அச்சமூட்டும் வகையில் இமயமலை உருகுவதால் இந்தியா உட்பட தெற்காசியாவில் கடும் காலநிலை பாதிப்புகள் ஏற்படும் என்று பிரிட்டனைச் சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன. சமீப பத்தாண்டுகளில் இங்கு, முன்பு பனிப்பாறைகள் விரிவடைந்து உருவான குறுகிய பனிக்காலம் (Little Ice Age) எனப்படும் 400-700 ஆண்டுகளில் சராசரியாக இருந்ததைக் காட்டிலும் இப்போது பத்து மடங்கு வேகமாக உருகுகிறது.
சுருங்கும் இமயம்
இங்கு உள்ள பனிப்படலங்கள் உலகின் மற்ற இடங்களைக் காட்டிலும் வேகமாகச் சுருங்குகின்றன. இதனால் உருவாகும் பனிக்கட்டிகளின் இழப்பு வரலாறு காணாத ஒன்று என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரை 'சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' (Scientific Reports) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய பனிக்காலத்தில் இருந்த 14,798 பனிப்படலங்கள் அதே அளவு மற்றும் பனிப்பரப்புடன் செயற்கை மாதிரிகளாக உருவாக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் பனிப்படலங்களின் 40% பனிப்பரப்பு சுருங்கியுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 29,000 சதுர கி.மீ. பரப்பில் இருந்த பனிச்சிகரங்கள் இன்று 19,600 சதுர கி.மீ. என்ற அளவிற்குச் சுருங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இமயமலையில் இன்று உருகி ஓடியிருக்கும் பனிக்கட்டிகள் மத்திய ஐரோப்பிய ஆல்ப்ஸ், காக்கசஸ் (Caucasus) மற்றும் ஸ்காண்டிநேவியா பகுதியில் இருக்கும் பனிப்பரப்புகளின் ஒட்டுமொத்த அளவிற்குச் சமம்.
இதனால் 0.92 மி.மீ. முதல் 1.38 மி.மீ. அளவிற்கு உலகக் கடல்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த பல நூற்றாண்டுகளில் இல்லாத அளவு இப்போது இமயமலையில் பனி உருகுவது இந்த ஆய்வுகள் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது என்று இந்த ஆய்வுக்கட்டுரையின் தொடர்பு ஆசிரியர் மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழக புவியியல் பள்ளித் துணைத்தலைவர் டாக்டர் ஜோனתן காரிவிக் (Dr. Jonathan Carrivick) கூறுகிறார்.
மனிதத் தூண்டல்களால் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றத்தின் காரணமாகவே பனி உருகுதல் இந்த அளவு துரிதகதியில் சமீப ஒரு சில பத்தாண்டுகளுக்குள் நிகழ்ந்துள்ளது என்று காரிவிக் கூறுகிறார். ஆர்க்டிக், அண்டார்டிகாவிற்கு அடுத்து உலகில் மிகப்பெரும் பரப்பில் பனிப்பாறைகள் இமயமலையில் உள்ளன. இதனால் இது 'உலகின் மூன்றாவது துருவம்' (Third Pole) என்று அழைக்கப்படுகிறது.
இந்த அதிதீவிர உருகுதல் பிரம்மபுத்திரா, கங்கை, சிந்து போன்ற மிகப் பெரிய நதிகளின் நீரை நம்பி வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. உணவு மற்றும் ஆற்றல் தேவைக்கு இவர்கள் இந்நதிகளையே நம்பியுள்ளனர். ஆய்வாளர்கள் டிஜிட்டல் பிம்பங்கள், உயரப்படுத்தப்பட்ட மாதிரிகளை (Elevated Digital Elevation Models) பயன்படுத்தி ஆய்வுகளை நடத்தினர்.
இதன் மூலம் 700 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் இருந்த பனிப்பரப்புகளின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு ஆராயப்பட்டன. இதில் பழைய பனிப்பாறைகளின் முனை (Ridge) மற்றும் பனிப்படலத்தின் எல்லைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் அன்றிருந்த பனிப்படலங்கள் இன்று உள்ளதுடன் ஒப்பிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
பனிப்படலங்களின் கன அளவு மற்றும் அவற்றின் அடர்த்தியில் ஏற்பட்ட மாறுதல்கள் கணக்கிடப்பட்டு பனிக்கட்டிகளின் இழப்பு பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமைவிடம், வளிமண்டலத்துடன் உள்ள தொடர்பு காரணமாக கிழக்கு நேபாளம், பூட்டானின் வட பகுதியில் உருகுதல் வேகமாக நடைபெறுவது கண்டறியப்பட்டது.
உருகும் மலையில் உருவாகும் ஏரிகள்
உருகி ஓடும் நீர் பெருமளவில் சேகரிக்கப்பட்டு புதிய ஏரிகள் அதிகமாக உருவாகின்றன. இவை மலையடிவாரத்தை அடையும்போது பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உருகுதல் வேகமாக நடைபெறும்போது அதிக நீர்வரத்து காரணமாக இந்த ஏரிகளின் அளவு பெரிதாகிறது. பனிப்பாறை ஒன்றில் ஏற்படும் பனி இழப்பு மற்றவற்றையும் பாதிக்கிறது. இடிபாடுகளுடன் உள்ள பாறைகள் தங்கள் எடையை இழக்கின்றன. இதனால் எதிர்பாராத நேரங்களில் இவை உருண்டு விழுகின்றன.
இவ்வாறு பனிப்படலங்களில் உருவாகும் விரிசல்கள் மூலம் ஏற்படும் சேதத்தால் அவற்றின் கன அளவில் 46.5% இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் இருக்கும் 7.5% பனிப்படலங்களில் இது நிகழ்ந்துள்ளது என்று காரிவிக் கூறுகிறார். பல நூறாண்டுகளில் காணப்படாத சூழல் சீரழிவை இன்று இங்கு வாழும் மக்கள் சந்திக்கின்றனர் என்று டண்டி (Dundee) பல்கலைக்கழக புவியியல் மற்றும் சூழலியல் துறை மூத்த விரிவுரையாளர் சைமன் குக் (Simon Cook) கூறுகிறார்.
எங்கோ காணாத் தொலைவில் இருக்கும் ஆர்க்டிக்கிலும் அண்டார்டிகாவிலும் வெப்பம் அதிகரிக்கிறது, உலகம் முழுவதும் இருக்கும் கடல்கள் சூடாகின்றன என்றெல்லாம் கேட்கும்போது கண்டுகொள்ளாமல் இருந்தோம். ஆனால் இன்று? காலநிலை மாற்றம் நம் வீட்டு வாசற்படியில் வந்து நிற்கிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்