ஜனத்தொகை நிரம்பி வழியும் இந்த மூர்க்கத்தனமான உலகினுள் குழந்தைகளை ஈன்றெடுக்கக் கூடாதென பல இந்தியர்கள் முடிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

நகர்ப்புற இந்தியாவில் வாழும் தம்பதிகள் பலர் இக்கிரகத்தின் மீதான பாரத்தைக் குறைப்பதற்காகவே குழந்தை-வேண்டாத் தம்பதிகளாக(Child-free) வாழ்ந்து வருகின்றனர்.

no childஒரு கட்டுரையில் இருந்த அந்த வார்த்தையைக் கடந்து வந்த பிறகு, “நான் கருமறுப்புவாதியா “(Anti-natalist)?)” என்று ஆழமாகச் சிந்தித்தேன். எனது கணவர், “தேச விரோதிகளா? ”(Anti-nationalist?)” என்று கேட்டார். அவருடைய கருத்தை நான் திருத்திக் கூறினேன் - அதிகச் சுமையுள்ள இந்த உலகிற்குள் மனிதர்களைக் கொண்டு வருவது என்பதே கொடூரமானது என்று நம்பும் ஒரு தத்துவம் - என்று அந்தக் கருத்தை நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு பதிலளித்தேன்.

எனக்கு முப்பத்தியெட்டு வயதிருக்கும்; நானும் எனது கணவரும் பதிமூன்று வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம், சூழ்நிலையின் காரணமாக எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் எடுத்த முடிவால், இன்று நாங்கள் தத்தெடுத்து வளர்க்கும் இரண்டு நாய்களால் எங்களுடைய ‘குடும்பம்’ முழுமையடைந்தது. எங்கள் மூலமாகத்தான் எனக்கு குழந்தைகள் வேண்டும் என்று நான் எப்பொழுதுமே கருதியதில்லை. எனினும் எனது தாய்மை உணர்வு வெளிப்பட்டிருக்குமேயானால், நான் தத்தெடுக்கும் வழியைத்தான் தேர்வு செய்திருப்பேன்.

எனது காரணங்கள் ஒன்றும் வழக்கத்துக்கு மாறானவையல்ல. தாய்-தந்தை நிலை என்பது எல்லோருக்குமானது அல்ல; குழந்தை வளர்த்தெடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் உணர்வு ரீதியான முதலீடாகும்; மிக அதிகமான அளவில் விட்டுக் கொடுத்தலும் அர்ப்பணிக்கும் திறனும் இதற்குத் தேவை; நானும் எனது கணவரும் பல்வேறு வழிகளில் மனநிறை வேற்றத்தை அடைந்திருக்கிறோம். ஆனால், கடைசிப் பத்து வருடங்களாக இன்னும் அதற்குத் தடையாக இருந்த இன்னுமொரு காரணம் காலத்தோடு சேர்ந்து மிகவும் வலுவாக வளர்ந்தது.

எந்த உலகத்தினுள் எனதுக் குழந்தையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினேனோ அது இந்த உலகம் இல்லை. நாம் வாழும் இந்தக் காலகட்டத்தின் அழுத்தங்களினாலும் பிரச்சினைகளினாலும் அந்தக் குழந்தை பாதிப்படையும். இதிலிருந்து அவர்களைப் (குழந்தைகளை) பாதுகாப்பதற்கு என்னால் உறுதியான உத்தரவாதம் கொடுக்க முடியாது. இந்தியாவில், நாள்தோறும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிய செய்தித் தலையங்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

பல ஆய்வறிக்கைகள் கூறியபடி, இவையனைத்தும் அதிக மக்கள் தொகையினால் எழும் பிரச்சினைகள்தான். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் “தீர்க்கப்பட வேண்டியவை” என்று எல்லோரும் ஒப்புக் கொண்டாலும், நடைமுறையில், ஒவ்வொருவரும், “நாம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று எடுக்கும் முடிவானது - சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதைப் பற்றி கவனத்தில் கொண்டதுண்டா? இந்தியாவில்; குழந்தைகள் வேண்டாம் அல்லது குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்வதாக முடிவெடுத்த தனிமனிதர்களுக்கு அந்த முடிவெடுக்கும் வகையில் வழிசெய்வதில் சூழலியல் தொடர்பான பிரச்சினைகள் முக்கிய பங்காற்றுகின்றனவா?

சமநிலையை மீட்டெடுத்தல்

                கருமறுப்பியம் (Anti-Natalism) என்பது ஒரு புதிய தத்துவமல்ல. இத்தத்துவம் பண்டையகால கிரேக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோபகில்ஸ் (Sophocles) எழுதிய ஈடிபஸ் (Oedipus) என்னும் நாடகத்தில் வாழ்க்கையைப் பற்றிய இரங்கற்பாவில் அதற்கான சான்றுகள் உள்ளன. தீவிர கருமறுப்புவாதிகள், பிறப்பு என்பதை ஒரு அறமற்ற செயலாகக் கருதுகின்றனர். அவர்கள் இனப்பெருக்கத் தடையை மக்களுக்கு ஊக்கு விக்கின்றனர். இது சீரான அளவில் மனித இனத்தையும், தவிர்க்கவே முடியாத துன்பங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கையையும் அதன் விளைவுகளையும் சேர்த்து நீக்கிவிடும்.

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த அவஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் (Avengers: Infinity War) திரைப்படத்தில் இந்தச் சிந்தனை எதிரொலிப்பதைக் காணலாம். அழிவை ஏற்படுத்தி சமநிலையை மீட்டெடுப்பதற்கான காரணங்களைத் தன்னுடைய மகளான கமோராவிடம் அத்திரைப்படத்தில் எதிரியாக வரும் தானோஸ் கூறுகிறார்.

“மகளே, இது ஒரு சாதாரணமான கணக்குத் தான். இந்தப் பிரபஞ்சம், வரையறுக்கப்பட்ட அளவிற்குத்தான் அதன் வளங்களைக் கொண்டுள்ளது.… உயிர்கள் தடுக்கப்படாமல் இருந்தால், அந்த உயிர்கள் அழிக்கப்பட்டுவிடும். அதற்கு மாற்றங்கள் தேவை.”

கருமறுப்பியத்தைப் பின்பற்றும் இன்னும் சிலர் தீவிரம் குறைந்த பார்வைகளையே கொண்டிருக்கின்றனர். அனைவரும் இனப் பெருக்கத்தை நிறுத்திக் கொள்வார்கள் என்பது நடைமுறைக்குச் சாத்தியமேயில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருந்துள்ளனர். ஆனால், இம்முடிவை எடுப்பதன் மூலம் மக்கள் தொகை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும். தான் ஈன்றெடுக்கும் குழந்தையே வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்ப்பதன் மூலம்; பெற்றெடுப்பதற்குப் பதிலாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதன் மூலம்; அல்லது அவர்கள் ஒரு பெரிய குடும்பம் வேண்டுமென்று எண்ணினால், ஒரு குழந்தையை மட்டும் பெற்றெடுத்துவிட்டு, நிறைய குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்திய நகரங்களில் வாழும் மக்கள் இதிலிருக்கும் ஒரு சில கருத்துக்களைத்தான் இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பிடத்தக்க அளவில் தங்களுக்குக் குழந்தை வேண்டாம் (Child-free) என்று பலர் தேர்வு செய்தனர். மேற்கூறிய பிரச்சினைகளின் பொருட்டு தங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்றும் அல்லது தாங்கள் பெற்றோர்களாக வேண்டுமென்றால் தத்தெடுத்துக் கொள்வதாகவும் முடிவெடுத்தனர்.

நீலம் சிங்

பதிப்புத்துறையில் வேலை பார்க்கும் 44 வயது நீலம்சிங், குழந்தைகளோடு இருக்கும் அவரது வாழ்க்கையைக் கற்பனைகூட செய்து பார்த்த தில்லை. “குழந்தைப் பருவத்திலிருந்தே, எதற்காக திருமணத்திற்குப் பிறகு கண்டிப்பாகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்? என்ற கேள்வி இருந்தது.” என்று கூறினார். தனக்குக் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்ததில் சுற்றுச்சூழல் பற்றிய கருத்தின் பங்கு மிக முக்கியமானது என்கிறார். “தண்ணீர் பற்றாக்குறை, மாசுபடுதலின் அளவு, இயற்கை வளங்களைச் சூறையாடுதல்… இவை யனைத்தும் எனக்கு முக்கியமாகப்பட்டன. நான் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறேன், வரும் தலை முறையினருக்காகச் சில முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விட்டுச் செல்லும் பொருட்டு, இதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்.”

“எத்தனைக் காரணங்கள் இருந்தாலும் இந்தியாவில் குழந்தை-வேண்டா தம்பதியர்களாக வாழ வேண்டும் என்று முடிவெடுப்பது மிகவும் கடினம். சமூகம், குடும்பம், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணை இவர்களால் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். ஆனாலும் சில தம்பதிகளுக்கு இது அவர்களது முன்னேற்றத்திற்கும் எதிர்கால இலக்குகளை அடைவதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது” என்றார்.

மானாவ்

உடல் நலம் மற்றும் அறிவியல் காப்பீட்டுத் துறையில் வல்லுனரான இவருக்கு 18 வயதிருக்கும் போது, அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்குக் குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்தார். அதன் பின்னர் அவருடைய அந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்கவேயில்லை. அவருக்கு இந்தத் துன்பமான உலகினுள் அந்தக் குழந்தைகளுடைய உடன்பாடில்லாமல் அவர்களை இவ்வுலகிற்குள் கொண்டுவருதற்கு விருப்பமில்லை. மேலும், இந்தப் பூமியின் பாரத்தை மேலும் அதிகமாக்க விரும்பவில்லை.

இன்னுமொரு காரணம், அவருடைய குடும்பத்தில் இருக்கும் அந்த மரபுவழி நோய்ப் பிரச்சினைகளால் அந்தக் குழந்தை பாதிப்புக் குள்ளாகி விடக்கூடாது. “நாம் எல்லோரும் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்; இந்தப் பிரச்சினையால் தான் டெல்லி போன்ற நகரங்களில் வாழும் மக்களின் உளவியல் (மனம்) அதிகம் பாதிக்கப்படுகின்றது.” என்று அவர் எடுத்த இந்த உறுதியான முடிவின் காரணமாக இன்னும் திருமணமாகாதவராக உள்ளார். இதுவரை எந்தத் துணையும் அவருடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் வெளிப்படை யாகவே கூறினார்.

அதிக மக்கள்தொகையின் விளைவு

அதீதமாகப் பெருகிவரும் இந்திய மக்கள் தொகையின் சதவீதத்தையும் அதனால் விளையும் நடைமுறைச் சிக்கல்களையும் நாம் பார்த்துக் கொண்டிருந்தாலும், நாம் தெளிவாகவே கடந்து செல்கிறோம். தற்போதைய நிலவரப்படி இந்திய மக்கள்தொகைப் பெருக்கமானது 1.3 பில்லியன் என இருக்கின்ற காரணத்தினால், உலகின் இரண்டாவது மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ளது. வரும் 2024-ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை எண்ணிக்கையை முறியடித்துவிடுவோம். இதில் ஒரு மனிதன் இல்லாமல் போனால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது?

Environmental Research Letters என்னும் இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில், பல குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு மாற்றாக, ஒரே ஒருகுழந்தையை மட்டும் பெற்றுக்கொள்வதன் மூலம் அந்தப் பெற்றோர்களால், ஒவ்வொரு வருடமும் 58 மெட்ரிக் டன்கள் C02 (கார்பன் டைஆக்ஸைடு) குறைகின்றது. இன்னும் பல பயனுள்ள வழிகளில் ஒருவரின் கார்பன் தடத்தை ஒப்பீட்டளவில் குறைக்க முடியும். வாகனங்கள் இல்லாமல் செல்லும் போது 2.4 மெட்ரிக் டன் மாசையும் மற்றும் உணவுக்குத் தாவரங்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் 0.82 மெட்ரிக் டன்கள் மாசையும் குறைக்க முடியும்.

                என்னதான் நாம் இந்த எண்ணிக்கைகளைப் புறக்கணித் தாலும், அதன் விளைவுகளை நாம் உணர்ந்துகொண்டுதான் வருகிறோம். இன்னும் இரண்டு வருடங்களில் டெல்லி மற்றும் பெங்களுரூ போன்ற நகரங்களில் தண்ணீர் முழுவதுமாக வற்றிவிடும். அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, டெல்லியில் இருக்கும் அதிக மாசுபடுதலினால் ஒவ்வொரு மூன்றாவது குழந்தையும் குணப்படுத்த முடியாத அளவிற்கு நுரையீரல் பாதிப்படைவதாகத் தெரிய வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையால் அவர்களின் தேவையைக் கல்வி நிறுவனங்களால் சமாளிக்க முடியாமல் திணருகின்றனர். அரணாயிருந்த வனப்பகுதிகளைச் சுருக்கிக் கட்டுமானங்களுக்கு வழிவகுத்துவிட்டனர்.

கேரன் டிசோஸா Karen D’Souza

செய்தித்தாள் ஆசிரியரும் எழுத்தாளருமான இவர், குழந்தை வேண்டாமென்று தான் எடுத்த முடிவைப் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார். அவர் கூறியது, “தட்பவெப்ப நிலை மாற்றம், குற்றம் மற்றும் வன்முறை, மாசுபடுதலின் அளவினால் இந்தக் கிரகமே ஒரு பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.” “இந்த உலகத்தினுள் ஒரு குழந்தையைக் கொண்டு வருவதன் மூலம் நான் பொறுப்பே இல்லாதவளாகி விடுகிறேன் என்று நினைக்கிறேன். அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குள்ளாகிவிடும் என்பது மட்டுமல்ல, மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் இந்த பூமிக்கு அவர்கள் மேலும் ஒரு அழுத்தத்தை உண்டாக்குகிறார்கள்.”

வரதன் கோந்விகார் Vardhan Kondvikar

எழுத்தாளரும், ஒரு பருவஇதழின் ஆசிரியரும், சுற்றுலா ஒருங்கிணைப்பாளருமான கோந்விகரிடம், இதே உணர்வுகள் எதிரொலிப்பதைக் காணலாம். “இந்த உலகத்தில் இருந்ததற்காகக் கண்டிப்பாக வருத்தப்படப் போகும் யாரோ ஒருவரை நான் இங்கே அழைத்துவர விரும்பவில்லை. இந்தச் சமூகம் அதற்கு காரணமாக இருக்கலாம் அல்லது இங்கே நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளாக இருக்கலாம்” என்று கூறினார்.

“காற்றும் தண்ணீரும் விஷமாக்கப்பட்ட ஒரு உலகத்தினுள் உங்களுடைய குழந்தையைக் கொண்டு வருவதைப்பற்றி எண்ணிப்பாருங்கள். இப்போதைய நிலையில் இது ஏறத்தாழ அருவருக்கத்தக்க உலகம். இந்தப் பூமியிலிருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினை மக்கள்தொகைப் பெருக்க மாகத்தானிருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் மற்ற அனைத்து வகைப் பிரச்சினைகளும் இதிலிருந்துதான் வளர்கிறது. மிகவும் குறைவாகயிருக்கும் வளங்களின் மீது அழுத்தம் கொடுக்காமல் உங்களால் இன்று உயிர்வாழ முடியாது. இதோடு சேர்த்து இரண்டாவது முக்கியத்துவமிக்க பிரச்சினை என்பது வாழ்க்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளே.”

ஜோ ஜோஸ் Zoe Jose

தகவல்தொடர்பு வளர்ச்சி வல்லுனரான இவர், குழந்தை வேண்டாம் என்று தேர்வு செய்ததற்கான முக்கியமான காரணமே இந்த பாதுகாப்பற்ற உலகம் தான். “ஒரு குழந்தையை இந்த உலகினுள்கொண்டு வரும்பொழுது அவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காமல், அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் சுமைகளையும் கொடுப் பதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று நம்புகிறேன். நம் நாட்டைப் போன்ற மிகவும் மாசடைந்த மற்றும் ஏற்கனவே மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டினுள் அதிகமான குாந்தை களைக் கொண்டு வருவதென்பது நிஜமாகவே தேவையற்றது என்று கருதுகிறேன். இந்த உலகத்திற்கு நான் சிறந்த முறையில் பங்காற்ற வேண்டுமென்றால், நான் இனியும் மக்களை இதனுள் கொண்டுவந்து இருக்கும் பிரச்சினைகளை மேலும் மோசமாக்க வேண்டாம் என்று நம்புகின்றேன்.”

தத்தெடுப்பதைப் பற்றி?

இந்தக் கருத்துகளோடு இருந்தும் பெற்றோர்களாக வேண்டும் என்று நினைப்பவர்கள், தத்தெடுப்பதைத்தான் முக்கியமான வழியாக கருது கிறார்கள். “இங்கு ஏராளமான குழந்தைகளுக்கு இன்னும் அன்பு தேவைப்படுகிற பொழுது, நானே பெற்றெடுக்கும் குழந்தைதான் எனக்குத் தேவை என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டால் என்ன?” என்கிறார் கோந்விகார்.

“எப்பொழுதாவது நான் குழந்தை வேண்டுமென்று முடிவெடுத்தால், உறுதியாக அது தத்தெடுப்பதன் மூலம்தான். ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுப்பதைவிட வீடில்லாமலும் ஆதரவில்லாமலும் இருக்கும் கோடிக்கணக்கான குழந்தைகள்தான் குடும்பமாக்கிக் கொள்வதற்குத் தகுதியானவர்கள்”, என்று ஜோஸ் ஒப்புக் கொள்கிறார்.

World Children Welfare Trust India, என்ற பொதுத்தொண்டு நிறுவனத்தில் இருக்கும் சுலோச்சனா கல்ரோ (Sulochana Kalro),

“தங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகள்தான் அதிக அளவில் எங்கள் அமைப்பிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்கிறார்கள்,” “என்னுடைய அனுபவத்தில், இங்கே குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெற்றோர்களின் காரணங்களுள் இதுவரை சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும் யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதில் பலருக்கு, அவர்களின் உணர்வுகள்தான் முக்கிய பங்காற்றுகிறது,” என்று கூறுகிறார்.

இந்திய மக்கள் “குழந்தை வேண்டும்” என்று எடுக்கும் முடிவில் உணர்வுகள்தான் மிக முக்கிய இடத்தில் உள்ளன. இன்னும் பலர் சமூக, பண்பாட்டு அழுத்தங்களுக்கு உள்ளாகித் திணருகின்றனர். அந்தப் பெரும்பான்மை இந்தியர்களுக்கு மாற்றாகச் சிலருக்கு இந்தச் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையானது “தங்களுக்கு குழந்தை வேண்டாம்” என்று முடிவெடுக்கும் ஊக்கத்தை அளிக்கிறது.

By Reem Khokhar , July 23. 2018 Scroll.in

தமிழில்: பேராசிரியர் கிரண்குமார்

Pin It