் பெற்றுவிட்டது. பணக்கார நாடுகள் தங்கள் நாடுகளின் தனியார் நிறுவனங்களை எவ்வகையில் காப்பாற்ற முயற்சிக்கின்றனவோ அதே கொள்கையை ஏழை நாடுகள் பின்பற்ற முடியாது.

மோசமான முறையில் மேலாண்மை செய்யப்பட்ட உலகமயமாதல் இடர்களை இந்த நாடுகள்  உணர்ந்து விட்டன (The Washington consensus policies and the underlying idealogy of market fundamentalism are dead. In the past, there might have been a debate over whether level playing field between developed and developing countries; now there can be no debate. The poor countries simply cannot back up their enterprises in the way that the rich do, and this alters the risks that they can undertake. They have seen risks of globalisation badly managed ) என்று குறிப்பிட்டுள்ளர் (நீதியா? நியாயமா? - அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டுரைகள், பேராசிரியர் மு. நாகநாதன், பக்.162-163, 2013)

மக்களுக்குத் தேவையான தொழில் உற்பத்தியா?

முன்பே குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களில் கூறியுள்ளபடி மக்கள் தொகையில் பெருகி வருகிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வா தாரமாக அளிப்பதற்குப் போதிய நிலங்களே இல்லாத நிலையில், இந்த ‘நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டம் 2015’ ஒரு கொடுங் கோன்மையான சட்டம் என்றே கூற வேண்டும்.

காரல் மார்க்சு மூலதனம் நூலில், மாபெரும் கவிஞன் `பியரின் கவிதையைச் சுட்டி, முதலாளி கள் செய்யும் கொடுமையை எடுத்துரைக்கிறார். என் வாழ்க்கைச்சாதனங்களை நீ பறித்துக் கொள்ளும் போது என் உயிரையே பறித்தவனாகிறாய்; “( You take my life when you do take the means I live )” மூலதனம் முதல் தொகுதி க.ரா.ஜமதக்னி பக்.737-738).  80 விழுக்காட்டு சிறுகுறு விவசாயிகளின் நிலங்களைக் கையகப் படுத்துவது அவர்களின் உயிரையே பறித்துக் கொள்ளும் கொடுமையான செயலன்றோ!

இந்தியப் பொருளாதாரம் 7 விழுக்காடு, 8 விழுக்காடு வளர்ச்சி பெறுகிறது என்று பேசுகிறவர்கள் வேளாண் துறையும் அதனைச் சார்ந்த மற்ற தொழில்களும் இந்திய உற்பத்தித் துறைக்கு அளிக்கும் பங்கினை முதன்மைப்படுத்துவதில்லை. மேலும் இதில்- ஈடுபடுகின்ற  தொழிலாளர்கள் பல்வேறு இயற்கை அறைகூவல்களைச் சந்தித்து  குறைந்த கூலியையும்- வருமானத்தையும்  பெற்று  உணவு தானியங்களை- பால் உட்பட பல துணை-பொருட்களை உற்பத்தி செய்து உலக அளவில் இந்தியாவை உயர்த்தி வருகின்றனர். 

சான்றாக 2010 புள்ளி விவரங்களின்படி உலக மொத்த விவசாய உற்பத்தி மதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றது. அரிசி கோதுமை சோளம் உற்பத்தியில் இரண்டாம் இடமும் பெற்றது. கொண்டைக் கடலை பட்டாணி மாம்பழம் வாழைப் பழம் பப்பாளி எலுமிச்சை இஞ்சி பால் நெய் வெண் ணெய் மிளகு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் பருத்தி சணல் தேயிலைபட்டு ஆகிய பொருட்களை உற்பத்தி செய்வதில் உலகின் இரண்டாம் இடத்தில் இருந்தது. இவ்வாறு உற்பத்தித் துறையில்  சாதனை படைத்து வரும் நிலம் ஒட்டிய தொழில்களுக்குப் பல சுற்றுச்சூழல் ஆபத்துகளைப் பல பன்னாட்டு உள்நாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன என்பதைப் பல புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன. 

ஆனால் யார் உயர்ந்து வருகின்றனர் என்பதைப் பற்றிய 2010ஆம் ஆண்டு புள்ளிவிவரம் சுட்டுகிறது.  அதிக கோடிசுவரர்களின் எண்ணிக்கையில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது என்று போர்ப்சு (FORBS) நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆனால் இந்திய மக்கள் தொகையில் இவ்வளவு உற்பத்தி செய்தும் 40 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குள் வாழ்கின்றனர் என்ற புள்ளி விவரமும் நமக்குப் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றது.

நிலத்தையும் நீரையும் சுற்றுச்சூழலையும் அதன் இயற்கைத் தன்மைகளையும் மேலும் மாசுபடாமல் தடுப்பதற்குக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேலும் நிலம் கடந்த 65 ஆண்டுகளாக நஞ்சாக் கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. பாய்கின்ற ஆறுகள் கழிவு நீர் சாக்கடைகளாக மாறி வருகின்றன.

குறிப்பாக அண்மையில் வெளிவந்த சுற்றுச்சூழல் புள்ளிவிவரப்படி அமெரிக்க அய்ரோப்பிய நாடுகள் தங்களுடைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பசுமை வாயுக்கள் குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அவற்றில் மாசுகளை உண்டாக்கும் தொழிற்சாலைகளை இந்தியா போன்ற நாடு களுக்கு மாற்றி இந்தியாவினுடைய நீர் நில வளங் களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்குக் கேடு விளை விக்கின்றன. இவற்றால் மேலும் பாதிக்கப்படுவது ஏழை மக்களே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இந்தியாவில் அவசியமான-மக்களுக்குத் தேவையான தொழில்களுக்கு நிலம் தேவை யென்றால் மனித உரிமை ஆணையம் போன்று  நீதித்துறையைச் சார்ந்தவரைத் தலைவராகக் கொண்ட ஓர் ஆணையத்தை உருவாக்க வேண்டும். வேளாண் தொழிலாளர்களின் அமைப்பில் உள்ளவர்கள் இதில் கட்டாயம் உறுப்பினராக இடம்பெற வேண்டும். இந்தக் குழு அளிக்கின்ற பரிந்துரையின் அடிப்படையில்தான் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து நிலத்தைப் பொதுப் பணிகளுக்கு அளிக்க வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் சிறு குறு விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றக் கூடாது.

நிலச் சீர்த்திருத்தச்சட்டங்களை மீண்டும் மறு ஆய்வு செய்து, நில உடைமையாளர்களிடம் இருக்கின்ற நிலங்களை உரிய முறையில் பங்கீடு செய்கின்ற உரிய சட்டங்களை இயற்ற வேண்டும்.

Pin It