எழுத்தாளர் இத்ரீஸ் யாகூப் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ‘பிரார்த்தனைகள் தோற்பதில்லை’ வாசித்தேன். அருமையான அட்டைப் படம். வாசகசாலை பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.

pirathanaigal thorpathilaiஅந்தச் சிறுவனின் கண்களில் தெரியும் நம்பிக்கை ஒளி, ஒரு பண்டிகை நாளின் மகிழ்ச்சி. தடுமாறும் இவ்வாழ்வில், ஒரு ஆதரவுக் கரம். பிரார்த்தனைகள் தோற்பதில்லை என்பது எனது தாரக மந்திரம்.

இது எழுத்தாளரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் பத்து சிறுகதைகள். சுய அனுபவங்களுடன் புனைவு கலந்த கதைகள்.

அந்த போட்டோ கதை ஜீரணிக்க முடியாத யதார்த்தம். ஓடாது உழைத்தவனை, அவன் இறந்தவுடன், மறந்து போகும் உறவுகள். மகன் பாசத்தோடு தேடும் போது, ஒரு போட்டோவும் கிடைக்காதது எவ்வளவு கொடுமை.

நன்னயம் செய்து விடல் கதை அலுவலகத்தில் நடக்கும் அரசியலைப் பேசுகிறது. ஆசிரியரின் சொந்த அனுபவங்களே கதையாகியிருக்கிறது. எனது வெளிநாட்டு வேலை அனுபவத்திலும், இது போன்ற இன வெறியர்களை எதிர் கொண்டிருக்கிறேன். சற்றே நீண்ட கதை. முடிவில் ஜமால் மனம் மாறி அனைவரையும் வரவேற்பது சிறப்பு.

தொகுப்பின் தலைப்புக் கதையான, பிரார்த்தனைகள் தோற்றதில்லை கதை நெகிழ்வான ஒன்று. குழந்தைகள் நமது தவறுகளை சுட்டிக் காட்டும் போது, அதுவும் சிறியவர்களாய் இருப்பின், நிச்சயமாக நமக்கு கோபம் வராது. பதிலுக்கு அவர்களை உச்சிமோந்து கொஞ்சத்தான் தோணும். அதுதான் இக்கதையில் நடக்கிறது. அருமை.

உண்ணுங்கள் பருகுங்கள் கதை நமது எல்லோரின் வாழ்விலும் நடக்கும் ஒன்று. சாதாரணமான விஷயமாக இருந்தாலும், பசி வந்தால் பத்தும் பறந்து போகுமே. அதுவும் துக்கம் விசாரிக்கச் சென்ற வீட்டில் சாப்பாடு கேட்பதைப் போன்ற தர்மசங்கடமான நிலை வேறெதுவுமில்லை. கடைசியாக செய்யது புரிந்து கொண்டதில், அமீரோடு வாசகனுக்கும் மகிழ்ச்சி.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று கதை, பெண்களே எவ்வாறு பெண்களுக்கு எதிரான வகையில் செயல்படுகிறார்கள் என்பதை விவரிக்கிறது. சுயநலத்துடன் வாழ்பவர்களில் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதைச் சொல்கிறது. இஸ்லாமிய பெண்கள் வெளியே சென்று வருவதில் இருக்கும் சங்கடங்களைச் சொல்கிறது. அருமை.

அந்த நேர நியாயங்கள் கதை, விடுமுறையில் ஊருக்கு வந்து, பால்ய கால நண்பர்களை சந்திக்கும் கதை. கடைசி வரிகள் எனக்கு, அமெரிக்காவில் எனது மருத்துவமனை அனுபவத்தை ஞாபகப் படுத்தியது. ஆசிரியர் ஜெகனின் அம்மாவைப் பார்க்காமல் திரும்பியது தவறொன்றுமில்லை. ஆனால் அவர் இறந்த செய்தி கேட்டதும், அதுவே குற்ற உணர்ச்சிக்கு தள்ளுகிறது. தலைப்பு சொல்வது போல் , அந்த நேர நியாயங்களில் தவறொன்றுமில்லை.

யாகூபு வீடு இத்தொகுப்பின் மிகச் சிறந்த கதை. சற்றே நீண்ட கதை. இருபது பக்கங்களுக்கு மேல் நீண்டிருக்கிறது.

வெளிநாடுகளில் பொருளீட்டுவதற்காகச் செல்லும் எல்லோருமே ஒரு யாகூபு தான். வசதியான வாழ்க்கையுடன் பொருளீட்டும் வாய்ப்பு எல்லொருக்கும் கிடைப்பதில்லை. கிடைப்பது பெரும்பாலும் ஆடு ஜீவிதமே. வீடு பற்றிய வர்ணனைகள் அருமை. நகையைக் கூட மீட்ட முடியாமல், வீடிருந்த நிலத்தை விற்க அனுமதிக்கும், ஒரு தோல்வியுற்றவனாக யாகூப். அவன் தனது வீட்டைப் பார்க்கச் செல்லும் காட்சி, நிலத்தை விற்ற பின்னர், பாழைடந்த எனது வீட்டைப் பார்க்க நேர்ந்த எனது அனுபவத்தை ஞாபகப் படுத்தியது. ஊராரின் பேச்சுகளும், தனிமையில் அவன் படும் வேதனைகளையும், நானும் அனுபவித்திருக்கிறேன். உணர்வு பூர்வமான கதை. சிறப்பு.

அங்குமிங்கும் சில பக்கங்கள் கதை, தமையன் தலையெடுத்து, தனது குடும்பத்தைக் காப்பாற்றும் கதை.

வாழ்வுச்சாலை , வெளிநாட்டில் ஆபிஸ் பாயாக வேலை செய்யும் ஒருவரின் சிறிய கதை.

பதுரு சல்மாவின் பக்கட்டு, வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் அனுப்பி வைத்த பதினைந்தாயிரத்தை சல்மா செலவு செய்யும் கதை. பக்கட்டு என்பது மணி பர்ஸிற்கு மிகவும் புதிய வார்த்தை. தனக்குத் தட்டுப்பாடு இருப்பினும் அடுத்தவருக்கு உதவும் சல்மாவின் மனசுதான் கடவுள்.

இஸ்லாமிய வாழ்வியலை பிரதிபலிக்கும் கதைகள். வெளிநாடுகளில் பொருளீட்டுவதற்காகச் செல்பவர்களின் கஷ்டங்களை அனைத்து கதைகளும் விவரிக்கின்றன.

சில நீண்ட கதைகளில் முக்கியமான விஷயங்கள் சீக்கிரம் முடிந்து விட, தேவையற்ற விவரங்கள் பல பக்கங்களுக்கு நீள்கின்றன. இதையெல்லாம் அனுபவித்திருப்பதால் இக்கதைகள் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.

சிறப்பான வாசிப்பு அனுபவம்.

- கண்ணன் விஸ்வகாந்தி