கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

‘கலியன்’ எனும் இப்பெயர், பெரும்பாலும் உழைக்கும் மக்கள், தொடக்கத்தில் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு சூட்டியப் பெயர். இது ‘வைணவக் கடவுள்’ திருமாலுக்குரிய பெயர்களுள் ஒன்று எனவும் தெரிய வருகிறது.

‘திருமங்கையாழ்வார்’ திருமாலை நோக்கி பாடியுள்ள பின்வரும் ‘பெரிய திருமொழிப் பாடல்’ வரிகள் இதனை உறுதி செய்கிறது.

"நெடியானே! கடியார் ‘கலி’ நம்பி
நின்னையே நினைந்து இங்கு இருப்பேனே".

‘கலியுக கண்ணன்’,
‘கலியுக வரதன்’

என விளிப்பதெல்லாம் இதடிப்படையில்தான்.

‘கலியன்’ எனும் இப்பெயர் பெரும்பாலும் உழைக்கும் மக்களிடையே புழக்கத்திற்கு வந்தபின்னர், மற்ற வர்க்கத்தினர் ‘பெருமாள்’ என்ற பின்னொட்டை சேர்த்து தங்கள் சமூகத்தில் ‘கலியபெருமாள்’ என பெயரிட்டிருக்கலாம்.

‘அரியலூர்’ மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ‘திருமால்’ கோவிலுக்கு ‘கலியபெருமாள்’ கோவில் என்பதை, இந்த பின்னணியைக் கொண்டு சிந்தித்தால் உணரலாம். இவை இறைத் தொடர்புள்ள பெயர்கள் என்பதால் அனைவரிடமும் இப்பெயர்கள் முன்னர் புழக்கத்திலிருந்தது. இப்போது ‘கலியன்’ என்ற பெயர் முற்றிலுமில்லை.

‘கலியப்பெருமாள்’ அரிதாகிவிட்டார். ‘கலியன்’ என்ற இந்த பெயருக்கு பின் ஆழமான வரலாறு உள்ளது. ‘கலியன்’ என்னும் இப்பெயர், ‘ஆசீவக மத’ தோற்றுனர்களில் முதன்மையானவரான ‘மற்கலி’ என்பவரின் இயற் பெயராகும் என்றும், மற்கலி ‘கலிவாகு’ எனும் அரச மரபிற் பிறந்தவர் என்பதால் ‘கலியன்’ என்பது காரணப் பெயராகவும் இவருக்கு அமைந்தது என ‘பண்டிதர் அயோத்திதாசர்’ கூறுவதாக, பேராசிரியர். க.நெடுஞ்செழியனார் குறிப்பிடுகிறார்.

பழங்காலத்தில் ‘கலிவாகு’ என்ற மன்னன் தமிழகத்தில் ஆட்சிசெய்த வரலாற்றை நாம் படித்துள்ளோம். இந்த பின்புலத்தில்தான் ‘கலியுகம்’ என்ற சொல்லாடல் வந்துள்ளதாகத் தெரியவருகிறது. ‘கி.மு.,கி.பி’ என்ற தொடர் ஆண்டு முறையைப் போன்று பண்டைத் தமிழரும், தொடர் ஆண்டு முறையை கடைப்பிடித்துள்ளனர்.

‘கலிவாகு’ என்ற அரசமரபு சொல்லையும் ஆசீவக மத அறிஞர் ‘கலியன்’ என்ற பெயர்களின் அடிப்படையில் பண்டைத் தமிழர் நடைமுறைப்படுத்தியதொடர் ஆண்டுக்கு ‘கலியாண்டு’ என பெயரிட்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. இக் கலியாண்டை அதன் தொடக்கத்தைக் கொண்டு ‘கலியுகம்’ எனவும் அழைத்துள்ளனர்.

‘கலியாண்டு’ எனும் இத் தொடர் ஆண்டு முறையை ‘கிறித்துவ ஊழியின்’ அடிப்படையில் அளவிட்டால் கலியாண்டு ‘கி.மு. 3102’ இல் தொடங்கியதாகும். ‘கலி’ என்பது ‘கலித்தல்’ என்ற சொல்லிருந்து வந்துள்ளது.

‘கலித்தல்’ என்ற தமிழ்ச் சொல்லிற்கு, மகிழ்ச்சி; ஆரவாரம்; மனச்செருக்கு எனப்பல பொருள்கள் உள்ளன. மகிழ்ச்சி; ஆரவாரம் என்பனவற்றை, தலைவி கூற்றாக அமைந்துள்ள ‘'குறுந்தொகைப் பாடல்'‘(223) "பேரூர் கொண்ட ‘ஆர்கலி’ விழவில் ...." உணர்த்துகிறது.

பெரிய ஊரில் உள்ள மக்கள் கொண்டாடிய மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிறைந்த விழா என்பது மேற்படி பாடல் வரியின் பொருளாகும். ‘'பிங்கல நிகண்டு'‘,'கலி' என்பதற்கு, வலிமை; ஒலி; கடல்; கலிப்பா; கலியுகம் என்ற பொருட்களை சுட்டுவதாக பேராசிரியர். க.நெடுஞ்செழியனார் குறிப்பிடுகிறார்.

இத்தகைய நன்மறைப் பொருள்களையுடைய ‘'கலி'‘ எனும் தமிழ்ச்சொல், வடக்கில் நேர் எதிர்மறைப் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘'கலியுகம்:’ துவாபர யுகத்திற்குப் பிற்பட்டது. இந்த யுகம் கிருஷ்ணன், பாண்டவர்கள் ஆட்சியின் இறுதியுமானது.

இது நான்கு இலட்சத்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதில் மக்கள், பொய், கொலை, களவு, காமங்கள் மாபாதகஞ் செய்து தெய்வம்,குரு,தாய், தந்தை முதலியவரை இகழ்ந்து பசி முதலிய பீடைகளால் வருந்துவர். இதில் தருமம் இராது', என ‘அபிதான சிந்தாமணி’ விளக்குவதாக பேராசிரியர். க.நெடுஞ்செழியனார் குறிப்பிடுகிறார்.

இந்த பின்னணியில்தான் ‘கலி’ என்னும் நல்ல தமிழ்ச் சொல்லை கொச்சைப்படுத்தி, ‘கலிவாகு’ என்ற தமிழ் மன்னனின் பெயரையும் களங்கப்படுத்தி விட்டனர்; ‘வடவர்’. அன்று தொடங்கிய தமிழர் மீதான இந்த காழ்ப்பு, இன்றும் தொடர்வதில் வியப்பில்லை.

- ப.தியாகராசன்