1
கவிதை, புனைகதை, கட்டுரை, கலை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல தடங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர் எழுத்தாளர் தேன்மொழி. கவிதை, புனைகதை ஆகிய இரு இலக்கிய வகைமைகளுக்கும் வேறுபாட்டை உருவாக்குவதில் மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வேறுபாட்டை அழித்தொழிக்கும் வேலையைத் தேன்மொழி தொடர்ச்சியாகத் தம் புனைவுகளினூடாகச் செய்து வருகிறார். இவர், ‘கூனல் பிறை’, ‘நெற்குஞ்சம்’, ‘பேச்சி மரம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து ‘அணுக்கி’ (2022) என்றொரு நாவல் எழுதியுள்ளார். இந்தப் புனைவிலும் இத்தன்மையைக் காணலாம். ‘அணுக்கி’ என்ற சொல் கலிங்கத்துப் பரணியில்தான் முதன்முதலில் இடம்பெற்றுள்ளதாகத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. ‘அணுக்கி மாரு மநேக ரிருக்கவே’ (308) என்று ஜெயங்கொண்டார் எழுதியிருக்கிறார். அணுக்கியர் என்பதற்கு, ‘அருகிலிருந்து குற்றேவல் செய்யும் அழகிய பெண்கள்’ என்று உரை எழுதியிருக்கின்றனர். இதன் ஆண்பாலாக ‘அணுக்கன்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தஞ்சை பெரிய கோயிலின் வடமேற்குப் பகுதியிலுள்ள வாயிலுக்கு ‘அணுக்கன் திருவாயில்’ என்றும் திருவாரூர் தியாகராசர் கோயிலின் கீழைக் கோபுர வாயிலுக்கு ‘அணுக்கி வாயில்’ என்றும் வழங்கப்படுகிறது. நவீன இலக்கியங்களில் ‘அணுக்கம்’ என்ற சொல் இயல்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. ‘அணுக்கி’ என்ற சொல்லுக்குப் பின்னே பெரும் வரலாற்றுத் தரவுகள் மறைந்துள்ளன. அதனைப் பின்தொடர்வது இக்கட்டுரையின் நோக்கமன்று.
தேன்மொழி ஒரு வரலாற்று ஆய்வாளர். கோயில் வரலாறு தொடர்பாக இவர் எழுதியுள்ள நூல்களே இதற்குச் சான்று. இந்நாவலும் பெரும் வரலாற்றுத் தரவுகளுடன் எழுதப்பட்டுள்ளது. மேலும், தொன்மத்தையும் சமகால வரலாற்றையும் ஒரு புள்ளியில் இணைத்திருக்கிறார். திருவாரூரின் ஒட்டுமொத்த வரலாற்றையும் இந்நாவலில் அடைத்துள்ளார். தேன்மொழிக்கென்று ஓர் அரசியல் பார்வை இருக்கிறது. அந்தப் பார்வையை இப்புனைவில் ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் மறைக்கப்பட்ட வரலாற்றுடன் பெண்ணியத்தையும் இணைத்துப் பேசியுள்ளார். இந்நாவலில் இடம்பெற்றுள்ள தொன்மம் சார்ந்த கதையாடல்கள் குறித்து விரிவாகப் பேசுவதற்கான வெளியைப் பிரதி கொண்டிருக்கிறது. மங்களமாத்தா, முல்லை, சித்திரப்பாவை ஆகிய மூன்று பெண்களின் கதைதான் ‘அணுக்கி’ என்றும் மிகச் சுருக்கமாகச் சொல்லிவிட முடியும். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இம்மூவரும் இச்சமூகத்தில் எத்தகைய ஊடாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று தனித்தனியே உரையாடுவதற்கான களத்தையும் நாவல் கொண்டிருக்கிறது. இம்மூவரின் கதையும் புனைவின் இறுதியில் ஓரிழையில் இணைந்திருக்கின்றன. இந்நாவலின் கதைநிலம், பிலாவடிமூலை என்ற கிராமம். திருவாரூரை ஒட்டிய பகுதி. திருவாரூர் ஒரு தொன்ம தலம். தேன்மொழி, அதில் ஒரு தொன்மத்தை எடுத்துக்கொண்டு அதனை நிகழ்காலத்திற்குப் பொருத்தி, புனைவாக எழுதியிருக்கிறார் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது. இந்தத் தொன்மக் கதையினூடாகவும் நாவலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் உள்வாங்கிக்கொள்ள இயலும்.
சோழநாட்டின் ஒரு பகுதி திருவாரூர். இந்தப் பகுதியை ஒரு காலத்தில் மனுநீதிசோழன் ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது. இவனைப் புராணகாலச் சோழன் என்றே அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் இச்சோழனைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள தொன்மக்கதை இக்கால ஆட்சியாளர்களுக்குச் சவால் விடக் கூடியது; சமகால அரசியலுடன் பொருத்தி விவாதிக்கத் தகுந்தது. நீதி தவறாது ஆட்சி செய்தவன் மனுநீதிசோழன். தன் நாட்டிலுள்ள எல்லா உயிர்களையும் சமமாகக் கருதியவன். இறை அருளால் பிறந்த தன் மகனுக்கு, திருவாரூர் கோயிலில் உறையும் தெய்வத்தின் பெயராகிய வீதிவிடங்கன் என்ற பெயரைச் சூட்டுகிறான். ஆராய்ச்சி மணியை அரண்மனை முற்றத்தில் கட்டி, மன்னனுக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கிறான். வீதிவிடங்கனும் மனுநீதி சோழனின் மனம் அறிந்து நடந்து கொள்கிறான். ஒருநாள் வீதிவிடங்கன் ஓட்டிச்சென்ற தேரின் சக்கரத்தில் ஒரு பசுங்கன்று தவறுதலாக மாட்டிக்கொண்டு இறந்து விடுகிறது. பசுவிற்கு நீதி கிடைக்கவும் கன்றை இழந்த தாய்ப்பசுவின் துயரத்தை ஒரு தந்தையாகத் தான் அனுபவிக்கவும் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொல்கிறான் மனுநீதிசோழன். இறை அருளால் வீதிவிடங்கன் மீண்டும் உயிர் பெறுகிறான். இது தொன்மக் கதை. இன்றும் மனுநீதிசோழன் நினைவு கூரப்படுவதற்கு அவன் செய்த இச்செயல்தான் காரணம்.
தேன்மொழி மனுநீதிசோழன் தொன்மத்தை நிகழ்காலத்துடன் பொருத்தி உரையாடியிருக்கிறார். இந்நாவலில் வரும் முல்லை, கணவனை இழந்தவள். இவளுடைய ஒரே மகன் ஆதன். நல்லவன். பன்னிரண்டாம் வகுப்பின் நிறைவில் அவனைவிட வயதில் மூத்த சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பெண்ணின் வன்புணர்வில் பங்கெடுத்து விடுகிறான். அவனது நண்பர்கள் யார்? ஆதன் எப்படி அவர்களுடன் சேர்ந்தான்? இதுபோன்ற இழிவான செயலை அவன் எப்படி செய்யத் துணிந்தான் என்பது போன்ற கேள்விகளுக்கு நாவல் போதிய தரவுகளைத் தரவில்லை. வாசகர்களின் அனுமானத்திற்கே விட்டுவிடுகிறது. இச்செயலுக்கு முன்பு ஆதன் சிறு தவறையும் செய்ததாகப் பிரதி நினைவுகூரவில்லை. இனியன், மகிழ்நன் போன்று ஆதனின் கதாபாத்திரத்திற்குப் பிரதி முக்கியத்துவம் தரவில்லை. இந்த இடத்தில் ஆதனை வீதிவிடங்கனாகவும் முல்லையை மனுநீதிசோழனாகவும் பிரதி கட்டமைக்கிறது. இந்தியாவை உலுக்கிய நிர்பயாவின் வன்புணர்வும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அவளது மரணமும்தான் தேன்மொழி இந்தத் தொன்மத்தைக் கையில் எடுக்க காரணமாக இருந்திருக்கிறது. நிர்பயாவைப் போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரையுமே தேன்மொழி இப்புனைவுக்குள் நினைவு கூர்ந்திருக்கிறார். வீதிவிடங்கனுக்குத் தெரியாமல்தான் கன்றின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. ஆதனும் தெரியாமல் செய்துவிட்டதாகத்தான் சொல்கிறான். ஆனாலும் தான் செய்தது தவறு என்ற புரிதல் வீதிவிடங்கனைப் போன்று ஆதனுக்கும் இருக்கிறது. அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள ஆதனும் தயாராகவே இருக்கிறான். பதினெட்டு வயது பூர்த்தியாகாத ஆதனுக்குச் சார்பாகச் சட்டம் இருக்கிறது. சிறு தண்டனையுடன் அவன் தப்பித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. இங்குதான் முல்லை மனுநீதிசோழனைப் போன்று செயல்படுகிறாள்.
தேன்மொழி, மனுநீதிசோழனின் நிகழ்கால வடிவமாக முல்லையை நிறுத்துகிறார். முல்லை, பி.ஏ. படித்தவள். அறம் அறிந்தவள். முல்லைக்குத் தன்னுடைய மகனை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவு நொடிந்து வீழ்ந்ததை அவள் வருத்தத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். மகனை நன்றாக வளர்க்கவில்லை என்ற குற்றவுணர்வு முல்லையைத் துன்புறுத்துகிறது. ஒரு பெண்ணாக இன்னொரு பெண்ணின் துயரத்தை நினைத்துப் பார்க்கிறாள். ஆதனது இந்த இழிசெயலுக்குத் தானும் பொறுப்பேற்பதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறாள். இந்த இடத்தில் மனுநீதிசோழனும் ஏற்கெனவே அப்படித்தான் இருந்திருக்கிறான் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். மகனைத் தண்டிக்காவிட்டால் நான் நீதி தவறிய மன்னனாவேன். இந்த அவப்பெயருடன் நான் உயிர்வாழ விரும்பவில்லை. என் உயிரை நானே மாய்த்துக் கொள்வேன் என்று அமைச்சர்கள் மத்தியில் ஆவேசமாகப் பேசுகிறான். அமைச்சர்கள் வீதிவிடங்கனைக் கொலை செய்ய மறுக்கிறார்கள். ஏனெனில் அவன் பக்கமும் நியாயம் இருக்கிறது. மன்னன் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இந்த முடிவை எடுத்திருக்கிறான் என்பது அமைச்சர்களுக்குப் புரிகிறது. அதனால்தான் நானே அவனைக் கொல்வேன் என்று மனுநீதிசோழன் தேரேறுகிறான்.
முல்லை ஆதனுடன் தானும் இறந்துவிடத் தீர்மானிக்கிறாள். ஆதன் தன் தவறுக்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறான். ஆனால் முல்லை இறப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை. இந்த இடத்தில் நாவல் வாசிப்பவர்களையும் பெரும் மனத்துயருக்குள் ஆழ்த்துகிறது. தம் பிள்ளைகளின் குற்றங்களைப் பூசிமெழுகும் பெற்றோரின் மனதை இப்பகுதி நிச்சயம் அசைத்துப் பார்க்கும். தவறு செய்து மாட்டிக்கொண்ட தம் பிள்ளைகளைக் கோடிகள் கொடுத்துக் காப்பாற்றிக் கொள்ளும் பெரிய மனிதர்களுக்கு மத்தியில்தான் முல்லை போன்றவர்களும் வாழ்கிறார்கள். பதினைந்து வயதே நிரம்பிய அந்தப் பெண்ணுக்குச் செய்த கொடுமைக்கு ஆதன் இறப்பதுதான் சரி என்பது முல்லையின் அறம். முல்லையின் அறத்திற்கு அவளது நிலம் காரணமாக முன்னிறுத்தப்படுகிறது. தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன்மிண்டர், நமிநந்தியடிகள் போன்ற நாயன்மார்கள் உருவான மண் திருவாரூர். பெரிய புராணத்தின் முதல் நூலான ‘திருத்தொண்டர் தொகை’ முகிழ்த்த மண் திருவாரூர். தேவாரம் பாடிய சுந்தரரை ஈன்ற சடையனாரும் இசைஞானியாரும் பிறந்த மண் திருவாரூர். தொன்மத்தைப் போற்றும் அதே நேரத்தில், அந்தத் தொன்மக் கதையாடல்கள்மீதான தனது விமர்சனத்தையும் சேர்த்துதான் தேன்மொழி பேசியிருக்கிறார்.
ஓர் ஆண் செய்யும் நல்லதிற்கும் அல்லதிற்கும் அந்த ஆணின் அம்மாவிற்கும் பங்கிருக்கிறது என்பதை முல்லை கதாபாத்திரத்தின் மூலமாக வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் தேன்மொழி. இனியனும் மகிழ்நனும் நல்லவர்களாக இருப்பதற்கு மங்களமாத்தா காரணமாக இருக்கிறாள். ஆதனை வளர்த்ததில் முல்லை ஏதோவொரு இடத்தில் பிசகியிருக்கிறாள். அதற்குத் தானும் பொறுப்பேற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்பது அவளது பார்வை. தம் மகன்களின் குற்றச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்காத முல்லை போன்றவர்கள்தாம் இக்காலத்தில் தேவை. பிள்ளைகளே ஆனாலும் தவறு செய்தால் தண்டிக்கும் மனப்பான்மைதான் நம் மண்ணின் ஆதி அறம் என்பதை இந்நாவல் நினைவூட்டுகிறது.
2
அணுக்கி நாவலில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் அனைவரும் தேன்மொழியின் நகல்கள்தாம். அந்தத் தரத்திலேயே ஒவ்வொரு கதாபாத்திரமும் படைக்கப்பட்டிருக்கிறது. மகிழ்நன் வரலாற்று ஆய்வாளன். இந்தக் கதாபாத்திரத்தைக் கொண்டு தேன்மொழி தன்னையே எழுதிப் பார்த்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. பிரதியாசிரியருக்கு இருக்கும் வரலாற்று அறிவு பல இடங்களில் புனைவுத் தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. திருவாரூர் தலவரலாற்றை வாசித்தது போன்ற அனுபவத்தை நாவல் பல இடங்களில் ஏற்படுத்துகிறது. இனியனும் தேன்மொழியின் இன்னொரு வடிவம்தான். தேன்மொழிக்கு இச்சமூகத்தின்மீதும் ஒடுக்கப்பட்ட அப்பகுதி மக்கள்மீதும் இருக்கும் அக்கறையின் புறவடிவம்தான் இனியன் என்றும் புரிந்துகொள்ளலாம்.
பெண்ணுடல் சார்ந்த இச்சமூகத்தின் பார்வை, பெண்கள் எதிர்கொள்ளும் உடல் சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றைச் சித்திரப்பாவை கதாபாத்திரத்தின் மூலமாகப் புனைவாசிரியர் பேசியிருக்கிறார். புறவெளியிலும் அகவெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சினைகளையும் பாவை பேசுகிறாள். பொதுவாகப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரசவத்தின் வலியைப் பலரது புனைவுகள் பதிவு செய்திருக்கின்றன. இந்நாவல், குறை பிரசவத்தின் வலியையும் அந்த வலியினூடாக அப்பெண் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மிகத் துல்லியமாகப் பேசியிருக்கிறது. தவிர, பெண்களின் தன்னியல் பொருளாதாரத்தின் தேவை குறித்தும் பாவை கதாபாத்திரம் தீவிரமாக உரையாடியிருக்கிறது. பெண்களால் ஆண்கள் துணையில்லாமலும் இச்சமூகத்தை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் கதாபாத்திரம் மங்களமாத்தா. இதுவொரு மெருகூட்டப்பட்ட கதாபாத்திரம். முல்லை, பாவை ஆகிய இரு பெண்களின் முன்மாதிரி மங்களமாத்தா. இந்தக் கதாபாத்திரத்தின்மீது ஏற்றப்பட்ட மிகை யதார்த்தத் தன்மை இக்கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமையவில்லை. ‘ஆத்தா நீர் இறைக்கும் வேகத்தைப் பார்த்து காற்று சோர்வடைந்து போகும்’ என்ற பாணியில் எழுதப்பட்டுள்ள வாக்கியங்கள் அக்கதாபாத்திரத்திற்குக் கூடுதல் சுமைதான். ஒரு சமூகத்தின் அசல் வாழ்க்கையைச் சொல்ல நினைக்கும் பிரதிக்கு இதுபோன்ற உயர்வு நவிற்சியான சொற்சேர்க்கைகள் பலவீனமாக அமைந்து விடவும் வாய்ப்பிருக்கிறது.
மங்களமாத்தாதான் இந்நாவலின் மையக் கதாபாத்திரம். இவளைச் சுற்றித்தான் பிற கதாபாத்திரங்கள் இயங்குகின்றன. தன் பேரப்பிள்ளைகளான இனியனும் மகிழ்நனும் ஆத்தாவின் நிழலில்தான் வளர்கிறார்கள். ஏனெனில் மங்களமாத்தாவின் மருமகளும் இறந்து விட்டாள். மங்களமாத்தா குறித்து தேன்மொழி எழுதும்போது, ஈரடுக்கு மரியாதையைப் பயன்படுத்துகிறார். ‘புல்லறுப்பார்கள்’, ‘வெட்டுவார்கள்’, ‘கொண்டிருந்தார்கள்’ என்று விகுதிமேல் விகுதியாக எழுதியிருக்கிறார். ‘அர்’ என்ற பலர்பால் விகுதியை மரியாதையின் பொருட்டு ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பயன்படுத்தும் வழக்கம் தொடக்கக் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கிறது. இதற்குமேல் ‘கள்’ என்ற பன்மை விகுதியையும் பயன்படுத்தியிருக்கிறார். நவீன இலக்கியப் பிரதிக்கு இந்த ஈரடுக்கு விகுதிகள் அந்நியமாகத் தெரிகின்றன. அடுத்துப் பிரதியில் கவனத்தை ஈர்த்த ஒன்று, மங்களமாத்தா, முல்லை, ஆதிரை, கதைசொல்லி தாத்தாவின் மருமகள் ஆகிய நான்கு பெண்களில் யாருக்கும் கணவர்கள் உயிருடன் இல்லை. ஆண் எனும் மையத்தைத் தகர்த்துப் பெண்சூழ் சமூகத்தைத் தனது நாவலில் தேன்மொழி உருவாக்க நினைத்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பாவை மட்டும்தான் கணவனுடன் வாழ்கிறாள். பெண்கள் தனித்தியங்க முடியும் என்ற நம்பிக்கையைப் புனைவு உருவாக்க முயன்றிருக்கிறது. ஆண்கள் இருந்தாலுமே பெரும்பாலான குடும்பங்கள் பெண்களின் உழைப்பில்தான் இயங்குகிறது என்பதே கள யதார்த்தம். முல்லையின் நினைவில் அவ்வப்போது அவள் கணவன் இளமாறன் வந்து போகிறான். மங்களமாத்தாவுக்குக் கணவன் எனும் உறவு எவ்விதத் தாக்கத்தையும் அவள் வாழ்க்கையில் ஏற்படுத்தவில்லை. அதனால்தான் அந்தப் பாத்திரம் இந்நாவலில் இவ்வளவு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
அணுக்கி நாவலைத் தலித் இலக்கியத்தின் இரண்டாம் அலை என்கிறார் து.ரவிக்குமார். துயரங்களைப் பேசுவதிலிருந்து அந்தத் துயரங்களிலிருந்து வெளியேறுவதற்கான வழியை இந்நாவல் கண்டடைந்திருக்கிறது. வாசிப்பவரின் கழிவிரக்கத்தைக் கோராமல் எழுதுவது தற்காலத்தில் அதிகரித்திருக்கிறது. அவ்வகையில் தலித் இலக்கியத்தின் காலாவதியான தன்மைகளை வைத்துக்கொண்டு இந்தப் பிரதியை அளவிட முடியாது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அக்காலத்தில் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் அதன் தொடர்ச்சியையும் நாவல் சில தரவுகளுடன் கவனப்படுத்தியிருக்கிறது. வரலாற்றின்மீது மறுவாசிப்பினை நிகழ்த்த வேண்டும்; அந்த வரலாற்றில் எளிய மக்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் நாவல் முன்வைத்திருக்கிறது. பெண்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் சுற்றித் திரண்டிருக்கும் எல்லா பிரச்சினைகளையும் ஒரே பிரதிக்குள் வைத்து உரையாடுவது சாத்தியமில்லாதது. தேன்மொழி இந்நாவலில் அதனைத்தான் செய்திருக்கிறார். நாவல் இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் நாவல் அவ்வளவு களங்களைத் தொட்டிருக்கிறது. ‘அணுக்கி’ தலித்திய பிரதியா, பெண்ணிய பிரதியா என்பதில் பிரச்சினை இல்லை. ஏனெனில், இந்நாவலை இரண்டுமாகவும் வாசிக்கலாம். நாவல் இதனைத் தாண்டியும் தன் எல்லையை விரித்திருக்கிறது. திருவாரூர் ஆன்மிகம், திராவிடம், பொதுவுடைமை, முதலாளித்துவம் ஆகிய எல்லாம் கலந்த மண். இவை எல்லாவற்றையுமே புனைவு பேச முயன்றிருக்கிறது. அதனால்தான் பிரதிக்குள் வரலாறும் புனைவுத்தன்மையும் ஒன்றுக்குள் ஒன்று மயங்கிக் கிடக்கின்றன.
நாவலின் சில அத்தியாயங்கள் யாருடைய கூற்றில் சொல்லப்படுகிறது என்பதில் தெளிவில்லை. ஓரிடத்தில், ‘மகனே நீ எனக்கு அளித்த பெயர் சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்த கொலைகாரனின் தாய்’ என்கிறாள் முல்லை. ஆனால், அவளே ‘அந்தப் பொண்ணு எப்புடி மாமா இருக்கு?’ என்று சீனிவாசனிடம் கேட்கிறாள். புனைவைப் பொருத்தவரை அந்தப் பெண் சாகவில்லை. திருநீலகண்ட யாழ்ப்பாணரை இலங்கையைச் சேர்ந்தவர் என்று எழுதியிருக்கிறார். அவர் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர். புனைவு எந்தக் காலகட்டத்தைத் தம் கதைக்கான காலமாக எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதிலும் குழப்பம் இருக்கிறது. புனைவில் ஆங்காங்கே கிடைக்கும் காலம் சார்ந்த தரவுகள் ஒன்றுக்கொன்று பொருந்திப் போகவில்லை.
தேன்மொழி இந்நாவலில் ஏராளமான தொன்மங்களைத் தொட்டிருக்கிறார். அதில் மனுநீதிசோழன், காரைக்காலம்மையார் ஆகிய இரு தொன்மங்கள் குறித்துதான் விரிவாக எழுதியிருக்கிறார். தொன்மங்களுக்குப் பின்னே மறைந்து கிடக்கும் வரலாற்றுத் தரவுகள் சுவாரசியமானவை. அப்படியொரு தொன்மத்தை இந்நாவல் நிகழ்காலத்துடன் பொருத்தி மீள் வாசிப்புச் செய்திருக்கிறது. துண்டுத் துண்டாக நிறைய கதைகள் புனைவுக்குள் ஊடாடினாலும் இந்தக் கதைதான் நாவலின் மையமாகச் சூல் கொண்டிருக்கிறது. மூன்று பெண்களில் முல்லையே எனக்குத் தனித்துத் தெரிகிறாள். நாவல் பன்முக வாசிப்பைக் கோருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒவ்வொருவரும் அவருக்குத் தேவையான கதைகளை எடுத்துக் கொண்டு உரையாடலாம். அதற்கான வெளியையும் அணுக்கி கொண்டிருக்கிறது. அதுதான் இந்நாவலின் சிறப்பும்கூட.
அணுக்கி (நாவல்) | தேன்மொழி | வெளியீடு: மணற்கேணி | விலை ரூ.200
- சுப்பிரமணி இரமேஷ், தமிழ் உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி. சென்னை.